வேக்சினுக்கு கட்டுப்படாத மின்னல் வேக கொரோனா- WHO

-Vigneshkumar-

ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சுமே பொதுமக்களிடம் இருந்து இன்னும் விலகாத நிலையில், அடுத்து உருமாறிய கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர் உலகெங்கும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் லட்சத்தை அதிகரித்துள்ளது.

உருமாறிய கொரோனா

தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. ஓமிக்ரான் கொரோனா கூட வேக்சின் போட்டுக் கொள்ளாதவர்கள் மத்தியில் தான் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில் வரும் காலத்தில் உருவாகக் கூடிய உருமாறிய கொரோனா வகைகள் குறித்தும் அதற்கு எதிராக வேக்சின் எப்படி வேலை செய்யும் என்பது குறித்தும் உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

கடைசி வேரியண்ட் இல்லை

கடந்த வாரத்தில் மட்டும் 2.1 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது கொரோனா 3ஆம் அலை எந்தளவு தீவிரமானது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இப்போது கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் கடைசி உருமாறிய கொரோனாவாக இருக்காது என்றும் வரும் காலத்தில் கண்டறியப்படும் புதிய உருமாறிய கொரோனா இதை விட வேகமாகப் பரவலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மின்னல் வேகம்

இந்நிலையில், அடுத்துக் கண்டறியப்படும் உருமாறிய எவ்வளவு வேகமாகப் பரவும் எந்தளவு தீவிரமாக இருக்கும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. ஆனால், ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் ஓமிக்ரான் முந்தைய கொரோனா வகைகளைப் போலத் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

பாதிப்பு எப்படி

இருப்பினும், அடுத்து வரும் உருமாறிய கொரோனாவும் இதேபோல இருக்கும் என்று சொல்ல முடியாது. அது வேகமாகப் பரவி அதேநேரம் தீவிர பாதிப்பையும் ஏற்படுத்தலாம். அடுத்து உருவாகும் கொரோனா லேசான பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தான் இப்போது நம்முன் இருக்கும் ஒரே கேள்வி. அடுத்து வரும் காலங்களில் உருமாறும் கொரோனா லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்று மக்களிடம் பரவலாகக் கருத்து உள்ளது. இப்படி நடக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

கொரோனா வேக்சின்

அடுத்துத் தோன்றும் உருமாறிய கொரோனா இப்போது நம்மிடம் இருக்கும் கொரோனா வேக்சின்களில் இருந்து தப்பிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம். அது ஓமிக்ரானை விடக் கூட வேகமாகப் பரவலாம். எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரும் பொது இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க், தனிமனித இடைவெளி போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்” என்றார்.

ஓமிக்ரான் அலை

ஓமிக்ரான் கொரோனாவால் உலகெங்கும் வைரஸ் பரவல் மீண்டும் உச்சமடைந்துள்ளது. ஏற்கனவே, ஓமிக்ரான் முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவல் உச்சம் தொட்டு மீண்டும், குறையத் தொடங்கிவிட்டது. அதேபோல இந்தியாவிலும் கூட டெல்லி, மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்தே வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஞானசார முன்னிலையில் ஏன் சாட்சி வழங்கினோம்!

Next Story

அமெரிக்காவில் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை