“வெந்து தணிந்தது காடு” விமர்சனம்

நடிகர்கள்: சிலம்பரசன், சித்தி இதானி, ராதிகா சரத்குமார், சித்திக்;

ஒளிப்பதிவு: சித்தார்த்தா நூனி;

இசை: ஏ.ஆர். ரஹ்மான்;

இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்.

வெந்து தணிந்தது காடு

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனனும் சிம்புவும் இணைந்து உருவாகும் படம் என பல கதைகள், தலைப்புகள் விவாதிக்கப்பட்ட பிறகு, முடிவுசெய்யப்பட்ட படம்தான் இந்த ‘வெந்து தணிந்தது காடு’. தலைப்பு அறிவிக்கப்பட்டு, முதல் பார்வை வெளியானபோதே பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது.

பெரும் வெற்றி பெற்ற ‘மாநாடு’ படத்திற்குப் பிறகு வெளியான ‘மஹா’ சரியான கவனத்தைப் பெறாத நிலையில், சிம்புவின் ரசிகர்களும் இந்தப் படத்தையே எதிர்நோக்கியிருந்தனர். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

திருச்செந்தூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தன் தாய், சகோதரியுடன் கருவேல மரங்களை வைத்து பிழைப்பு நடத்திவரும் முத்துவீரன், மேம்பட்ட வாழ்க்கையை எதிர்நோக்கி மும்பையில் ஒரு பரோட்டா கடையில் வேலைக்குச் செல்கிறார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது பரோட்டா கடையல்ல, கூலிப் படைகளின் கூடாரம் என்பது தெரிகிறது. முத்துவீரன் இருக்கும் கும்பலின் தலைவனும் எதிர் கும்பலின் தலைவனும் மோதிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் முத்துவீரனும் அதில் இழுக்கப்படுகிறான். பிறகு என்ன ஆகிறது என்பதே மீதிக் கதை.

இரண்டாம் பாதி பற்றி…

இந்தப் படத்தின் முதல் பாதியில் உள்ள ‘ஹைப்பை’ இரண்டாம் பாதிக்கு கடத்துவதில் கௌதம் வாசுதேவ் மேனன் தவறியுள்ளதாகக் கூறுகிறது தமிழ் இந்து நாளிதழ்.

“படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாததை நினைத்து வருந்தும் இளைஞனாக சிம்புவுடன் விரியும் ‘வெந்து தணிந்தது காடு’ முதல் பாதி புலம்பெயர் தொழிலாளர்களாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து மும்பை சென்றுள்ளவர்கள் சந்திக்கும் இன்னல்களை தேவையான டீட்டெயிலிங்குடன் சொல்லி, நடுவக்குறிச்சி என்ற குக்கிராமத்தின் வெப்பத்தை போலவும், நிலத்தை போலவும் சிறுகதையாக ரசிக்க வைக்கிறது. ஜெயமோகனின் கதையை ஒரு சிறிய சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சி மூலம் சொல்லி ஹைப் ஏற்றிய கெளதம் மேனன், அதே ஹைப்பை இரண்டாம் பாதியில் ரசிகர்களுக்கு கடத்துவதில் தவறுகிறார்

இரண்டு குழுவுக்கு இடையேயான மோதலாக மாறும் இரண்டாம் பாதி, அதில் அழுத்தம் இல்லாத திரைக்கதை அமைப்பால் தடுமாறுகிறது. முத்துவீரனின் பாத்திரத்தை முன்னிலைப்படுத்த முயன்று, அவருக்கு நிகரான டான்களாக வரும் இருவரின் பாத்திர வடிவமைப்பை குறைத்துள்ளது கதையின் ஓட்டத்துக்கு தடையாக அமைந்துள்ளது.

நாயகன் போன்ற மும்பையின் கேங்ஸ்டர் படங்கள் இதற்கு முன்பு தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படங்களாக அமைந்துள்ளன. அவற்றுக்கான அடித்தளம் கேங்ஸ்டர் ரோலுக்கான தெளிவான பார்வையும், அதற்கான அரசியலும், திரைக்கதையும். ஆனால், இங்கு இரண்டு கேங்ஸ்டர்கள்;

அதிலும் மலையாள சினிமாவின் மூத்த நடிகர் சித்திக் போன்றோரை வைத்துக்கொண்டு அவருக்கான வலுவான திரைக்கதையை கொடுக்காமல் வீணடித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்” என்று விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசை.

இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பதாகச் சொல்கிறது தினமலர் நாளிதழின் விமர்சனம்.

