வேற்றுக் கிரகவாசிகள் பூமிக்கு வந்தால் அவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்?

பிற கிரகங்களில் ஏதேனும் வேற்றுக்கிரகவாசிகள் உள்ளார்களா என்பது குறித்து மனிதர்கள் தொடர்ந்து தேடிவருகிறோம். ஒருவேளை அவர்களை நாம் சந்திக்க நேர்ந்தால், அந்தத் தருணத்தை எப்படி எதிர்கொள்வது?

திரைப்படம் புத்தகம் உள்ளிட்ட பல கலைப்படைப்புகள் நமக்கு அளித்துள்ள புரிதலின்படி, வேற்றுக்கிரகவாசிகள் ஒருவேளை பூமிக்கு வந்தால் அவர்களை எதிர்கொள்வதற்கான ஒரேவழி பீரங்கித் தாக்குதல் மட்டுமே.

வேற்றுக்கிரகவாசிகள்

1980களின் பிரபலமான ET the Extra-Terrestrial என்ற பிரபலமான வீடியோ கேம் முதல் Star Trek என்ற தொலைக்காட்சி தொடர், ஐசக் அசிமோவ் மற்றும் உர்சுலா கே லு குயின் புத்தகங்கள் வரை அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் மத்தியில் இருக்கும் ஒரே கேள்வி, வேற்றுக்கிரகவாசிகளை நாம் எப்படி நடத்துவது என்பதே.

பிரபலமான கலை படைப்புகளில் வேற்றுக்கிரகவாசிகள் பெரும்பாலும் இரண்டாம்தர குடிமக்களாகவோ அல்லது மனிதர்களைவிட கீழானவர்களாகவோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.

வேற்றுக்கிரகவாசிகளின் வாழ்க்கை தொடர்பான ஆதாரங்களை நாம் தீவிரமாக தேடிக்கொண்டிருந்தாலும் அவை இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் ஆதாரங்கள் கிடைத்தால், அவை நாம் திரைப்படங்களிலும் தொடர்களிலும் பார்த்தவற்றைப் போல இல்லாமல் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் இருந்திருக்கக்கூடிய நுண்ணுயிரியின் அடையாளங்களைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் டிரேக் சமன்பாட்டின்படி, புத்திசாலித்தனமான வேற்றுக்கிரகவாசிகள் பால்வெளியில் எங்கேனும் இருப்பதற்கு சாத்தியமான வாய்ப்பு உள்ளது.

“நாம் கண்டுபிடிக்கும் வரை வேற்றுக்கிரகவாசிகளைக் கண்டுபிடிப்பதும், அவர்களோடு தொடர்பு கொள்வதும் சாத்தியமற்றதாகவே இருக்கும்” என்கிறார் இங்கிலாந்தின் திறந்த பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் பேராசிரியர் ஜான் ஸர்னெக்கி.

“இது புறக்கோள்களை (சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள்) எனக்கு நினைவுபடுத்துகிறது. இளம் ஆராய்ச்சியாளராக அது குறித்து நாங்கள் விவாதித்தோம். மேலும், புறக்கோள்கள் இருக்கும் என்றும் நாங்கள் சந்தேகித்தோம். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக இது மிகவும் கடினமாக இருந்ததால், நாங்கள் அதைக் கண்டுபிடிக்க எந்த வழியும் இல்லை” என்றும் அவர் கூறுகிறார்.

பால்வெளியில் புறக்கோள்கள் இருப்பதை நாம் தற்போது அறிவோம். அதில் சில கோள்களில் நீர் இருப்பதால் அவை உயிர்கள் வாழ்வதற்கும் உகந்ததாக இருக்கலாம்.

எனவே வேற்றுக்கிரகவாசிகளுக்கான தேடல் தொடர்வதாலும், அவர்களைச் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாலும், ஒருவேளை எப்போதாவது நாம் சந்தித்தால் அவர்களிடம் எப்படி நடந்துகொள்ளலாம் என்பதை கருத்தில் கொள்வதில் தவறில்லை.

