விண்வெளியில் இறைச்சி உற்பத்தி

ஜெஃப் பெசோஸ், ஈலோன் மஸ்க் இருவருமே விண்வெளியை காலனித்துவப்படுத்த விரும்புகிறார்கள். நாசாவும் செவ்வாய் கிரகத்தின் தூசு நிறைந்த நிலப்பரப்பில் மக்களைக் குடியமர்த்த முயல்கிறது.

ஆனால், பூமியின் இயற்கைக் கோளான நிலவிலோ அல்லது மற்ற கிரகங்களிலோ மனிதர்கள் குடியேறி சமூகங்களை அமைக்க விரும்பினால், அங்கு எதைச் சாப்பிடுவார்கள்?

விண்வெளியில் தாவரங்கள் செழிக்க முடியுமா என்பது குறித்து ஏராளமான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

அவற்றோடு, தற்போது கடந்த வாரத்தில் விண்வெளியில் இறைச்சி செல்கள் வளருமா என்ற புதிய சோதனை தொடங்கியுள்ளது.

இதுவொரு சாத்தியமான ஊட்டச்சத்து மூலத்தை பரிசோதனை செய்வதற்கான ஒரு சிறிய முன்னோடி முயற்சியாகும். பின்னாளில் விண்வெளி பயணத்தின் எதிர்காலத்திற்கு, இதுவே பெரிய பாய்ச்சலாகவும் அமையலாம் என்று இந்தப் பரிசோதனைகளைச் செய்பவர்கள் நம்புகின்றனர்.

உயிரணுக்களில் இருந்து இறைச்சியை வளர்ப்பதில் நிபுணத்துவம் பெற்ற இஸ்ரேலிய நிறுவனமான அலெஃப் ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் கனவு இந்தப் பரிசோதனை. அதோடு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வருகை தரும் முதல் தனியார் விண்வெளி வீரர்கள் குழுவால் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

விண்வெளி வீரர்களைச் சார்ந்திருக்கும் அளவுக்கு இந்த பரிசோதனை முறை மிகவும் நிலையானதாக இல்லையென்று இதுகுறித்து சந்தேகமுடையவர்கள் கூறுகின்றனர். மேலும், பூமியில் இருந்து இறைச்சியைக் கொண்டு செல்வதைவிட எளிமையான வேலையாக விண்வெளி இறைச்சி வளர்ப்பு இருக்காது என்றும் கருதுகின்றனர்.

உயிரணுக்களில் இருந்து இறைச்சியை வளர்ப்பது எப்படி?

உயிரணுக்களில் இருந்து இறைச்சியை வளர்ப்பது, பூமியில் கூட எளிதானதாக இல்லை. அலெஃப் ஃபார்ம்ஸ் “பண்படுத்தப்பட்ட இறைச்சியை” தயாரிக்க முயலும் பல நிறுவனங்களில் ஒன்றாகும். அதோடு, விண்வெளியில் அதைச் செய்ய முயலும் முதல் நிறுவனமாகவும் அது உள்ளது.

இந்த நிறுவனம் “ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட” இறைச்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால், உண்மையில் இந்தச் செயல்முறை ஒரு பாரம்பரிய பண்ணையைப் போலவும் இல்லை.

ஓர் உயிரினத்தின் உயிரணுக்களுக்கு அவை வளரத் தேவையான அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பொருட்கள் அளிக்கப்படுகின்றன. அதன்மூலம், தசை திசுக்கள் உருவாகும் அளவுக்கு அந்த உயிரணுக்கள் பெருகி, இறுதில் சாப்பிடக்கூடிய இறைச்சியாக மாறும். இந்தச் செயல்முறை “சாகுபடி” அல்லது “பெருக்கம்” என அழைக்கப்படுகிறது.

இறைச்சி தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. இதுவொரு பண்ணை என்பதைவிட மதுபான ஆலையில் இருப்பதைப் போலவே தோற்றமளிக்கும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியான, பிறப்பு, வாழ்க்கை மற்றும் உணவுக்காக கொலை செய்யப்படுதல் போன்றவை இங்கு இருக்காது.

அலெஃப் ஃபார்ம்ஸில் வளர்க்கப்பட்ட இறைச்சி

இந்தச் செயல்முறை சுற்றுச்சூழலுக்கு சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் மீத்தேன் போன்றவற்றின் உமிழ்வை வெகுவாகக் குறைப்பதாகவும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விண்வெளியில் ஏன் இறைச்சியை வளர்க்க வேண்டும்?

அலெஃப் ஃபார்ம்ஸின் விண்வெளித் திட்டத்திற்கான தலைவரான ஸ்விகா தாமரி, பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் இந்தச் செயல்முறையை அப்படியே செய்ய முடியுமா என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியாது என்கிறார்.

