வருகிறது   தேர்தல்!

-நஜீப் பின் கபூர்-

எரி பொருட்களுக்கும் சமயல் எரிவாயுக்காகவும் ஏன் அன்றாட உணவுக்குக்கூட மக்கள் இரவு பகலாக வீதியில் நிற்க்கின்றார்கள். விவசாயிகள் தாங்களது பயிர்களுக்கு பசளையின்றி நாசம் போன விளை நிலங்களைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தாய்மார் தமது குழந்தைகளுக்கு ஒரு நேரச் சாப்பாடு போடுவது எப்படி என்று தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வருமானத்துக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டு வருவதால் என்ன பண்ணலாம் ஏது பார்க்கலாம் என்று ஓடித்திரியும் பெற்றோர். பள்ளிப் படிப்படிப்பை தொடர வழி இன்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவர்கள். தங்களது எதிர்கலம் இருண்ட யுகத்தை நோக்கிப் பயணிப்பதை கண்கூடகப் பார்த்துக் கொண்டிருக்கின்ற இளசுகள். முழுக் குடி மக்களும் கையேந்தி நிற்கும் காட்சிகள்.

கண்முன்னே தெரிகின்ற பட்டினிச் சாவு. இன்றைக்கு 15-20 வருடங்களுக்கு முன்னர் எதியோப்பியா மற்றும் சோமலியா நாடுகளில் நாம் பார்த்த விகாரமான உடல்கள். கொத்துக் கொத்தாக செத்து மடிந்த  மனித உயிர்கள் இப்போதும் நம் கண்களுக்குத் தெரிகின்றது. அநேகமாக அது வரட்சியின் கொடூரம். ஆனால் இங்கு நிலமை வேறு. பொன் விளையும் நிலம் இருக்க அதிகாரத்தில் இருப்போர் பொது மக்கள் சொத்துக்களை சூறையாடியதால் இங்கு இந்த அவலம். இந்த ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும் வரை சர்வதேச நாடுகள் நமக்கு உதவுவதில் அச்சம் கொள்கின்றன அல்லது ஆர்வம் இல்லாது நிற்க்கின்றன. இந்தியாவும் சீனாவும் நாம் வழக்கமாகச் சொல்வதைப் போல இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நமக்கு ஓசிச் சாப்பாடு போட முடியும்.

ஏற்கெனவே தாம் கொடுத்த கடன்களை எப்படித் திருப்பிப் பெற்றுக் கொள்வது என்பதில்தான் அவர்கள் இன்று ஆர்வமாக இருக்கின்றார்கள். உலகில் எல்லாத் தலைவர்களையும் தனக்குத் தெரியும் என்று பிரதமரான ரணில் இந்த நாட்டுக்கு இதுவரை ஒரு டொலர் கூடக் கொண்டுவரவில்லை.

ராஜபக்ஸாக்களுக்கு மக்களிடம் இருக்கின்ற கோபத்தை தனிப்பதற்குத்தான் இந்த மனிதனை அவர்கள் பிரதமர் கதிரையில் அமர்த்தினார்கள் என்பது, ரணில் வந்தால் நிலமை மாறும் என்று கனவு கண்டவர்களுக்கு இப்பபோது புரிந்திருக்க வேண்டும். எனவேதான் ‘கேட்டா-ரணில் கோ ஹோம்’ என்று தெருவில் மக்கள் கோஷங்கள் தொடர்ச்சியாகக் கேட்கின்றன.

தற்போது நாம்  கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் எச்சரித்திருந்த காட்சிகள் இங்கு அரங்கேரிக் கொண்டிருக்கின்றன. நமது ஊகங்களை அச்சொட்டாக களத்தில் பார்க்க முடிகின்றது. இந்த நிலையில் நாம் வருகிறது தேர்தல் என்ற தலைப்பில் இந்த வாரம் பேசப் போகின்றோம்.

அரசியலை விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்துதான் நாம் இந்தத் தலைப்பை தெரிவு செய்திருக்கின்றோம்.

