ஏப்ரல் 9, புதன்கிழமை (இன்று) முதல் சீனப் பொருட்களுக்கு 100 சதவிகிதத்துக்கும் அதிகமான இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா அமலாக்கிய நிலையில், சீனா 84 சதவிகித வரி விதிப்பால் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அனைததுக்கும்
டிரம்ப் நிர்வாகம் பெய்ஜிங்கின் மீது விதித்துள்ள 20 சதவிகித இறக்குமதி வரியின் காரணமாக, சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும், அமெரிக்காவில் கணிசமாக விலை ஏறும்.
எல்லாப் பொருட்களும் இறக்குமதி வரி – 100 சதவிகிதமாக உயர்ந்தால் – அதன் விளைவாக விலை ஐந்து மடங்கு அதிகரிக்கலாம்.
சீனாவின் பதிலடி வரி விதிப்பால் அமெரிக்க இறக்குமதிப் பொருட்களின் விலை சீனாவில் அதிகரித்து, இதேபோன்ற வழியில் சீன நுகர்வோரைத்தான் இறுதியாக பாதிக்கும்.
ஆனால், இறக்குமதி வரியைத் தவிரவும், இரண்டு நாடுகளும் வர்த்தகம் மூலமாக ஒன்றை ஒன்று சேதப்படுத்திக் கொள்வதற்கு பிற வழிகளிலும் முயற்சிக்கலாம்.
தொழில்துறைக்குத் தேவையான தாமிரம், லித்தியத்தில் இருந்து பல அரிய தாதுக்கள் வரையிலான முக்கிய உலோகங்களை சுத்திகரிப்பதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த உலோகங்கள் அமெரிக்காவுக்குக் கிடைக்காமல் செய்வதற்கான தடைகளை பெய்ஜிங் ஏற்படுத்தலாம்.
ராணுவ தெர்மல் இமேஜிங்கிலும், ரேடாரிலும் பயன்படுத்தப்படும் ஜெர்மானியம் மற்றும் கேலியம் இரண்டு பொருட்களின் விஷயத்திலும் சீனா இதை ஏற்கெனவே செய்துள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அது ஏற்கெனவே ஜோ பைடன் தொடங்கிய சீனாவின் மீதான தொழில்நுட்ப முற்றுகையைத் தொடரலாம். இதன் மூலம், செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியமான மேம்பட்ட மைக்ரோசிப்கள் போன்ற சீனா இன்னமும் தயாரிக்க முடியாத பொருட்களின் இறக்குமதியை சீனாவுக்கு அமெரிக்க கடினமாக்க முடியும்.
அமெரிக்காவுக்குத் தொடர்ந்து ஏற்றுமதி செய்ய விரும்பினால் சீனாவுடன் வணிகப் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்று கம்போடியா, மெக்ஸிகோ, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முடியும் என்று இந்த வாரம் குறிப்பிட்டார் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவாரோ.
மற்ற நாடுகளை இது எப்படி பாதிக்கும்?
சர்வதேச நாணய நிதியத்தின் படி (ஐ.எம். எஃப்), அமெரிக்காவும், சீனாவும் சேர்ந்து உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கு , அதாவது 43 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன.
இந்த இரண்டு நாடுகளும் முழுமையான வர்த்தகப் போரில் ஈடுபட்டு அவற்றின் வளர்ச்சி குறைந்தாலோ, அல்லது பொருளாதார மந்தநிலையை நோக்கித் தள்ளப்பட்டாலோ, அது உலக வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் மற்ற நாடுகளின் பொருளாதாரத்துக்கும் தீங்கு விளைவிக்கும்.
சர்வதேச முதலீடும் பாதிக்கப்படலாம்.
வேறு விளைவுகளுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
சீனா உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடு. அது தன் சொந்த மக்கள் தொகை நுகர்வதை விட மிக அதிகமான பொருட்களைத் தயாரிக்கிறது.
ஏற்கெனவே ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனா உபரியாக உற்பத்தி செய்து வருகிறது – அதாவது தான் இறக்குமதி செய்வதை விட உலகின் பிற பகுதிகளுக்கு அது ஏற்றுமதி செய்கிறது.
மலிவாகக் கிடைக்கும் கடன்கள் போன்ற அரசு நிதி உதவிகள், உள்நாட்டு மானியங்கள் போன்றவற்றால், சலுகை பெறும் நிறுவனங்கள், அந்தப் பொருட்களின் உண்மையான உற்பத்திச் செலவை விடவும் குறைவான விலைக்கே பொருட்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.
இந்தப் பொருட்களை சீனா அமெரிக்காவுக்குள் நுழைக்க முடியவில்லை என்றால், சீன நிறுவனங்கள் இவற்றை உலகின் எங்கு வேண்டுமானாலும் ‘தள்ளிவிடும்’ ஆபத்து இருக்கிறது.
சில நுகர்வோருக்கு இதனால் நன்மை பயக்கும் என்றாலும், உலகெங்கும் இதே பொருட்களைத் தயாரிக்கும் மற்ற நாடுகளுக்கு சம்பளம் மற்றும் வேலை இழப்பை இது ஏற்படுத்தலாம்.
‘லாபி’ அமைப்பான யுகே ஸ்டீல், அதிகப்படியான எஃகு பிரிட்டன் சந்தைக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்துள்ளது.
முழுமையான சீன-அமெரிக்க வர்த்தகப்போர் பாதிப்பின் எச்சம், உலகம் முழுவதும் உணரப்பட வாய்ப்பிருக்கிறது. இதன் விளைவுகள் மிகவும் எதிர்மறையாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று பெரும்பான்மையான பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.





