வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்து ஒரு மாதம் ஆகிறது. பாகிஸ்தான், மற்றும் சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று வங்கதேசத்தின் இடைக்கால அரசு உட்பட அந்நாட்டின் முக்கியக் காட்சிகள் குறிப்பிடும் பல சம்பவங்கள் இதற்கு முன்பு நடைபெற்றுள்ளன.
ஒரு மாதத்திற்கு முன்பு வரை இந்தியாவுடன் நெருக்கமாக இருந்த வங்கதேசம், இப்போது சீனா, மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
செப்டெம்பர் 1-ஆம் தேதி அன்று வங்கதேசத்துக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரி சையத் அகமது, வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள நஹித் இஸ்லாமைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் 1971-ஆம் ஆண்டின் போரின் போது, பாகிஸ்தானுடன் ஏற்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து நஹித் இஸ்லாம் பேசியதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆங்கில நாளிதழான ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாக 1971-ஆம் ஆண்டின் போர் என்பது ஒரு முக்கியமான பிரச்னையாக இருந்து வருகிறது.
இதற்கு முன், ஆகஸ்ட் 30-ஆம் தேதி அன்று பாகிஸ்தான் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸுடன் பேசினார்.
சீனாவின் முயற்சிகள்
1971-ஆம் ஆண்டு நடந்த கிழக்கு பாகிஸ்தான் போருக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டது. வங்கதேசம் என்ற நாடு உருவாகுவதில் இந்தியா முக்கியப் பங்காற்றியது.
அதே நேரத்தில், வங்கதேசத்தின் உருவாக்கத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தற்போது இருக்கும் வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசு சீனாவை சார்ந்து நகர்வது போல தெரிகிறது.
வங்கதேசத்தில், சில நாட்களுக்கு முன்பு, 2013-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா அரசால் தடை விதிக்கப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை நீக்கப்பட்டது. ஜமாத்-இ-இஸ்லாமி என்பது வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியாகும். இந்தக் கட்சியின் மாணவர் அமைப்பு மிகவும் வலிமையானது.
ஷேக் ஹசீனா பதவி விலகக் காரணமாக இருந்த போராட்டத்தில் இந்த அமைப்பைச் சார்ந்த மாணவர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இவர்களின் மீது, நாட்டில் வன்முறை மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கலவரத்தைத் தூண்டியதாகவும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தியா ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியை விரோதியாகப் பார்க்கிறது.
வங்கதேச மக்கள் விரும்பாத வகையில் இந்தியா சில விஷயங்களைச் செய்துள்ளதாக ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷஃபிக்-உர் ரஹ்மான் சமீபத்தில் கூறியிருந்தார்.
சமீபத்தில் வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு ஷஃபிக்-உர் ரஹ்மான் இந்தியாவை குற்றம் சாட்டினார்.
“இதுவரை வங்கதேசம், தனக்கு நடந்துள்ள கசப்பான பிரச்னைகளைக் கைவிட்டு அமெரிக்கா, சீனா, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் வலுவான மற்றும் சமநிலையான உறவுகளை பராமரிக்க வேண்டும்,” என்று ரஹ்மான் கூறினார்.
ஷேக் ஹசீனா பதவி விலகியது சீனாவிற்கு வாய்ப்பாக இருக்குமா?
இது போன்ற ஒரு சூழ்நிலையில், ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை நீக்கப்பட்டதையடுத்து, சீனாவின் தூதரக அதிகாரிகள் அக்கட்சித் தலைவர்களைச் சந்தித்தனர்.
“வங்கதேசத்துடன் நல்லுறவை உருவாக்கச் சீனா விரும்புகிறது. சீனா, வங்கதேசம் மற்றும் வங்கதேச மக்களுக்கு ஆதரவாக உள்ளது,” என்று சீனாவின் தூதரக அதிகாரி யாவ் வென் கூறினார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சியில், வங்கதேசம் சீனாவை விட இந்தியாவின் மீதே அதிக நாட்டம் கொண்டிருந்தது.
ஜூலை மாதம், ஷேக் ஹசீனா தனது சீனப் பயணத்தை பாதியில் விட்டுவிட்டு வங்கதேசம் திரும்பினார்.