இப்படி ஒரு ஜனரஞ்சகமான தலைப்பில் கதை சொல்லி மக்கள் கவனத்தை திசை திருப்பும் கபடத்தனமான எண்ணம் நமக்குக் கிடையாது-அது நமக்குத் தேவையும் இல்லை. எழுதுவதற்கு எத்தனையோ தலைப்புக்கள் இருந்தாலும் மக்களுக்கு நம்பிகை தரும் ஒரு நல்ல செய்தியை சொல்லத்தான் நாம் இந்த வாரம் எதிர்பார்க்கின்றோம். நமது வாதங்களுக்கான நியாயங்களை இப்போது  பார்ப்போம்.

தேசிய சர்வதேசக் காரணிகள்

01.நாட்டில் ஸ்தீரமான அரசு ஒன்று பதவியில் இருக்க வேண்டும் என்று சர்வதேசமும் நாடும் எதிர்பார்க்கின்றது.

02.தற்போதய ஆட்சியாளர்களால் இந்த தேசத்தை தொடர்ந்தும் நிருவாகிக்க முடியாது என்பதனை உள்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.

03.ஆட்சியாளர்கள்தான் இன்றைய நெருக்கடி நிலைக்கு பிரதான காரணம். அவர்கள் பொதுமக்களின் சொத்துக்களை-பணத்தைக் கொள்ளையடித்திருப்பது ஆளும் தரப்பு உறுப்பினர்  சரித்த ஹேரத்தைத் தலைவராகக் கொண்ட கோப் குழுவின் சாட்சிகள் மூலம் உறுதியாகி வருகின்றது.

04.இதுவரையும் நமக்குக் கை கொடுத்த சீனாவும் இந்தியாவும் இந்த ராஜபக்ஸ அரசு எதிர்வரும் காலங்களில் அதிகாரத்துக்கு வரமாட்டார்கள். எனவே இவர்களுடன் கொடுக்கல்வாங்கல் செய்வது நம்பகத் தன்மையற்றது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கின்றார்கள். இதனால் உதவிகள் கேள்விக்குறி.

05.இந்த ஆட்சியார்கள் மீது உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நிறையவே படுகொலைகள் முறையற்ற செயல்பாடுகள் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்.

06.ரணிலைப் பிரதமராக்கியதன் மூலம் ராஜபக்ஸாக்கள் ஒரு அரசியல் நாடகத்தையே அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அவரால் ஆகப்பேவது எதுவுமேயில்லை என்பதும் உறுத்திப்படுத்தப்பட்டிருக்கின்றது.

07.இந்த ஆட்சியாளர்கள் மீதான சர்வதேச உள்ளுர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதானால் இவர்கள் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற யதார்த்தம்.

08.ஐ.நா. மற்றும் சர்வதேச நிதி நிருவனங்கள் கூட இலங்கையின் நெருக்கடிகள் ஆபத்துக்கள் தொடர்பாகத் தொடர்ந்தும் தமது கவலையை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

09.ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான தாமதம் வரப் பேகும் அழிவில் சேதத்தை மேலும் ஆகோரப்படுத்துவதாகத்தான் அமையும் என்ற நிலை.

10.ஆட்சியாளர்கள் மீது சர்வதேசம் நம்பகத்தன்மையுடன் இல்லை. அந்த நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதற்கான வலுவான இடைவெளி நாட்டில் இருக்கின்றது. அது சீர் செய்யப்பட வேண்டும்.

11.மொத்தத்தில் உள்நாட்டிலும் சர்வதேசத்தின் மத்தியிலும் பதவியில் உள்ள அரசு வங்குரோத்தானது என்பது உறுதியாகியுள்ளது.

