ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்

ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்

Latest Tamil News
வங்கதேச முன்னாள் அதிபரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான முஜிபுர் ரஹ்மானின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு வெடித்த வன்முறை காரணமாக அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இடைக்கால அரசு, எதிர்வரும் தேர்தலில் அவாமி லீக் கட்சியை போட்டியிட அனுமதிக்கப்படாது என்று அறிவித்தது.

Getty Images A crowd in front of a burning building, with an excavator striking the house's wall

இதனிடையே, தன்னுடைய கட்சியினருடன் ஷேக் ஹசீனா நேற்று ஆன்லைன் மூலமாக உரை நிகழ்த்தினார். அப்போது, தங்களின் கட்சியை தேர்தலில் போட்டியிட அனுமதிக்காத முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை எதிர்த்து போராட்டம் நடத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவாமி லீக் கட்சியை தடை செய்யக்கோரியும் வன்முறைகள் வெடித்தன.

முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

இது சர்வதிகாரம் மற்றும் பாசிசத்தின் அடையாளம் எனக் கூறி, ஜே.சி.பி., இயந்திரங்களுடன் திரண்ட அவர்கள், வீடு மற்றும் நினைவிடத்திற்கு தீவைத்தனர்.

வீட்டின் 2வது மாடியில் ஏறி, கடப்பாரைகள் மற்றும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர். இதனால், வங்கதேசத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா, ‘வங்கதேச மக்களிடம் நான் நீதி கேட்கிறேன். நான் நாட்டுக்காக எதையும் செய்யவில்லையா?

பிறகு எதற்காக என்னை இப்படி அவமதிக்க வேண்டும்? அடையாளங்களை அழிக்கலாம். ஆனால், வரலாற்றை அழிக்க முடியாது. நிச்சயம் இதற்கு ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்,’ எனக் கூறினார்.

Previous Story

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக்கூடாது-டிரம்ப்

Next Story

ஜனாதிபதி-சட்டமா அதிபர் சந்திப்பு!