வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

ஒருநாள் கிரிக்கெட்டின் மன்னர்கள், உலகக் கோப்பை டிரண்ட் செட்டர்கள், 1975, 1979ம் ஆண்டு சாம்பியன்கள், 1983ம் ஆண்டு 2ம் இடம் பிடித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கு தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது.

கிரிக்கெட் வரலாற்றில் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இந்தத் தொடருக்கு தகுதி பெறாமல் மேற்கிந்தியத்தீவுகள் வெளியேறியது இதுதான் முதல்முறை. 13-வது உலகக் கோப்பைப் போட்டித் தொடர் “கரீபியன்கள்” இல்லாமல் கலையிழக்கப் போகிறது. மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வரலாற்றில் இது ஒரு கறுப்பு ஆண்டு.

வெஸ்ட் இண்டீஸ்

மேற்கிந்தியத்தீவுகள் சூப்பர்-6 சுற்றில் ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு தகுதி பெற முடியாத நிலை இருந்தது.

தொடர்ந்து 2வது முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணி ஐசிசி நடத்தும் தொடரில் விளையாட தகுதி பெறாமல் வெளியேறியது. கடந்த 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட முன்னாள் சாம்பியனான மேற்கிந்தியத்தீவுகள் தகுதி பெறவில்லை. இப்போது, ஒருநாள் போட்டி உலகக்கோப்பைத் தொடரிலும் அந்த அணி தகுதி பெறவில்லை.

கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி பெறாமல் இருந்திருக்கும். ஆனால் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு வாய்ப்புக் கிடைத்து அதில் விளையாடியது.

வெஸ்ட் இண்டீஸ்

ஸ்கார்ட்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து வெளியேறும் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள்

தகுதிச் சுற்றுப் போட்டி

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி ஒருநாள் போட்டிக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டித் தொடர் தொடங்குகிறது. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருந்த அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. மற்ற 2 அணிகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வாகும்.

தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே நகரில் நடந்து வருகின்றன. இதில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் அணி உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

ஏ, பி என இரு பிரிவுகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்கள் நடந்தன. லீக் சுற்றின் முடிவில் ஏ பிரிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கிந்தியத்தீவுகள் ‘பி’ பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

சூப்பர் 6 சுற்று

இதில் லீக் சுற்றில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகளுக்கு போனஸாக தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன. ஆனால், மேற்கிந்தியத்தீவுகள் அணி கடும் போராட்டத்துக்குப்பின்புதான் சூப்பர் 6 சுற்றை எட்டியதால் போனஸ் புள்ளிகள் ஏதும் பெறவில்லை.

இதனால் சூப்பர்-6 சுற்றில் மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி பெற்றாலும், உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறுவது என்பது இலங்கை, ஜிம்பாப்பே அணிகளின் தோல்விகளைப் பொறுத்து அமையும் என கணிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் மேற்கிந்தியத்தீவுகள் சூப்பர்-6 சுற்றில் ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு தகுதி பெற முடியாத நிலை இருந்தது.

ஏனென்றால், ஏற்கெனவே 4 போனஸ் புள்ளிகளுடன் இலங்கை, ஜிம்பாப்பே அணிகள் இருப்பதால், சூப்பர் 6 சுற்றில் 2 போட்டிகளில் இரு அணிகளும் வென்றாலே உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றுவிடும். ஆனால், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு நிலைமை அப்படி அல்ல.

வெஸ்ட் இண்டீஸ்

மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மோசமாகச் செயல்பட்டதுமே தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

அதிர்ச்சித் தோல்வி

இந்நிலையில் ஹராரே நகரில் நேற்று நடந்த சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணியின் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக் கனவு உயிர்ப்புடன் உள்ளது. ஆனால், மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் முறையாக 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது.

இனிவரும் அடுத்தடுத்த லீக் ஆட்டங்களில் வென்றாலும் கரீபியன்ஸ் அணி 4 புள்ளிகள் மட்டுமே பெறும். அந்த 4 புள்ளிகள் மூலம் உலகக் கோப்பைப் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பு இல்லை.

மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மோசமாகச் செயல்பட்டதுமே தோல்விக்கு முக்கியக் காரணமாகும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில் ஸ்டார் பேட்டர்கள், தொடக்க வரிசை பேட்டர்கள் யாரும் ஜொலிக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ்

மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் எந்தவிதமான சிரமத்தையும், நெருக்கடியையும் ஸ்காட்லாந்து பேட்டர்களுக்கு கொடுக்கவில்லை.

மோசமான பீல்டிங், பேட்டிங்

அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 45, ரோமேரியோ ஷெப்பர்டு 36, பிரண்டன் கிங் 22, நிக்கோலஸ் பூரன் 21 ரன்கள் சேர்த்ததால்தான் இந்த அளவு கவுரவமான ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் இதைவிட ஸ்கோர் மோசமாக இருந்திருக்கும்.