12.தேசிய சர்வதேச ரீதியில் நாடு தனித்து விடப்பட்டிருக்கின்றது. அரசு என்ற வண்டி நான்கு டயர்களும்  பஞ்சராகி என்ஜீன் கூட தீப்பிடித்து நாசமான நிலையில் இருக்கின்றது. ஆனால் சாரதியோ இந்த  வண்டியைத் தன்னால் ஓட்ட முடியும் என அடம்பிக்கின்றார். இந்நிலையில்தான் அதிகார வர்க்கம் இருக்கின்றது.

13.நமது ஆய்வுகளுக்கும் கணிப்புக்கும் உள்வாங்கிக் கொள்வதில் தவறிப் போன இன்னும் எத்தனையோ நியாயங்களை இதில் இணைத்துக் கொள்ள முடியும்.

இதுவரை ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான தேசிய சர்வதேச நியாயங்களைப் பார்த்தோம். இந்தக் காரணங்கள் என்னதான் நியாயமானது என்று இருந்தாலும் நாம் ‘வருகின்றது தேர்தல்’ என்று கொடுத்திருக்கின்ற தலைப்புடன் இவை எவ்வளவுதூரம் ஏற்புடையது என்பதில் வாசகர்களுக்கு திருப்தியற்ற நிலை நிச்சயம் இருக்கும் என்பது நமக்கு நன்றகப்  புரிகின்றது.

இப்போது நேரடியாக விடயத்துக்கு வருவோம். பொதுத் தேர்தல் என்ற காய் தற்போது நன்றாக கனிந்துத்தான் இருக்கின்றது. அது தானக விழுகின்ற நிலையை நெருக்கி விட்டது. அல்லது கல்லெறிந்து காய்பறிப்பது யார் என்ற நிலையில் இருக்கின்றது என்பதனைப் பின்வரும் எமது வாதங்களிலிருந்து ஒருவர் ஏற்றுக் கொள்ளும் நிலை வரும் என்று நாம் நம்புகின்றோம்.

இது உத்தியோகபூர்வ அரச அறிவித்தலலோ அல்லது பொது மக்களின் அழுத்தங்கள் காரணமாகவோ அந்த நிலை வருவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. இதற்கான நேரடிக் காரணங்களை இப்போது பார்ப்போம்.

நேரடிக் காரணங்கள்

01.நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்ட இடத்தில் அடித்துக் கொல்ல வேண்டும் என்ற உணர்வு மக்களிடத்தில் காணப்படுகின்றது என்று நமது சபநாயகரே பகிரங்கமாக சில தினங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தார்.

02.அதே நாட்களில் யுத்த வீரராகவும் மக்கள் பாதுகப்பு அமைச்சர் என்று பதவி வகித்த சரத் வீரசேக்கரவுக்கு கொழும்பில் நடந்த அவமானத்தை நாம் பார்க்க முடிந்தது. இவர்தான் கொழும்பு மாவட்டத்தில் மொட்டு அணியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். ஜனாதிபதிக்கு மிகவும் விசுவாசமானவர். அவர் பெலவத்தவில் மக்களுக்குப் பயந்து தப்பியோடிய காட்சிகள் இன்று வைரலாகி வருகின்றது.

03.உளவுத்துறை அரசியல்வாதிகளைக் குறிப்பாக ஆளும் தரப்பு அரசியல்வாதிகளை பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரித்திருப்பதாகத் தெரிக்கின்றது. இப்படி எவ்வளவு காலத்துக்கு தலைமறைவு அரசியல் செய்ய முடியும்?

04.நமக்கு வருகின்ற தகவல்களின் படி மொட்டு அணி தற்போது மஹிந்த தரப்பு, பசில் தரப்பு, டலஸ் தாரப்பு மதில் மேல் நிற்க்கின்ற அணி என்று பல கூறுகளாக பிளவுபட்டிருக்கின்றது.

05.எதிர்காலத்தில் மேலும் அரசுக்கு எதிராக மக்கள் கோபம் திரும்ப அதிக வாய்புக்கள் மிக விரைவாக வரும் என்ற கருத்து உள்ளுர் சர்வதேச மட்டங்களில் பேசப்பட்டு வருகின்றது. மூத்த அரசியல் வாதி வாசுதேவ நாட்டில் சிவில் யுத்தம் ஒன்றுக்கான வாய்ப்புக்கள் உருவாகி இருக்கின்றது என்று பகிரங்கமாக பேசி வருகின்றார்.

06.பலமாக இயங்க வேண்டிய எதிர்க் கட்சிகள் மிகவும் பலயீனமாக இருக்கின்றது. அதனால் மக்கள் தன்னிச்சசையாக போராட வேண்டி இருக்கின்றது. பிரதான எதிரணியான சஜித் அணி மிகவும் பலயீனமாக இருக்கின்றது. இது அரசுக்கு நல்ல வாய்ப்பாகும்.

07.இந்தப் பின்னணியில் தற்போது தேர்தலொன்றுக்குப் போனால் முடிவுகள் ராஜபக்ஸாக்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று ஒரு கணக்கும் இருக்கின்றது. தேர்தல் முடிவுகள் தெளிவில்லாததாக இருக்கும். இதனை மேலும் விளக்குவதாக இருந்தால் எவருக்கும் தனிப் பெரும்பான்மைக்கு வாய்ப்புக்கள் இல்லை வருகின்ற தேர்தலில் மஹிந்த அணி, சஜித், ஜேவிபி, மைத்திரி-விமல்-டலஸ்-சம்பிக்க என்ற கூட்டு, என கூட்டணிகளுக்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்புரிமையை மேற்சொன்ன அணிகள்  பகிர்ந்து கொள்ளும் நிலை. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மஹிந்த ராஜபக்ஸாவுக்கு தெளிவு படுத்தப்பட்டிருக்கின்றது. அதனை அவரும் ஏற்றக் கொள்கின்றார்.

08.ஜனாதிபதி ஜீ.ஆரை அதிகாரத்தில் வைத்துக் கொண்டு தேர்தலுக்குப் போவது ராஜபக்ஜாக்களுக்கு சாதகமானது. மேலும் சர்வதே எதிர்பார்ப்பு, நாட்டில் இருக்கின்ற அமைதியின்மை எல்லாவற்றுக்கும் இதன் மூலம் பதிலை பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களினால் கொடுக்க முடியும். இது ஒரு கல்லில் குழையோடு மாங்காய் பிடுங்கும் தந்திரமாக அரசு பாவிக்க அதிக வாய்ப்புக்கள்.

09.வருகின்ற தேர்தலில் ராஜபக்ஸாக்கள் தமக்குப் பின்னடைவு வந்தாலும் தனது அடுத்த தலைமுறைக்கான களமாக இந்தத் தேர்தல் வாய்பாக இருக்கலாம் என்ற கணிப்பும் இருக்கின்றது.

10.ஒரு பொதுத் தேர்தலுக்குத்  தேவையான பணப் பலமும் ராஜபக்ஸாக்களிடம் நிறையவே  இருக்கின்றது. இன்று அவர்களை விமர்சிப்பவர்களே நாளை அவர்களுக்காக கொடிபிடிக்கும் நிலை நாட்டில் இருக்கின்றது.  இந்தப் பின்னணியில் தேர்தலுக்கு அதிக வாய்ப்புக்கள் அரச பக்கத்தில் இருக்கின்றது.

11.மேலும் மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கின்றார்கள் அவர்களே ஆட்சியாளர்களை விரட்டியத்து பொதுத் தேர்தல் ஒன்றுக்கான கதவுகளைத் திறந்து விடுவதற்கும் இடமிருக்கின்றது.

12.அப்படி மக்கள் தாமாக வீதிக்கு வருவார்களானால் கடந்த எப்ரல் 9ம் திகதிய நிகழ்வுகளை விட அது படுபயங்கரமாக இருக்கும் என்பதும் நமது கருத்து.

