‘வெட்கமின்மை வரம்பு கடந்துவிட்டது’

சேலை எப்போது வந்தது?

-சீட்டு திவாரி-

நவம்பர் 24 அன்று, ‘தானோஸ்_ஜாட்’ என்ற கணக்கிலிருந்து சமூக ஊடக பயன்பாடான இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் புடவை அணிந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த பெண் ரவிக்கை அணியவில்லை. மாறாக மெஹந்தி (மருதாணி)யால் உடலின் மேல் பகுதியில் ரவிக்கை வரையப்படிருந்தது.

இந்தப் பதிவு வைரலானபோது ஒருபுறம் ‘அழகாக உள்ளது, கருத்து பிடித்தது,’ என்று சிலர் பதிவிட்டனர்.மறுபுறம் சில இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்திய கலாச்சாரத்தை மேற்கோள் காட்டி, ‘வெட்கமின்மை வரம்பு கடந்துவிட்டது’ என்று எழுதினர்.

இந்த இன்ஸ்டாகிராம் உலகில் இருந்து விலகி பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதுபனி இலக்கிய விழாவில் ‘ஏக்வஸ்த்ர’ (ஒரே துணி) என்ற பெயரில் பேஷன் ஷோ நடந்து வருகிறது.தர்பங்கா நகரில் உள்ள காமேஷ்வர் சிங் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் தர்பார் ஹாலில் புடவையை மட்டும் உடம்பில் கட்டிக்கொண்டு மாடல்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் ரவிக்கையோ, உள்பாவாடையோ அணியவில்லை. இணைய உலகின் விமர்சனங்களிலிருந்து விலகி தர்பார் ஹாலில் அமர்ந்திருப்பவர்கள் அதை மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு மாடல்களை கைதட்டலுடன் வரவேற்கிறார்கள்.

மிதிலாவின் பாரம்பரியம் ‘நிகண்ட் புடவை’

உண்மையில், பிகாரின் மிதிலாஞ்சல் பகுதியில் நிகண்ட் புடவையின் பாரம்பரியம் உள்ளது. அதாவது, பெண்கள் புடவை மட்டுமே அணிந்தனர். ரவிக்கை மற்றும் உள்பாவாடை அணியமாட்டார்கள். பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தி மற்றும் மைதிலி இலக்கியத்தின் பிரபல எழுத்தாளர் உஷா கிரண், “எங்கள் வீட்டு முற்றத்தில் பெண்கள் புடவை மட்டுமே அணிந்திருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

தையல் கலை என்பது இஸ்லாமியர்களிடம் இருந்து வந்தது. இது தவிர, பழங்குடியின சந்தால் பெண்களை சிறுவயதில் நாங்கள் பார்த்துள்ளோம். அவர்கள் மார்பகங்களை மறைக்கமாட்டார்கள். சமூக கொண்டாட்டங்களின்போது மட்டுமே மார்பகங்களை மறைக்கும் வகையில் புடவை அணிந்திருப்பார்கள். பல சமயங்களில் அவர்கள் உடம்பில் துணியை போர்த்திக்கொள்வார்கள்.

அது பறந்து கொண்டே இருக்கும். உடலின் மேல் பகுதி சில நேரங்களில் தெரியும், சில நேரங்களில் மறைந்திருக்கும்,” என்று கூறினார். பின்னர், காலப்போக்கில் சில வீடுகளில் பெண்கள் ரவிக்கை மற்றும் உள்பாவாடைகளை அணியத் தொடங்கினர். பின்னர் சமூகம் ரவிக்கை-உள்பாவாடைகளை ஏற்றுக்கொண்டது. இதனால் நிகண்ட் புடவை பாரம்பரியம் முடிவுக்கு வந்தது.

