வாராந்த அரசியல்

-நஜீப்-

முஸ்லிம்களது கடமை!

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் நடந்து தற்போது இரண்டரை வருடங்கள் கடந்து போய் விட்டது. 39 வெளி நாட்டவர்கள். மூன்று பொலிசார் உற்பட 253 பேர் இதில் பலியாகி இருக்கின்றார்கள். 500 பேர்வரை படுகாயம் அடைந்திருக்கின்றார்கள். இத் தாக்குதல் தொடர்பில் முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டு வருகின்றது. ஆனால் அப்படித் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டம் என்று தற்போது தெளிவாகி வருகின்றது. எனவே இதன் சூத்திர தாரிகளைக் கண்டறிந்து அவர்களை உலகிற்கு இனம் காட்ட வேண்டியது இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமினதும் முதற் கடமையாக இருக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் முஸ்லிம்களிடத்தில் சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

திரவத்தை நம்பலாமா!

நாட்டில் பெரும் உரத் தட்டுப்பாடும் அதற்கான போராட்டங்களும் அரசியல் நெருக்கடிகளும் ஏற்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் திரவ வகையான ஒரு உரத்தை அரசு இந்தியாவில் இருந்து அவசர அவசரமாக விமானம் மூலம் இறக்குமதி செய்தது. அதற்காக இருபத்தி ஒன்பது கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த பணம் கையாளப்பட்ட ஒழுங்கு முற்றிலும் தவறான நடந்திருக்கின்றது. அடுத்து இப்படி இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட திரவ உரத்தை முதல் முறையாக அங்கு கடந்த ஜூன் மாதத்தில்தான் பரிசோதனை செய்திருக்கின்றார்கள். முதல் முறையாக ஏற்றுமதிக்கு ஆகஸ்ட் மாதத்தில்தான் இந்தியா அனுமதி வழங்கி இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு திரவத்தைதான் தற்போது நமது விவசாயிகள் பரீட்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

நமது தலைநகர் யாழ்!

நாடுகளின் தலைநகர்கள் சில சமயங்களில் அடிக்கடி மாற்றமடைவதும் புதிய இடங்களில் தலைநகர்கள் தோற்றம் பெறுவதும் வரலாற்றுக் காலம் முதல் நடந்து வந்திருக்கின்றது. நமது நாட்டில் கூட இது நடந்திருக்கின்றது. அதற்கு படையெடுப்புகள் கூடக் காரணமாக இருந்து வந்திருக்கின்றது. இன்று நமது வர்த்தக மையம் கொழும்பு புறக் கோட்டை. ஆனால் இன்று அங்கு இல்லாத பொருட்கள் யாழ்ப்பாணத்தில் சுழபமாகவும் மலிவாகவும் வாங்க முடிகின்றது. இப்படித்தான் கொழும்பில் இல்லாத விவசாயத்துக்குத் தேவையான கிருமி நாசினிகளை யாழ்ப்பாணத்தில் பெற முடிகின்றது. அதனைத் தான் நமது சிங்கள ஊடக நண்பர் ஒருவர் விரைவில் யாழ்ப்பாணம் நாட்டின் தலை நகராகப் போகின்றது என்று நமக்கு அரசின் நடவடிக்கைகளை கிண்டலாக விமர்சிக்கும் போது அப்படிச் சொன்னார்.

மார்ச்சில் பட்டினி வரும்!

இந்த நாட்டுக் குடித் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் விவசாயிகள். அதாவது (26) இருபத்தி ஆறு சதவீதமானவர்கள். இதனை மேலும் தெளிவாகச் சொல்வதானால் ஐம்பத்தி ஐந்து (55) இலட்சம் பேர். இவர்களுக்கு தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை. இதனால் நாட்டில் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி நிலை அடுத்த வருடத் துவக்கத்தில் வர இருக்கின்றது என்று பரவலான கருத்துக்கள். அப்படியானால் அவர்களது வாழ்வாதாரம் பிள்ளைகள் அவர்கள் கல்வி. அன்றாடத் தேவைகள் சாப்பாட்டு வழி எல்லாமே கேள்விக்குறி. நாட்டில் அன்னியச் செலவானிக்குப் தற்போது பெரும் தட்டுப்பாடு. டொலர் பற்றாக் குறை பொருட்களை கொள்வனவு செய்து மக்களுக்கு உணவு வழங்க வழியில்லா நிலை அரசுக்கு. எனவே பட்டினிக் கதையில் உண்மை இருப்பதாகத்தான் தெரிகின்றது. முதலாளிமார்கள்தான் பொருட்களின் விலையைத் தீர்மானிப்பார்கள். அதுதான் தற்போதும் நடந்து கொண்டிருக்கின்றது.

நாடு இருளில் மூழ்கும்

வியாழக்கிழமை ஆளும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டமொன்று நடைபெற்றது. அங்கு ஜனாதிபதி பிரதமர் நிதி அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் ஆளும் தரப்புக் கூட்டணிக் கட்சிகள் அந்த சந்திப்பில் திருப்தி கொண்டதாகத் தெரியவில்லை. இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரம் ஆளும் கூட்டணியில் உள்ள பதினொரு கட்சிகள் மாற்று ஏற்பாடுகள் தொடர்பான கூட்டமொன்றை மக்கள் சந்திப்பு என்ற தொனிப் பொருளில் கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் அரசு அமெரிக்காவுடன்; செய்து கொண்டுள்ள சுகதனவிய என்ற ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி மின்சார சபை ஊழியர்கள் இரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இறங்க இருக்கின்றனர். அப்படியானால் வரும் 3 மற்றும் 4ம் திகதிகளில் நாடு இருளில் மூழ்கும்.

Previous Story

வாராந்த அரசியல்

Next Story

போதையில் பிடிபட்ட ஞானசார தேரர்