இந்தியா எல்லையில் வங்கதேசம் தொடர்ந்து மோதி வருகிறது. அதேவேளையில் அந்த நாடு பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக பாகிஸ்தான் – சீனா இணைந்து தயாரித்த எஃப் 17 ரக தண்டர் போர் விமானங்களை வாங்க வங்கதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இது இந்தியா நாட்டுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு அமைந்ததில் இருந்தே நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது.
முகமது யூனுஷ் மற்றும் அவரது இடைக்கால அரசில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டது தான் இதற்கு காரணம். இந்து உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் வங்கதேசத்தில் நடக்கிறது. இதனை இடைக்கால அரசு கண்டுக்கொள்ளாமல் உள்ளது.
மேலும் மத அடிப்படைவாதிகளை வைத்து சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை உதிர்த்து வருகிறது. அதேபோல் பாகிஸ்தானுடன் சேர்ந்து நம் நாட்டுக்கு எதிரான செயல்களை அந்த நாட்டு அரசு தொடங்கி உள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவு தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நேற்று வங்கதேசத்தை சேர்ந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் பாகிஸ்தான் சென்றனர். வங்கதேசத்தின் ஆயுதப்படை பிரிவின்முதன்மை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் எஸ்எம் கமரூல் ஹசன் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றனர்.
இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் விமானப்படையின் தலைமை அதிகாரி மார்ஷல் ஜாகீர் அகமது பாபர் சித்துவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு இடையேயான பாதுகாப்பு துறை சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.
அதேபோல் ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான்-சீனா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட ஜேஎஃப் 17 தண்டர் போர் விமானத்தை வாங்க வங்கதேசம் ஆர்வம் காட்டியது. வங்கதேசம் தற்போது எஃப் 7 மற்றும் மிக் 29 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
இந்த விமானங்களை பராமரிப்பதற்கு அதிக செலவு பிடிக்கிறது. இதனால் புதிதாக ஜேஎஃப் 17 ரக போர் விமானங்களை வாங்க வங்கதேசம் ஆர்வம் காட்டி உள்ளது பாகிஸ்தான் – சீனா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த ஜேஎஃப் 17 ரக போர் விமானம் என்பது 4ம் தலைமுறை விமானமாகும்.
சிங்கிள் இன்ஜின் கொண்ட இலகு ரக விமானமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை பயன்படுத்தி இடைமறித்து தாக்க முடியும். தரைவழி தாக்குதல், கப்பல் மீதான தாக்குதல், வான்வெளியில் உளவு பார்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய முடியும்.
இந்த விமானம் மாக் 1.6 வேகத்தில் செல்லக்கூடியது. பாகிஸ்தானை பொறுத்தவரை இந்த விமானம் தான் நவீன விமானமாக உள்ளது. இதனால் தான் வங்கதேசம் ஜேஎஃப் 17 ரக போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டி உள்ளது.
இது இந்தியாவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிடம் ரபேல் எனும் 4.5 தலைமுறை விமானம் உள்ளது. இந்த விமானம் ஜேஎஃப் 17 ரக விமானத்தை விட நவீனத்துவமானது.
இருப்பினும் கூட வங்கதேசத்தின் இந்த முடிவு என்பது இந்திய எல்லையில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்கின்றனர் சர்வதேச அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் எக்ஸ்பர்ட்ஸ்.