வாராந்த அரசியல் 31.12.2023

-நஜீப்-

கருவப் பிள்ளைக் கதை!

I am the Godfather of Russian tourists” - Udayanga Weeratunga - Opinion | Daily Mirror

தற்போது ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேலாக நாம் சில கருத்துக்களை தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றோம். அதில் முக்கியமாக மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ரணில் வர வாய்பே கிடையாது என்பதும் முக்கியமானது. அதே போன்று தேர்தல் நடக்குமாக இருந்தால் முன்கூட்டி வருவது பொதுத் தேர்தல் என்பதும் நமது கணக்கு.

இது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான கதைகளை ஊடகங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாலும் நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களோ தடுமாற்றங்களோ கிடையாது. அந்த வகையில் மொட்டுக் கட்சியில் ரணிலுக்கு ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பு கிடையாது என்பதும் உறுதியாகி இருக்கின்றது. அத்துடன் முதலில் வருவது பொதுத் தேர்தல்தான் என்றும் நாம் சொல்லி வருகின்றோம் அதனையும் உறுதி செய்திருக்கின்றார் ராஜபக்ஸாக்களின் உறவினரும் அரசியல் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்ஹ.

தான் கலந்து கொண்ட தனியார் ஊடக நிகழ்சியொன்றில் அவர் எமது நிலைப்பாட்டையே அங்கு உறுதியாக குறிப்பிட்டிருக்கின்றார். இவர் கோட்டா அரசியலுக்கு வருவதை துவக்கத்தில் இருந்து எதிர்த்தவர். ரணில் கருவப் பிள்ளையாகத்தான் பாவிக்கப்படுகின்றார் என்றும் அவர் முன்பு சொல்லி இருந்தார். உதயங்க ரஸ்யாவுடன் இன்றும் நெருக்கமான உறவில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காக்கையின் பொன் குஞ்சு!

தனது கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் தான் என்பதனை சஜித் உறுதிப்படுத்தி இருக்கின்ற நிலையில், புதிதாக அவர்கள் தேர்தலுக்கான கூட்டணி ஒன்றையும் உருவாக்க இருக்கின்றார்கள். அப்படி வருகின்றவர்கள் தமக்கு கௌரவமான பதவிகளையும் தொகுதிகளையும் எதிர்பார்க்கின்றார்கள்.

டலஸ் அணியில் பிரதித் தலைவர் பதவி கோட்பதால்  கட்சியில் இருக்கும் சீனியர்களை பகைக்க வேண்டி வரும் என்று சஜித் அஞ்சுகின்றார். ஏற்கெனவே பிரதமர் பதவி பேராசிரியர் ஜீ.எல்லுக்கு என்றும் ஒரு இசு இருக்கின்றது.

ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெற்றால் அவரது பிரதமர்,  தற்போதய கட்சி செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார என்பது நமது கணக்கு. இதற்கிடையில் நடுநிலையான கருத்துக் கணிப்புக்கள் அனைத்தும் அணுரகுமார முன்னணியில் என உறுதி செய்கின்றன.

ஆனால் அண்மையில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சஜித் அணி செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தமது கட்சி நடாத்திய ஒரு கருத்துக் கணிப்பில் சஜித் அணுரகுமாரவை விட பெரும் வித்தியாசத்தில் முன்னணியில் இருப்பதாக சொல்லி இருக்கின்றார்.

சிங்கள அரச சபையில்  ‘அந்தரே’ சொன்ன கோமாளிக் கதைகள் போலத்தான் இதுவும். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சே ஓகே.!

மாறுமா தமிழர்  தலைவிதி!

Crossing Red Lines: The New Tamil Consensus in Sri Lanka – Groundviews

தமிழர் அரசியல் நம்பிக்கைகளிலும் எதிர்பார்ப்புக்களிலும் சமகாலத்தில் தெளிவில்லாத ஒரு நிலை கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேல் தொடர்கின்றன. கட்சி நிருவாகிகள் தொடர்பான தெரிவு பெரும்பாலும் ஒரு தனி நபர் அல்லது ஒரு சிறு குழுவின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தீர்மானிக்கின்ற நிலையே இதுவரை காணப்பட்டது.

இதனால் தமிழர் மத்தியில் தமிழரசு கட்சி சமகாலத்தில் உணர்வுபூர்வமற்றதாகக் காணப்படுகின்றது. கொழும்பை நம்பி சம்பந்தன் ஐயா ஏறக்குறைய ஒரு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களை ஏமாற்றி இருக்கின்றார், அல்லது அவர் இயலாமையைப்  பாவித்து அவரை வழி நடாத்தியவர்கள் தமிழர்களை ஏமாற்றி வந்திருக்கின்றார்கள்.