இந்த ஏக்வஸ்த்ரா ஃபேஷன் ஷோவை ஏற்பாடு செய்திருந்த மதுபனி இலக்கிய விழாவின் அமைப்பாளர் சவிதா ஜா கான், “ஏக்வஸ்த்ராவின் கருத்து இரண்டு நிலைகளில் உள்ளது. முதலாவதாக, பாரம்பரியம் படிப்படியாக மறைந்துவிட்ட நெசவுப் பெண்கள். இரண்டாவதாக எங்கள் வட்டாரத்தில் உள்ள பெண்கள் தங்கள் உடல்களை கொண்டாடினார்கள்.

அதில் அவர்களுக்கு ஆட்சேபணை இல்லை. இந்தப்பெண்கள் எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்று தாங்களே முடிவுசெய்தனர். இதில் யாரையும் உத்தரவிட அனுமதிக்கவில்லை. உடல் பற்றிய மிதிலாவின் தத்துவத்தை விவாதத்தின் மையத்திற்குக் கொண்டு வர சிலர் நினைக்கின்றனர். சீதை ‘வைதேஹி’ என்று அழைக்கப்படுகிறாள், அதாவது உடலுக்கு அப்பாற்பட்டாள்” என்று குறிப்பிட்டார்.

இது பெண்களுக்கு அதிகாரமளிப்பதா?

மிதிலா பாரதியின் ஆசிரியரும், மிதிலாவின் திருமண பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட ‘கோத்ராத்யாய்’ என்ற புத்தகத்தின் ஆசிரியருமான பைரவ் லால் தாஸ், “உடலின் பார்வையில், நிகண்ட் புடவையை பெண்களின் அதிகாரத்துடன் இணைக்க முடியாது,” என்று கூறுகிறார்.

“நம் கலாசாரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தைக்கப்படாத ஆடையுடன் உறவு இருந்தது. இதற்குக் காரணம் மத-கலாச்சாரங்கள். பின்னர் முஸ்லிம் படையெடுப்பாளர்கள் தையல் திறனைக் கொண்டு வந்தபோது, இதில்அரசியலின் பரிமாணமும் சேர்க்கப்பட்டது.

சாதாரண மக்கள் தையல் திறமையைத் தங்கள் சொந்த வழியில் பயன்படுத்தினர். மிதிலைப் பெண்கள் மிகவும் திறமையுடன் பங்குகொண்ட பூஜைப்பணிகளில் கூட, தைக்கப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே நிகண்ட் புடவை அல்லது ஏகவஸ்திரம், அதிகாரமளிப்பதுடன் தொடர்புடையது அல்ல.

பாரம்பரியம் மற்றும் ஏழ்மையால் ஏற்பட்டது. மிதிலாவின் ஏழ்மையின் முழுமையான விளக்கங்களை வித்யாபதியின் படைப்புகளிலும் நாம் காண்கிறோம். வங்காள ஓவியங்களில் கூட பெண்கள் ரவிக்கை அணிந்திருப்பதை பார்க்க முடிவதில்லை,” என்கிறார் அவர்.

மிதிலாஞ்சல் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் சேலையுடன் ரவிக்கை அணியாத மரபு உள்ளது. உதாரணமாக, பிரம்ம சமாஜத்தில் கூட பெண்கள் ரவிக்கை அணிவதில்லை. ஆனால், பின்னர் இந்த சமுதாயத்தின் பெண்கள் ரவிக்கை அணிய ஆரம்பித்தனர்.

“90களுக்குப் பிறகுதான் ஆடைகளை வடிவமைக்கும் வரலாறு தொடங்கியது. ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரரான ஐசிஎஸ் சத்யேந்திர நாத் தாகூரின் மனைவியான ஞானநந்தனி தேவி ரவிக்கை அணியாததால் ஆங்கிலக் கிளப்பில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

அதன் பிறகு அவர் ரவிக்கை அணிய வேண்டியிருந்தது,” என்று பாட்னாவில் இருந்து வெளியாகும் 147 ஆண்டுகள் பழமையான ‘பிகார் ஹெரால்டு’ நாளிதழின் ஆசிரியர் வித்யுத் பால் கூறினார்.

சேலை எப்போது வந்தது?

