வாராந்த அரசியல்

நஜீப்

கரன்னாவுக்கு விடுதலை!
கடத்திச் செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்ட பதினொரு இளைஞர்கள் தொடர்பிலான வழக்கில் இருந்து பிரதான குற்றவாளியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அந்தக் குற்றச்சாட்டில் இருந்து நீதி மன்றத்தால் விடுவிப்புச் செய்யப்பட்டிருப்பது, உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்ற என்று தெரிகின்றது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்களும் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள். கடந்த நல்லாட்சி காலத்தில் இவருக்கு எதிரான நடவடிக்கைக்கு முயற்ச்சிகள் நடந்த போது இந்தக் கரன்னா நாட்டிலிருந்து தப்பிச் சென்றதும், பின்னர் தற்போதய அரசு பதவிக்கு வந்ததும் அவர் ஜனாதிபதி ஜீ.ஆருடன் நெருக்கமாக இருந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியே வந்திருந்ததும் நினைவில் இருக்கலாம்.

ஜனாதிபதியாகும் ரணில்!
தற்போதய ஜனாதிபதி ஜீ.ஆர். சித்திபெறத் தவறி இருக்கின்றார். எனவே அவர் தனது பதவியை துறந்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணிலுக்கு ஜனாதிபதிப் பதவியை ஒப்படைத்து விட்டு வீட்டிற்குப் போக வேண்டும் என்று அந்தக் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இப்படியான கோமாளித்தனமான கருத்துக்களை முன் வைக்கும் அந்தக் கட்சிச் செயலாளர் ரங்கே பண்டார இந்த நாட்டு மக்களை மந்தைகள் என்றும் மந்த புத்திக்காரர்கள் என்றும் நினைத்துத்தான் இப்படிக் கூறி இருக்க வேண்டும். சட்ட ரீதியில் இப்படி கற்பனை பண்ணுசதற்கே வாய்ப்பே கிடையாது. யதார்த்தம் அப்படி இருக்க இந்த கதையை ஊடகங்கள் முன் சொல்கின்றவர் முதலில் தன்னை மனநோய் வைத்தியரிடம் போய் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பது எமது கருத்து.

கானல் நீராகும் யாப்பு!
ஆளும் தரப்பிலுள்ள சிரேஷ்ட அரசியல் தலைவர் திஸ்ஸ விதாரன. அவர் புதிய அரசியல் யாப்புத் தொடர்ப்பில் சில கருத்துக்களை சொல்லி இருக்கின்றார். அரசியல் யாப்பை விரைவில் தருகின்றோம் என்று அரசு கூறுவருது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம். அப்படி அவசர அவசரமாக அரசியல் யாப்புக்களை உருவாக்க முடியாது. அப்படியாக அவசரமாக உருவாகின்ற யாப்பில் இந்த நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வும் வரப் போவதில்லை என்பது பேரசிரியர் திஸ்ஸ விதாரன கருத்ததாக இருக்கின்றது. இந்த அரசு கடும் போக்கு இனவாத அரசியல் யாப்பொன்றை உருவாக்கவே கனவு கண்டு கொண்டிருந்தது. ஆனால் சர்வதேசத்திடம் மண்டியிடுகின்ற இந்த நேரத்தில் அதற்கு வாய்ப்புக்கள் இல்லை. எனவே அரசியல் யாப்பு என்று அரசு கூறிக் கொண்டிருப்பது எம்மைப் பொறுத்தவரை கானல் நீர்தான்.

துரோகிகளைத் துரத்தவும்!
மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக முன்னாள் மு.கா. செயலாளரும் பிரதி அமைச்சருமான ஹசனலியை நாம் தொடர்பு கொண்ட போது, இது பிராந்திய நலன்களைப் பாதுகாக்கின்ற ஒரு தேர்தலாக சிறுபான்மை சமூகங்கள் பார்க்க வேண்டும். தேசிய கட்சிகளின் நலன்களை தூக்கிப் பிடித்து இந்தத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மை சமூகங்கள் களத்தில் இறங்குவது முற்றாக நிராகரிப்பட வேண்டும். இதற்காக இங்குள்ள தமிழ் பேசும் சமூகத்தினர் ஐக்கியப்பட வேண்டும் என்பது அவரது வாதமாக இருந்தது. முஸ்லிம் சமூக நலன்களைக் காக்கப் போன நமது பிரதிநிதிகள் இன்று அரசின் அடிவருடிகளாகி சமூகத்துக்குத் துரோகம் இளைத்து வருகின்றார்கள். இவர்களையும் இவர்களது தலைமைகளையும் சமூகம் இந்தத் தேர்தலில் தூக்கி எறிந்து அவர்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என ஹசனலி அழைப்பு விடுக்கின்றார்.

மயானத்தின் விளிம்பில் நாடு!
சமந்த வித்தியாரத்ன முன்னாள் பதுள்ளை மாவட்ட ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினர். கிராமிய மொழியில் ஆழமான கருத்துக்களை கவர்ச்சியாகப் பேசக் கூடியவர். அவர் ஏழு வருடங்களுக்கு முன்பு பேசிய ஒரு சொற்பொலிவு சிங்கள வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் அன்று இந்த நாடு மயானத்தை நோக்கிப் பயணிப்பது பற்றி அழகாக சொல்லி இருக்கின்றார். அவர் அன்று சொன்னபடி நாடு மயானத்துக்குப் போய் இன்று குழியில் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கின்றது. எனவே நிலமையை நாட்டு மக்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை அவர்கள் அனுபவித்து வருகின்றார்கள். அன்று பொருட்களின் விலை சதக் கணக்கில் அல்லது ஐந்து,பத்து ரூபா என்று அதிகரித்தது. இன்று அது ஆயிரக் கணக்கில் என்று உயர் நிலையில் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இதனை மக்கள் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

Previous Story

தேர்தல் பற்றிய கதைகளும் சந்தேகங்களும்!

Next Story

பிராந்திய நலன் காக்க பகிரங்க அழைப்பு