வங்குரோத்திலிருந்து விடுதலை பிரகடணமும் கொண்டாட்டங்களும்

-நஜீப் பின் கபூர்-

இந்த நாட்டில் பிறந்ததே பெரும் சாபக்கேடு என்று பெரும்பாலான மக்கள் பேசுவதை நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டு வருகின்றோம். மறுபக்கத்தில் இப்படியான காட்சிகளை உலகில் பார்க்கின்ற ஒரு குடிமக்களாக நாங்கள்தான் இருக்க முடியும் என்றவகையில் இவற்றை நாம் சந்தோசமாக பதிந்து கொள்வதா அல்லது அதனையும் சாபக்கேடு என்ற பட்டியலில் சேர்த்து விடுவதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு இதனை தமது பதிவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு  கதைக்கு வருவோம்.

தமது தனிப்பட்ட அரசியல் இருப்புக்காக தலைவர்களும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பதால் பிழைக்கின்ற ஒரு தரப்பும் நாட்டில் இருக்கின்றது. அவர்கள் தமது நலன்களுக்காக என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதனை உலகிற்குக் கற்றுக் கொடுக்கின்ற நிகழ்வுகளும்-காட்சிகளும் நமது நாட்டில் மட்டுமே பார்க்க முடியும். அந்த வகையில் இந்தத் துறைக்கும் நாம்தான் உலகிற்கு விற்பன்னர்கள் வழிகாட்டிகள் போலும். வங்குரோத்து நிலைக்கு நாடு சென்றதால் தலைவர்கள் ஓடிப்போனார்கள்.

அப்படி ஓடிப்போன அதே தலைவர்களினால் அதிகாரத்துக்குக் கொண்டு வரப்பட்டவர்தான் தற்போதய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ. இன்று நாட்டை அவர் பேராபத்தில் இருந்து மீட்டுவிட்டார் என்று ஒரு இசு ஜனாதிபதி தரப்பால் முன்னெடுக்ப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் ஏதாவது உண்மைகள் இருக்கின்றதா என்று முதலில் பார்ப்போம். எடுத்த எடுப்பில் பார்வைக்கு அப்படி ஒரு இமேஞ் இருக்கத்தான் செய்கின்றது. ஓடிப்போனவர்கள் தமது இயலாமையை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள் என்பது உண்மை.

அப்படிக் கைவிட்ட ஒரு நாட்டை வெரும் ஒரு ஆசனத்தை மட்டும் வைத்திருந்த ஒரு மனிதன் பிரதமராகி பின்னர் ஜனாதிபதியானதும் உலக வரலாற்றில் ஒரு சாதனையாகத் இருக்க வேண்டும். அடுத்து எப்படியோ அவர் வெளிநாட்டுக் கடன்களை வாங்கி குறிப்பாக ஐஎம்எப். கடன்களை வாங்கி நாட்டில் இருந்த நெருக்கடி நிலையை மாற்றி அமைத்தார் என்பதும் உண்மைதான்.

அதனால் ஓடிப்போன ராஜபக்ஸாக்களுடன் ஒப்பு நோக்கின்ற போது ஜனாதிபதி ரணில் கடனை வாங்கியாவது ஏதாவது செய்திருக்கின்றார். அதே நேரம் அவருக்குத் தேவையான ஆதரவை ராஜபக்ஸாக்களும் அவரது மொட்டுக் கட்சியும் இன்று வரை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. இதில் ஒரு கொடுக்கல்வாங்கள் இன்றுவரை இருக்கின்றது. எனவே ரணில் ஏதாவது ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திருக்கின்றார் என்றால் அதற்கு மொட்டுக் கட்சியின் ஆதரவும் ராஜபக்ஸாக்களின் ஒத்துழைப்புக்களும் காரணமாக இருந்திருக்கின்றன என்றுதான் நாம் குறிப்பிட வேண்டும்.

