ரம்புக்கனை சம்பவம்! அதிர்ச்சி தகவல்கள்!

-நஜீப் பின் கபூர்-

கொழும்பிலிருந்து கண்டி மற்றும் பதுள்ளை நோக்கி பயணிக்கின்ற ரயில் வண்டி ரம்புக்கனை வரை தரைப் பாங்கான பூமியில் பயணிக்கும். பின்னர் ரம்புக்கனை முதல் மலை இடுக்குகளின் வழியாகவும் சுரங்கப் பதைகளினுடாகவும் மலையேருகின்ற காட்சிகள் மிகவும் ரம்மியமானது.

அந்தத் துவக்கு பூமியில்-இடத்தில்தான் இந்தக் கொடூரம் நடந்திருக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் இந்த நகரம் நமக்கு மிகவும் பரிச்சிதமானதும் கூட. சம்பவம் நடந்திருக்கின்ற இடம், ரம்புக்கனை கேகாலை சந்தி. இந்த இடத்தில்தான் கண்டி,பதுள்ளை-கொழும்பு புகையிரதப் பாதையை ஊடறுத்து ரம்புக்கன-கேகாலை பிரதான வீதி அமைந்திருக்கின்றது.

அந்தக் கடவை இருக்கும் இடத்தில்தான் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயிலைத் தடுத்து நிறுத்திய இருக்கின்றார்கள். அந்த சந்தியில்தான் பெற்றோல் நிரப்புகின்ற நிலையமும் அமைந்திருக்கின்றது. அதே இடத்தில்தான் பெற்றோல் பவுசர் ரயில் பாதைக்குக் குறுக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றது. மோட்டார்இ ரயில் பாதைகளை மறைத்தது ஆர்ப்பாட்டகாரர்கள்தான் அதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

மக்கள் ஏன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது தெளிவானதே. நாட்டில் இருக்கின்ற பொருளாதார சுமையை அவர்களினால் தாங்கிக் கொள்ள முடியாது. உணவுப் பொருட்கள் உயர்ந்துள்ள நிலையில் அதனை வாங்க அவர்களிடம் காசு கிடையாது. அன்றாடப் பிழைப்புக்கான அனைத்து வழிகளும் அரசின் கொள்கையால் சீர்குழைந்து போய் இருக்கின்றது.

எரி பொருள் விலை அதிகரிப்பும் தட்டுப்பாடும்இ சமயல் எரிவாயு கிடைக்காமை, மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு, போக்குவரத்துக் கட்டணங்களின் விலையேற்றம். விவசாயம் செய்து அறுவடைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை. பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப முடியாத நிலை. பாசி பட்டனி இவற்றுக்குத் தீர்வுக்குப் பதிலாக அரசு இன்னும் இன்னும் மக்களுக்கு சுமைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் எல்லா இடங்களிலும் போல் ரம்புக்கனையிலும் மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் வாகனப் போக்குவரத்து கொழும்பு-மலையக புகையிர சேவைகள் முற்றிலும் பல மணி நேரம் தடைப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரகளை அங்கிருந்து வெளியேறுமாறும் பவுசரை பெற்றோல் நிலையத்துக்கு அனுப்புமாறு பொலிசார் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இடம் கொடுக்கவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் தமக்குப் பழைய விலையில் எரிபொருள் தருவதான இருந்தால் அதற்கு இடம் கொடுக்க முடியும் என்று தெரிவித்திருந்தனர்.

மேலும் புதிய விலையில் எரி பொருளை விநியோகிப்பதற்காக பெற்றோல் பவுசர்கள் தாமதமாக அங்கு வந்தது என்பது போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு. அதே நேரம் அதற்க முந்திய நாளிலும் 18.04.2022 பெற்றோல் நிரப்ப வந்தவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து வெளியேறி இருக்கின்றனர்.

ஆனால் அன்று மாலை பிரதேச அரசியல் வாதியும் தற்போதைய அமைச்சருமான கனக ஹேரத்தின் வாகனங்களுக்கு அந்த பெற்றோல் நிலையத்தில் இரகசியமாக பெற்றோல் நிரப்பட்டிருக்கின்றது. எனவே பெற்றோல் இருந்தும் பொது மக்களுக்கு அது அன்று விநியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.

இதனால் மக்கள் வேறுவழியின்றி அடுத்த நாள் கடுமையான முடிவுகளை எடுத்து புகையிரப் பாதையையும் அனைத்து மோட்டார் பாதைகளையும் மறைத்திருக்கின்றனர்.

