விஜய்:நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்?

சிராஜ்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை மே 13ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நிரூபிக்க வேண்டும் என பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படும். வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்?

தவெக, நம்பிக்கை வாக்கெடுப்பு, 2026 சட்டப்பேரவைத் தேர்தல்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறாததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.

பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு மே 10 அன்று விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

த.வெ.க. 108 தொகுதிகளில் வென்ற நிலையிலும், விஜய் 2 தொகுதிகளில் வென்றதால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 107 ஆக உள்ளது. இது தவிர காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலைச் சிறுத்தைகள் 2 மற்றும் ஐயூஎம்எல் 2 என 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.

தவெக அரசு தனது பெரும்பான்மையை மே 13ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நிரூபிக்க வேண்டும் என பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அறிவுறுத்தியதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவித்தது.

தவெக தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு.

தவெக, நம்பிக்கை வாக்கெடுப்பு, 2026 சட்டப்பேரவைத் தேர்தல்

நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன?

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நாளன்று அவைக்கு வருகை தரும் உறுப்பினர்களின் அடிப்படையில்தான் பெரும்பான்மைக்கு எத்தனை இடங்கள் தேவை என்பது தீர்மானிக்கப்படுகிறது.

அவையில் 234 உறுப்பினர்கள் இருக்கும்போது, பெரும்பான்மைக்குத் தேவையானது 118 இடங்கள் ஆகும். அதாவது, அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமான எண்ணிக்கையே பெரும்பான்மை எனக் கருதப்படுகிறது.

மே 13 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பு, ரகசிய வாக்கு சீட்டு முறையில் நடைபெறாது. குரல் வாக்கெடுப்பு மூலமே நடைபெறும். காரணம், இதற்கென வகுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை விதிகள். அதேபோல டிவிஷன் என்ற மற்றொரு முறையும் நடைமுறையில் உள்ளது.

குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் வாக்கெடுப்பு ஆகிய இரண்டு நடைமுறைகளும் பிரிட்டனின் நாடாளுமன்ற விதிகளில் இருந்து பெறப்பட்டவை மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவின் சட்டம் இயற்றும் அவைகளில் இவை நடைமுறையில் இருந்தன.

தமிழ்நாடு சட்டப்பேரவை நடைமுறை விதிகள், குறிப்பாக விதி 99 மற்றும் அரசியலமைப்பு விதிகள் பிரிவுகள் 164 மற்றும் 189, ஆகியவற்றைப் பின்பற்றி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்திய அரசியலமைப்பின் 164வது பிரிவு, “அமைச்சரவையானது மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு கூட்டாகப் பொறுப்புடையதாகும்” என்று கூறுகிறது. எனவே, அவர்களுக்கு சட்டப்பேரவையின் ஆதரவு இல்லையென்றால், அந்த அரசு பதவி விலக வேண்டியிருக்கும்.

தவெக, நம்பிக்கை வாக்கெடுப்பு, 2026 சட்டப்பேரவைத் தேர்தல்

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக ஜே சி டி பிரபாகர் பொறுப்பேற்றுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நாள் அன்று என்ன நடக்கும்?

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை தலைவர் தலைமையில் சட்டப்பேரவை கூட்டப்படும்.

முதலமைச்சர் அல்லது ஆளும் தரப்பைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் அமைச்சரவை மீது நம்பிக்கை கோரி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவார். இதுவே நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான முறையான தொடக்கமாகும்.

ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரின் பங்கேற்புடன் ஒரு சிறிய விவாதம் நடைபெறும். இதற்கான கால அளவை சட்டப்பேரவை தலைவர் தீர்மானிப்பார்.

விவாதம் முடிவடைந்ததும், சட்டப்பேரவை தலைவர் அந்த தீர்மானத்தை சபையில் வாக்கெடுப்பிற்காக முன்மொழிவார்.

தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பவர்களை ‘ஆம்’ (Aye) என்றும், தீர்மானத்திற்கு எதிராக இருப்பவர்களை ‘இல்லை’ (No) என்றும் கூறுமாறு சட்டப்பேரவை தலைவர் அறிவுறுத்துவார்.

அதன்பிறகு சட்டப்பேரவை தலைவர், ‘ஆம்’ எனக்கூறியவர்களுக்கு வெற்றியா அல்லது ‘இல்லை’ எனக்கூறியவர்களுக்கு வெற்றியா என்பதை அறிவிப்பார்.

சட்டப்பேரவை தலைவரின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்படாவிட்டால், முடிவை மீண்டும் இருமுறை அறிவிப்பார். இந்த அறிவிப்பின் அடிப்படையில் பெரும்பான்மை குறித்து முடிவு எடுக்கப்படும்.