மனிதர்கள் அல்லாதவர்களுக்கான உரிமை

மனிதர்கள் வேற்றுக்கிரகவாசிகளை நன்றாக நடத்துவார்கள் என்பதில் எழுத்தாளர்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு, சர்வதேச சட்டப் பாதுகாப்புகள் இருந்த போதிலும் இந்தக் கிரகத்தில் வசிக்கும் மனிதர்கள் அல்லது பிற உயிரினங்களை மோசமாக நடத்தும் நம்முடைய கடந்தகால செயல்பாடுகள் காரணமாக இருக்கலாம்.

இரண்டாம் உலகப் போரின் கொடூரத்திற்குப் பிறகு 1948ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் மூலம் சர்வதேச சமூகத்தால் மாற்ற முடியாத, உலகளாவிய உரிமைகள் அனைத்து மக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டன.

மனிதர்களுக்குக் கூட இந்த உரிமைகளைச் செயல்படுத்த வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன. பிறப்பு முதல் இறப்பு வரை நம் அனைவருக்கும் தனியுரிமை மற்றும் அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் போன்ற உரிமைகள் இருக்க வேண்டும் என்று இந்த சட்டங்கள் கூறினாலும், இவை காகிதத்தில் மட்டுமே இருப்பதாக சில அரசியல் தத்துவவாதிகள் கூறுகின்றனர்.

வேற்றுக்கிரகவாசிகளின் உரிமைகள்

நாம் வேற்றுக்கிரகவாசிகளை எவ்வாறு நடத்துவோம் என்பதற்கான பதில், நமது கிரகத்தில் மனிதரல்லாத உயிரினங்களை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதில் இருக்கலாம். தற்போது பல நாடுகள் மனிதக் குரங்குகள் முதல் காகங்கள் வரை விலங்குகளை உணர்வுள்ளவையாக அங்கீகரித்துள்ளன. சமீபகாலத்தில்தான் விலங்குகள் உரிமைக் குழுக்கள் உணர்வின் அடிப்படையில் விலங்குகளுக்கு உரிமைகள் வழங்குவதில் சில சட்டப்பூர்வ முன்னேற்றங்களைச் செய்துள்ளன.

முற்றிலும் அறிமுகமில்லாத வேற்றுக்கிரகவாசிகளின் உரிமைகள் நமது சட்ட மற்றும் நெறிமுறை கட்டமைப்பிற்குள் எவ்வாறு பொருந்தும் என்பதை சில நெறிமுறையாளர்கள் ஏற்கனவே பரிசீலித்து வருகின்றனர். ஆனால் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய வெளிப்படையான சர்வதேச விவாதங்கள் குறைவாகவே உள்ளன. 1977ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபை அமர்வில் கிரெனடாவின் பிரதம மந்திரி எரிக் எம் கைரி ஒரு கேள்வி எழுப்பினார். UFO (Unidentified flying object) காட்சிகளை பூமியில் விரோதமான வேற்றுக்கிரகவாசிகளின் அறிகுறிகளாக நம்பிய அவர், இது தொடர்பாக ஐநா மூலம் அதிகாரப்பூர்வ விசாரணை அமைப்பை நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், இந்தத் தலைப்பை கைவிடுமாறு பிரிட்டிஷ் பிரதிநிதிகள் அவருக்கு அழுத்தம் கொடுத்தனர்.

எனினும், சில அரசுகள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன. 1999ஆம் ஆண்டு, பத்திரிகையாளர் லெஸ்லி கீன், ராணுவ மற்றும் கடற்படை தலைவர் இந்தப் பறக்கும் பொருட்களை வேற்றுக்கிரகவாசிகளாக இருக்கலாம் என்று நம்பியது தொடர்பான ஒரு பிரெஞ்சு ஆவணத்தை பொதுவெளியில் கசியவிட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்த மர்மமான பறக்கும் பொருட்களைப் பற்றி அமெரிக்க நாடாளுமன்றம் முதன்முறை பகிரங்கமாக விவாதித்தது. இருப்பினும், அவை வேற்றுக்கிரகத்தைச் சேர்ந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

மனிதர்கள் தமது வாழ்நாளில் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள் என்பதில் விண்வெளி சட்ட நிபுணரான ஜில் ஸ்டூவர்ட்டுக்கு நம்பிக்கையில்லை. எனினும், அப்படியொரு சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்வோம் என்பது குறித்த உரையாடலை அவர் வரவேற்கிறார்.