“பூஜ்ஜிய புவியீர்ப்பு விசை சூழலில் உடலியல் மற்றும் உயிரியல் தன்மைகள் மிகவும் வித்தியாசமாகச் செயல்படுகின்றன என்பதை முந்தைய பல அறிவியல் ஆய்வுகள் மூலம் அறிந்துள்ளோம். எனவே, இறைச்சியை வளர்ப்பதற்கான இந்தச் செயல்முறைகள் உண்மையில் விண்வெளியில் சாத்தியமாகுமா என்பது எங்களுக்குத் தெரியாது. யாருக்குமே தெரியாது,” என்று அவர் கூறுகிறார்.

ஏப்ரல் 8-ஆம் தேதியன்று ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் நான்கு பேர் விண்வெளிக்குச் சென்றபோது, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முதல் தனியார் பயணத்தில், விலங்குகளின் உயிரணுக்களைச் சுமந்து செல்லும் ஒரு சிறிய ஷூ பாக்ஸ் அளவிலான கொள்கலன்களையும் அவை வளர்வதற்குத் தேவையானவற்றையும் கொண்டு சென்றனர்.

லேரி கான்னர், எய்டன் ஸ்டிப்பே மற்றும் மார்க் பாத்தி ஆகியோர் முன்னாள் விண்வெளி வீரர் மைக்கேல் லோபஸ்-அலெக்ரியாவுடன் இணைந்து ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் திரும்பி வந்தபிறகு, உயிரணுக்கள் பகுப்பாய்வு செய்யப்படும்.

நடைமுறை சிக்கல்கள்

இந்த பரிசோதனை வெற்றியடைந்தாலும், விண்வெளியில் இறைச்சியை வளர்க்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டாலும், இது நல்ல யோசனை என அர்த்தமில்லை.

அதற்கு, உள்ளூர் கடைகளில் இத்தகைய உயிரணுக்களில் இருந்து வளர்க்கப்படும் இறைச்சிகள் நிறைந்திருக்காமல் இருப்பது ஒரு காரணம். உண்மையில், நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் தொழில்துறையில் செலுத்தப்பட்டிருந்தாலும் (ஹாலிவுட் நடிகரும் சூழலியல் ஆர்வலருமான லியனார்டோ டிகாப்ரியோ, அலெஃப் ஃபார்ம்ஸில் முதலீடு செய்துள்ளார்) இதைப் பெரியளவில் உற்பத்தி செய்ய கடினமாக உள்ளது.

அலெஃப் ஃபார்ம்ஸ், இந்த இறைச்சியை உணவகங்களில் வழங்குவதற்கு முன்பு, இஸ்ரேலில் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. விண்வெளியைவிட, பூமியிலேயே இந்த வகை இறைச்சி உணவு இன்னும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாமல் உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் இறைச்சி வளர்ப்பிடம் எப்படியிருக்கும் என்ற அலெஃப் ஃபார்ம்ஸின் வடிவமைப்பு
செவ்வாய் கிரகத்தில் இறைச்சி வளர்ப்பிடம் எப்படியிருக்கும் என்ற அலெஃப் ஃபார்ம்ஸின் வடிவமைப்பு

விண்வெளியில் இறைச்சியை வளர்ப்பதில் இன்னும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதில் முதல் பிரச்னை மலட்டுத் தன்மை.

“விலங்கு உயிரணுக்கள் மெதுவாக வளர்கின்றன,” என்கிறார் பெர்க்லியில் உள்ள ரசாயனப் பொறியாளர் டேவிட் ஹம்பேர்ட்.

“பாக்டீரியா அல்லது பூஞ்சை இந்த வகை இறைச்சி வளர்ப்பில் பயன்படுத்தப்பட்டால், அது விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து மிக வேகமாக வளரும்,” என்கிறார் ஹம்பேர்ட்.

அலெஃப் ஃபார்ம்ஸ், மலட்டுத்தன்மை பிரச்னையைக் கையாள முடியும் என்றும் குறிப்பாக, சிறிய அளவிலான இறைச்சியை உற்பத்தி செய்யவேண்டிய விண்வெளியில் அதைச் செய்ய முடியும் என்றும் நம்புகிறது. ஆனால், அதனால் ஏற்படக்கூடிய மாசுபாடு செவ்வாய் கிரகத்தில் குடியேறக்கூடிய சமூகத்திற்கு பெரிய பிரச்னையாக இருக்கக்கூடும்.

