வங்கதேச தேர்தலை இந்தியா இம்முறை அஉற்றுநோக்குவது ஏன்? 

வங்கதேசத்தின் பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத் தேர்தலை இந்தியா எதிர்பார்ப்பு மற்றும் கவலையின் அசாதாரண கலவையுடன் கவனித்து வருகிறது என்பது டெல்லியில் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அண்டை நாட்டில் நடக்கும் ஒரு வழக்கமான பொதுத் தேர்தலை டெல்லி இவ்வளவு நீடித்த கவனத்துடன் பின்தொடர்வது அரிதானது.

இதற்கான முதன்மையான காரணம் இந்தத் தேர்தல் கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா எதிர்கொள்ள வேண்டியிராத விளைவுகளை உருவாக்கத் தயாராக உள்ளது.

முதலாவதாக, பல ஆண்டுகளில் முதல் முறையாக, அவாமி லீக் அதிகாரத்தில் இல்லாத ஒரு அரசாங்கத்தை வங்கதேசம் பெற உள்ளது. டாக்காவில் அவாமி லீக் அரசாங்கங்களை கையாண்டு பழகிய டெல்லி, இப்போது ஒரு புதிய அரசியல் யதார்த்தத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.

இரண்டாவதாக, தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி (BNP), தனியாகவே ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியுமா-அல்லது ஜமாத்-இ-இஸ்லாமியை ஒரு கூட்டணிக் கட்சியாகச் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகுமா என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

2001 முதல் 2006 வரை, கலிதா ஜியாவின் கீழ் பிஎன்பி-ஜமாத் கூட்டணி வங்கதேசத்தை ஆண்டது; வங்கதேசத்தின் அரசியல் களம் அன்றிலிருந்து கணிசமாக மாறியிருந்தாலும், டெல்லி அந்தக் காலக்கட்டத்தை தனக்கு சௌகர்யமானதாக கருதவில்லை.

மூன்றாவதாக, ஜமாத்-இ-இஸ்லாமி அரசாங்கத்தின் ஒரு அங்கமாக மாறினாலும் அல்லது ஒரு சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக உருவெடுத்தாலும், அது புதிய நாடாளுமன்றத்தில் ஒரு செல்வாக்கு மிக்க இருப்பைக் கொண்டிருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. பல தசாப்தங்களாக, இந்தியா ஜமாத்தை ஒரு அறிவிக்கப்படாத “சிவப்புக் கோடாக” கருதியுள்ளது.

இப்போது இந்தியா அந்த கட்சியுடன் எவ்வாறு தொடர்புகொள்ள போகிறது என்பது ஆய்வாளர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒரு கேள்வி. ஏற்கனவே சில வகையான தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான அறிகுறிகள் டெல்லியில் உள்ளன.

இந்தியா - வங்கதேசம், வங்கதேச நாடாளுமன்ற தேர்தல்
வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

நான்காவதாக, இவை அனைத்தையும் தாண்டி, இந்தியாவின் வடகிழக்கு பிராந்திய பாதுகாப்பில் புதிய வங்கதேச அரசு எடுக்கப்போகும் நிலைப்பாடுதான் டெல்லியின் முதன்மையான கவலையாக உள்ளது. டெல்லியில் உள்ள ஆய்வாளர்கள் இதை மிகவும் உணர்ச்சிகரமான விஷயம் என்று விவரிக்கிறார்கள் — இதில் இந்தியா எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்று கருதுகிறது.