“நாம் நம்மைக் கண்டறிய பிரபஞ்சத்தைத் தேடுகிறோம், ஏனென்றால் நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம், சுற்றுச்சூழலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம், மற்ற உயிரினங்கள் மற்றும் மக்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பது குறித்து மீண்டும் சிந்திக்க இது நம்மைத் தூண்டுகிறது” என்று கூறும் ஜில் ஸ்டூவர்ட், “இந்த எதிர்காலத்தை மையமாகக் கொண்ட காட்சிகள் ஒருபோதும் நடக்காமல் போகலாம், ஆனால் அதற்கான முழு செயல்முறை மதிப்பு வாய்ந்தது” என்கிறார்.

விடுபட்ட திட்டம்

வேற்றுக்கிரகவாசிகளை மனிதர்கள் எவ்வாறு கையாள்வது

“வேற்றுக்கிரகவாசிகளை மனிதர்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக சர்வதேச ஒப்பந்தங்கள் அல்லது வழிமுறைகள் எதுவும் இல்லை” என்கிறார் ஐ.நா. விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் நிக்லாஸ் ஹெட்மேன். “அதற்கான வழிமுறைகள் எப்போதும் இருக்காது என்று நான் சொல்லவில்லை. உலகளாவிய அரசுகளுக்கிடையேயான முதன்மை அமைப்பாக அதற்கான முன்னெடுப்பை எடுக்க ஐ.நா பொருத்தமாக இருக்கும். ஆனால் முடிவில் அது தொடர்பான நடவடிக்கை மற்றும் விவாதம் உறுப்பு நாடுகளின் விருப்பத்திற்கு உட்பட்டது” என்றும் அவர் கூறுகிறார்.

தற்போதைய அனைத்து சர்வதேச விண்வெளி சட்டங்களும் மனித செயல்பாடுகளுடன் தொடர்புடையவை என்று ஹெட்மேன் கூறுகிறார். விண்வெளியில் இலக்குகளை அடையக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் வளர்ச்சிக்குப் பதிலடியாக 1967ஆம் ஆண்டு பிரிட்டன், சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் முதல் விண்வெளி ஒப்பந்தம் ஐநா மூலம் கையெழுத்தானது. இதுவே தற்போதுள்ள அனைத்து விண்வெளி சட்டங்களுக்கும் அடிப்படையாக உள்ளது.

விண்வெளியில் மனிதர்கள் என்ன செய்கிறார்கள் மற்றும் இது மற்ற மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மையமாக கொண்டு ஐந்து முக்கிய விண்வெளி ஒப்பந்தங்கள் உள்ளன. அவை ஆயுதங்களைத் தடை செய்வது முதல் சேதம் மற்றும் விண்வெளிப் பயண நாடுகளின் குப்பைகளுக்கான பொறுப்பு வரை அனைத்தையும் உள்ளடக்கியது.

அதற்கான தேவை உருவாகும் வரை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு சர்வதேச வழிமுறையையும் உருவாக்குவது சாத்தியமில்லை என்று ஸ்டூவர்ட் நம்புகிறார். ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு ஏற்பட்டால், மனித உரிமைகளை நிர்வகிக்கும் தற்போதைய சட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, வேற்றுக்கிரகவாசிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படலாம்.

அவர்கள் நமக்கு தீங்கிழைக்க கூடியவர்களா அல்லது நம்முடன் இணக்கமாக இருக்கக் கூடியவர்களா என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்கும். இது, வேற்றுக்கிரகவாசிகளைத் தொடர்பு கொள்ள நாம் தீவிரமாக முயற்சிக்க வேண்டுமா அல்லது அவர்களின் இருப்புக்கான அறிகுறிகளை அறிய மேலோட்டமாக முயற்சிக்க வேண்டுமா என்ற விவாதத்திற்கு ஊட்டமளிக்கிறது. இது விண்வெளி நிபுணர்கள் மத்தியில் தெளிவற்ற கேள்வியாக இருப்பதாக ஸ்டூவர்ட் கூறுகிறார்.

