ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் என்ன நடந்தது?
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்து சிதறின. இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுவினர் ஆவர்.
இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்காம் என்ற காவல் நிலையமானது, காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரின் கூட்டாளிகளை கைது செய்தபோது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிப்பெருட்கள் கூட இந்த போலீஸ் நிலையத்தில் தான் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு இந்த காவல் நிலையத்தில் இருந்து திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதாவது அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்து தீப்பிழம்பு பல அடி உயரத்திற்கு எழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தியை அணைத்தனர்.
கூடுதல் போலீசாரும் அங்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 29 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இன்று ஒருவரு சிகிச்சை பலனின்று உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் விபத்து என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதாவது, டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரின் கூட்டாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிப்பெருட்கள் இந்த போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இரவில் இது தொடர்பாக தடயவியல் குழுவினர் மற்றும் போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இது நடந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் இந்திய ராணுவத்தின் 92 பேஸ் மருத்துவமனைக்கும், ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கும் (SKIMS) கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உயர் காவல்துறை அதிகாரிகள் நவுகாமுக்கு விரைந்துள்ளனர். அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.





