வங்கதேச வன்முறைக்கு இடஒதுக்கீடு மட்டுமே காரணமா?

 ஷேக் ஹசீனாவின் உண்மை முகம்

SHEIKH HASINA BANGKLADESH RISE AND FALL REASONS

வங்கதேசத்தில் வன்முறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்திருக்கிறார். ஒரு காலத்தில் ஜனநாயகத்திற்கு உதாரணமாக பார்க்கப்பட்ட ஹசீனா, தற்போது அந்நாட்டின் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்படுகிறார். வங்கதேசம் இப்படி மாறியதற்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கதேச பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு பங்கா?

“போராட்டங்கள் எப்படி முடிவுக்கு வந்ததோ, அப்படியே மீண்டும் தொடரும்” என்பது அரசியல் களத்தில் எழுதப்படாத விதி. அதுதான் இன்று வங்கதேசத்தில் நடந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் பலர், இலங்கையுடன் வங்கதேச போராட்டங்களை பொருத்தி பேசுகின்றனர். ஆனால், இரண்டுக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. இலங்கையில் பொருளாதார வளர்ச்சி அதலபாதாளத்திற்கு சென்றதையடுத்து போராட்டங்கள் வெடித்தன.

வங்கதேசத்தின் பொருளாதாரம் இந்தியாவுக்கு இணையாக சில நேரங்களில் வலிமையாக இருந்தது. இருப்பினும் வங்கதேச அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க அடக்குமுறை, சர்வாதிகாரத்தை நோக்கி நகர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் போன்றவை காரணமாக இருந்திருக்கிறது, என்று வங்கதேச-அமெரிக்க அரசியல் ஆய்வாளரும், டல்லாஸ் பல்கலைக்கழகத்தின் ஆசிரிய உறுப்பினருமான ஷஃப்கத் ரபி கூறியுள்ளார்.

“வங்கதேசம் மட்டுமல்லாது சர்வதேச அரசியலில் ஷேக் ஹசீனா அதிகாரத்தில் நீண்ட காலம் அங்கம் வகித்த பெண் தலைவராக அறியப்படுகிறார். கடந்த 1975ல் 28 வயதில், ஷேக் ஹசீனா, தனது தங்கையான ரெஹானாவுடன் ஜெர்மனியில் விடுமுறையில் பொழுதுகளை கழித்துக்கொண்டிருந்தார். அவருடைய அரசியல் வரலாறு இப்படித்தான் தொடங்கியது.

அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வங்கதேசத்தில் இருந்த ஹசீனாவின் தந்தை உட்பட குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் ராணுவ புரட்சியில் கொல்லப்பட்டனர். இந்த தகவல் ஹசீனாவுக்கு சென்று சேர்கிறது. அவர் உடனடியாக வங்கதேசம் திரும்ப முயன்றார். ஆனால், ராணுவம் அனுமதிக்கவில்லை.  இந்தியாவில் 6 ஆண்டுகள் ஹசீனா தஞ்சமடைந்திருந்தார். அப்போது அவருக்கு ஏராளமான ஆதரவு கிடைத்தது.

Sheikh Hasina, Bangladesh Protests: Security Meet, And A Phone Call: The Hours Before Sheikh Hasina's Escape

ஒரு பெண், தந்தை உட்பட மொத்த குடும்பத்தையும் இழந்த பெண், தனக்காக போராடுகிறார். இது ஜனநாயகத்திற்கான போராட்டம் என்று பரவலாக பேசப்பட்டது. இறுதியாக 6 ஆண்டுகளுக்கு பிறகு ஹசீனா வங்கதேசத்தில் நுழைகிறார். தனது தந்தையின் அவாமி லீக் கட்சியின் தலைமையிடத்தையும் கைப்பற்றுகிறார். ஜனநாயகத்திற்கான போராட்டம் சூடுபிடிக்கிறது.

ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுகிறார். இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் ஹுசைன் முகமது எர்ஷாத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்புகிறார். அடக்குமுறைகளை எதிர்கொள்கிறார். இப்படியாக ஜனநாயக போராளியாக ஹசீனா உருவானார். 1996ல் நடந்த பிரதமர் தேர்தலில் ஹசீனாவை மக்கள் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கிறார்கள். வங்கதேசத்தின் தலையெழுத்து மாறிய நேரம் அது. அதனை தொடர்ந்து அவர் மூன்று முறை பிரதமராக பதவி வகித்திருக்கிறார்.