“முத்து என்கிற முத்து வீரனாக மாறுபட்ட தோற்றத்தில் சிம்பு. ஊர்ப் பையனாக, ஓர் ஏழை இளைஞனாக அதற்கான உடல் மொழி, நடை, உடை, பாவனை என தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டுள்ளார் சிம்பு. இதற்கு முன்பு சிம்பு இப்படியெல்லாம் நடித்ததில்லையே என ஆச்சரியப்பட வைக்கிறார்.

ஓரிடத்தில் கூட சிம்புவின் முந்தைய படங்களின் நடிப்பு, கதாபாத்திரம் மனதிற்குள் வரவில்லை. முத்து என்கிற ஒரு தென் தமிழ்நாட்டு இளைஞனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். நெல்லைத் தமிழ்ப் பேச்சு, தாங்கித் தாங்கி நடப்பது போல ஒரு நடை, அடிக்கடி இடது கையால் முகத்தைத் துடைப்பது, சட்டை காலரில் முகத்தைத் துடைப்பது என நிறையவே கதாபாத்திரத்தை உள் வாங்கியிருக்கிறார்.

இடைவேளைக்குப் பின் அப்படியே முழுமையான மாற்றம். ஒரு தாதாவுக்கு அடியாள், பாடிகார்ட் என பல படங்களில் பார்த்த கதாபாத்திரம் என்றாலும் அதிலும் தனித்துத் தெரிகிறார் சிம்பு. இரண்டாம் பாகத்தில் என்ன அதிரடி செய்யப் போகிறார் என அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பதைத் தியேட்டரில் புரிந்து கொள்ள முடிகிறது” என்கிறது தினமலர்.

சிலம்பரசன்

இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, தாதாவாக வரும் சித்திக், அப்புக்குட்டி, நீரஜ் மாதவ், ராதிகா சரத்குமார் ஆகியோரும் சிறப்பாக நடித்திருப்பதாகச் சொல்கிறது தினமலரின் விமர்சனம்.

வழக்கமான படமா?

“வெந்து தணிந்தது காடு ஒரு வழக்கமான கேங்ஸ்டர் படமில்லை. ஒரு கேங்க்ஸ்டரின் கதையைச் சொல்வதிலும் கௌதம் மேனன் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, அந்தப் பயணத்தை விவரிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார்.

கௌதம் வழக்கமாக, தானே கதையைச் சொல்பவராக மாறி, விவரித்துக்கொண்டே செல்வார். இந்தப் படத்தில் அது இல்லை. சில சமயங்களில் திரைக்கதை மூலமாக படத்தை நகர்த்துவதற்குப் பதிலாக, குரல் வழியாக படத்தை நகர்த்துவார். வெந்து தணிந்தது காடு படத்தைப் பொறுத்தவரை, கதையே படமாக நகர்கிறது. முத்துவின் கதையை இந்த வகையில்தான் சொல்ல முடியும்.

வெந்து தணிந்தது காடு படத்தின் கதை விரியும் தன்மையால், நாம் அந்தக் கதைக்குள் மூழ்கிவிடுகிறோம். இடைவேளையிலேயே கதையின் முழுமையை உணர்கிறோம். அந்தத் தருணத்திலேயே அந்தக் கதை எதைச் சொல்லவந்ததோ, அதைச் சொல்லிவிட்டதாகத் தோன்றுகிறது.

வெந்து தணிந்தது காடு படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனைப் போலவே, சிம்பு என்ற நடிகர் தென்படவில்லை. ஒரே படத்தைத் திரும்பத் திரும்ப எடுக்கிறார் என்ற விமர்சனத்தைச் சந்தித்துவந்த கௌதம் வாசுதேவ் மேனன், அதிலிருந்து பாதை மாறியிருக்கிறார். நிஜமாகவே வித்தியாசமான ஒரு கதையை முயற்சித்திருக்கிறார். சில காட்சிகள் நீளமாக இருக்கின்றன.

தவிர, திரைக்கதையின் வடிவமைப்பு மிக மிகச் சிறப்பாக இருக்கிறது: கதை எங்கே துவங்கியதோ, அங்கேயே முடிவடைகிறது” என விவரிக்கிறது The Hindu ஆங்கில நாளிதழ்.

‘வெந்து தணிந்தது காடு’ படம் இரு பாகங்களாகத் திட்டமிடப்பட்டு, முதல் பாகம் தற்போது வெளியாகியிருக்கிறது.

Previous Story

 மகாராணிக்காக உம்ரா சென்றவர் கைது - சவூதி அரேபியா அதிரடி

Next Story

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில்