
கடந்த இரண்டு வருடங்களாக வட கொரியாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளில் கிம் ஜூ ஏ (இது 2023 இல் எடுக்கப்பட்டது) தோன்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
சீனாவில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் முதல் பலதரப்பு சந்திப்பு ஊடக கவனத்தைப் பெறுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்தது.
ஆனால் அவர் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த, நேர்த்தியான உடையணிந்த ஒரு இளம் பெண் தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் வட கொரியத் தலைவரின் மகள் கிம் ஜு ஏ.
தென் கொரியாவின் உளவு நிறுவனத்தின்படி, மிஸ் கிம் தான் அவரது தந்தையின் அரசியல் வாரிசு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள், அவருடைய சரியான வயது உள்பட அதிகமாக பொதுவெளியில் இல்லை. நமக்கு இதுவரை தெரிந்தது என்ன?

கிம் ஜூ ஏ (வலது ஓரம்) தனது தந்தையுடன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
குடும்பம் குறித்த ரகசியத்தைக் காக்கும் கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்னுக்கும் அவரது மனைவி ரி சோல்-ஜூவுக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் மிஸ் கிம் இரண்டாவது குழந்தை என்று நம்பப்படுகிறது. கிம்மின் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. கிம் தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். திருமணமாகி சிறிது காலம் ஆன பிறகுதான் தனது மனைவியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அவர்களின் ஒரே பிள்ளையாக கிம் ஜு ஏ-வின் இருப்பு மட்டுமே வடகொரிய நாட்டின் தலைமையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிம்மின் வேறு எந்த பிள்ளையும் பொதுவில் காணப்படவில்லை.
முதன்முதலாக கிம் ஜு ஏ பற்றிய செய்தி ஒரு எதிர்பாராத இடத்தில் இருந்து தான் வந்தது. கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன், 2013ஆம் ஆண்டு தி கார்டியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வட கொரியாவுக்கான ஒரு பயணத்தின் போது ‘அவர்களின் குழந்தை ஜூ ஏ-யை’ தான் கையில் ஏந்தியதாகக் கூறினார்.
அதன் பிறகு கிம் ஜு ஏ பற்றி அதிகம் அறியப்படவில்லை. நவம்பர் 2022 அவர் தன் தந்தையுடன் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ஏவுதல் நிகழ்வில் தோன்றினார்.
அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அவர் தபால் தலைகளில் தோன்றினார். கிம் ஜாங் உன்னின் ‘மதிப்பிற்குரிய’ (Respected) மகள் என்று விவரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கான விருந்துகளில் கலந்து கொண்டார்.
‘மதிப்பிற்குரியவர்’ என்ற சொல், வட கொரியாவின் மிகவும் முக்கியமான நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிம் ஜு ஏ-வின் தந்தையின் விஷயத்தில், ‘எதிர்காலத் தலைவர்’ என்று கிம் ஜாங் உன்னின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர் ‘மதிப்பிற்குரிய காம்ரேட்’ என்று குறிப்பிடப்பட்டார்.

வட கொரியாவின் வொன்சன் சுற்றுலா ரிசார்ட்டின் திறப்பு விழாவில் கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் தோன்றினார்.
‘கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு’
இதே காலகட்டத்தில் தான், தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS), அந்தச் சிறுமியைப் பற்றிய சில கூடுதல் விவரங்களை தென் கொரிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியதாக ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
கிம் ஜு ஏ-வுக்கு குதிரை சவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சல் பிடிக்கும் என்றும், தலைநகர் பியோங்யாங்கில் உள்ள வீட்டிலேயே அவர் கல்வி பயின்றதாகவும் தேசிய புலனாய்வு சேவை கூறியது. அந்த சமயத்தில் கிம் ஜு ஏ-வுக்கு சுமார் 10 வயது இருக்கும் என்றும் என்ஐஎஸ் தெரிவித்தது.
ஜனவரி 2024 வாக்கில், என்ஐஎஸ் மற்றொரு முடிவுக்கு வந்தது. அந்தச் சிறுமி கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு என்றும், ஆனால் அவருடைய தந்தையின் இளம் வயது உள்பட பல காரணிகள், இந்த விஷயத்தில் இன்னும் தாக்கம் செலுத்துகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அப்போதிருந்து, பல சந்தர்ப்பங்களில் கிம் ஜு ஏ தனது தந்தையுடன் தோன்றியுள்ளார். ஐசிபிஎம் ஏவுதல்கள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில், மேடைகளின் மையத்தில் கிம் ஜாங் உன் அருகில் நின்று, மூத்த ராணுவத் தளபதிகளிடமிருந்து ராணுவ மரியாதைகளைப் பெற்றார்.
ஆனால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) அவர் வட கொரியாவிற்கு வெளியே முதல் முறையாகக் காணப்பட்டார். மேலும் இந்தப் பயணம் அவர் தனது தந்தைக்குப் பிறகு வட கொரிய தலைவராக பதவியேற்கக்கூடும் என்ற ஊகங்களை அதிகம் தூண்டியுள்ளன.
1948 முதல் வட கொரியாவை ஆண்டு வரும் கிம் குடும்பத்தினர், தங்கள் குடிமக்களிடம் தாங்கள் ஒரு புனிதமான ரத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும் என்றும் கூறுகிறார்கள்.
இருப்பினும், இதுவரை ஒரு பெண்ணால் கூட வழிநடத்தப்படாத ஆணாதிக்க அரசு என்று வட கொரியாவின் மீது உள்ள பிம்பத்தைச் சமாளிக்க, கிம் தனது மகளை இந்த கட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஊகங்கள் உள்ளன.