20.04.2022ம் திகதி நான்கு மணியாகும் போது பொலிசார் கடுமையாக நடந்து கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் இதற்கு எந்தவகையிலும் சந்பந்தமில்லாத ஓரிடத்தில் ஒதுக்குப்புறமாக நிறுத்தப்பட்டிருந்த திரிவில் வண்டியொன்றை முகமூடி அணிந்து வந்தவர்கள் எரித்துவிட்டு தப்பி இருக்கின்றார்கள். இதனை நேரில் கண்ட சாட்சிகள் இருக்கின்றன.

அத்துடன் குறிப்பிட்ட திரிவில் உரிமையாளரான அந்த இளைஞனை உன்னுடைய வயதுக்கு ஏற்றவிதமாக நடந்து கொள் என்று ரம்புக்கனை ஓஐசி அந்த சம்பவத்துக்கு முன்னர் அவரை எச்சரித்தும் இருக்கின்றார்.

அதன் பின்னர் எரி பொருள் பவுசருக்கு தீ வைக்கப் பார்க்கின்றார்கள் அதற்கான முயற்சிகள் நடக்கின்ற என்றுதான் தாம் துப்பாக்கிப் பிரேயோகம் செய்ததாக பொலிஸ் தரப்புக் கூறுகின்றது. சுடுபட்டு இறந்த சமிந்த லக்ஷான் பவுசர் இருந்த இடத்திலிருந்து நூறு மீற்றர்கள்வரை தள்ளி அதுவும் புற முதுகுப்பக்கமாக சுடப்பட்டிருக்கின்றார்.

ஆனால் இது முற்றிலும் பொய்யான கூற்று முதலில் கண்ணீர் புகை வீசப்பட்டிருக்கின்றது. அதற்குப் பின்னர் நேரடியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இவ்வாறான சந்தர்பங்களின் போது முதலில் ரப்பர் தோட்டாக்களைப் பாவிக்க வேண்டும் அதுவும் முழங்காலுக்கு கீழாகத்தான் என்பதுதான் விதி.

ஆனால் ஐந்து முறை ரப்பர் தோட்டக்களை சுட்டுவிட்டு தொடர்ச்சியாக நேரடியாக நிஜத் தோட்டகளினால் பொலிசார் மக்களைச் சுட்டிருக்கின்றார்கள். ஆனால் ரம்புக்கனைப் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்று கூறுப்படுகின்றது.

கேகாலை எஸ்எஸ்பி கீர்த்திரத்ன அழைத்து வந்தவர்கள்தான் துப்பாக்கியால் சுட்டிருக்கின்றார்கள். 90 தோட்டக்கள் பாவிக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் அந்த எஸ்எஸ்பி முற்றிலும் குடிபோதையில் அந்த சந்தர்ப்பத்தில் இருந்திருக்கின்றார் என்று பல சாட்சிகள் தெரிவிக்கின்றன.

அதுவும் ஆர்ப்பாட்டம் நடந்த நேரத்தில் அல்லாமல் ஆட்களை தேடிப் போய் விரட்டி விரட்டி சுட்டிருக்கின்றார்கள். இந்த இடத்தில் அமைச்சர் திலும் அமுனுகவின் பெயரும் அவரது செயலாளர் ஒருவரின் பெயரும் பல இடங்களில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்ட்டிருக்கின்றது.

மாலை ஐந்து மணியளவில் திரிவில் வண்டியொன்றை மூவர் முகங்களை மறைத்துக் கொண்டு வந்து தீயிட்டுக் கொழுத்தி இருக்கின்றார்கள். அவர்கள் முகமூடி அணிந்த பொலிசார். அதன் பின்னர்தான் துப்பாகி சூடு நடத்தப்பட்டது என்று பொலிசார் கூறுகின்றார்கள். ஆனால் அதற்கு முன்னனே துப்பாக்கி சூடு நடந்தது என்று கேகாலை நீதிபதி களத்துக்கு நேரில் சென்று விசாரித்த போது சம்பவ இடத்தில் பலர் சாட்சிகள் சொல்லி இருக்கின்றார்கள்.

இவை எல்லாவற்றையும் விட பொலிசார் நீதி மன்றத்துக்குக் கொடுத்த பீ அறிக்கையை டிபெக்ஸ் போட்டு அழித்து அதில் மாற்றங்கள் செய்திருக்கின்றார்கள். இதனை சட்டதரணிகள் நீதிபதியிடம் சுட்டிக் காட்டிய போது. நீதிபதிபதிக்குக் கடும் கோபம் ஏற்பட்டு அப்படிச் செய்த பொலிஸ் அதிகாரி மீது தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது.

இதிலிருந்து அங்கு என்ன நடந்திருக்கின்றது என்பதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சம்பவத்தில் ஈடுபட்ட பல பொலிசார் நடந்த உண்மைகளை வெளியில் சொல்லவும் தயாராக இருப்பதாகவும் தெரிகின்றது. பொலிஸ் சுடவில்லை என்றால் பொலிசுக்குள் ஆயுதக் குழுக்கள் ஊடூவி இருக்கின்றதா என்றும் சந்தேகம் வருகின்றது. பல சாட்சிகளுக்கு எச்சரிக்கைகளை விடுத்த பொலிசார்கள் மீதும் நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தூப்பாக்கிச் சூட்டுக்கு முதல் உயிர் ரம்புக்கனையில் பலியாகி இருக்கின்றது. கண்டி கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேச அமைச்சர்கள்தான் சுடும்படி உத்தரவு போட்டிருக்கின்றார்கள் என்று குருனாகல மாவட்ட சஜித் தரப்பு உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகவே பேசி இருக்கின்றார்.

சம்பவ இடத்துக்கு 21ம் திகதி சென்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்க பல தவறுகள் அங்கே நடந்திருக்கின்றது என்று அன்றைய தினம் மாலையே நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். மேலும் கொல்லப்பட்டவருக்கு இரு வழக்குகள் இருந்தது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன கூறியதும், முன்னாள் அமைச்சர் சரத் வீரசேக்கர தனது வட்அப் பதிவில் அதே கருத்தை பதிந்து இந்தக் கொலையை நியாயப்படுத்தும் முயற்ச்சி என்று பலத்த கண்டனங்கள் தற்போது எழுந்திருக்கின்றது.

அதே நேரம் தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சை ஏற்றிருக்கின்ற பிரசன்ன ரணதுங்ஹவுக்கும் பல வழக்குகள் இருக்கின்றன. அதே போன்று நமது ஜனாதிபதிக்கும் முப்பதற்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றனவே இது போன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்களுக்கு வழக்குகள் இருக்கின்றன. எனவே அவர்களைத் தேடிப்போய் சுட்டுக் கொல்ல முடியுமா என்று சமூக ஊடகங்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றன.

சுடப்பட்டவர்கள் அனேகமானவர் தேடிப் போய் இனம் கண்டு சுடப்பட்டிருக்கின்றார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. சம்பவத்தில் இறந்தவர் ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அணியின் முக்கிய செயல்பாட்டாளராகவும் பிரதேச ஆளும் தரப்பு அமைச்சர் ஒருவருக்கு பெரும் சவலாக இருந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படுகொலையை ஆளும் தரப்பு அரச தனியார் ஆதரவு ஊடகங்களினால் நியாயப்படுத்தி பரப்புரை செய்யப்பட்டு வந்திருந்ததும் தெரிந்ததே.

துறைக்கப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன 300 பேர் இறக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே இறந்திருக்கின்றார். என்று அந்தக் கொலையை நியாயப்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசப் போய் சணக்கியன் எம்.பி.யிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருதார்.

பிரசன்ன அமைச்சைப் பெற்று இருபத்தி நாலு மணி நேரத்துக்குள் இந்தப் படுகொலை நடந்திருக்கின்றது. அதே நேரம் இது திட்ட மிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று எதிரணியினர் கூறுகின்றனர். இது ஒரு காகத்தை கொன்று தொங்கவிடும் நியதியில் நடந்ததோ என்னவோ தெரியாது.

ஏற்கெனவே ஜனாதிபதிக்கு பல கொலைக் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச மட்டத்தில் இருக்கின்ற நேரத்தில் இந்த சம்பவமும் நடந்திருக்கின்றது. சூடும் படி கட்டளை போட்டவர் யார் என்பதனை இன்னும் பொலிசார் பகிரங்கப்படுத்தவில்லை.

இளசுகள் குவிக்கும் வெற்றிகள்!

இப்போது ஏனைய விடயங்கள் பற்றி சற்றுப் பார்ப்போம். நமது நாட்டில் தற்போது பதவியில் இருக்கின்ற ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஸாவைப் பிரதமராகவும் கொண்ட அரசு எப்படிப் பதவிக்கு வந்தார்கள் என்பதனை அனைவரும் அறிவார்கள். சுவரில் பட்ட பந்து திருப்பி வருவது போல குறுகிய காலத்துக்குள்ளே அனைவரும் ஆச்சர்யப்படக் கூடிய அளவுக்கு தனது செல்வாக்கை அவர்கள் தற்போது இழந்து நிற்க்கின்றனர்.

இவர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் மெதமூலன குடும்பத்தினர் அரச வம்சம் போலவும் அவர்களது பிள்ளைகள் இளவரசர்களாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்குக் கூஜாத்தூக்கினால் மட்டுமே இந்த நாட்டில் அரசியல் செய்து பிழைத்துக் கொள்ள முடியும் என்று பெரும்பாலான அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு கருத்தும் நம்பிக்கையும் ஏற்பட்டிருந்தது. அது இன்று மாயையாகி இருக்கின்றது.

