வங்கதேசம்:50 இடங்களில் குண்டுவெடிப்பு.

பின்னணியில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள்? ஷாக்

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பஸ்கள் தீ வைத்து எரிக்கப்படுவதுடன், 50க்கும் அதிகமான இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறி உள்ள நிலையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் அதன் பின்னணியில் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் உள்ளனரா? என்பது தொடர்பாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளன.

வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம், போராட்டம், தீவைப்பு – குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 3 நாட்களில் மட்டும் தலைநகர் டாக்காவில் 50க்கும் அதிகமான இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

Sheikh Hasina

இது வங்கதேசத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை மோசமாக்கி உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கான உள்கட்டமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக வாகனங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் நேற்று முன்தினம் மாலையில் டாக்கா பல்கலைக்கழகத்தில் 2 வெடிகுண்டுகள் வெடித்தன. மலிபாக் பகுதியில் உள்ள சிஐடி அலுவலகம், டாக்டா ஜாஸ்திராபாரி சவுராஸ்ட்ரா இன்டர்செக்‌ஷன் பகுதியில் 4 குண்டுகள் வெடித்துள்ளன.

அதேபோல் உபபஜில்லா பரிஷத் கேட் பகுதியிலும் அடபோர், பபாக், கில்கான், விமான நிலைய பகுதி மிர்பூரில் உள்கல்சி உள்ளிட்ட இடங்களிலும் அடுத்தடுத்து 50 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்துள்னள. இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த 6ம் தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை பதிவாகி உள்ளது.

மேலும் டாக்கா மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் 8 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலையில் பரிடாபூர் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ்சில் தீவைக்கப்பட்டது. இதில் 60 வயது நபர் இறந்தார்.

இவர் பஸ்சில் தூங்கி கொண்டிருந்த நிலையில் தீயில் கருகி இறந்தார். அதேபோல் ஜிநைடாவில் உள்ள இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தின் 35 மாணவர்கள் நேற்று இரட்டை மாடி பஸ்சில் பயணித்தனர். அந்தபஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இவர்கள் தப்பினர்.

இந்த வன்முறையின் பின்னணியில் இருப்பது யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை காரணமாக வைத்து ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதுதவிர இன்னும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதனால் இந்த போராட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு, பஸ் எரிப்பில் உள்ளவர்கள் பொதுமக்களை நடுக்கத்திலேயே வைக்க வேண்டும் என்ற வகையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இதுபற்றி டாக்கா மெட்ரோபாலிட்டன் போலீஸ் கூறுகையில், ”தலைநகர் டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகரில் முக்கியமான இடங்களில் கூடுதலாக 160 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றனர்.

அதேபோல் டாக்கா மெட்ரோ பாலிட்டனர் போலீசின் ஊடகத்திற்கான துணை ஆணையர் அக்தர் ஹூசைன் கூறுகையில், ”சமீபத்தில் பெட்ரோல் குண்டு தாக்குதல், தீவைப்பு மற்றும் தாக்குதல் தொடர்பான சம்பவத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் அவாமி லீக் (ஷேக் ஹசீனா கட்சி) கட்சியை சேர்ந்தவர்கள். இந்த கட்சி தற்போது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக வன்முறை வெடித்தது. ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

2 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் உள்ள ஷேக் ஹசீனாவிற்கு அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் (டிசம்பர்) ஷேக் ஹசீனா நம் நாட்டில் இருந்து வங்கதேசம் செல்ல தயாராகி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அங்கு மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு, பஸ் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அதோடு இந்த வழக்குகளில் கைதானவர்கள் அவாமி லீக்கை சேர்ந்தவர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

අජිත් ධර්මපාලගේ නිවසට ගිනි තැබීම ගැන කොස්ගොඩ සුජී පාර්ශවයෙන් කල්පට ඇමතුමක්