எந்த நெறிமுறைகளும் அமைக்கப்படவில்லை அல்லது பரிந்துரைக்கப்படவில்லை எனும் போது, பறக்கும் தட்டு திடீரென்று பூமியில் எங்காவது விபத்துக்குள்ளானால் என்ன நடக்கும்? எந்த நாட்டில் அவர்கள் தரையிரங்கினார்களோ, அந்த நாடு அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பான ஆரம்ப விவாதங்களை நடத்தலாம் என அனுமானத்தின் அடிப்படையில் ஸ்டூவர்ட் கூறுகிறார்.

அங்கு பொறுப்பு இருப்பதற்கு எந்த முன்னுதாரணமும் சட்டப்பின்னணியும் இருக்காது எனக் கூறும் ஸ்டூவர்ட், அடையாளம் காணப்படாத ஒரு பறக்கும் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டு ஒரு நாட்டில் விழுந்தால், அதற்கு அந்த நாடு பொறுப்பேற்க வேண்டியிருக்கலாம் என்கிறார்.

2011ஆம் ஆண்டு தி ராயல் சொசைட்டியின் “supra-Earth affairs” தொடர்பான ஆய்வறிக்கையில், ஐநாவின் விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகத்தின் முன்னாள் இயக்குனர் மஸ்லான் ஓத்மான், பூமிக்கு அருகே உள்ள சிறுகோள்கள் போன்ற பொருட்களின் ஆபத்துகளை எதிர்த்துப் போராடுவதில் நாடுகள் காட்டும் ஆர்வம், எதிர்காலத்தில் வேற்றுக்கிரகவாசிகள் கண்டறியப்பட்டால் அவர்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச ஒத்துழைப்புக்கான மாதிரியை வழங்க உதவும் என்று முன்மொழிந்தார்.

நாம் எதிர்கொள்ளும் வேற்றுக்கிரகவாசிகளை எப்படி கூட்டாக நடத்துவது என்பது பற்றி ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகள் குறைவாக இருப்பதால், மனிதர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை அவர்களுக்கும் வழங்குவது ஒரு அணுகுமுறையாக இருக்கலாம். தற்போதுள்ள சட்ட அமைப்பில் இதைப் பொருத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்கிறார் ஸ்டூவர்ட்.

பூமிக்கு பயணிக்கக்கூடிய எந்தவொரு உயிரினமும் திறன்மிக்க நுண்ணறிவு மற்றும் உணர்வு கொண்டிருக்கலாம் என்பதால் அவை மனிதர்களைப் போலவே நடத்தப்பட வேண்டும். இது மனித உரிமைகள் என்பதை உணர்வு உரிமைகளாக பரிணமிக்க வழிவகுக்கும்.

சாத்தியமான பல்வேறு வகையான நுண்ணறிவு மற்றும் உணர்வுகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பூமியில்கூட, அனைத்து வகையான நுண்ணறிவுகளும் உள்ளன. நாம் இப்போதுதான் அதைக் கண்டுணர தொடங்கியுள்ளோம். புத்திசாலித்தனத்திற்கு புகழ் பெற்ற ஆக்டோபஸ்களுக்கு சுயநினைவு உள்ளதா மற்றும் அதனால் வலியை உணர முடியுமா என்ற விவாதம் தொடர்கிறது. மைகாலஜி துறை வேகமாக வளர்ந்துவரும் நிலையில், சில பூஞ்சைகளுக்கு கற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற நுண்ணறிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

“வேற்றுக்கிரகவாசிகள் என்று வரும்போது, அவர்களிடம் என்ன மாதிரியான நுண்ணறிவு உள்ளது என்று நாம் பார்க்க வேண்டும் என்கிறார் உணர்வுகள் குறித்த ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான சுசன் பிளாக்மோர். “அவர்களுக்கு ஏன் அந்தத் திறன் இருக்கிறது? இந்த வேற்றுகிரகவாசிகள் டார்வினின் பரிணாம செயல்முறைகளால் உருவாகியிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அதுதான் அறிவார்ந்த உயிரினங்களை உருவாக்கும் நமக்குத் தெரிந்த முறை” என்றும் அவர் கூறுகிறார்.

