வங்கதேசத்தில் நடந்த தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.

இதன்மூலம் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் முகமது யூனுஸ் அந்த பொறுப்பில் இருந்து விலக உள்ளார். இந்நிலையில் தான் முகமது யூனுஸ் வங்கதேச ஜனாதிபதி பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் வன்முறையானது. இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் செயல்பட்டு வந்தார். 2024 ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் அந்த பொறுப்பில் அவர் செயல்பட்டு வருகிறார்.
தற்போது வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியை கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வழிநடத்தினார். விரைவில் தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராக உள்ளார்.
இவர் பிரதமராகும்போது இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் முகமது யூனுஸின் அதிகாரம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் இன்னும் சில நாட்கள் மட்டுமே முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருப்பார். இந்நிலையில் தான் முகமது யூனுஸின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன? என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது.
மேலும் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் இடைக்கால அரசாங்கத்தின் பணி முடிவடையும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் அதிகாரத்தை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் ஒப்படைத்த பிறகு, நாங்கள் எங்கள் தொழில்களுக்குத் திரும்புவோம் என்றார்.

ஆனால் தற்போது புதிய அரசின் ஜனாதிபதி பதவி மீது அவர் கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வங்கதேசம் கடந்த 2 ஆண்டுகளில் மோசமான நிலைமையை எதிர்கொண்டது.
ஆனால் முகமது யூனுஸ் திறமையாக செயல்பட்டு நாட்டை வழிநடத்தியதாக அங்குள்ள அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். இதற்கு பரிசாக அவருக்கு வங்கதேச ஜனாதிபதி பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேவேளையில் இது அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருந்த சமயத்தில் ஏராளமான இந்துக்கள் அடித்து கொல்லப்பட்டனர்.
தீவைத்து எரிக்கப்பட்டனர். அதனை தடுக்க முகமது யூனுஸ் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இப்படியான சூழலில் அவர் வங்கதேச ஜனாதிபதியானால் அது இந்துக்களுக்கு எதிரானதாக அமைய வாய்ப்புள்ளது.