ஒருவேளை, சபையின் முடிவு குறித்த சட்டப்பேரவை தலைவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், அவர் டிவிஷன் முறை மூலம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தவெக, நம்பிக்கை வாக்கெடுப்பு, 2026 சட்டப்பேரவைத் தேர்தல்

டிவிஷன் முறை வாக்கெடுப்பு

இந்த முறையில்,

  • எம்.எல்.ஏ-க்களை அழைக்க மணிகள் ஒலிக்கப்படும் (வழக்கமாக மூன்று முறை).
  • சட்டப்பேரவையின் கதவுகள் பூட்டப்படும்.
  • அவையின் ஆறு டிவிஷன்களுக்குப் ஏற்ப இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும்.
  • ‘ஆமாம்’ என்பதற்கு ஆதரவான உறுப்பினர்களையும், ‘இல்லை’ என்பதற்கு ஆதரவான உறுப்பினர்களையும் அவரவர் இடங்களில் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொள்வார், வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும்.
  • பாரம்பரியமாக முதலமைச்சர் டிவிஷன் 1-லும், அவருக்கு எதிரில் உள்ள டிவிஷன் 6-இல் எதிர்க்கட்சித் தலைவரும் இருப்பார்.
  • சட்டப்பேரவை செயலக ஊழியர்கள் வாக்குகளை எண்ணுவார்கள்.

சட்டப்பேரவை செயலாளர் வாக்குகளின் எண்ணிக்கையைச் சட்டப்பேரவை தலைவரிடம் சமர்ப்பிப்பார், இதன் அடிப்படையில் புதிய அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா இல்லையா என்பதை சட்டப்பேரவை தலைவர் அறிவிப்பார்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பொதுவாக சட்டப்பேரவை தலைவர் வாக்களிக்க மாட்டார். வாக்குகள் சமமாக பதிவாகும் பட்சத்தில், அரசியலமைப்பின் 189-வது பிரிவின் கீழ் சட்டப்பேரவை தலைவர் ஒரு வாக்கை செலுத்துவார்.

வழக்கமாக, இது தற்போதைய ஆட்சியைத் தக்கவைக்க அல்லது நம்பிக்கை தீர்மானத்தில் அரசாங்கத்தை ஆதரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பான்மை கிடைத்துவிட்டால் புதிய அரசு தனது ஆட்சியைத் தொடரும், கிடைக்கவில்லையென்றால் அது ஆளுநருக்கு தெரிவிக்கப்படும்.

பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய அரசு கலைக்கப்படுவதாக ஆளுநர் அறிவிப்பார்.

தவெக, நம்பிக்கை வாக்கெடுப்பு, 2026 சட்டப்பேரவைத் தேர்தல்

அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் ஜெயலலிதா)

இது ஏன் முக்கியமானது?

உச்ச நீதிமன்ற வழக்குகள் (எஸ்.ஆர். பொம்மை வழக்கு) மற்றும் சர்க்காரியா மற்றும் பூஞ்சி ஆணையங்களின் பரிந்துரைகளின்படி, ஒரு அரசாங்கத்தின் பெரும்பான்மையைச் சோதிப்பதற்கான இறுதி ஜனநாயக மன்றம் சட்டப்பேரவை தான்.

இத்தகைய நம்பிக்கை வாக்கெடுப்புகளில் ஒரு வாக்கு கூட ஆட்சியைக் கவிழ்க்கக்கூடும்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம், 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, ஆனால் அ.தி.மு.க ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது.

ஆனால், 13 மாதங்களுக்கு பிறகு 1999இல் அ.தி.மு.கவின் ஆதரவை ஜெயலலிதா விலக்கிக்கொள்ள, எதிர்கட்சிகளின் கோரிக்கையின் அடிப்படையில் வாஜ்பாய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசு ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

‘அரசுக்கு ஆதரவளித்தால் நடவடிக்கை’

அதேநேரம், த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அதுதான் எங்கள் கட்சியின் விதி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூற முடியாது” எனத் தெரிவித்தார்.

“அமைச்சர் ஆக வேண்டும், பொறுப்பைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை அவர்களை இவ்வாறு பேச வைக்கிறது. எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார்” எனவும் அவர் தெரிவித்தார்.

தி.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க ஆட்சியமைக்க முயற்சி செய்ததாக வெளியான தகவலையும் அவர் மறுத்தார். அ.தி.மு.க பிளவை முதல்வர் விஜய் ஆதரிக்க மாட்டார் என தாங்கள் நம்புவதாகவும் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

“நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் எதிராக வாக்களிப்போம். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது” என, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

அதையும் மீறி த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தங்கள் தரப்பில் 26 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

”த.வெ.கவுக்கு ஆதரவாக அ.தி.மு.கவின் ஒரு பிரிவு வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர். கொறடா உத்தரவு மீறப்படும்போது கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் யார் கொறடா என்பதை அதிகாரப்பூர்வமாக சட்டமன்ற செயலகம் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் தெளிவு கிடைக்கும்” எனக் கூறுகிறார் பத்திரிகையாளர் ஷ்யாம்.

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது அ.தி.மு.கவில் கணிசமான எம்.எல்.ஏக்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

Previous Story

ශානි නිසා ගස්ගිය සුදු අයියා යළි කරලියට - ජනාධිපති සමාව ඉල්ලයි

Next Story

පිලගේ අවසන් වචන කිහිපය අරවින්ද හෙළිකරයි | සංවේදී කරුණු රැසක් අධිකරණයේදී හෙළිවෙයි