‘ரோஜா’ படத்திற்கு பிறகு முஸ்லிம்களை இந்திய சினிமா காட்டும் விதம்!

-அனந்த் பிரகாஷ், தினேஷ் உப்ரீதி-

இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்

திரைப்படங்கள் வாழ்க்கையின் கண்ணாடி என்ற டயலாக்கை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள். கோடிக்கணக்கான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும் பிளாக்பஸ்டர் படங்களில் சமூகமும் அதில் வாழும் மனிதர்களும் உண்மையில் இருப்பது போல் காட்டப்படுகிறார்களா?

இதைக் கண்டறிய, பிபிசி கடந்த முப்பது ஆண்டுகளில் அதாவது 1992 – 2022 வரையிலான சுமார் 100 சூப்பர்ஹிட் ஹிந்திப் படங்களை ஆய்வு செய்துள்ளது.

இந்த பகுப்பாய்வு செயல்பாட்டில், 1992 முதல் 2022 வரையிலான ஒவ்வொரு ஆண்டும் வருவாயின் படி முதல் மூன்று படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Roja (film) - Wikipedia

பிபிசி தனது ஆய்வில் என்ன கண்டுபிடித்தது?

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் மத சிறுபான்மையினரின் பங்கு சுமார் 19.3 சதவீதம் ஆகும். ஆனால், மற்ற துறைகளைப் போலவே, சிறுபான்மையினரும் தங்கள் மக்கள்தொகை விகிதத்தில் சினிமாவில் இடம் பெறுகிறார்களா இல்லையா என்பது கேள்வி. அப்படியானால், அவை சரியாக காட்டப்படுகின்றனவா?

கடந்த 30 ஆண்டுகளில் வெளியான சூப்பர்ஹிட் படங்களில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17.32 சதவீத கதாபாத்திரங்கள் காணப்படுகின்றன.

படங்களில் காட்டப்படுவதை விட, சிறுபான்மையினர், பெண்கள் அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு என்ன மாதிரியான பாத்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன, அந்தக் கதாபாத்திரங்களுக்கு எவ்வளவு திரை நேரம் கொடுக்கப்பட்டது என்பதுதான் கேள்வியாக உள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம் சமூகத்தின் பங்கு தோராயமாக 14 சதவீதம் ஆகும்.

அதேசமயம் கடந்த முப்பது வருட சூப்பர்ஹிட் படங்களில் முஸ்லிம் கதாபாத்திரங்களின் பங்கு 12.32 சதவீதமாக இருந்தது.

நாட்டின் மக்கள் தொகையில் கிறிஸ்தவ சமூகத்தின் பங்கு 2.3 சதவீதம் ஆனால் இந்த சமூகத்தை சேர்ந்தவர்களின் பங்கு 3.69 சதவீதம்.

மக்கள் தொகையில் சீக்கிய சமூகத்தின் பங்கு 1.7 சதவீதமாக உள்ளது. இந்த சமூகத்தின் மக்களின் பங்கு 0.75 சதவீதமாக இருந்தது.

இந்தப் படங்களின் ஹீரோக்களைப் பற்றி பேசினால், 114 பேரில் ஏழு பேர் முஸ்லிம்களாகவும், மூன்று சூப்பர்ஹிட் படங்களில் ஹீரோ சீக்கியராகவும் காட்டப்பட்டுள்ளனர்.

இந்தப் படங்களில் கிறிஸ்தவ, பார்சி கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களில் யாரும் ஹீரோக்கள் இல்லை.

திரைப்படங்களில் முஸ்லிம்கள் எப்படி காட்டப்படுகின்றனர்

பெண்கள் எப்படி இருப்பார்கள்?

ஏறக்குறைய 30 வருட சூப்பர்ஹிட் படங்களில் 86 பெண் கதாபாத்திரங்கள் ஹீரோவின் காதலியாக நடித்துள்ளனர். அதாவது ஹீரோவை நேசிப்பதோ, பாடல்கள் பாடுவதோ அல்லது சில எமோஷனல் காட்சிகளில் தோற்றமளிப்பதோ அவர்களின் வேலையாக இருக்கிறது.

இதிலும் சில விதிவிலக்குகள் இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஆங்காங்கே பெண்களுக்கு வெவ்வேறு பாத்திரங்களும் கிடைத்துள்ளன.

இந்த சூப்பர்ஹிட் படங்களில், முப்பது சதவீத பெண்கள் சில வகையான வேலைகளை செய்கிறார்கள், அதாவது வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்தத் திரைப்படங்களில் மொத்தமுள்ள 120 பெண் கதாபாத்திரங்களில், முஸ்லீம் பெண் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை 12 என்றும் , கிறிஸ்தவ பெண் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை 5 என்றும், சீக்கிய பெண் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை 1 மட்டுமே என்றும் இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக திரைப்படங்களை விமர்சனம் செய்து வரும் திரைப்பட விமர்சகர் சைபல் சாட்டர்ஜி. பெண்கள் தொடர்பான புள்ளிவிவரங்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

“இந்த பகுப்பாய்வில், அத்தகைய (பெண்) கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை நாங்கள் கணக்கிடுகிறோம். ஆனால் இந்த கதாபாத்திரங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இது உண்மையான சமூகத்தின் பிரதிபலிப்பு அல்ல. ஏனென்றால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று பெண்கள் அதிக அதிகாரம் பெற்றுள்ளனர். ஆனால் இது சினிமாவில் தெரிவதில்லை. ஒரு வகையில், பெண் கதாபாத்திரங்கள் பெயருக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.” என்றார் அவர்.

தொடர்ந்து பேசும் சாட்டர்ஜி, “திரைப்படங்களில் பெண்களுக்கு வலுவான பாத்திரங்கள் கொடுக்கிறோம் என்ற பெயரில், ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்வதைப் போல் காட்டப்படுகிறார்கள். பெண்கள் சிகரெட் பிடிக்கின்றனர், மது அருந்துகின்றனர், ஆண்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது ஆண்களை மிமிக்ரி செய்வதைப் போன்றதே ஒழிய, பெண்கள் அதிகாரம் பெற்றவர்கள் என்பதைக் காட்டும் வகையில் இல்லை,” என்கிறார்.

வீரே தி வெட்டிங் திரைப்படத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டி சாட்டர்ஜி கூறுகிறார்:

“வீரே தி வெட்டிங் என்ற திரைப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் காணப்படுகின்றன. இது பெரிய விஷயம் என்று கூறப்பட்டது. ஹிந்தி படங்களில் இப்படி நடக்காததால் இது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இது நம் சிந்தனையையும் பார்வையாளர்களின் கருத்தையும் மாற்றாது. மாறாக, சினிமா ஹாலில் நகைச்சுவையாகவே பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சியைப் பார்த்து மக்கள் சிரித்தது எனக்கு நினைவிருக்கிறது.” என்கிறார் அவர்.

திரைப்படங்களில் முஸ்லிம்கள் எப்படி காட்டப்படுகின்றனர்

ஓரின சேர்க்கை சமூகம் எப்படி இருக்கும்?

பிபிசி பகுப்பாய்வு செய்த 95 படங்களில் ஓரினச் சேர்க்கையாளர் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே தோன்றியுள்ளன.

சாட்டர்ஜி பேசும் போது, “பிளாக்பஸ்டர் படங்கள் முதல் பல படங்கள் வரை ஓரினச்சேர்க்கை கதாபாத்திரங்கள் திரையில் கேலி செய்யப்படுகின்றன. இதற்கு ‘தோஸ்தானா’ திரைப்படம் ஒரு பெரிய உதாரணம். இதில் பாலியல் சிறுபான்மையினருக்கு பாசிட்டிவ் பிம்பத்தை உருவாக்காமல், ஒருவிதத்தில் எதிர்மறையான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

கரண் ஜோஹரின் ‘கல் ஹோ ந ஹோ’ படத்தில் கூட, ஷாருக் கானுக்கும் சைஃப் அலி கானுக்கும் இடையிலான சில காட்சிகளில் ஓரினச்சேர்க்கையைச் சுற்றி நகைச்சுவைக் காட்சிகள் அமைக்கப்பட்டன,” என்கிறார்.

இந்த ஆய்வில் பிளாக்பஸ்டர் படங்களை மட்டுமே தேர்வு செய்ய முக்கிய காரணம், இந்த படங்கள் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களை சென்றடைவதுதான்.

மேலும் இப்படங்கள் ஹிட் ஆவதால், இவை சமூகத்தில் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. இது மக்களின் எண்ணங்களை பாதிக்கிறது. அதாவது, இந்த படங்கள் அவற்றின் கதை மற்றும் சித்தரிப்பு காரணமாக ஒரு சிறப்பு வகையான கதையை உருவாக்குகின்றன.

‘ரோஜா’ படத்திற்குப் பிறகு இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்…

இந்தியாவின் மிகப்பெரும் மத சிறுபான்மையினரான முஸ்லீம் சமூகத்தை இந்திய திரைப்படங்களில் சித்தரிக்கும் விதம் சுதந்திரத்திற்குப் பிறகு மாறிவருகிறது.

ஹிந்தித் திரையுலகில் முஸ்லிம் கதாபாத்திரங்களின் இடத்தைப் பற்றி ‘Reading the Muslim on Celluloid: Bollywood, Representation and Politics’ என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் டாக்டர் ரோஷினி சென் குப்தா கூறுகிறார் :

“நாற்பதுகள் மற்றும் அறுபதுகளுக்கு இடையில், முஸ்லிம் கதாபாத்திரங்கள் வலுவான பாத்திரங்களாகக் காட்டப்பட்டன. இவர்களுக்கு முஸ்லிம் சமூகம் என்று பெயரிடப்பட்டது. இதில், முகலாய அரசின் மகிமையை வெளிப்படுத்துவது முதல், இந்தியாவை மாற்றுவதற்கான சவால்களுடன் போராடும் சமூகத்தின் உயரடுக்கு முஸ்லிம் குடும்பங்களின் கதைகள் வரையிலான கதைகள் காண்பிக்கப்பட்டன.

இதற்குப் பிறகு, 1960 முதல் 1980 வரையிலான இருபது ஆண்டுகளில், முஸ்லிம்கள் விளிம்பு நிலை மனிதர்களாக தோன்றினர்.

உதாரணத்திற்கு, ‘கூலி’ படத்தில் அமிதாப் பச்சன் இக்பால் கானாக, ரயில் நிலையத்தில் முழு உலகத்தின் பாரத்தையும் சுமந்து கொண்டு காணப்படுகிறார்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், ரோஜா போன்ற ஒரு திரைப்படம் வந்தது, அதில் முதன்முறையாக ஒரு முஸ்லீம் கதாபாத்திரம் வெளிநாட்டு ஆதரவுடன் வன்முறை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல் காட்டப்பட்டது.

வெளிநாட்டு சக்தி என்றால் பாகிஸ்தானைத்தான் குறிக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், இந்த படம் இந்த கதையைத் தொடங்கியது. அதில் முஸ்லிம் கதாபாத்திரங்கள் வில்லன்களாக காட்டும் நிலை தொடங்கியது.

ரோஜாவுக்குப் பிறகு, 1999 இல் அமீர்கானின் ‘சர்பரோஷ்’ திரைப்படம் வந்தது. இது பயங்கரவாதத்தின் பின்னணியில் பாகிஸ்தானைக் குறிப்பிட்ட முதல் சூப்பர்ஹிட் படமாக இருக்கலாம்.

இதற்குப் பிறகு, ‘கதர் – ஏக் பிரேம் கதா’ முதல் ‘மா துஜே சலாம்’ என பல படங்கள் வந்தன. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பகையை வெவ்வேறு வழிகளில் சுற்றிக் கதைகள் பின்னப்பட்டன.

ஹிந்தித் திரைப்படங்களின் வரலாறு மற்றும் நிகழ்காலத்தைப் புரிந்து கொண்ட திரைப்பட விமர்சகர் அஜய் பிரம்மாட்ஸ், இது தொண்ணூறுகளில் அரசியல் குழப்பத்துடன் தொடங்கியது என்று நம்புகிறார்.

அவர் பேசும் போது, “இப்படிப்பட்ட சூழ்நிலையில், சினிமாவில் இருந்து சமூகம் வரை வெறுப்பு அரசியல் தோன்றிய விதம் அங்கிருந்துதான் தொடங்குகிறது. தீவிரவாதி பதானி சூட் அணிந்திருப்பார். அவர் பாகிஸ்தானில் இருந்து வருகிறார் என்று சொல்லப்பட்ட படம் ரோஜா. ஒரு பயங்கரவாதி தலைப்பாகை அணிந்திருப்பார். அவர் தாடியும் வைத்திருக்கிறார். இது போன்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில், சினிமாவில் அரசியலும் கலந்தது,” என்கிறார்.

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தக் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஏதோ ஒரு வகையில் தேச பக்தியை சேர்க்கும் முயற்சி நடந்துள்ளது.

ஒரு படத்தின் ஒரு காட்சியில் இந்தியக் கொடியும், இன்னொரு படத்தில் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்தோர் நாட்டை விட்டுப் பிரிந்த உணர்வும், மற்றொரு படத்தில் விளையாட்டுப் போட்டியின் போது எழும் தேசபக்தியும் தெரிகிறது.

ரோஜா, சர்ஃபரோஷ் போன்ற படங்கள் வெளிவந்த இருபது ஆண்டுகளில் மத சிறுபான்மை கதாபாத்திரங்கள் திரையில் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்பது ஒரு முக்கியமான கேள்வி.

திரைப்படங்களில் முஸ்லிம்கள் எப்படி காட்டப்படுகின்றனர்

30 ஆண்டுகளில் முஸ்லிம்களை காட்டும் விதம் எப்படி மாறியுள்ளது?

காங்கிரஸ் ஆட்சியில் வெளியான படங்களை விட, மத்தியில் பாஜக ஆட்சியில் வெளியான படங்களில் சிறுபான்மை கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை பிபிசி இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளது.

பாஜக ஆட்சியில் தேச பக்தி மற்றும் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு ஒரு முக்கிய காரணம்.

தரவுகளை ஆய்வு செய்த பிபிசி, 2000 முதல் 2004 வரையிலான வாஜ்பாய் ஆட்சியின் போது, ​​தேசபக்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஏழு படங்கள் வெற்றி பெற்றதாகக் கண்டறிந்துள்ளது.

அதே நேரத்தில் 2005 முதல் 2009 வரை நடந்த மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தேசபக்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இரண்டு படங்கள் வசூல் சாதனை படைத்தன.

இதற்குப் பிறகு, 2010 முதல் 2014 வரை, தேசபக்தியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இரண்டு படங்கள் மட்டுமே பிளாக்பஸ்டர்களாக இருந்தன.

சுவாரஸ்யமாக, சிறுபான்மை கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சகாப்தத்தில், பாலிவுட் பிளாக்பஸ்டர் படங்கள் முஸ்லிம்களை வன்முறை மற்றும் கொடூர குணம் கொண்டவர்களாக காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேச பக்தி மற்றும் வரலாற்று மோதல்களை அடிப்படையாகக் கொண்ட படங்களில், பிரிட்டிஷ் மற்றும் பெரும்பாலும் முஸ்லீம் கதாபாத்திரங்கள் எதிரிகளாக காட்டப்படுவதால் இது நடக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள்.

சிறுபான்மை கதாபாத்திரங்களின் எண்ணிக்கை புள்ளிவிவரங்களில் அதிகரிக்கிறது ஆனால் அவை பெரும்பாலும் எதிர்மறையான பாத்திரங்களில் சித்தரிக்கப்படுகின்றன.

‘லகான்’ முதல் ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற படங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். இதில் கிறிஸ்தவ கதாபாத்திரங்களின் எண்ணிக்கை மற்ற படங்களை விட அதிகமாக உள்ளது. ஆனால் இதுபோன்ற பெரும்பாலான பாத்திரங்கள் எதிர்மறையானவையாகவே இருக்கின்றன.