ஒரு காலத்தில் வங்கதேச ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழ்ந்த ஹசீனா, பிறகு சர்வாதிகாரப் போக்குடையவராக மாறிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் பதவி விலகிய பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

குறிப்பிடத்தக்க வகையில், வங்கதேசத்தில் நடந்த முந்தைய மூன்று தேர்தல்களைப் போலல்லாமல், இந்த முறை இந்தியாவின் “தலையீடு” குறித்த பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. முழுத் தேர்தல் செயல்முறையிலிருந்தும் இந்தியா உணர்வுப்பூர்வமாக விலகி இருக்க முயற்சி செய்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

டெல்லியில் உள்ள பலர், இந்த கட்டுப்பாடு 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மக்கள் எழுச்சியின் அனுபவத்திலிருந்து உருவானது என்று நம்புகிறார்கள், அந்த எழுச்சி ஒரு வலுவான இந்திய எதிர்ப்பு அடிப்படையைக் கொண்டிருந்தது. ஷேக் ஹசீனாவுடன் டெல்லியும் கோபமான முழக்கங்களின் இலக்கானது — இந்த நிகழ்வு இந்த முறை இந்தியாவின் வழக்கத்திற்கு மாறான குறைந்த அளவிலான அணுகுமுறையை உருவாக்கியதாகத் தெரிகிறது.

“அனைவரும் பங்கேற்கும்” தேர்தலுக்காக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்த பிறகும், இறுதியில் அவாமி லீக்கால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனபோது இந்தியா வழக்கமான தூதரக எதிர்ப்பைக் கூட தெரிவிக்கவில்லை.

இப்போது, இந்தியாவின் பாரம்பரிய கூட்டாளியான அவாமி லீக்கின் நீண்டகால அரசியல் எதிர்காலம், அடுத்த அரசாங்கத்தின் வடிவத்தைப் பொறுத்தே அமையும்.

பிப்ரவரி 12-ஆம் தேதி தேர்தலுடன் பிணைக்கப்பட்டுள்ள இந்த நிச்சயமற்ற தன்மைகளின் வலைதான் வங்கதேசத்தின் வாக்கெடுப்பை இந்தியாவிற்கு இவ்வளவு முக்கியமானதாக மாற்றியுள்ளது.

இந்தியா - வங்கதேசம், வங்கதேச நாடாளுமன்ற தேர்தல்
 இந்தத் தேர்தலிலிருந்து இந்தியாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வங்கதேசத்தில் ஓர் அரசியல் நிலைத்தன்மை மீண்டும் திரும்புவதே என்று இந்தியாவின் முன்னாள் தூதர் ரீவா கங்குலி தாஸ் கருதுகிறார்.

‘நிலைத்தன்மைக்கே முதலிடம்’

வங்கதேசத்திற்கான முன்னாள் இந்திய தூதர் ரீவா கங்குலி தாஸ், இந்தத் தேர்தலிலிருந்து இந்தியாவின் முதன்மையான எதிர்பார்ப்பு வங்கதேசத்தில் அரசியல் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதே என்று நம்புகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், “ஆகஸ்ட் 5, 2024 முதல், எங்களது உறவு குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம்,” என்றார்.

“வங்கதேசம் பல உள்நாட்டு அதிர்ச்சிகள் மற்றும் இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. ஒரு பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்தத் தேர்தல் குறைந்தபட்சம் ஓரளவாவது நிலைத்தன்மையை கொண்டுவரும் என்பதே எதிர்பார்ப்பு.”

டாக்காவில் ஒரு நிலையான, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை — ஆட்சி செய்வதற்குத் தெளிவான முடிவை பெற்ற ஒரு அரசாங்கத்தை இந்தியா பார்க்க விரும்புகிறது என்று அவர் மேலும் கூறினார்.

“ஆழ்ந்த நிச்சயமற்ற நிலையில் நீண்ட காலம் கடந்துவிட்டது. பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மை கருதி, அனைவரும் இப்போது நம்பகமான தேர்தலையும், அதைத் தொடர்ந்து தெளிவான மக்கள் ஆதரவுடன் அமைக்கப்படும் அரசாங்கத்தையும் விரும்புகிறார்கள்,” என்றார்.

இருப்பினும், இந்தியாவிலுள்ள பலர் தேர்தலைச் சுற்றி ஒருவித அமைதியற்ற நிலை இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள்.

ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் ஆய்வாளர் ஸ்ரீபர்ணா பதக் கூறுகையில், “நிறைய எதிர்பார்ப்புகளும் கவலைகளும் உள்ளன — ஏனென்றால் கடந்த 18 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சூழலை நாம் பார்த்ததில்லை.”