அதோடு, விண்வெளிக்கு உணவை எடுத்துச் செல்வதற்கு மிகுந்த செலவாகும் என்றும் அலெஃப் ஃபார்ம்ஸ் வாதிடுகிறது. புள்ளிவிவரங்கள் பரவலாக வேறுபட்டிருந்தாலும், 2008-ஆம் ஆண்டில் நாசா மதிப்பீட்டின்படி, பூமியின் சுற்றுப்பாதைக்கு ஒரு பவுண்ட் சுமையை எடுத்துச்செல்வதற்கு 10,000 டாலர் (7,800 பவுண்ட்) செலவாகும்.

செவ்வாய் கிரகத்திற்கு ஒரு பவுண்ட் உணவைக் கொண்டு செல்ல அதைவிடப் பல மடங்கு செலவாகும்.

“செவ்வாய் கிரகம் லட்சக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே உங்கள் உணவை அங்கேயே உற்பத்தி செய்வது பலனளிக்கும்,” என்கிறார் தாமரி.

இருப்பினும், இதில் ஹம்பேர்ட் உடன்படவில்லை.

“சர்க்கரை, அமினோ அமிலங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றில் வளர்க்கப்படும் அந்த உயிரணுக்களில் அவை மட்டுமே இருக்கும். மேலும், அப்படி உருவாக்கப்படும் உயிரணுக்களின் கலோரி அளவு எப்போதும் அவற்றில் சேர்க்கப்படும் பொருட்களில் இருப்பதைவிடக் குறைவாகவே இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

“சிறந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் 25% கலோரிகளை மீட்டெடுத்து அவற்றை உணவாக உட்கொள்ளலாம். எனவே, கேள்வி என்னவெனில், 75% கலோரிகளை வீணாக்குவதற்கு அவற்றை ஏன் விண்வெளிக்குக் கொண்டு செல்ல வேண்டும்?”

மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் அங்கு எதைச் சாப்பிடுவார்கள்?

ஆனால், விண்வெளி வீரர்களின் மனநலம் போன்ற மற்ற விஷயங்களும் நீண்ட விண்வெளி பயணங்களைத் திட்டமிடும்போது கருத்தில் கொள்ளப்படுகின்றன.

கேரன் நைபெர்க் ஒரு முன்னாள் நாசா விண்வெளி வீரர். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஐந்தரை மாதங்கள் இருந்தார். இப்போது அலெஃப் ஃபார்ம்ஸின் ஆலோசனைக் குழுவில் இருக்கிறார்.

அவர், ஒரு குழுவின் மனநலனில் உணவு முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார்.

“பால் பவுடர் போன்ற உணவுப் பொருட்கள் வெள்ளைப் பைகளில் வருகின்றன. அவற்றைச் சாப்பிட்டு நாங்கள் நீர்ச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நான் பூண்டு துருவல் மற்றும் ஆலிவ் எண்ணெயின் வாசனையை விரும்பினேன். அது எங்களிடம் இல்லை. ஆகவே, எடுத்துச் சென்று மீண்டும் கொண்டுவரக்கூடிய எதுவாக இருப்பினும் அது நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்,” என்கிறார் அவர்.

நைபர்கை பொறுத்தவரை, மனிதர்கள் பல ஆண்டுகள் பூமியிலிருந்து விலகியிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டால், புதிய உணவு மற்றும் காய்கறிகள் அதற்கு இன்றியமையாதது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவதில் மனிதநேயம் தீவிரமாக இருந்தால், அதில் விண்வெளி வீரர்களுக்கு கெட்டுப் போகாத, நல்ல சுவையான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை எப்படி அளிப்பது என்பது முக்கியமான மற்றும் கடினமாக புதிராக உள்ளது.

விண்வெளியில் இறைச்சியை வளர்க்க முடியும் என்பதை நிரூபிப்பது ஒரு விஷயம். ஆனால், இது போதுமான அளவுக்கு நம்பகமானது மற்றும் பூமியிலிருந்து உணவு கொண்டு செல்வதற்கான ஒரு நடைமுறை மாற்று என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது.

அலெஃப் ஃபார்ம்ஸ் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டுள்ளது. ஆனால், முதலில் உயிரணுக்களில் இருந்து வளர்க்கக்கூடிய இந்த இறைச்சியை பூமியில் பெரியளவில் உற்பத்தி செய்துகாட்ட முடியுமா என்ற மிகவும் அழுத்தமான கேள்வி அந்த நிறுவனத்தின் முன்பாக உள்ளது.

Previous Story

WHO-ன் ‘குளோபல் ஹெல்த் லீடர்ஸ்’ விருது: யார் இந்த ஆஷாக்கள் !

Next Story

பசிபோக்க புலம்பெயர் தமிழர்களுக்கு பிரதமர் அழைப்பு! ஒரு கேள்வி:ஐயா புலி முத்திரை இன்னும் நீடிக்கின்றதா!