விராட் கோலி சவால்கள் ?

ரன் மிஷின் என்று கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விராட் கோலிக்கு 2021ஆம் ஆண்டு அத்தனை சிறப்பாக அமையவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச டி20 என எல்லா ஃபார்மெட்டிலும் கேப்டனாக இருந்த மனிதர், தற்போது இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு மட்டுமே தலைவராகத் தொடர்கிறார்.

அவர் கீழ் விளையாடிய ரோஹித் ஷர்மா தற்போது இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலைமை தாங்க உள்ளார். அந்த அணிகளில் இனி ரோஹித் ஷர்மாவின் கீழ் விராட் கோலி விளையாட வேண்டிய சூழல் நிலவுகிறது.

எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென கோலியை ஒருநாள் சர்வதேச அணித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே, பிசிசிஐ மீது கடும் விமர்சனத்தை எழுப்பியது.

இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் போட்டிகளில் கபில் தேவ், மொஹம்மத் அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், மகேந்திர சிங் தோனி, செளரவ் கங்குலி என பலரும் 70 போட்டிகளுக்கு மேல் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளனர்.

இவர்களில் அதிக வெற்றி விகிதம் கொண்டவர் என்றால் அது விராட் கோலி தான். அதிக முறை இந்திய அணியை ஒரு நாள் போட்டிகளில் வழிநடத்திய மகேந்திர சிங் தோனி 200 போட்டிகளில் 110 போட்டிகளில் வென்று 59.52% வெற்றி விகிதம் கொண்டுள்ளார்.

மொஹம்மத் அசாருதீன் 174 போட்டிகளில் 90 போட்டிகளில் வென்று 54.16%, செளரவ் கங்குலி 147 போட்டிகளில் 76 போட்டிகளில் வென்று 53.52% உள்ளது. விராட் கோலி 95 போட்டிகளில் தலைமை தாங்கி 65 போட்டிகளில் வென்று 70.43 என அதிகபட்ச வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கபில் தேவ் போன்ற புகழ் பெற்ற வீரர்களின் வெற்றி விகிதம் கூட 56 சதவீதத்தைக் கடக்கவில்லை. மேலும் அவர்கள் கோலியை விட குறைவான போட்டிகளிலேயே இந்திய அணியை வழிநடத்தியுள்ளனர்.

கோலி தன்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக விளையாடியும் அவர் வெளியேற்றப்படுவது வருத்தமளிப்பதாக சில இணையவாசிகள் தங்கள் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். கங்குலி இப்படி செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை என மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.

இத்தனை கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி பிடிஐ செய்தி முகமையிடம் விராட் கோலி தலைவர் பொறுப்பு சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்தார்.

 

செளரவ் கங்குலி

அதில் “டி20யின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் கூறினோம், ஆனால் அவர் டி20-ன் தலைவராகத் தொடர விரும்பவில்லை. டி20 மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்களை வைத்துக் கொள்ள வேண்டாம் என தேர்வாளர்கள் கருதினர்” என கூறினார் கங்குலி.

மேலும் “இந்த குழப்பம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் தேர்வாளர்கள் அப்படித்தான் கருதுகிறார்கள். அப்படித்தான் விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கு தலைமையேற்று வழிநடத்தவும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா வழிநடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது” என கங்குலி கூறினார்.

“ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் அபார சாதனைகளை கருத்தில் கொண்டோம், ஆனால் ரோஹித் ஷர்மா தலைமை தாங்கி வழிநடத்திய ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது என்பதுதான் அடிப்படையான விஷயம்” என்று குறிப்பிட்டார் கங்குலி.

இதனைத் தொடர்ந்து விராட் கோலி தனியே பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், தான் தொடர்ந்து அணிக்கு விளையாட உள்ளதையும், தன்னை டி20 கேப்டனாக தொடருமாறு பிசிசிஐ கூறவில்லை என்றார்.

விராட் கோலி

அதன் பிறகு, சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வாளர் கமிட்டியின் தலைவர் சேத்தன் ஷர்மா, பிசிசிஐ விராட் கோலியிடம் டி20 அணித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.

சுருக்கமாக விராட் கோலிக்கும் இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்புக்கும் இடையிலான உறவுமுறை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே செல்கிறது.

இந்த பிரச்னைகளைப் பார்க்கும் போது, விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது.

“விராட் கோலி இனி ஒவ்வொரு போட்டியிலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்” என்கிறார் டெக்கன் கிரானிக்கல் நாளிதழின் விளையாட்டுத் துறை செய்திப் பிரிவின் ஆசிரியர் சந்தோஷ் குமார்.

“இத்தனை நாட்களாக தனக்கான அணியையும், தனக்கான பயிற்சியாளர் வரை தேர்வு செய்யும் செல்வாக்குமிக்கவராக இருந்த விராட் கோலி, டி20 மற்றும் ஒருநாள் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின், அதை இழந்துவிட்டார்.

இது விராட் கோலிக்கு மட்டுமல்ல, பெரிய அளவில் கோப்பைகளை வெல்ல முடியாமல் போகும் போது, எல்லா உச்ச நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் எதிர்கொள்ளும் கால சுழற்சி தான். அதைத்தான் விராட் கோலி எதிர்கொண்டு வருகிறார்.

மகேந்திர சிங் தோனி அணித் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின், ஒரு நல்ல விக்கெட் கீப்பராக இந்திய அணியில் தன் இடத்தை நிலை நிறுத்திக் கொண்டது போல, விராட் கோலியும் தன் இடத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டி இருக்கும்.

இனி அவர் விளையாடும் போட்டிகள் அனைத்திலும், குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பெரிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும், அதிக ரன்களைக் குவிக்க வேண்டும், தன்னிடமிருந்து தலைமைப்பதவி பறிக்கப்பட்டது தவறு என தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார் கோலி.சுருக்கமாக, தனக்கு தகுந்தாற் போல அணியை மாற்றியமைத்த காலம் போய், அணித்தலைவர் சொல்வது போல தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டத்தில் இருக்கிறார் விராட் கோலி.

ஒரு சில ஆட்டங்கள் அல்லது ஒரு சில தொடர்களில் தொடர்ந்து சரியாக விளையாடவில்லை எனில், கோலிக்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயரை ஏன் களமிறக்கக் கூடாது என கேள்வி எழும். எனவே இனி விராட் கோலி தன்னை இந்திய அணியில் நிலை நிறுத்திக் கொள்ள சக வீரர்களோடு மல்லுகட்ட வேண்டி இருக்கலாம்” என்கிறார் சந்தோஷ் குமார்.

Previous Story

‘முஸ்லிம் ஹைக்கர்ஸ்’விமர்சனம்… பயணம்...

Next Story

இம்ரான் கான் மீதே பழிபோட்ட  மனைவி!