வங்கத்தில்  சேமிப்பு கிடங்கில் தீ : 52 பேர் பலி, 328 காயம்

வங்கதேசத்தின் சீதகுண்டா பகுதியில் உள்ள கப்பல் கண்டெய்னர் டிப்போ ஒன்றில் நேற்று  ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 52 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

வங்கதேசத்தின் சிட்டகாங்கின் சீதகுண்டா உபாசிலாவின் கடம்ராசூல் பகுதியில் உள்ள பிஎம் கண்டெய்னர் டிப்போவில் நேற்று இரவு 9 மணிக்கு தீ விபத்து ஒன்று ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து சிட்டகாங் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் போலீஸ் அவுட்போஸ்ட் காவல்ஆய்வாளர் நூருல் ஆலன் கூறுகையில், “தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில் சேமிப்பு கிடங்கில் இருந்த ரசாயனங்கள் காரணமாக விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

தீ விபத்து நேற்றிரவு 9 மணிக்கு ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் இருந்தபோது இரவு 11.45 மணிக்கு பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீ வேகமாக பரவத் தொடங்கியது” என்றார்.

இந்த வெடிப்பு அருகில் உள்ள குடியிருப்புகளையும் உலுக்கியுள்ளது. அக்கம்பக்கத்து வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிட்டகாங் தீயணைப்பு சேவை மற்றும் குடிமைத் தற்காப்பு உதவி இயக்குநர் எம்.டி. ஃபரூக் ஹொசைன் சிக்தர் கூறுகையில், “சுமார் 19 தீயணைப்பு பிரிவுகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன மேலும் ஆறு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் உள்ளன” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து வங்கதேசத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் ஹசன் ஷஹ்ரியார், “இந்தத் தீ விபத்தில் 5 தீயணைப்பு வீரர்கள் உட்பட 52 பேர் உயிரிந்துள்ளனர். தீ இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்” என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Previous Story

விண்வெளி கட்டுமானம்: சீனாபு குழு பயணம்

Next Story

 21 வது திருத்தம் இழுபறி