13.தேர்தல் ஒன்றுதான் பிரச்சனைகளுக்குத் தீர்வும் எதிர்காலத்துக்கான  அடித்தளமும் அதில்தான் தங்கி இருக்கின்றது.

14.அரசை விரட்டுவதற்காக மக்களை  வீதிக்கு அழைக்கின்ற கோஷங்கள் பலமாக கேட்கின்ற போதும் அதிலுள்ள பலயீனம், அடம்பன் கொடி தனித்தனியாக நின்று போடும் கோஷமாக இது இருப்பதால் அது வீரியம் பெறாத நிலையில் இருக்கின்றது.

அதற்கான தலைமைத்துவத்தை ஏற்கும் ஆளுமை பிரதான எதிரணியான சஜித் தரப்புக்கு அரவே கிடையாது என்பது நமது கருத்து. ஜேவிபிக்கு அந்த ஆற்றல் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு அச்சம் இருக்கின்றது. 1971, மற்றும் 1988-1889 களில் தமது பல்லாயிரக் கணக்கான உறுப்பினர்களை அவர்கள் போரட்டத்தில் இழந்திருக்கின்றார்கள்.

ஜனாநாயக ரீதியில் தனக்கு களம் வாய்ப்பாக இருக்கின்ற நேரத்தில் ஏன் நாம் அழிவுகளைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் அவர்கள் தயங்குகின்றார்கள் போலும்.

பொதுத் தேர்தலொன்றுக்கான நியாயங்களை டனசன் கணக்கில் நாம் முன்வைத்திருக்கின்றோம். இது இன்று அல்லது நாளை நடக்குமா அது ஜனநாயக ரீதியிலா வன்முறையிலா  என்பதனை மக்களும் ஆட்சியாளர்களும்தான் தீர்மானிக்க வேண்டும்.

தேர்தலுக்கான காய் கனிந்து விட்டது. அதனை ஜனாநாயக ரீதியில்  பறிப்பதா வன்முறையில் அடைவதாக என்று தீர்மானிப்பதற்கு வெகுநாள் செல்லாது என்று நாம் நம்புகின்றோம்.

பல்கலைக்கழக மாணவ சங்கத் தலைவர் தனித் தனியாக செத்துமடியாது கூண்டோடு செத்துப்போம் வாருங்கள் போரட்டக் களத்துக்கு அப்போதுதான் இவர்களை விரட்டலாம் என்று அழைப்பு விடுக்கின்றார்.

அதே போல் ஜேவிபி தலைவர்களில் ஒருவரான லால் காந்த வீதியில் இறங்கி போராடித் தேர்தலைப் பெற்றுக் கொள்வதும் மக்களின் ஜனநாயக உரிமையே, இதற்கு நிறையவே உலகில் வரலாற்று உதாரணங்கள் இருக்கின்றன என்று மக்களுக்குப் பகிரங்க அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். சஜித் அணியும் இந்த வார்த்தைகளை மேடைகளில் பேசினாலும் அவர்களது போராட்டங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

களத்துக்குப் போகும்  போது காசும் சோத்துப் பார்சலும் தண்ணீர் போத்தல் ஒன்றும் கொடுப்பார்கள். வரும் போது பணமும் உச்சாக போத்தல்களையும் கையில்  கொடுப்பதை நாம் தொடர்ந்த பார்த்து வருகின்றோம். இவர்களினால் உணர்வுபூர்வமாக மக்கள் போராட்டங்களை ஒருபோதும் நடத்த முடியாது என்பதுதான் எமது வழக்கமான குற்றச்சாட்டு.

யார் குத்தியோ அரசி வெளியே வரும் என்று நாமும் நம்புகின்றோம். இதற்கிடையில் முழு நாட்டையும் ஒரே தினத்தில் வீதிக்கு இறக்கி போராடுவதற்கான முயற்ச்சிகளும் அதற்கான சந்திப்புக்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

  நன்றி:03.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

'வாய்ப்பு'

Next Story

டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி