17 பேர் பலி, 100 மேற்பட்டோர் படுகாயம்.. கதறும் பொதுமக்கள் வங்கதேசத்தில் மிக மோசமான ஒரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் இரு குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். வங்கதேச தலைநகர் டாக்கா, அங்குள்ள முக்கியமான மற்றும் மக்கள் நெருக்கடியான நகரங்களில் ஒன்றாகும்.
அங்கு இட நெருக்கடி காரணமாகக் குறுகிய இடத்திலேயே பலர் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு மிக மோசமான வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவின் முக்கிய இடத்தில் நடந்த இந்த வெடிவிபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அங்கு மிக மோசமான வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்..
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அங்கு ஏற்பட்ட தீயை அணைக்க 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர். வெடி விபத்து பழைய டாக்காவின் நெரிசலான குலிஸ்தான் பகுதியில் வங்கதேச நேரப்படி மாலை 4:50 மணியளவில் இந்த வெடி விபத்து நடந்துள்ளது.
முதலில் இந்த விபத்தைப் பலரும் நிலநடுக்கம் என்றே நினைத்துள்ளனர். அந்தளவுக்குப் பயங்கரமாகக் கட்டிடம் குலுங்கியுள்ளது. அதன் பின்னர் இது வெடிவிபத்து என்பது அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கட்டிடத்தில் இருந்தவர்கள் அக்கம் பக்கத்தினரும் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். இருப்பினும், கட்டிடத்தில் இருந்த பலரும் இடிபாடுகளில் சிக்கினர்.
எப்படி நடந்தது இந்த வெடி விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும், பல அலுவலகங்கள் இயங்கி வந்த அந்த கட்டிடத்தில் சிலர் சட்டவிரோதமாக ரசாயனங்கள் சேமித்து வைத்திருந்ததாகவும் இதனால் இந்த அதிபயங்கர விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது நாச வேலையாக இருக்காது என்று தெரிவித்துள்ள போலீசார், இது விபத்தாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.
கடும் சேதம் இந்தக் கட்டிடத்தின் தரைத் தளத்தில் வெடிப்பு ஏற்பட்டதாகவும், கட்டிடத்தின் முதல் இரண்டு தளங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடி விபத்து காரணமாக எதிரே இருந்த கட்டிடத்திலும் கண்ணாடிச் சுவர்கள் உடைந்து விழுந்தன. மேலும், சாலையில் இருந்த பலரும் காயமடைந்தனர். சில நாட்களுக்கு முன்பு, இதேபோல டாக்காவின் அறிவியல் ஆய்வகப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.