“உண்மையில், அவாமி லீக்கின் வெளியேற்றம் ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. ஜமாத் உள்ளே வருமா? ஏதேனும் கூட்டணி உருவாகுமா? யாருக்கும் தெரியாது. இதைத் தவிர இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கேள்வியும் உள்ளது.”

இந்தியா - வங்கதேசம், வங்கதேச நாடாளுமன்ற தேர்தல்

வட கிழக்கு பாதுகாப்பு குறித்த கவலை எவ்வளவு தீவிரமானது?

ஷேக் ஹசீனாவின் சுமார் பதினாறு ஆண்டு கால ஆட்சியில், வடகிழக்கைச் சேர்ந்த ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழுக்களுக்கு வங்கதேச மண்ணில் அடைக்கலமோ அல்லது ஆதரவோ கிடைக்கவில்லை என்பதுதான் இந்தியாவிற்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது.

மாறாக, அனுப் செட்டியா மற்றும் அரவிந்த ராஜ்கோவா போன்ற மூத்த உல்ஃபா தலைவர்களை டாக்கா இந்தியாவிற்கு ஒப்படைத்தது-இவர்கள் பின்னர் இந்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கினார்கள்.

எனவே, புதிய வங்கதேச அரசாங்கம் இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை இந்தியா மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கும்.

இருப்பினும், டெல்லியில் உள்ள சில முன்னாள் தூதர்கள் பாதுகாப்பு கவலைகள் மிகைப்படுத்தப்படலாம் என்று வாதிடுகின்றனர். இந்தியாவின் மீதான வங்கதேசத்தின் அன்றாடச் சார்பு, உறவுகளை இயல்பாகவே ஒரு நிலையான பாதையில் வைத்திருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

முன்னாள் இந்திய தூதர் சௌமென் ராய் கூறுகையில், “இந்தியா இப்போது ஒரு உலகளாவிய சக்தி. நான்காவது பெரிய பொருளாதாரம் மற்றும் விரைவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடிக்கப் போகிறது.”

“எனவே அண்டை நாட்டில் தேர்தல் நடக்கும்போது, ஒரு உலகளாவிய சக்தியாக நாம் கவலைப்படுவது இயல்பானது.”

“ஆனால் அதற்காக நாம் நமது பாதுகாப்பு குறித்து அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சிலிகுரி முதல் மிசோரம் மற்றும் அசாம் வரை, நாங்கள் ஏற்கனவே புதிய விமானப்படை தளங்களை நிறுவியுள்ளோம். அங்கு பலமான ராணுவப் படை உள்ளது. பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பெரிய பிரச்னை ஏதுமில்லை,” என்றார்.

டெல்லியின் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஸ்மிருதி பட்நாயக் உறுதியான கருத்தைக் கொண்டுள்ளார். வடகிழக்கு பாதுகாப்பில் இந்தியா தனது நிலையைச் சிறிதளவு கூட தளர்த்தாது என்று அவர் கூறுகிறார்.

“வடகிழக்கின் பாதுகாப்பு இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. இதில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“இது வங்கதேசத்தின் அனைத்து தரப்பினருக்கும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

“நீங்கள் பாகிஸ்தானுடன் எத்தனை உறவுகளை வேண்டுமானாலும் வளர்த்துக் கொள்ளலாம், பாதுகாப்பு அனுமதி இல்லாமலேயே அவர்களை வங்கதேசத்திற்கு அழைத்து வரலாம் — அது எங்களது கவலையல்ல. ஆனால் அது எங்களது வடகிழக்கு பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது,” என்றார்.

