-நஜீப்-
(நன்றி ஞாயிறு தினக்குரல்- 06/07/2025)
ராஜாக்கள்-கையாட்கள் கதறல்.!
எங்கே சொன்னபடி கள்வர்களைப் பிடிக்கவுமில்லை சிறையில் அடைக்கவுமில்லை என்று நாமல் ராஜபக்ஸ பல முறை நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். நாம் சட்டத்தை முறையாக அமுல்படுத்துகின்ற போது கதற வேண்டாம் என ஜனாதிபதி அணுரகுமாரவும் அதற்கு ஒரு முறை பதில் கொடுத்திருந்தார். இப்போது அந்தக் காட்சிகள் நாட்டில் அரங்கேரி வருகின்றது.
இப்போது தினந்தோரும் நீதிமன்றங்களுக்கு ஆட்களை இழுத்து வருவதைவிட வேறு எதையும் இந்த அரசாங்கம் செய்வதை நமக்குத் தெரியவில்லை என்று நாமல் ராஜபக்ஸ பேசி வருகின்றார்.
எயர் லங்கா ஊழல் தொடர்பில் சிரந்தி ராஜபக்ஸ சகோதரர் கைது செய்யப்பட்டதிலிருந்து ராஜபக்ஸாக்கள் பெரும் கலக்கத்தில் இருப்பது தெரிகின்றது.
பௌத்த தேரர்களிடம் மண்றாடிய கதைகள் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டிருந்ததும் தெரிந்ததே.
தமிழர் கடும் கோபத்தில்!
ஒரு காலத்தில் தமிழர்களின் அரசியல் வடக்குக் கிழக்கு தெற்கில் மட்டுமல்ல முழு தமிழ் உலகத்திலும் முன்னுதாரணமாக பேசப்பட்டு வந்தது. பிரபாகரன் காலத்தில் அது உச்சம் தொட்டிருந்தது என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
சமகாலத்தில் அது மிகவும் அவல நிலைக்குப் போய் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் தெற்கு ஆட்சியாளர்களுடன் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் உறவுகளை வளர்த்துக் கொண்டு தமிழ் மக்களின் தலைவர்களாக தம்மைக் காட்டிக் கொண்ட சிலர் என்பதை இப்போது மக்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றாhகள்.
அங்கு நமக்கு நெருக்கமான சிலர் தருகின்ற தகல்களின் படி இவர்களுடன் ஒப்பிடும் போது அணுர மேல் என்ற ஒரு நிலைக்கு இந்தத் துரோகிகளே காரணம் என்றும் விமர்சனங்கள். மாகாணசபைத் தேர்தல் அனேகமாக வரலாம். அதற்கு முன்னர் அங்கொரு செல்வாக்கான அரசியல் இயக்கம் காலத்தின் தேவையாக உணரப்பட்டிருக்கின்றது.
புதிய கட்சி வருகின்றதாம்!
ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒரு பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. தலைமைத்துவம் பலயீனமாக இருப்பதால்தான் நமக்கு இந்த நிலை என்று சஜித் மீது கூட இருப்போர் சிலர் குற்றம்சாட்டுவதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த செயல்பாடுகளின் பின்னணியில் ரணில் இருப்பதாக நம்பப்படுகின்றது.
தன்னுடன் கூட இருப்பவர்கள் சிலர் தலைமைத்துவ மாற்றம் பற்றி இரகசிய கலந்துரையாடல்களை நடாத்தி இருப்பது தலைவருக்குத் தெரிய வந்திருக்கின்றது. ஜனாதிபதி அணுராவுடன் ஒப்பு நோக்கின்ற போது சஜித் அளுமை மிகவும் கீழ் மட்டத்தில் என்பது உண்மைதான். அதே நேரம் மக்களால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டிருக்கின்ற ரணிலை நம்பி தலைவருக்குத் துரோகம் பண்ணுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
அங்கு இன்னும் ஒரு குழு புதிய அரசியல் கட்சி துவங்குவது பற்றியும் ஆராய்கின்றதாம். சீனியர் பிரேமுக்கும் இப்படி ஒரு நிலைவந்தபோது அதில் அவர் வெற்றி கொண்டார். ஜூனியர் என்ன செய்வார் பெறுத்துப் பார்ப்போம்.
பெரியவர் நைசாக நழுவினார்.!
ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக்க அரசு கடந்தகால ஊழல்வாதிகள் அரச சொத்துக்களைக் கொள்ளையடித்து நாட்டை நெருக்கடிகளுக்கு ஆளாக்கியவர்களைப் பிடித்து விசாரிக்கின்ற செயலணிகளைப் பலப்படுத்தி வருகின்றது.
இதனால் அச்சம் கொண்ட கொள்ளையர்கள் மோசடிக்காரர்கள் பலர் நாட்டில் இருந்து தப்பியோடுகின்ற ஒரு முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் சிலர்; முன்னாள் பெரியவர் மஹிந்த ராஜபக்ஸாவை அண்மையில சந்தித்து தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வீடுதேடிப்போன போது முன்னாள் பெரியவர் தற்போது நான் அரசியல் பொறுப்புக்கள் அனைத்தையும் நாமலுக்கு ஒப்படைத்து விட்டேன்.
எனவே அவரிடம் போய் உங்களது பிரச்சினைகளைச் சொல்லி தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதன் நைசாக தீர்வு வழங்குவதைத் தவிர்த்துக் கொண்டிருக்கின்றார்.
விஜேவீர தாயாருக்கு அதிர்ச்சி!
இது ஒரு வரலாறு: தமது அரசியல் இயக்கத்தை துவங்கிய ஜேவிபி. பல போராட்டங்களையும் நாட்டில் நடாத்திக் கொண்டு வந்திருக்கின்றனர். ஒரு முறை கொழும்பில் இருக்கின்ற அமெரிக்கத் தூதுவராலயத்துக்கு முன்னால் நடந்த ஒரு அசம்பாவிதம் தொடர்ப்பில் முதல் முறையாக ரோஹன விஜேவீர கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்.
மேற்படி சம்பவம் தொடர்ப்பில் அவர் விசாரணைக்காக பதுள்ளை நீதி மன்றத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றார். அப்போது தனது மகனைப் பார்க்க அவரது தயார் நெசி நோனாவும் மாத்தரை-கோட்டேகொடையிலிருந்து அங்கு போய் இருக்கின்றார்.
நீதி மன்றச் சுற்றுவட்டாரத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டின் நாலாபுரங்களில் இருந்தும் வந்து அங்கு கூடி இருக்கின்றார்கள்.
அப்போதுதான் விஜேவீரவின் தாயாருக்குத் தெரியவருகின்றது தனது மகன் ஒரு பெரும் அரசியல் தலைவர் என்பது. ஆனால் விஜேவீர அந்த தூதரக சம்பவத்தில் பங்கு கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.