இந்த நிலையில் வங்குரோத்து நிலையில் இருந்து நாடு விடுதலை பெற்றுக் கொண்டதற்காக உலகில் விழா எடுத்த முதல் நாடு என்ற வகையிலும் இதில் ஒரு வரலாற்றுச் சாதனை நிலை நாட்டப்பட்டிருக்கின்றது. இப்போது இதற்கான உரிமையை முற்று முழுதாக தனதாக்கிக் கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்காக அதாவது ஜனாதிபதித் தேர்தலுக்குத் தன்னைத் தயார் செய்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரல்தான் இந்தப் பிரகடனத்திலும் கொண்டாட்டங்களிலும் இருக்கின்றது என்பது எமது பார்வை. ஒரு வகையில் ஆளும் தரப்பு அதிகாரங்களை முற்றாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியும் இதிலிருக்கின்றது.

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக களமிறங்க ரணில் எதிர்பார்க்கின்றார். மொட்டுக் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற ராஜபக்ஸாக்கள் இது விடயத்தில் இன்னும் ரணிலுக்குப் பச்சைக் கொடியைக் காட்டவில்லை. அதனால் ஒரு குழப்பநிலை அங்கு இருக்கின்றது.  தமது தரப்பிலிருந்து மொட்டுக் கட்சி சார்பில் ஒரு வேட்பளர் வருவார் என்று தொடர்ச்சியாக உச்சரிக்கபட்டு வருகின்றது. தமது விருப்பப்படி முன்கூட்டி பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் ராஜபக்ஸாக்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் ரணில் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ரணிலிடத்தில் ராஜபக்ஸாக்கள் பின்வாங்க வேண்டி வந்தது.

வங்குரோத்திலிருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்ற இசுவோடு ரணில் தனது ஜனாதிபதி தேர்தல் பரப்புரையை ஆரம்பிக்கின்றார் என்று இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக (சுப ஆரஞ்சியக்) நல்ல செய்தி அல்லது மகிழ்வான தகவல் என்று நாடுபூராவிலும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததை நாம் சில தினங்களுக்கு முன்னர் பார்த்தோம். இதன் பின்னணியில் இருந்தவர் சஜித் அணியில் இருந்து ரணிலுடன் பேய் இணைந்து கொண்ட மனுஷ நாணயக்காரவும் ஹரின் பர்ணாந்தும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது. அவர்கள் தரப்பில் இது ஒரு நல்ல முயற்ச்சி என்பதனையும் இங்கு நாம் சொல்லியாக வேண்டும்.

இதற்கிடையில் தமது தரப்பிலிருந்து மொட்டுக் கட்சி தம்மிக்க பெரேரா அல்லது பசில், நாமல் என்று எவரையாவது களமிக்கலாம் என்று பிந்திய கதைகளில் தெரிய வருகின்றது. நமது கணக்குப்படி மூன்றாம் இடத்துக்கான இந்தப் பலப்பரீட்சையில் ராஜபக்ஸாக்கள் தலைமறைவாகி தம்மிக்காவுக்கு வாய்ப்பு வழங்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. அனேகமாக நாமல் பிரதமர் வேட்பாளர் என்று வரலாம். ஜனாதிபதி ரணில் தரப்பினர் மொட்டுக் கட்சியில் இருந்து ஒரு வேட்பாளர் வருவதைத் தடுக்கத் தன்னலான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ராஜபக்ஸாக்களை இணைத்துக் கொண்டு நடக்கின்ற ஜனாதிபதி தேர்தல் கூட்டணிக்கு நாங்கள் வரமாட்டோம் என்று ஆப்பு வைப்போர் இவருகளுக்குப் பெரும் தலைவலியைக் கொடுக்கின்றார்கள். இதனால் ரணில் இருதலைக் கொல்லி எரும்பின் நிலையில் இருக்கின்றன.

இதற்கிடையில் கடந்த புதன் கிழமை ஜனாதிபதி ரணிலின் விஷேட உரை மீது பலர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்ப்புக்களை வைத்திருந்தார்கள். நமக்கு ரணில் மீது அப்படி ஒரு நம்பிக்கை இல்லாததால் நாம் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. இது போன்று நாட்டின் அபிருத்தி கடன்களில் இருந்து மீள்வது பற்றிய கதைகளை அவர் இதற்கு முன்னரும் நாட்டுக்கு பலமுறை சொல்லி இருந்தார். அதனை நாம் ஓரிடத்தில் இங்கு சுட்டிக் காட்டியும் இருந்தோம். அவரது இந்த புதன் உரையின் சுருக்கம் எவருமே கையேற்காத நிலையில் நான் நாட்டு நலன் கருதி பதவி ஏற்றேன்.