ஸ்காட்லாந்து அணி தரப்பில் மேத்யூ கிராஸ்(74நாட்அவுட்), பிரன்டன் மெக்முல்லன்(69) இருவரும் சேர்ந்து அணியைக் கட்டமைத்து, வெற்றிக்கு வழிகாட்டினர். பந்துவீச்சிலும் மிரட்டிய பிரண்டன் மெக்முல்லன் 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் கிறிஸ் சோல், மார்க் வாட், கிறிஸ் க்ரீவ்ஸ் ஆகியோரும் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் எந்தவிதமான சிரமத்தையும், நெருக்கடியையும் ஸ்காட்லாந்து பேட்டர்களுக்கு கொடுக்கவில்லை. பல் இல்லாத பந்துவீச்சு, மந்தமான பீல்டிங், துடிப்பற்ற பேட்டிங் போன்றவை மேற்கிந்தியத்தீவுகள் அணியை பாதாளத்தில் தள்ளியன.

வெஸ்ட் இண்டீஸ்

100 சதவீதம் முழுமையான அர்ப்பணிப்பை வீரர்கள் தரவில்லை என்கிறார் மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் ஷாய் ஹோப்

வீரர்களின் மனப்போக்கு சரியில்லை

தோல்விக்கான காரணம் குறித்து மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் ஷாய் ஹோப் கூறுகையில் “ உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு தகுதிபெறாமல் வெளியேறியது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நேர்மையாகச் சொல்வதென்றால், யாரையும் நான் விரல்விட்டு குற்றம் கூற இயலாது. இந்தத் தொடர் முழுவதுமே எங்கள் ஆட்டம் மோசமாகத்தான் இருந்தது.

இந்த போட்டியில் நாங்கள் ஆட்டத்தைத் தொடங்கிய விதத்தைப் பார்த்தால் ஸ்காட்லாந்துக்கு எதிராக சவாலாகத்தான் இருந்தது. வீரர்களின் மனப்போக்கு சரியில்லை. அவர்களின் மனப்போக்கைப் பொறுத்துதான் ஆட்டம் அமையும். ஏராளமான கேட்சுகளை வீரர்கள் கோட்டைவிட்டனர். பீல்டிங் சரியாக இல்லை. 100 சதவீதம் முழுமையான அர்ப்பணிப்பை வீரர்கள் தரவில்லை.

இதுபோன்ற மிகப்பெரிய தொடருக்கு வருவதற்கு முன் முன்தயாரிப்பு, பயிற்சி மிகவும் முக்கியம். எந்தவிதமான முன்தயாரிப்பும், பயிற்சியும் இல்லாமல் தூங்கி எழுந்தவுடன் நாங்கள் பெரிய அணி என்று கூறிக் கொள்ள இயலாது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி தங்களின் செயல்பாடுகளை திட்டமிட்டிருப்பது அவசியம். டாஸ் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு கேப்டனும் டாஸில் வென்றவுடன் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுப்பார்கள், ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி எதிரணியின் பந்துவீச்சுக்கு பதிலடி கொடுப்பதும் அவசியம்” எனத் தெரிவித்தார்

வெஸ்ட் இண்டீஸ்

விவ்லியன் ரிச்சார்ட்ஸ்

ஜாம்பவான்கள் ஏன் வீழ்ந்தார்கள்

உலக கிரிக்கெட்டின் மன்னர்களாக, தங்களின் பேட்டிங், பந்துவீச்சிலும் சர்வதேச அணிகளுக்கு சிம்ம சொப்னமாகத் திகழ்ந்த மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

கார்டன் க்ரீன்விட்ச், கிளைவ் லாய்டு, டேஸ்மாண்ட் ஹையின்ஸ், மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல், மோரிஸ் பாஸ்டர், விவ்லியன் ரிச்சார்ட்ஸ், ஆன்டி ராபர்ட்ஸ், ஆல்வின் காளிச்சரண், கோலிஸ் கிங், வால்ஷ், ஆம்புரோஸ் போன்ற ஜாம்பவான்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் இருந்து மேற்கிந்தியத்தீவுக் அணி வீரர்கள் தடுமாறுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. மேற்கிந்தியத்தீவுகள் அணியின் இந்த வீழ்ச்சிக்கு வீரர்கள் மட்டுமல்ல, வாரியமும் காரணம்.

தற்போது அணியில் இருக்கும் இளம் வீரர்கள் சூழலுக்கு மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடுவதில்லை. விவியன் ரிச்சார்ட்ஸ், லாயுடு போன்ற ஜாம்பவான்கள் அணியை ஒற்றை ஆளாக களத்தில் இருந்து வழிநடத்தினர், இரு கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தனர். ஆனால், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகளின் தோல்வி அதன் மதிப்பை சர்வதேச அரங்கில் குறைத்துவிட்டது.

குறிப்பாக லீக் ஆட்டத்தில் 374 ரன்கள் சேர்த்தும் அதை மேற்கிந்தியத்தீவுகள் அணியால் டிபெண்ட் செய்யமுடியாமல் நெதர்லாந்து அணியிடம் தோற்றது, ஸ்காட்லாந்து அணியிடம் 181 ரன்களுக்கு சுருண்டது போன்றவை மேற்கிந்தியத்தீவுகள் அணியை மட்டுமல்ல வீரர்களின் பலவீனத்தையும் வெளிச்சம் போட்டுவிட்டது.

தேசிய அணி புறக்கணிப்பு?

குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டிலிருந்து நட்சத்திர வீரரான சுனில் நரேனும், 2021ம் ஆண்டிலிருந்து ஆந்த்ரே ரஸலும் ஊதியப் பிரச்னை காரணமாக தேசிய அணிக்காக விளையாடவில்லை. முழுநேரமும் லீக் போட்டிகளில் ஆடுவதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்கள்.

2022, டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒருமாதம் முன் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் டேஸ்மண்ட் ஹெயின்ஸ் அளித்த பேட்டியில் “ஆந்த்ரே ரஸல், நரேன் இருவரும் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவர்கள் இருவருக்கும் தேசிய அணிக்காக ஆடுவதில் பெரிய விருப்பம் இல்லை. ரஸல் விருப்பமாக இருந்தாலும் அவரின் ஆட்டம் எனக்கு மனநிறைவாக இல்லை” எனத் தெரிவித்தார். இது வீரர்கள், வாரியத்துக்கு இடையிலான மோதலை வெளிச்சம்போட்டுக் காட்டியது.

வெஸ்ட் இண்டீஸ்

டேரன் சாமே

ஊதியப் பிரச்னை

அது மட்டுமல்லாமல் வீரர்களுக்கும், மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கும் கடந்த 2015ம் ஆண்டிலிருந்தே ஊதியப் பிரச்னை காரணமாக மோதல் நிலவி வருகிறது.

2014ம் ஆண்டு இந்தியாவில் விளையாடி வந்த மேற்கிந்தியத்தீவுகள் அணி ஊதியப் பிரச்னை காரணமாக தொடரை பாதியிலேயே முடித்துவிட்டு வெளியேறியது. இதுதான் கரீபியன்கள் சரிவுக்கான முதல் புள்ளியாக இருந்தது.

அதன்பின், ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வெளிப்படையாகவே ஊதியப் பிரச்னை குறித்து வாரியத்தை விமர்சித்தார், அவர் அப்போது வெளியிட்ட அறிக்கையில் “ வாரிய நிர்வாகத்தில் அரசியல் வெகுவாகக் கலந்துவிட்டது.

எங்களுக்கு முறையாக மைதானம் இல்லை, பயிற்சி செய்ய வசதிகள் இல்லை, இவை அனைத்துமே எங்கள் சரிவுக்கு காரணம். வீரர்கள், வாரிய உறுப்பினர்கள், நிர்வாகக் குழு அதிகாரிகளுக்கு இடையே இணக்கமான உறவு இருப்பது அவசியம். நேர்மையாக ஒவ்வொருவரும் நடந்து கொள்வது அவசியம்” என விமர்சித்திருந்தார்.

2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை மேற்கிந்தியத்தீவுகள் வென்றபோதிலும் வீரர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் வாரியம் காது கொடுத்து கேட்பதில்லை என்று கேப்டன் டேரன் சாமே வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

லாயுடுவின் ஆதங்கம்

மேற்கிந்தியத்தீவுகள் வாரியத்தின் இயக்குராக இருந்த கிளைவ் லாய்டு கடந்த 2012ம் ஆண்டு அந்தப் பதவியிலிருந்து விலகினார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில் “ எங்கள் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக நான் இருந்தேன். ஆனால், இப்போது எங்கள் நாட்டில் கிரிக்கெட் இருக்கும் நிலையைப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் முழுவதும் நேர்மையின்மை, ஆலோசனையின்மை, போதுமான ஆலோசனையில்லாமல் முடிவெடுப்பது போன்றதாகவுள்ளது” என கவலைத் தெரிவித்திருந்தார்.

ஜாம்பவான்களின் சரிவு

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கு போதுமான வருமானம் இல்லாமல், ஐசிசியிடம் இருந்து குறைவான வருமானப் பங்கீடு காரணமாகவும், கெயில், பொலார்ட், டேரன் சாமே, ரஸல், நரேன் ஆகியோருக்கு போதுமான ஊதியம் தரமுடியமல் நிதிச் சிக்கலில் சிக்கியது.

இதனால் நட்சத்திர வீரர்கள் தேசிய அணிக்காக ஆடுவதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், டி20 லீக் தொடரில் தனியார் அணிகளுக்கு ஆடுவதில் கவனம் செலுத்துகிறார்கள். இந்தக் காரணங்கள் ஜாம்பவானாக இருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியை சாய்த்துவிட்டது.

Previous Story

காஞ்சன ரணிலை புகழ்வது ஏன்!

Next Story

தென் ஆப்ரிக்காவில் வாரிசுச் சண்டை மன்னருக்கு விஷம் ?