அதே சமயம் முஸ்லிம் கேரக்டர்களைப் பற்றி பேசினால், கதர்-ஏக் பிரேம் கதா, பாஜிராவ் மஸ்தானி, சூர்யவன்ஷி, பத்மாவத் போன்ற படங்களில் மற்ற படங்களை விட முஸ்லிம் கதாபாத்திரங்கள் அதிகம். ஆனால் பெரும்பாலான கதாபாத்திரங்கள் நெகட்டிவ் ரோல்களில்தான் இருக்கிறார்கள்.

முஸ்லிம் ஆட்சியாளர்களை கொடூரமானவர்களாக காட்ட முயற்சி?

கடந்த சில ஆண்டுகளாக, வரலாற்று மோதல்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இது சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி படத்திலிருந்து தொடங்குகிறது. இதற்கு முன் வரலாற்று மோதல்கள் பற்றிய படங்கள் எடுக்கப்படவில்லை.

ஷாருக்கானின் அசோகா திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் பாஜிராவ் மஸ்தானியைப் போன்ற வெற்றியைப் பெறவில்லை.

ஆனால் பாஜிராவ் மஸ்தானியின் வெற்றியால் ஈர்க்கப்பட்டு, பல படங்கள் வரலாற்று மோதல்களில் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கப்பட்டன.

இதில் பல படங்கள் பிளாக்பஸ்டர்களாக அமைந்தன. ஆனால் இதுபோன்ற பல படங்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களை கொடூரமாக சித்தரிப்பதன் காரணமாக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பத்மாவத், தன்ஹாஜி மற்றும் பானிபட் போன்ற திரைப்படங்கள் இந்த வகையான விமர்சனத்திற்கு பெரும் பலியாகின. இவற்றில் பத்மாவத் மற்றும் தன்ஹாஜி ஆகிய படங்கள் வெளியான ஆண்டின் முதல் மூன்று பிளாக்பஸ்டர் படங்களில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படங்களில் அலாவுதீன் கில்ஜி மற்றும் அஹ்மத் ஷா அப்தாலி போன்ற வரலாற்று முஸ்லிம் கதாபாத்திரங்கள் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டிருந்தன என்பது மிக முக்கியமான விமர்சனமாக உள்ளது.

2018 ஆம் ஆண்டு வெளியான பத்மாவத் திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்தே, அலாவுதீன் கில்ஜி மற்றும் ரத்தன் ராவல் சிங்கைக் காட்டிய விதத்தில் ஒரு முரண்பாடு தெரிகிறது.

கில்ஜி கருப்பு உடை அணிந்த காட்டுமிராண்டித்தனமான நபராகவும், ரத்தன் ராவல் சிங் வெள்ளை ஆடை அணிந்த ஒரு உன்னத நபராகவும் தோன்றுகிறார்கள். ரத்தன் ராவல் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நல்ல வெளிச்சத்தில் காட்டப்படுகிறார்; கில்ஜி இருளில் காட்டப்படுகிறார்.

கில்ஜி மற்றும் ரத்தன் ராவல் சிங் இருவரும் திருமணம் செய்து கொண்டாலும், மற்ற பெண்களுடன் நெருங்கிப் பழகுகிறார்கள். கில்ஜி ஒரு இருண்ட நடைபாதையில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதைக் காணலாம். அதே சமயம் ரத்தன் ராவல் சிங் மற்றும் தீபிகா படுகோனின் நெருக்கம் மிகவும் மென்மையான சைகைகள் மூலம் காட்டப்படுகிறது.

‘மசான்’ போன்ற பிரபலமான படங்களின் இயக்குனர் நீரஜ் கெய்வான், இந்த வகையான படப்பிடிப்பை ஒரு உணர்வுபூர்வமான முயற்சியாகக் கருதுகிறார்.

ஷியாம் பெனகல், சைபல் சாட்டர்ஜி மற்றும் நீரஜ் கெய்வான் ஆகியோர் எதை நோக்கிச் செல்கிறார்கள் என்பது பத்மாவத்தில் மட்டுமல்ல, 2020 ஆம் ஆண்டு வெளியான ‘தன்ஹாஜி – தி அன்சங் ஹீரோ’ படத்திலும் தெரியும்.

படத்தின் முக்கிய கதாபாத்திரமான தன்ஹாஜி வெள்ளை உடை அணிந்து கடவுளை வணங்கும் குடும்ப மனிதராக காட்டப்படுகிறார்.

அதே சமயம் உதய்பன் சிங் ரத்தோர், கில்ஜி ஸ்டைலில் கருப்பு உடை அணிந்து, ஔரங்கசீப்பின் தளபதி என்பதால் சதைத் துண்டுகளை கிழிப்பவராகக் காட்டப்பட்டுள்ளார்.

இந்த விஷயத்தில் நீரஜ் கருத்துடன் சைபல் சாட்டர்ஜியும் உடன்படுவதாகத் தெரிகிறது.

அவர் பேசும் போது, “இவை அனைத்தும் நல்ல சிந்தனையுடன் செய்யப்படுகின்றன. படத்தயாரிப்பாளர் தனது ஆடை வடிவமைப்பாளரையும் ஒளிப்பதிவாளரையும் கேரக்டரை மிகவும் மோசமான நபராகக் காட்டும்படி கேட்கிறார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி கேரளா ஸ்டோரி’ போன்ற படங்களில் இதெல்லாம் மிகவும் குழந்தைத்தனமாக காட்டப்படுகிறது. ஆனால் ஸ்டைலிஸ்ட் பட தயாரிப்பாளர்கள் என்று நாம் அழைக்கும் அவர்களும் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள். அவர்கள் இதைச் செய்கிறார்கள் என்று நான் நம்பத் தயாராக இல்லை. அது தெரியாமல். இதற்குப் பின்னால் ஒரு நன்கு சிந்திக்கப்பட்ட உத்தி உள்ளது,” என்றார்.

திரைப்படங்களில் முஸ்லிம்கள் எப்படி காட்டப்படுகின்றனர்

அனைத்தும் இத்துடன் முடிந்துவிட்டனவா?

பிபிசி பகுப்பாய்வில் சேர்க்கப்பட்டுள்ள பல படங்களில், வரலாற்று இந்து மற்றும் முஸ்லீம் கதாபாத்திரங்கள் ஒழுக்கக்கேடான முஸ்லீம் ராஜா மற்றும் தார்மீக இந்து ராஜா என்ற இரண்டு சட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அப்படிப்பட்ட படங்களுக்கு தன்ஹாஜி ஒரு சிறந்த உதாரணம்.

இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில், முகலாய பேரரசின் விசுவாசமான கிராமவாசிகளை சிவாஜிக்கு ஆதரவாக நம்ப வைக்க முயற்சிக்கும் போது, ​​தன்ஹாஜி கூறுகிறார்:

“இறந்தவர்களைச் சுமந்து செல்லும் போது, ​​ஸ்ரீராமனுடைய பெயரை வெளிப்படையாகச் சொல்லாமல், இறந்தவர் உயிருடன் இருப்பதாகச் சொல்லவேண்டும். இன்னும் எத்தனை முறை அவர் இறப்பார்?”

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் சில பகுதிகளில், இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் இறந்த உடலை தகன மைதானத்திற்கு கொண்டு செல்லும் போது ‘ராம் நாம் சத்யா ஹை’ என்று கூறுகிறார்கள்.

ஜெய் ஸ்ரீராம் என்று எங்கும் முழக்கப்படவில்லை. படத்தில் காட்டப்பட்ட சிவாஜியின் கொடியில் இந்து மதத்தின் மிக முக்கிய அடையாளமான ‘ஓம்’ பயன்படுத்தப்பட்டது. சர்ச்சை எழுந்ததையடுத்து அது அகற்றப்பட்டது. சிவாஜியின் கொடியில் ஓம் இல்லை.

நல்ல மற்றும் கெட்ட முஸ்லிம்களின் விவரம்

இந்த பகுப்பாய்வு பயங்கரவாதத்தை மையமாகக் கொண்ட பல திரைப்படங்களையும் ஆய்வு செய்தது.

இவற்றில் இந்திய முஸ்லிம்களை நல்லவர், கெட்டவர் என இருவேறாகப் பிரித்து காட்டியுள்ளனர்.

2021-ம் ஆண்டு வெளியான ‘சூர்யவன்ஷி’ படத்தில் இந்த விஷயம் தெரிகிறது.

படத்தில் மாஜி போலீஸ்காரரை தாடி இல்லாத நல்ல முஸ்லீமாக காட்டும் முயற்சி நடந்துள்ளது. இந்த கதாபாத்திரத்தின் மகனும் காவல்துறையில் இருக்கிறார். இந்த நபர் ஓய்வு பெற்ற பிறகும் காவல்துறைக்கு உதவுகிறார்.

அதே சமயம் நீண்ட தாடியுடன் தொப்பி அணிந்த நபரை மோசமான முஸ்லீமாக காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் நீண்ட தாடியுடன் உள்ளது. ஆனால் மீசை இல்லை மற்றும் அவரது நெற்றியில் ஒரு கருப்பு குறி உள்ளது.

முன்னதாக, மிஷன் காஷ்மீர், ஹீரோ – தி லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை மற்றும் ராசி போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நல்ல மற்றும் கெட்ட முஸ்லிம்களின் பிரேம்கள் காணப்பட்டன.

சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான தப்பெண்ணங்களைப் பயன்படுத்த திரைப்படங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?

இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த ஷியாம் பெனகல், “திரைப்படம் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமூகத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய செய்திகளை உங்கள் திரைப்படங்கள் மூலம் கொடுக்கமுடியும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது சமூகம் பன்முகத்தன்மை நிறைந்தது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மக்களுடன் பழகும்போது, ​​​​அவர்களுடன் நீங்கள் சாதாரணமாக நடந்து கொள்ள வேண்டும்.

உங்களிடம் எந்த வித பாரபட்சமும் இருக்கக்கூடாது. ஆனால் உங்கள் வேலையில் உங்கள் சார்பு பிரதிபலித்தால், அது கவலைக்குரியது. புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், நீங்கள் ஒரு நபரின் தப்பெண்ணங்களை வலுப்படுத்தினால், அவர் உங்களை விரும்புவார். நம் அனைவருக்கும் தப்பெண்ணங்கள் உள்ளன. ஆனால் நாம் அவற்றை நடைமுறைப்படுத்தவே இல்லை. ஆனால் நீங்கள் அத்தகைய தப்பெண்ணத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் அது மிகவும் மோசமானது,” என்றார்.

ஆனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த கேள்விக்குப் பதில் அளித்த போது, ‘’நீங்கள் வெகுஜன ஊடகங்களில் பணிபுரிகிறீர்கள் என்றால், நாட்டையும் உலகையும் அடையும் ஒன்றை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்றால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தப்பெண்ணங்கள் குறித்து நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தப்பெண்ணங்களை நீங்கள் நடைமுறைக்குக் கொண்டுவருகிறீர்களா என்பதை நீங்களே கண்காணிக்க வேண்டும்,” என்றார் ஷியாம் பெனகல்.

ஆனால் இவை அனைத்தும் மாறிவரும் அரசியலிலும் வலதுசாரி என்று அழைக்கப்படும் மோடி ஆட்சியின் போதும் தொடங்கிவிட்டதா?

இந்த கேள்விக்கான நேரடி பதில் – இல்லை.

நீண்ட காலமாக, பாலிவுட் தனது படங்களின் வெற்றிக்கான ஃபார்முலாக் கருவிகளை நம்பியிருக்கிறது. தேசபக்தி மற்றும் தேசியவாதமும் இந்த கருவித்தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

இது குறித்துப் பேசிய சாட்டர்ஜி, “இந்திப் படங்களில் சிறுபான்மை மதக் கதாபாத்திரங்களைப் பற்றி, குறிப்பாக முஸ்லிம்களைப் பற்றி பேசினால், முஸ்லிம் கதாபாத்திரம் ஒரு சாதாரண காவலராகவோ அல்லது காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகவோ பார்க்கப்படுவார். மேலும் அவர் தனது தேசபக்தியை நிரூபிக்க மற்றவர்களை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். முஸ்லிம் இன்ஸ்பெக்டர் தனது தேசபக்தியை மரணத்தின் மூலம் நிரூபிக்க வேண்டும்,” என்றார்.

“முப்பத்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ‘கட்டா-மீத்தா’ போன்ற படங்கள் ஒட்டுமொத்த பார்சி சமூகத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டவை. ஜூலி படத்தில் கிறிஸ்தவ கதாபாத்திரங்கள் நடித்ததை நாங்கள் பார்த்தோம். முஸ்லீம் சமூக வகையின் சிறந்த படங்கள் காணப்பட்டன. உதாரணமாக, ‘மேரே ஹுசூர்’, ‘மேரே மெஹ்பூப்’, ‘பகீசா’, ‘உம்ராவ் ஜான்’ மற்றும் ‘நிக்காஹ்’ போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் இந்தத் திரைப்படங்கள் தனித்தனியாகக் கருதப்படாமல் பிரதான நீரோட்டமாகவே கருதப்பட்டன. இன்று அவை பேசப்படுகின்றன. மேலும் கடந்த ஒன்பது வருடங்கள் மட்டும் இதற்கு பொறுப்பல்ல. இது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது.”

ஆனால், தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் இறுதியிலும் வெளியான படங்கள் அன்றைய சமூகம் மற்றும் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களின் பிரதிபலிப்பே என்று நம்புகிறார் திரைப்பட இயக்குநர் அவினாஷ் தாஸ்.

அவர் கூறும்போது, ​​“ரோஜா வந்தவுடன் அக்கம்பக்கத்தினரிடம் தொடர் குற்றச்சாட்டுகளும், எதிர்க் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. காஷ்மீர் பிரச்சினை வெடித்தது. மேலும் கதர் படம் வந்தபோது, ​​இந்தியாவில் இந்து-பாகிஸ்தான், இந்து-முஸ்லிம் பிரச்சனைகளில் பணப்பட்டுவாடா செய்த அரசு இருந்தது,” என்றார்.

திரைப்படங்களில் முஸ்லிம்கள் எப்படி காட்டப்படுகின்றனர்

பாலிவுட் ஏன் இத்தகைய படங்களைத் தயாரிக்கிறது?

இந்த கேள்விக்கும் ஒரு சரியான பதில் இல்லை.

இருப்பினும் இந்த கேள்விக்கு ஒரு சாத்தியமான பதில் என்னவென்றால், இதுபோன்ற படங்கள் வருவாயின் அடிப்படையில் லாபம் ஈட்டுகின்றன. பாலிவுட்டில், எதற்குக் கவர்ச்சி அதிகமோ, அது அதிகமாக வருவாய் ஈட்டுகிறது.

திரைப்பட பத்திரிக்கையாளர் லதா ஜா தனது ‘பாலிவுட் – பாக்ஸ் ஆபிஸ் அண்ட் பியோண்ட்’ புத்தகத்தில் இதை விரிவாக விளக்கியுள்ளார்.

இது குறித்து எழுதியுள்ள லதா ஜா, “2014 மற்றும் 2019 க்கு இடையில், 37 பாலிவுட் படங்களின் முக்கிய கருப்பொருள் தேசபக்தி மற்றும் தேசியவாதம். இதில் 24 படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டித் தந்தன. இந்த படங்களில் 2016 உரி தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட ‘உரி – தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ மற்றும் சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ முறையே ரூ.200 கோடி மற்றும் ரூ.190 கோடிக்கு மேல் வசூலித்த மெகா படங்களும் அடங்கும்,” என்கிறார்.

இந்த படங்களில் பெரும்பாலும் ஹீரோவாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். இதற்குப் பிறகு சல்மான் கான், ஜான் ஆபிரகாம் இருவரும் தலா நான்கு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளனர்.

இருப்பினும், இதற்கு திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மட்டும் பொறுப்பேற்க முடியாது என்று அவினாஷ் தாஸ் நம்புகிறார்.

அவர் பேசும் போது, “திரைப்பட இயக்குநர்களில் ஒரு பிரிவினருக்கு, ஒரு திரைப்படத்தை உருவாக்கும் திறன்தான் அதை உருவாக்குவதற்கு முக்கியக் காரணம். அதேசமயம், இரண்டாவது வகை திரைப்பட இயக்குநர்களுக்கு, சரியானதைச் சொல்வதே ஒரு படம் உருவாக முக்கியக் காரணம்,” என்றார்.

“ஆனால் இப்போது இரண்டாம் வகையைச் சேர்ந்த அப்படிப்பட்ட திரைப்பட இயக்குநர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துவிட்டது. அவர்களது படங்கள் பிளாக்பஸ்டர்களாக கூட ஆகவில்லை. அல்லது பெரிய நட்சத்திரங்கள் அவர்களுடன் நிற்க முடியாது. நட்சத்திரங்கள் யாருடன் நிற்கிறார்களோ அவர்கள் இந்த மாதிரியான சமூக அரசியல் சினிமாவை உருவாக்கவில்லை. பெரிய நட்சத்திரங்கள் கூட அரசியல் தலைப்புகளில் இருந்து விலகி இருக்க விரும்புவது இதற்கு ஒரு காரணம். இதுபோன்ற சூழ்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சர்ச்சைகளில் இருந்து விலகி நடுத்தர பாதையை பின்பற்ற முயற்சிக்கின்றனர்.”

பார்வையாளர்கள் அத்தகைய படங்களைக் கோருகிறார்களா?

2019 ஆம் ஆண்டு வெளியான “Uri – The Surgical Strike”, படம், அதன் சில சிறப்பு உரையாடல்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

யூடியூப்பில் வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லரின் தரவை பிபிசி ஆய்வு செய்தபோது, ​​யூடியூப்பிலும் இந்த வசனங்களை பார்வையாளர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளனர்.

இந்த டிரெய்லரில், விக்கி கௌஷலின் கேரக்டர் மேஜர் விஹான் சிங் ஷெர்கில், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்குச் செல்வதற்கு சற்று முன்பு தனது பாரா ட்ரூப்பர்களிடம் சொல்கிறார்:

“ரத்தத்தை ரத்தத்தால் பழிவாங்கும் நேரம் வந்துவிட்டது.

இந்திய ராணுவம் இந்தப் போரைத் தொடங்கவில்லை. ஆனால் நாங்கள் அதை ரத்தம் சிந்தி முடிப்போம்.

அவர்களுக்கு காஷ்மீர் வேண்டும். அவர்களின் தலை எங்களுக்கு வேண்டும்.

எங்கள் 72 மாவீரர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். விருந்துக்கு காத்திருக்கச் சொல்லுங்கள். இன்று நாங்கள் பல விருந்தினர்களை அனுப்பப் போகிறோம்.”

இந்த டிரைலர் யூடியூப்பில் 2.9 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.

படத்தில், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு சற்று முன்பு, விஹான் ஷெர்கில் தனது பராட்ரூப்பர்களிடம்,

“செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு, உரியில் கொல்லப்பட்ட சகோதரர்களின் மரணத்திற்கு பழிவாங்க நான் உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கப் போகிறேன். பயங்கரவாதிகள், கோழைகள் போல். நிராயுதபாணியாக இருந்த நம் சகோதரர்களை தூக்கத்தில் கொன்று குவித்தது ஒரு கொடூரச் செயல். அந்தக் கொடுமைக்கு ஒரு கொடிய பதில் தான் இருக்கமுடியும். அவர்களின் தலையைத் துண்டிக்க நான் ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். இந்த பணிக்கு நீங்கள் தயாரா? பழிவாங்க உங்கள் ரத்தம் கொதிக்கிறதா?” என்று கூறுகிறார்.

இந்திய ராணுவத்தின் சிறப்புப் படைகள் மட்டுமல்ல. உலகின் எந்த சிறப்புப் படையும் இதுபோன்ற பணிகளில் உணர்ச்சிவசப்பட்ட வீரர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கிறது.

ஏனெனில் ஒரு பணியின் போது, ​​ஒரு சிப்பாய் உணர்ச்சிவசப்படுவதன் மூலம் தனது உயிரையும், தனது தோழர்களின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தலாம்.

எனவே திரைப்படக் கதாபாத்திரமான விஹான் ஷெர்கில் தனது பாரா ட்ரூப்பர்களுடன் அல்லது திரையரங்கில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுடன் இந்த உரையாடலைச் செய்கிறார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறார் பிரபல எழுத்தாளரும் சமூக உளவியலாளருமான ஆஷிஷ் நந்தி.

அவர் கூறும் போது, “உங்கள் கவனிப்பு முற்றிலும் சரியானது. இது நடக்காது. ஒருவகையில், பாடம் கற்பித்து பழிவாங்கப் போகிறவர்கள்தான் உண்மையான இந்தியர்கள், மற்றவர்கள் அல்ல என்று இந்தியாவை நோக்கி மக்களைத் திரட்டும் முயற்சியே இது,” என்றார்.