அன்று ஓடி  ஒழித்தவர்கள் இன்று அதிகாரக் கதிரைக்கு ஆசைப்பட்டு மக்களை பிழையாகத் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக வேண்டுமானால் என்னைத் தொடர்ந்து அதிகாரத்தில் வைத்திருங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் அமையும். என்னை கைவிட்டு விட்டீர்களானால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஆபத்தில் விழுந்து விட வேண்டி வரும் என்பதுதான் அவர் நாட்டுமக்களுக்கு சொல்லவரும் விடுதலை செய்தியாகவும் அவர் விடுக்கின்ற எச்சரிக்கையாகவும் இருந்தது.

எமது நகர்வுகளின்படி செலுத்த இருக்கின்ற கடன்களுக்குத் தவனையை 2028 வரை  பெற்றுக் கொள்ள முடியும். மேலும் தேவையானால் அதளை 2043 வரையிலும் பேசி நீட்டிக் கொள்ளவும் முடியும் என்றெல்லாம் அவர் தனது உரையில் சுட்டிக் காட்டி இருக்கின்றார். மேலும் பாரிஸ் கிளப் சீனா எக்சீம் வங்கி ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கொல்லாம் அவர் தனது உரையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தார். இதனைத் தவிர பெரிதாக ஏதும் அவரது உரையில் இருந்ததாக எமக்குத் தெரியவில்லை.

இது அவரது வழக்கமான கதைதான். ஒருவன் பெற்ற கடனை செலுத்துவதற்கு பின்னடிக்கின்றான் காலத்தை நீடித்துக் கோட்க்கின்றான் என்றால் கடன் கொடுத்த ஒருவன் நீங்கள் என்று வைத்துக் கொண்டு அந்த மனிதன் தொடர்பான உங்கள் மன நிலை என்னவாக இருக்க முடியும் என்பதற்கான பதிலை முடிவு செய்யும் உரிமையை நாம் உங்களிடமே விட்டுவிடுகின்றோம். எனவே குடிகள்தான் ஆளை தொடர்ந்து அதிகாரித்தில் வைதிருப்பதா அல்லது மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவருவதா என்பதனை முடிவு செய்ய வேண்டும். பேருரைகளும் உபதேங்களையும் வாக்குறுதிகளையும் நாம் கடந்த 75 வருடங்களாகக் கேட்டும் பார்த்தும் கொண்டுதான் வருகின்றோம். இப்போது நாட்டுக்கு ஒரு செயல் வீரன்தான் தேவை. அவரையும் மக்கள் தெரிவு செய்யட்டும். அது ரணில்தான் என்பது அவர்கள் தெரிவாக இருந்தாலும் ஒகே.

வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டு விட்டது என்ற ஜனாதிபதி ரணிலின்  தேர்தலுக்கான  பரப்புரைகள் ஒரு புறம் இருக்க நாட்டில் மக்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகள் பொருளாதார நிலை எப்படி இருக்கின்றது என்று  சற்றுப் பார்ப்போம். ரணில் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது நாட்டில் வெளிநாட்டுக் கடன் சுதந்திரத்துக்குப் பின்னர் இதுவரை மொத்தமாக 80 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இப்போது அந்தத் தொகை 100 பில்லியன் அமெரிக்க டெலர்கள் என அதிகரித்திருக்கின்றது. இதனை ரூபாவில் சொல்வதாக இருந்தால் முப்பது இலட்சம் (3000000) கோடி ரூபாய்கள்.

ரணில் பொறுப்பேற்ற இந்த இரண்டு வருடத்தில் மட்டும் அவர் வாங்கிய கடன் தொகை 20 பில்லின் அமெரிக்க டொலர்கள். இலங்கை நாணயப்படி இது (600000)  ஆறு இலட்சம் கோடி ரூபாய்கள். இதனைப் பெற்றுக் கொண்டுதான் இன்று நாடு நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதனைத்தான் இவர்கள் பெருமிதமாக பேசி அதற்கு விழாவும் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுதானா ரணில் நாட்டு மக்களுக்கு பெற்றுத் தந்த பொருளாதார விடுதலை விமோசனம்?