பல சந்தர்ப்பங்களில் கவர்ச்சியான ஆடையாகக் கருதப்படும் புடவை, இந்திய துணைக் கண்டத்தில் கிரேக்க தாக்கம் மூலமாக வந்தது

“சந்திரகுப்த மௌரியர் கிரேக்க இளவரசியை மணந்தபோது, மௌரியர்களின் ஆட்சியில் கிரேக்கத்தின் தாக்கம் மிகத் தெளிவாக வெளிப்பட்டது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் காலத்தில் கிடைத்த டெரகோட்டா சிற்பங்களில் பெண்கள் புடவை அணிந்துள்ளனர். ரவிக்கை போன்ற எதுவும் அதில் இல்லை,” என்று தொல்பொருள் ஆய்வாளர் ஜலஜ் குமார் திவாரி தெரிவித்தார்.

“புடவைகள் தவிர, பெண்கள் சுரிதார் பைஜாமா போன்ற சில ஆடைகளையும் அணிந்திருப்பார்கள். இதற்குப் பிறகு, ஒன்பதாம் நூற்றாண்டில் மகாராஷ்டிர பாணியில் புடவைகளை அணிந்த பெண்களைக் காண்கிறோம். பெண்கள் எல்லா வேலைகளையும் வசதியாக செய்யக்கூடிய வகையில் அவர்கள் புடவைகளை அணிந்திருந்தனர். அன்றைய தாரா, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களின் சிலைகளில் இருந்து இது தெளிவாகிறது.”

சேலை உடுத்துவதில் பெண்ணின் உடல் அசைவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் பின்னாளில் அதில் ஒரு நேர்த்தி அம்சம் புகுத்தப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

“ஒரு காலத்தில் பெண்கள் தோளோடு தோள் நின்று போர், விவசாயம், வேட்டை என அனைத்தையும் செய்து வந்தனர்.ஆனால் பின்னாளில் வீட்டுக்குள்ளேயே தங்கி அதைக் கவனித்துக்கொள்ளச் சொன்னபோது அதன் விளைவு அவள் புடவையை அணியும் விதத்தில் ஏற்பட்டது. அவளது உடல் அசைவிலும் இதனால் தாக்கம் ஏற்பட்டது,” என்கிறார் ஜலஜ் குமார் திவாரி.

மார்பக வரி

இன்றைய நவீன யுகத்தில் நாம் முன்பு நினைத்ததைப் போலவே ஆடைகளைப் பற்றி சிந்திக்கிறோமா என்ற கேள்வியும் உள்ளது.

“மனிதனின் வாழ்க்கையில் ஆடைகள் வந்தபோது, அவை வெட்கம் என்ற அம்சத்தை விட அதிகமாக நமது அன்றாட நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருந்தன. மனிதன் வேட்டையாடும் போது, மகளிருக்கு எளிதாக இருப்பதற்காக அவர்களின் உடலின் மேற்பகுதி மற்றும் ஆண்களின் கீழ் பகுதி சுற்றப்படும் விதமாக அதாவது ஒருவித ஆதரவு இருக்கும் விதமாக ஆடைகள் வடிவமைக்கப்பட்டன,” என்று எழுத்தாளரும் ஆசிரியருமான வித்யுத் பால் கூறுகிறார்.

ஆனால், தங்கள் அன்றாடத் தேவைகளுக்காகத் தயாரிக்கப்படும் இந்த ஆடைகளை அணிவதற்குக் கூட பெண்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது.

கேரளாவில், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் மார்பகத்தை மறைக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறினால், பெண்கள் ‘மார்பக வரி’ செலுத்த வேண்டும். இந்த மார்பக வரியை எதிர்த்து ஈழவ சாதியைச் சேர்ந்த நங்கேலி என்ற பெண் தனது மார்பகங்களைத் தானே வெட்டிக் கொண்டார்.

இன்றைய ஜார்கண்டின் ஒரு பகுதியில், பெண்கள் மேல் உடலை மறைக்காத நிலையில், கேரளாவில் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கும் உரிமைக்காகப் போராடினர்.