இந்தியா - வங்கதேசம், வங்கதேச நாடாளுமன்ற தேர்தல்
 அவாமி லீக்கிற்குப் பிந்தைய அரசியல் யதார்த்தத்திற்கு இந்தியா தன்னை பெருமளவிற்குத் தயார்படுத்திக் கொண்டுவிட்டது என ஐடிஎஸ்ஏ-வின் ஸ்மிருதி பட்நாயக்கும் தெரிவிக்கிறார்,

‘பிஎன்பி (BNP) தான் இந்தியாவின் முதல் முன்னுரிமை என்பது தெளிவு’

தேவைப்பட்டால் ஜமாத்துடன் தொடர்பு கொள்ள இந்தியா மனதளவில் தயாராகி வந்தாலும், தற்போதைய சூழலில் இந்தியாவின் விருப்பமான தேர்வு பிஎன்பி தான் என்ற தெளிவான உணர்வு டெல்லியில் உள்ளது.

ஒரு காலத்தில் இந்திய எதிர்ப்பு அரசியலுக்கு அடையாளமாகக் கருதப்பட்ட பிஎன்பி மீதான பார்வை சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக மாறியுள்ளது.

“இந்தியா ஒரு பிஎன்பி அரசாங்கத்திற்கு மனதளவில் தயாராக உள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்றார் ஸ்ரீபர்ணா பதக்.

“அதனால்தான் இவ்வளவு தொடர்புகள் உள்ளன. கலிதா ஜியா இறப்பதற்கு முன் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போது கூட பிரதமர் மோதி ட்வீட் செய்திருந்தார்.”

பதக்கின் கூற்றுப்படி, வங்கதேசத்தில் இப்போது உள்ள வரையறுக்கப்பட்ட விருப்பங்களில் பிஎன்பி “குறைந்தபட்ச தீமை” கொண்ட தேர்வாகும்.

“இந்தியாவிற்கு பிஎன்பி ஒப்பீட்டளவில் நிலையானதாகத் தெரிகிறது. 2025-ன் நடுப்பகுதியிலிருந்து, பிஎன்பி ஜமாத்திடமிருந்து தனது தூரத்தையும் அதிகரித்துள்ளது.”

“அதனால்தான் இந்தியா அங்கு இவ்வளவு தூதரக ஆற்றலைச் செலுத்துகிறது. நிச்சயமாக, இறுதியில் எந்த வகையான கூட்டணி அமையும் என்பது தெரியவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

அவாமி லீக்கிற்குப் பிந்தைய அரசியல் ஒழுங்கிற்கு இந்தியா பெரும்பாலும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது என்பதை ஸ்மிருதி பட்நாயக் ஒப்புக்கொள்கிறார்.

“அதிகாரத்திற்கு வர அதிக வாய்ப்புள்ள இரண்டு கட்சிகளுடன் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதுதான் இந்தியாவிற்கு இப்போது முக்கியம்,” என்றார்.

“கலிதா ஜியாவின் மறைவுக்குப் பிறகு பிஎன்பி உடனான மிக வெளிப்படையான தொடர்புகளை நாம் பார்த்தோம். தொடர்புகள் ஏற்கனவே இருந்தன, ஆனால் இந்த முறை குறிப்பாகத் தேர்தலுக்குச் சற்று முன்னதாக அது மிகவும் தெளிவாகத் தெரிந்தது.”

இந்தியா - வங்கதேசம், வங்கதேச நாடாளுமன்ற தேர்தல்
 முன்னாள் இந்திய ராஜதந்திரி மற்றும் தூதர் சௌமென் ராய் கூறுகையில், ‘அண்டை நாட்டில் தேர்தல் நடக்கிறது, நாங்கள் நிச்சயமாகக் கவலையடைந்துள்ளோம், இருப்பினும் பாதுகாப்பு விவகாரத்தில் அதன் அர்த்தம் நாம் கவலைப்பட வேண்டும் என்பதல்ல’ என்றார்.”

ஜமாத்துடன் கூட ஈடுபாடா?

தனது தகவல்களின்படி, இந்தியா ஏற்கனவே ஜமாத்-இ-இஸ்லாமியுடன் ஒரு தகவல் தொடர்பு வழியை ஏற்படுத்தியுள்ளதாக பட்நாயக் பிபிசியிடம் தெரிவித்தார்.