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மின்சாரக் கட்டணங்களை செலுத்த வசதியில்லாத பதினெரு இலட்சம் வீடுகளின் மின் வசதி தூண்டிக்கப்பட்டிருக்கின்றது. இது நமது மக்களின் பொருளாதார அவலத்தைதானே நமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது.

அதே போன்று குறுகிய கால எல்லையில் நாட்டில் பாடசாலையை இடை நடுவில் நிறுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும்  பதிணைந்து சதவீதமாக அதிகரித்திருக்கின்றது. இது மிகப் பெரியதோர் ஆபத்தாகும்.

மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களில் எண்ணிக்கை இப்போது நாட்டில் முப்பது சத வீதமாக இருக்கின்றது. இது மொத்த சனத்  தொகை என்று பார்க்கின்ற போது 67 இலட்சம் பேர். மக்களின் வாழ்வாதாரம் இதற்கு முன்னர் இந்தளவுக்கு ஒருபோதும் கீழ் நிலைக்குச் சென்றதில்லை.

மிகவும் குறைவான வேதனத்தை நாட்டு மக்களுக்கு வழங்குகின்ற 40 நாடுகளில் இலங்கை கடைசி நாலாவது இடத்தில் இருக்கின்றது. இது எதனைக் கோடிட்டுக் காட்டுகின்றது.? இவைதானா நாம் பெற்றுக் கொண்ட பொருளாதார விடுதலை?

உயர் அதிகாரிகளின் வேதனத்தில் முப்பத்தி நான்கு வீதம் வரி இதுதவிர அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்கின்ற போது மேலும் பதினெட்டு சதவீதவரி அறவிடப்படுகின்றது. எனவே சம்பள்ளதில் மொத்தமாக  ஐம்பத்து நான்கு வீதி வரி அவர்களிடமிருந்து அறவிடப்படுக்கின்றது. எனவே ஏனைய நாற்பத்து ஆறு வீதி சம்பளத்தில்தான் அவர்கள் ஏனைய விடயங்களை கவனிக்க வேண்டி இருக்கின்றது. பெரும்பாலும் இவர்கள் தமது வீடு கட்ட அல்லது காணி வாங்க என்று வேறு கடன் பெற்றிருப்பார்கள். இப்படி இருக்க அவர்கள் எப்படி வாழ்கை நடாத்துவது? இது எப்படிச் சாத்தியம்? இந்த நிலையில் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முன்டியடிப்பது தவிக்க முடியாது. இப்படியான நிலையில் ஒரு நாடு எப்படி முன்னேற முடியும்.

ஆங்கில ஆளுநர் டொரின்டன் காலத்தில் மிகக் கொடூரமான வரிகள் அறவிடப்பட்டன. மார்பு வரி என்றுகூட ஒரு பண வசூல் பெண்களிடமிருந்து அறவிடப்பட்டது. இது ஒரு பெண் மார்புக் கச்சை அணிவதற்காக ஆங்கில ஆளுநர் போட்ட ஒரு வரி. இதனால் தங்களது மர்ர்புகளை அறுத்தெரிந்து பெண்கள் போராட்டம் நடாத்திய ஒரு வரலாறும் இருக்கின்றது. அதுபோன்ற ஒரு வரிக் கொள்கையைத்தான் அரசு இன்று நாட்டு மக்களிடம் அமுல்படுத்திக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சனங்கள் இப்போது எழுந்திருக்கின்றன.

இதற்கு முன்னர் ஒருமுறை ரணில் 2020 ல் நாடு மொத்தமாக வெளிநாட்டுக் கடனில் இருந்து விடுபடும் என்று சொல்லி இருந்தது நம்மில் எத்தனை பேருக்கு நிலைவில் இருக்கின்றது என்று கேட்கத் தோன்றுகின்றது. இந்தளவு மக்களுக்குத் தொந்தரவு கொடுத்து அவர்களை நடைப்பிணங்களாக மாற்றி இருக்கின்ற இந்த நாட்களில் ஆட்சியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக் கணக்கான ரூபாய்கள் பெருமதியான  வாகனங்களை லஞ்சமாகக் கொடுத்து அதிகாரத்தில்-பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கான ஒரு முயற்சியும் இன்றும் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. இது என்ன கொடுமை?

நன்றி: 30.06.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கார்டியன் நியூஸ்(2) 26.06.2024

Next Story

வாராந்த அரசியல் 30.06.2024