Photo of demonstrators storming Prime Minister Sheikh Hasina's palace in Dhaka

இந்த காலத்தில் வங்கதேசத்தின் பொருளாதாரம் தலைகீழ் மாற்றத்தை சந்தித்தது. அந்நாட்டின் உயிர்நாடி, ஆடை உற்பத்திதான். இதனை உணர்ந்த ஹசீனா, உற்பத்தியை அதிகரித்து அதை ஏற்றுமதி செய்ய வழி வகுத்தார். இந்தியாவை போலவே அங்கும் தாராளமயம், உலகமயம் அமல்படுத்தப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகள் குவிந்தன.

வங்கதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019 இல் 5% லிருந்து 7.9% ஆக வளர்ந்தது. கோவிட் தொற்றுக்கு பிறகு, 2022ல் இந்த வளர்ச்சி 7.15% ஆக உயர்ந்தது. லட்சக்கணக்கானோர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர். ஹசீனாவின் இரண்டாவது பதவிக் காலத்தில், பொருளாதாரம் 6%+ வளர்ச்சியை கொண்டிருந்தது.

ஆனால் இதன் பகிர்வு சரிசமமாக இல்லை என்பதுதான் பிரச்னை. பணவீக்கம் உயர்ந்த அளவுக்கு வருமானம் உயரவில்லை. ஒரு கட்டத்தில் வேலை வாய்ப்புகள் அப்படியே தேங்கி நிற்க தொடங்கின. சீனாவிடமிருந்து கடன் வாங்கி, பொருளாதாரத்தை மேம்படுத்த ஹசீனா முயன்றார். கட்டுமானத்துறையில் சீனாவின் கடன் முதலீடாக போடப்பட்டது. ஆனால், கடன் குறைந்த பின்னர் கட்டுமான துறையும் படுத்தவிட்டது.

வேலை வாய்ப்புகள் சுருங்கின. உக்ரைன் போர் பணவீக்க அழுத்தத்தை ஏற்படுத்தியது. மறுபுறம் ஷேக் ஹசீனாவின் ஆட்சி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. 2014, 2018 மற்றும் 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலும் எப்படி தொடர்ந்து ஹசீனாவின் கட்சி வெற்றி பெற்றது? என்று பலர் கேள்வி எழுப்பினர். அந்நாட்டின் 2022 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் 75.3% பேர் 41 வயது அல்லது அதற்கும் குறைவானவர்கள்.

அதில், 28% மக்கள் 15 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் ஹசீனாவின் ஆட்சியைதான் பார்த்திருக்கிறார்கள். இதற்கிடையில் சமீபத்திய தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஹசீனா அரசு நடத்திய தாக்குதல்களும் விவாதங்களை கிளப்பியிருந்தது. அதாவது, எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே 2024 பிரதமர் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன.

மற்ற தேர்தல்களை காட்டிலும் இந்த தேர்தல்களில் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்திருந்தது. இருப்பினும் ஹசீனா இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இவையெல்லாம் மக்கள் மனதை கொந்தளிப்படைய செய்த காரணிகள். இதை வெடிக்க வைத்ததுதான் இடஒதுக்கீடு பிரச்னை. ஹசீனா 1975ல் எப்படி ஜனநாயகத்திற்கான போராளியாக மக்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டாரோ, அவரே தற்போது சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் ஒரு பேராசைக்காரராக மக்கள் மத்தியில் வெறுக்கப்பட்டார்” என்று ஷஃப்கத் ரபி கூறியுள்ளார்.

அரசியல் களத்தில் போராட்டங்கள் என்றும் ஓயப்போவதில்லை. அது யாருக்கு ஆதரவாக நடத்தப்படுகிறது என்பதே களத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

வங்கதேசத்தில் அமையும் இடைக்கால யூனுஸ்அரசு!

Next Story

இந்துக் கோவில்களை பாதுகாக்கும் முஸ்லிம்கள்!