இதற்குப் பிறகு, இந்தியாவும் சீனாவும் டீஸ்டா திட்டத்தை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் இந்தியா தான் இந்த திட்டத்தை முடிக்க விரும்புவதாகவும் ஷேக் ஹசீனா கூறியிருந்தார். இது நேரடியாக சீனாவிற்கு வெறுபூட்டுவதாக இருந்திருக்கலாம்.
ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து விலகியது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிடைத்த ஒரு வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
சீனத் தூதர் மற்றும் ஜமாத் தலைவர்களின் சந்திப்பும் இந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படுகிறது.
இது குறித்து நிபுணர்கள் கூறும் கருத்தென்ன?
“வங்கதேசம் என்ற நாடு உருவாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சீனா, இறுதியாக வங்கதேசத்தை அங்கீகரித்தது”, என்று முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளரும், சர்வதேச விவகார நிபுணருமான கன்வால் சிபல் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், “வங்கதேசம் உருவாவதையே ஜமாத்-இ-இஸ்லாமி எதிர்த்தது. சீனா வங்கதேசத்தை ஆதரிக்கிறது என்பது வெற்றுப்பேச்சு. வங்கதேசத்தில் நடந்த போராட்டத்திற்குப் பிறகு சீனா அது போலவே தனது நாட்டில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. 1989-ஆம் ஆண்டு தியனன்மென் சதுக்கதிதில் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உய்கார் முஸ்லிம்களை தவிர, ஜமாத்- இ- இஸ்லாமி சீனர்களை ஆதரிக்கிறது,” என்கிறார் அவர்.
வங்கதேசத்தின் மாறிவரும் அணுகுமுறை குறித்து சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணர் ஒருவரான பிரம்மா செல்லானியும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.
“வங்கதேசத்தில் ராணுவத்தால் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்குச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி அளித்துள்ளது. அவர்களுக்கு அரசியலமைப்பு அதிகாரமோ பெரும்பான்மையோ இல்லை. அந்நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் ஐந்து மூத்த நீதிபதிகள் பதிவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீடு செய்யப்பட்டது. 2010-ஆம் ஆண்டு இடைக்கால அரசு அமைப்பதற்கான முறையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதியின் மீது போலியான ஒரு கொலை வழக்கு சுமத்தப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.
எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வங்கதேசத்தை சேர்ந்தவர். அவரது புத்தகங்கள் தொடர்பான சர்ச்சைகளால், பல ஆண்டுகளாக அவரால் வங்கதேசத்திற்கு செல்ல முடியவில்லை. 2011-ஆம் ஆண்டு முதல் அவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.
“முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கத்தின் கீழ், நிலைமை இன்னும் மோசமாகிவிடும். வங்கதேசத்தில் நிலவும் சூழல் இந்தியாவுக்கு எதிரானது, பெண்களுக்கு எதிரானது, மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது,” என்று நஸ்ரீன் கூறியதாக ‘தி மிண்ட’ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம்
ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில், வங்கதேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு இல்லை. 2018-ஆம் ஆண்டு தேர்தலில், வங்கதேசத் தேர்தலில் தலையிட்டதாகப் பாகிஸ்தான் தூதரகத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், இப்போது புதிய இடைக்கால அரசு உறுப்பினர்களுடனான சந்திப்பை முக்கியமானதாக பாகிஸ்தான் தூதரகம் விவரித்திருக்கிறது. இதில் பல துறைகளில் இருநாட்டின் ஒத்துழைப்பு குறித்தும் பேசபபட்டதாக பாகிஸ்தான் தூதரகம் கூறியது.
ஜப்பான் டைம்ஸ் இணையதளத்தில் பிரம்மா செல்லனே இரு நாடுகளைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
“2022-ஆம் ஆண்டில், வங்கதேசப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகத் தோன்றியது. ஆனால் இன்று நிலைமையே வேறு. வங்கதேசம், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டாலர்கள், உலக வங்கியிடம் 1.5 பில்லியன் டாலர்கள், மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 1 பில்லியன் டாலர்கள் கோரியுள்ளது. வங்கதேசத்தின் நிலைமை வளர்ச்சியின் அடிப்படையில் பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டதாக உள்ளது,” என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“இதுபோன்ற பல சம்பவங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் வங்கதேசம் பாகிஸ்தானின் பாதையைப் பின்பற்ற முடியுமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பாகிஸ்தானில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது, வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ராணுவமும் தேர்தல்களில் பங்கு வகிக்கிறது. பாகிஸ்தானைப் போலவே, வங்கதேசத்திலும் ராணுவம் முக்கியப் பங்காற்றியுள்ளது. அதிகாரத்திற்குப் பின்னால் ராணுவத் தளபதிகள் இருப்பதாகத் தெரிகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
1971-ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பாகிஸ்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வங்கதேசம் வலியுறுத்தி வருகிறது.