வேற்றுக்கிரகவாசிகளின் உணர்திறன்

வேற்றுக்கிரகவாசிகளின் உணர்திறன்

வேற்றுக்கிரகவாசிகள் பாதிக்கப்படுவார்களா என்று கேள்வியெழுப்பும் சுசன் பிளாக்மோர், அப்படியென்றால் நாம் அவர்கள் மீது சில தார்மீகப் பொறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டும், அதனடிப்படையில் கூட சட்ட நெறிமுறைகளை உருவாக்கலாம் என்கிறார்.

வேற்று கிரகவாசிகள் மற்றும் விலங்குகளுக்கான தவிர்க்க முடியாத உரிமைகள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய நெறிமுறையாளர் பீட்டர் சிங்கர், இறுதியில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் முக்கிய விஷயமாக உணர்வுகள் இருக்கும் என்கிறார்.

“வேற்றுக்கிரகவாசிகளுக்கு வலி மற்றும் இன்பத்தை அனுபவிக்கும் திறன் இருப்பதாக எடுத்துக்கொண்டால், நாம் பயன்படுத்த வேண்டிய அடிப்படை நெறிமுறைக் கொள்கை அவர்களை சமமாகக் கருதுதலைக் கொண்டதாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.

1979ஆம் ஆண்டு பீட்டர் சிங்கரால் முன்வைக்கப்பட்ட ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கூற்றுக்கு, இன்பம் அல்லது துன்பத்தை அனுபவிக்கும் திறன் கொண்ட அனைத்து உயிரினங்களும் தங்களைப் பாதிக்கும் எந்தவொரு தார்மீக முடிவிலும் தங்கள் நலன்களை சமமாக கணக்கில் எடுத்துக்கொள்ள தகுதியுடையவை என்று பொருள். வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், வேற்றுக்கிரகவாசிகளின் வலி பூமிக்குரியவர்களின் வலியைப் போலவே கணக்கிடப்பட வேண்டும்.

வேற்றுக்கிரகவாசிகளுக்கு என்ன ஆர்வங்கள் இருந்தன என்பதை நிறுவுவதே இங்கு கடினமான பிரச்னையாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். “இது வேற்றுக்கிரகவாசிகளின் அறிவாற்றல் திறன்களைப் பொறுத்தது. அவை டால்பின்கள் அல்லது மனிதர்களைவிட மிகவும் மேம்பட்டதாகவும் இருக்கலாம். ஒருவேளை மனிதர்களைவிட அவை மிகவும் மேம்பட்டவையாக இருந்தால், நாம் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாது” என்கிறார் பீட்டர் சிங்கர்.

விலங்குகளுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அமைப்பான The Nonhuman Rights Project, இது தனிமனிதர்களிடம் இருந்து தொடங்க வேண்டும் என்கிறது. உரிமைகளுக்கான சட்ட அளவுகோலுக்கு உணர்வுகள் பரந்த வகையில் பொருத்தமற்றது. ஏனெனில் உண்மையில் அது என்ன என்பதை யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.

“இன்று, குறைந்தபட்சம் அமெரிக்காவில் ஒவ்வொரு மனிதரும் சுதந்திரத்திற்கான மறுக்க முடியாத உரிமையுடன் பிறக்கிறார். ஆனால் எல்லா மனிதர்களுக்கும் அந்த உரிமை கடந்த காலங்களில் இல்லை” என்கிறார் The Nonhuman Rights Project அமைப்பின் வழக்கறிஞர் ஜேக் டேவிஸ். “இதற்குப் பல ஆண்டுகள் ஆனது. நாடு ஓர் உள்நாட்டுப் போரை சந்தித்தது. மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான உரிமை வரை சமமாக கிடைக்க பெரிய அளவிலான போராட்டம் தேவைப்பட்டது” என்றும் அவர் கூறுகிறார்.