மாவை தலைவர் பதவியில் இருந்தாலும் அவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் டம்மியாகத்தான் காரியம் பார்க்க வேண்டிய நிலை அங்கு. குறிப்பாக அண்மைக் காலமாக ரணில் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என்று தெரிந்து கொண்டும்  பெரியவரை வல்லுணர் தொடர்ந்தும் அலைக்களித்திருக்கின்றார்.

இதுதான் அரசியல் முதிர்வா?  இந்த முறை கட்சி தனது நிருவாகிகளை வாக்களிப்பில் தீர்மானிக்க இருப்பதாகத் தெரிகின்றது. இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்பது எமது கருத்து.

நாடாளுமன்றத்தை மூடவும்!

I am 1000% sure Ranil will get 140+ votes" - UNP chairman - NewsWire

ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடு இலங்கை. இதுதான் காட்டுப் கழுதைகளின் சுதந்திரம். இப்படியான சுதந்திரம் சிங்கப்பூரிலோ மலேசியாவிலோகூடக் கிடையாது. எழுபத்தி ஐந்து   (75) வரையிலான தேர்தல்களை சந்தித்த ஒரே தலைவர் ரணில்.

உலகில் எந்தத் தலைவர்களுக்கும் இல்லாத ஜனநாயகம் தொடர்பான அறிவு உள்ள ஒரே தலைவரும் ஜனாதிபதி ரணில் மட்டுமே. இப்படி பேசி இருப்பவர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும் ரணிலின் அரசியல் சகாவுமான வஜிர அபேவர்தன.  அவர் கணக்குப்படி அமெரிக்க ஜனாதிபதி பைடன், ரஸ்யா ஜனாதிபதி புடினைவிடவும் ரணில் சக்தி வாய்தவர்.

எனவேதான் ரணிலுக்கு நாட்டை ஆள்வதற்கு நாடாளுமன்றம் கூடத் தேவை இல்லை. அதனைக் கலைத்துவிடவும் என்று நான்  ஒரு முறை சொல்லி இருந்தோன் என்றும் ரணிலின் சகா வஜிர ஒரு பொது வைபவத்தில் சில தினங்களுக்கு முன்னர் பேசி இருக்கின்றார்.

எனவே ஐக்கிய தேசியக் கட்சியும் ரணிலும் தேர்தல் தொடர்ப்பில் அச்சத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. வஜிர ரணிலின் குரலாக எடுத்துக் கொள்ள முடியும். எனவே தேர்தல் வருகின்றது என்றாலும் அதிகாரிகளை வைத்து அதற்கு ஆப்பு வைக்கும் அச்சம் இன்னும் முற்றாக நீங்கவில்லை.

ஆகாயத்தில் வாழ்கின்ற தலைவன்!

Editorial - Ayubowan Wigneswaran : Win or lose, we go shopping after the election – Imelda Marcos - Opinion | Daily Mirror

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி வாய்ப்புத் தொடர்பாக தமிழ் மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ணேஸ்வரன் தெரிவித்த கருத்து ஆச்சர்யமானதாக இருக்கின்றது. அவருக்கு அப்படியாக கருத்துத் தெரிக்க இருக்கும் உரிமையை நாம் மதிக்கின்றோம், ஆனால் அது தொடர்பில் நமக்குள்ள சந்தேகங்களை நாங்கள் அவரிடம் கேள்வியாக முன்வைக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

மொட்டுக் கட்சி அங்கிகாரம் பெற்ற ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறக்கப்பட்டால் அவர் வெற்றி பெறுவார் என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் ஓகே. அப்படியாக இருந்தால் இன்னும் மொட்டுக் கட்சி தெற்கில் பெரும் செல்வாக்குடன்தான் இருக்கின்றது என்றுதான் அதன் அர்த்தம்.

அல்லது இப்படி ஒரு மிகைப்பட்ட கருத்தை சந்தைப்படுத்தி நீங்கள் ரணிலுக்கு வேட்பாளர் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுக்க கடைக்குப் போகின்றீர்களா என்றும் நமக்கு ஒரு சின்ன சந்தேகம் வருகின்றது. ஐயா ரணில் வேட்பாளரானால் தமிழ் மக்கள் அவருக்கா வோட்டுப் போட வேண்டும்?

இது வரை ஏமாந்தது போதாதா?  இது உள்நோக்கம் கொண்ட ஒரு இசுவாக இருக்க அதிக வாய்ப்புக்கள். நீங்களும் தேர்தலுக்கு வரும் கதை என்னாச்சி? பொதுத் தேர்தலின் பின்னர் தான் இனப் பிரச்சினைக்கு தீர்வு என்று ரணில் கூறி இருக்கின்றார். நமது கருத்துப்படி விகி ஆகாயத்தில்  வாழ்கின்றார் போலும்.

நன்றி: 31.12.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இயற்கைக்கு மாறான உறவு: கணவருக்கு 9 ஆண்டு சிறை!

Next Story

மத்திய தரைக்கடலுக்கு ஈரான் போட்ட ஸ்கெட்ச்! ஓங்கும் ஹவுதியின் கை!