ஷேக் ஹசீனாவின் மதச்சார்பற்ற அரசாங்கத்தில், வன்முறையில் ஈடுபடும் மதக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை வேறு. சரியான திசையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், வங்கதேசமும் பாகிஸ்தான் போல மாறலாம், என்கிறார் அவர்.
1971: வங்கதேசத்தின் பிறப்பு
வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ந்தபோது, முஜிபுர் ரஹ்மானின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.
வங்காளதேசத்தை நிறுவியவரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான், பாகிஸ்தான் விவகாரங்களில் மிகவும் கண்டிப்பானவர்.
பாகிஸ்தான், வங்கதேசத்தைத் தனிநாடாக அங்கீகரிக்காவிட்டால், அப்போதைய பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவுடன் அவர் பேச்சுவார்த்தை மேற்கொள்ளமாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.
பாகிஸ்தானும் ஆரம்பத்தில் வங்கதேசத்தின் சுதந்திரத்தை நிராகரித்தது. பின்னர் பாகிஸ்தானின் அணுகுமுறையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.
பிப்ரவரி 1974-ஆம் ஆண்டு, இஸ்லாமிய மாநாடு அமைப்பின் உச்சி மாநாடு லாகூரில் நடைபெற்றது. அப்போது பூட்டோ பாகிஸ்தான் பிரதமராக இருந்தார். அவர் முஜிபுர் ரஹ்மானுக்கும் முறையான அழைப்பை அனுப்பியிருந்தார். முஜிப் முதலில் பங்கேற்க மறுத்தார், ஆனால் பின்னர் அதை ஏற்றுக்கொண்டார்.
இந்த உச்சிமாநாட்டிற்குப் பிறகு இந்தியா, வங்கதேசம், மற்றும் பாகிஸ்தான் இடையே முக்கோண ஒப்பந்தம் கையெழுத்தானது. 1971-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு மீதி இருந்த தடைகளைத் தீர்க்க மூன்று நாடுகளும் இடையே 1974-ஆம் ஆண்டு, ஏப்ரல் 9-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
“அல்லாவுக்காகவும், இந்த நாட்டின் குடிமக்கள் சார்பாகவும், நாங்கள் வங்கதேசத்திற்கு அங்கீகாரத்தை வழங்குகிறோம். ஒரு அதிகாரிகள் குழு வந்து 7 கோடி முஸ்லிம்கள் சார்பாக நாங்கள் அணைத்துகொள்கிறோம்,” என்று 1974-ஆம் ஆண்டு சுல்பிகர் அலி பூட்டோ கூறினார்.
“இந்த முடிவை நான் விரும்புகிறேன் என்று சொல்லவில்லை. என் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. இது ஒரு நல்ல நாள் அல்ல, ஆனால் யதார்த்தத்தை எங்களால் மாற்ற முடியாது. பெரிய நாடுகள் வங்கதேசத்தை அங்கீகரிக்கப் பரிந்துரைத்தன. ஆனால் வல்லரசு நாடுகளுக்கும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு நான் ஒருபோதும் பணிந்ததில்லை. ஆனால் இந்த முக்கியமான நேரத்தில், முஸ்லீம் நாடுகள் சந்திக்கும் போது, நாங்கள் அழுத்தத்தில் உள்ளோம் என்று சொல்ல முடியாது. இந்த முடிவை எடுப்பதற்கு எதிரிகள் காரணம் அல்ல. ஆனால் அவர்களும் எங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் என்பதால் தான்,” என்று பூட்டோ தெரிவித்தார்.
இது நடந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிவிட்டன, இப்போது ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து வெளியேறிய பிறகு, பாகிஸ்தானும் வங்காதேசமும் ஒருவரையொருவர் அரவணைக்கும் நோக்கில் நகர்வதாகத் தெரிகிறது. இத்துடன் சீனாவும் இருப்பதால், இந்தியாவின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.