“பிஎன்பி மற்றும் ஜமாத் ஆகிய இருவருடனும் ஒரு உறவை உருவாக்க இந்தியா விரும்புகிறது.”

“இது முக்கியமானது. நாங்கள் அவாமி லீக்குடன் மட்டுமே இணைந்து செயல்படவில்லை என்பதையும் — மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியுடனும் நாங்கள் பணியாற்றத் தயார் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்.”

“அந்தச் சூழலில், ஜமாத்துடன் அதிகாரப்பூர்வ அளவிலான சந்திப்புகளும் நடந்துள்ளன,” என்றார்.

சமீபத்தில், ஜமாத் தலைவர் (அமீர்) ஷபிகுர் ரஹ்மான் ராய்ட்டர்ஸிடம் பேசுகையில், ஒரு இந்திய தூதர் தன்னைச் சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பை ரகசியமாக வைக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்தியா இந்தக் தகவலை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை.

இருப்பினும், ஜமாத் தலைமையுடன் இந்தியா ரகசியமாகவும் எச்சரிக்கையாகவும் தகவல் தொடர்பு வழிகளைத் திறந்து வைத்துள்ளது என்பதைப் பல சமிக்ஞைகள் உணர்த்துகின்றன.

ஒரு காலத்தில் அறிவிக்கப்படாத “சிவப்புக் கோடாக” கருதப்பட்ட ஒரு கட்சியின் மீதான தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்கிறது என்பதுதான் இதன் பொருளா?

முன்னாள் தூதர் ரீவா கங்குலி தாஸ் இதற்கு ஒரு யதார்த்தமான பதிலளித்தார்.

“ஒரு முறையான தேர்தல் உடன்படிக்கையைத் தொடர்ந்து 2001-ல் பிஎன்பி தலைமையிலான அரசாங்கத்தில் ஜமாத் அங்கம் வகித்தது. அவர்களுக்கு இரண்டு அமைச்சர்கள் கூட இருந்தனர். அந்த நேரத்தில் நான் வங்கதேசத்தில் பணியில் இருந்தேன்.”

“எனவே உறவுகளில் எப்போதும் ஒரு நடைமுறை அம்சம் உண்டு — நாம் ஒருவருக்கொருவர் தொழில் ரீதியாக இயங்க வேண்டும்.”

“நாம் அண்டை நாடுகள், அண்டை நாடுகளை மாற்ற முடியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதாக இந்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது,” என்றார்.

அந்தக் காரணத்திற்காக, ஜமாத் அடுத்த அரசாங்கத்தின் ஒரு அங்கமாக மாறினால் இந்தியா ஒரு வழக்கமான செயல்பாட்டு உறவை நாடும் என்று தூதர் கங்குலி தாஸ் உறுதியாக நம்புகிறார்.

“இப்போது முன்னுரிமை என்பது சூழ்நிலையில் முன்னேற்றம் காண்பதுதான்.”

இந்தத் தேர்தல் இந்தியாவிற்குப் பல அறியப்படாத விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் டெல்லிக்கு, ஒரு இடைக்கால அரசாங்க ஆட்சியின் நீடித்த நிச்சயமற்ற தன்மையை விட, தேர்தலுக்குப் பிறகு வரும் “நிச்சயத்தன்மை” சிறந்ததாகத் தெரிகிறது.

இந்த பின்னணியில், டெல்லியில் உள்ள ஆய்வாளர்கள் ஒரு விஷயத்தில் பொதுவாக உடன்படுகிறார்கள்: வங்கதேசத்தில் அடுத்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை யார் அமைத்தாலும், அவர்கள் வடகிழக்கில் இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளைத் தீர்க்கத் தயாராக இருக்கும் வரை, இந்தியா அவர்களுடன் முழுமையாக தொடர்பு கொள்வதற்கு எந்தத் தயக்கமும் காட்டாது.

Previous Story

ඩිලීට්ලාගේ ඉල්ලන් කෑම

Next Story

இந்தியா உடன் விளையாட முடிவு -  வீரர்கள் கூறுவது என்ன?