இதுபற்றி பாட்னாவில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ் இயக்குநர் பேராசிரியர் புஷ்பேந்திர குமார் கூறும்போது, “ஒரே நாட்டில், ஒரே இடத்தில், ஒரே சமூகத்தில், சமூக பொருளாதார அரசியல் ரீதியாக ஆடைகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஐரோப்பாவில் ஒட்டுமொத்த ஆடை எதிர்ப்புப்பிரச்சாரம் இருந்தது. அதில் அதிகப்படியான ஆடை அதாவது உடலை அதிகமாக ஆடைகளால் மூடும் போக்கு பாலியல் குற்றங்களை அதிகரித்துள்ளது என்ற வாதமும் இருந்தது.

மிதிலை பெண்கள்

மிதிலாஞ்சலைப் பார்த்தால், பிகாரின் மற்ற பகுதிகளைப் போலல்லாமல் இங்கு கற்றறிந்த பெண்களின் வளமான பாரம்பரியம் உள்ளது. மன்னன் ராமரின் மனைவி சீதா மிதிலாஞ்சலின் தளபதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது, எனவே இங்கிருந்து கார்கி, மைத்ரேயி, பாரதி மற்றும் ஜைன தீர்த்தங்கரர் மல்லிநாத் ஆகியோரின் பாரம்பரியம் உள்ளது. அவர்கள் தனது காலத்தில் அரசியல், மத, சமூக பிரச்சினைகளில் தலையிட்டனர்.

“பௌத்தத்தில் தந்திரயானம் மற்றும் சனாதனத்தில் கௌலாச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மிதிலாவில் கல்வியறிவுள்ள பெண்களின் பாரம்பரியம் சில காலத்திற்கு தடைப்பட்டது. ஏனெனில் தந்திரயானம் மற்றும் சனாதனத்தின் வருகையுடன், பெண் குழந்தைகள் தந்திர-மந்திரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கல்வி பாதிக்கப்பட்டது. ஆனால் அக்காலத்திலும் பெண்கள் மிதிலா ஓவியங்கள் மூலம் தங்களை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்,” என்று பத்மஸ்ரீ உஷா கிரண் கான் கூறுகிறார்.

“முகலாயர்களின் நேரடிப் படையெடுப்பு இந்தப் பகுதியில் இல்லை, ஆனால் அது ஒரு விளைவை ஏற்படுத்தியது. வீடுகளின் கட்டமைப்பில் இந்த விளைவைப் பார்க்கலாம். ஜன்னல்களின் அகலம் குறைந்துவிட்டது மற்றும் இவை அதிக உயரத்தில் உள்ளன, அதாவது பெண்கள் திரைச்சீலைகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டனர்,”என்று ஆய்வாளர்-எழுத்தாளர் பைரவ் லால் தாஸ் கூறுகிறார்.

தர்பங்கா போன்ற சிறிய நகரத்தில் ‘ஏக்வஸ்த்ரா’ போன்ற நிகழ்வை மாடல்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு, இந்த ஃபேஷன் ஷோவின் ஷோஸ்டாப்பராக இருந்த தொலைக்காட்சி நடிகையும், மேடைக் கலைஞருமான சோனல் ஜா பதில் அளித்தார். “இதை உடல் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கக் கூடாது. நிகண்ட் சேலையை உடுத்தும்போது உடலைப் பற்றிய தயக்கம் உடைகிறது.

இப்படிப்பட்ட ஆடைகளை அணிவதன் வரலாற்றுக் கண்ணோட்டம் வேறு. என்றாலும் இன்று உடலின் மீது அதிக கவனம் செலுத்தும் போது, இதுபோன்ற நிகழ்ச்சிகள் விவாதத்தை சரியான திசையில் கொண்டு செல்கின்றன,”என்றார் அவர்.

Previous Story

இந்தியா ஒரே நாளில் 117,100 பேருக்கு கொரோனா

Next Story

பாக். பனிப் பொழிவு: 24 பேர் பலி