“எனது விருப்பம் என்னவென்றால், வேற்றுக்கிரகவாசிகள் நம்மை அணுகினால், அவர்கள் விரோதமாக இல்லை எனும் போது அவர்களை விலங்குகளாக நாம் கருதக்கூடாது. அவர்களை நாம் சக மனிதர்களாகவே மதிப்பிட வேண்டும்” என்கிறார் ஜேக் டேவிஸ்.

The Nonhuman Rights Project அமைப்பின் முன்னாள் இயக்குநரான லோரி மரினோ, நுண்ணறிவு மற்றும் உணர்வு ஆகியவை கூட நிபுணர்கள் ஒப்புக்கொள்வதற்கு கடினமான கருத்துகள் என்கிறார்.

அவை இரண்டும் தெளிவற்ற கருத்துக்கள் எனக் கூறும் அவர், என்னைப் பொறுத்தவரை நுண்ணறிவு என்பது ஒருவர் தகவலை எவ்வாறு செயலாக்குகிறார் என்பதும், உணர்வு என்பது உணரும் திறன் மற்றும் உணர்வை அறிந்து கொள்ளும் திறன் என்பதாகும் என்கிறார்.

வேற்றுக்கிரக நாகரிகங்களின் இயற்கையான வளர்ச்சியில் மனிதர்கள் குறுக்கிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து ஸ்டார் ட்ரெக்கின் “ப்ரைம் டைரக்டிவ்” போன்ற அறிவியல் புனைகதைகளில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

பறக்கும் தட்டு

வேற்றுக்கிரகவாசிகள் நம்முடைய பூமிக்கு வந்தால் அநேகமாக அது நாம் கவலைப்பட வேண்டிய ஒன்றாக இருக்காது.

லாப நோக்கமற்ற ஆராய்ச்சி அமைப்பான செட்டி கல்வி நிறுவனத்தின் மூத்த வானியலாளர் சேத் ஷோஸ்டாக், நம்முடைய வாழ்நாளிலேயே வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளார். ஆனால், இரண்டு வகையான தொடர்புகளை வேறுபடுத்தி பார்ப்பது முக்கியம் என்றும் அவர் கூறுகிறார்.

நேரடியாக வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதைவிட, தொழில்நுட்பத்தில் முன்னேறிய அவர்களிடம் இருந்து ஏதாவது அறிகுறிகளோ அல்லது சமிக்ஞைகளோ நமக்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுபோல ஏதாவது அறிகுறி கிடைத்தால், நமக்கு எந்த அவசரமும் இருக்காது. நாம் அனுப்பும் எந்த சமிக்ஞையும் திரும்பிவர நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் அடுத்து என்ன பதில் சொல்லலாம் என்பது குறித்து சிந்திக்க நமக்கு போதுமான நேரம் இருக்கும்.

எனினும், வேற்றுக்கிரகவாசிகளின் வருகைக்கு நம்மைவிட அவர்களிடம் சிறந்த தொழில்நுட்பம் உள்ளது என்பதே பொருள்.

“ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்தால் நிறைய உறைந்த பீட்சாக்களை வாங்கிக்கொண்டு ஏதேனும் மலைப்பகுதிக்கு நான் சென்றுவிடுவேன்” என்கிறார் ஷோஸ்டாக். பதில் செய்தியை அனுப்புவதற்குப் பதிலாக அவர்களால் நேரடியாக இங்கு வர முடிந்தால், நம்மைவிட அவர்கள் பல மடங்கு முன்னேறியவர்கள் என்றும் ஷோஸ்டாக் கூறுகிறார்.

வேற்றுக்கிரகவாசிகள் நமக்கு உரிமைகள் வழங்குவார்களா என்பதே இங்கு பொருத்தமான கேள்வியாக இருக்கும்.

அவர்கள் மூர்க்கத்தனமானவர்களாக இருந்தால் என்ன செய்வீர்கள் எனக் கேள்வியெழுப்பும் ஷோஸ்டாக், அந்தச் சூழல் அமெரிக்க விமானப்படையை நெதர்லாந்து எதிர்கொள்வது போல இருக்கும் என்கிறார்.

Previous Story

பாலியல்: தனுஷ்கவை காப்பாற்றும் முயற்சியில் பிரபல வீரர்

Next Story

ஹக்கீம்-ராஜாக்கள் உரிமைப் போர்!