அதே நேரத்தில், படங்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை சித்தரிப்பது குறித்து, நந்தி கூறும் போது, “காதலைக் காட்டிலும் ஒரு உணர்ச்சியாக வெறுப்பு மக்களை இழுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது, ஏனெனில் காதல் ஒரு ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையில் மட்டுமே நடக்கும். ஆனால் வெறுப்பு ஒரு கூட்டு உணர்ச்சியாக இருக்கலாம். மேலும் நேரடியாக வெளிவந்தால் தணிக்கைக் குழுவின் ஒப்புதலைப் பெற முடியாது என்பதால் மறைமுகமாக வெளிவருகிறது. போரைப் பற்றி எடுக்கப்பட்ட எந்தப் படத்திலும் போர் எதிர்ப்பு உணர்வுகள் இல்லை. ‘ஆல் க்வைட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ போன்ற புகழ்பெற்ற போர் எதிர்ப்புப் படங்கள் இந்தியாவில் காணப்படவில்லை. ஜப்பானிலும் போருக்கு எதிரான படங்கள் எடுக்கப்பட்டுள்ளன,” என்றார்.

திரைப்படங்களில் முஸ்லிம்கள் எப்படி காட்டப்படுகின்றனர்

இதெல்லாம் கவலைக்குரியதா?

ஆஷிஷ் நந்தி மற்றும் ஷ்யாம் பெனகல் ஆகிய இருவரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்துவதாகத் தெரிகிறது.

இது குறித்து ஷியாம் பெனகல் பேசிய போது, “சீக்கிய சமூகத்தைச் சுற்றி நகைச்சுவைகள் செய்யப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால் படிப்படியாக அவை குறைய ஆரம்பித்தன. நகைச்சுவைகள் குறைக்கப்பட்டதால், சீக்கிய சமூகம் பொருளாதார ரீதியாக பலமடைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு சமூகத்தின் பொருளாதார நிலை வலுப்பெறும் போது, ​​அது காண்பிக்கப்படும் விதம் மேம்படுகிறது, ஏனெனில் பொருளாதார ரீதியாக வலுவான சமூகங்கள் தங்கள் நிலைப்பாட்டை வலுவாக முன்வைக்க முடியும்,” என்றார்.

“இந்த விஷயங்களைப் பற்றி ஒருவர் கவலைப்படக் கூடாது என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை, ஏனென்றால் தப்பெண்ணங்கள் இருந்துகொண்டு தான் இருக்கும். மேலும் மக்கள் தொடர்ந்து தங்கள் சொந்த வழியில் செயல்படுவார்கள். திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த தப்பெண்ணங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் சமூகத்தின் கட்டமைப்பில் ஒரு தீவிர மாற்றத்தை கொண்டு வராத வரை. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத ஒன்று என்றால் மக்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?”

இது சில காலம் வரை மட்டுமே நீடிக்கும் போக்கு என்றும் ஆஷிஷ் நந்தி நம்புகிறார்.ஒருவேளை சமூகத்தின் போக்குகளில் ஏற்படும் மாற்றங்களுடன், சினிமாவின் அணுகுமுறையும் பாணியும் மாறும்.

பகுப்பாய்வுக்கு பிபிசி பின்பற்றிய செயல்முறைகள்:

  • வருமானத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன
  • படங்களின் வருவாய் தொடர்பான புள்ளிவிவரங்கள் பாலிவுட் ஹங்காமா.காம் மற்றும் கோய் மொய்.காம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு வருடமும் அதிக வசூல் செய்த முதல் மூன்று படங்கள் ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இந்த ஆய்வின் நோக்கம் 1992 முதல் 2022 வரை வெளியான படங்களை ஆய்வுக்கு உட்படுத்துவது.
  • சில வருடங்களில், பாலிவுட் ஹங்காமா மற்றும் கோய் மொய்.காமின் முதல் மூன்று படங்கள் ஒரே மாதிரியானவையாக காணப்படவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வித்தியாசமான படங்களும் இடம் பெற்றன.
  • திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவற்றின் பெயர்கள் மற்றும் சித்தரிப்பின் அடிப்படையில் அவற்றின் கதாபாத்திரங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன் பிறகு அவற்றைப் பற்றிய கணக்கீடுகள் செய்யப்பட்டன.
  • இதற்குப் பிறகு, இந்த அனைத்து கதாபாத்திரங்களின் பயன்பாடுகள், அவர்களின் உரையாடல்கள் மற்றும் அவை காட்டப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் தரமான பகுப்பாய்வு செய்யப்பட்டது.
  • இதற்குப் பிறகு, இந்த அனைத்து கதாபாத்திரங்களின் பாத்திரங்களையும் அவை காட்டப்படும் விதத்தையும் புரிந்து கொள்ள தரமான பகுப்பாய்வு செய்யப்பட்டது.
  • தரமான பகுப்பாய்வின் செயல்பாட்டில், இந்தத் திரைப்படங்களும் விரிவாகப் பார்க்கப்பட்டன, இதனால் அவற்றின் கதாபாத்திரங்கள், அவை காட்டப்பட்ட விதம் மற்றும் அவற்றின் உரையாடல்களை ஆழமாகப் பார்க்க முடியும்.
  • இந்த ஆய்வு தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் செயல்பாட்டில் முழுமையான கவனம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில பிழைகளின் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது.
Previous Story

முக்கிய தீர்மானங்களாம்: அறிவிக்கப் போகும் நாமல் !

Next Story

இம்ரான் கானுக்கு வந்த புதிய சிக்கல்:திருமண மோசடி?