அனைத்துப் பொது மக்களும் கோட்டா வீட்டுக்குப் போ ராஜபக்ஸாக்களே வெளியேறு என்று வீதியில் இருக்கின்ற இந்த நேரத்தில் எமக்கு 69 இலட்சம் வாக்குகளைத் தந்துதான் மக்கள் பதவியில் அமர்த்தி இருக்கின்றார்கள்.

அப்படி கோஷம் போடுவதற்காக பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்பது ராஜபக்ஸாக்கள் வாதமாக இருக்கின்றது. ராஜபக்ஸாக்களும் அவர்களுக்குக் கூஜா தூக்கியவர்களும் இன்று பெரும் அச்சத்தில் இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

‘கோ ஹோம் கோட்ட’ போராட்டம் அதன் பிரதான இலக்கை இன்னும் எட்டாவிட்டாலும் பெரும் சாதனைகளை நிலை நாட்டி இருக்கின்றது என்பதனை நாம் பட்டியல் போட்டு கடந்த வாரம் சுட்டிக் காட்டி இருந்தோம். இந்த வாரமும் அது இன்னும் பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றது.

இது நமக்கு அரசியல் தலைவர்கள் பெற்றுத் தந்த வெற்றிகள் என்பதனை விட காலிமுகத்திடல் இளசுகள் பெற்றுத் தந்த பெரு வெற்றிகள் என்றுதான் நாம் பார்க்கின்றோம். இளசுகள் போராட்டத்துக்கு அஞ்சி ஒட்டுமொத்த அமைச்சரவையும் விலகி இருக்கின்றது.

அதனைச் செய்து மக்களது கோபத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று பார்த்தால் தலைவலிக்கு தலையணை மாற்றியது போலத்தான் அது அமைந்து விட்டது. இந்த அமைச்சரவை மாற்றம் நமது அரசியல் வரலாற்றில் மற்றுமொரு ஏமாற்று. ஆளும் தரப்பில் உள்ளவர்களே அதன் ஆயுல் மிகவும் கம்மியாகத்தான் இருக்கும் என்று கூறுகின்றார்கள்.

அடுத்து பதவி நீக்கப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் இன்று வரை தமது வரப்பிரசாதகங்களை விட்டுக் கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கும் இப்போது வரப்பிரசாதங்களைச் செய்யது கொடுக்க வேண்டி இருக்கின்றது.

அவர்களுக்கு வீடு, மேலதிக பாதுகாப்பு வசதிகள், வாகனங்கள் ஆளணிகளை வழங்க வேண்டி இருக்கின்றது. பொருளாதாரா நெருக்கடியான நேரத்தில் ஜனாதிபதி என்ன கோமளித்தனம் பண்ணி இருக்கின்றார். பழைய அமைச்சர்கள் தமது முன்னைய அமைச்சு வரப்பிரசாதங்களை இன்னும் அனுபவித்துக் கொண்டிருப்பது ஜனாதிபதியின் கண்களுக்குத் தெரியவில்லையா?

அவை அப்படி இருக்க ராஜபக்ஸாக்கள் காலிமுகத்திடல் பேராட்டத்துக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புக்களை செய்ய ஒத்துக் கொண்டிருப்பது போல கதை விடுகின்றார்கள். இதனை எந்தளவுக்கு நம்பலாம் என்று தெரியவில்லை. அவர்கள் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து மீண்டும் மைத்திரியின் 19 அரசியல் திருத்தத்தை பிளஸாக்கி 21 எனக் கொண்டுவர ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதன் மூலம் மீண்டும் மஹிந்தாவைப் பிரதமராக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள். அதற்கான வேலைகளும் நடக்கின்றது. ஆனால் களநிலவரம் அப்படியாக இல்லை. ஜனாதிபதி பல் இழந்த சிங்கம் போல் இன்று எங்கிருக்கின்றார் என்று தெரியாத அளவுக்கு ஒளித்துக் கொண்டிருக்கின்றார்.

பொது நிகழ்வுகளில் அவருக்குத் தலைகாட்ட முடியாது. எனவேதான் ஜேவிபி. அனுரகுமார மக்களால் ஜனாதிபதி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார் என்று நையாண்டி பண்ணி வருகின்றார்.

எழு தலை நாட்டில் இருக்கின்றதா இல்லையா என்று தெரியாது வாயடைத்து நிற்க்கின்றது. அவர்தான் ராஜபக்ஸாக்களின் அரசியல் குரு என்று ஒரு காலத்தில் பேசப்பட்டது. ஆனால் வேடிக்கை குருவைக் காணவில்லை. கொரோனா என்ற பெயரில் அவரும் ஒரு வகைத் தலைமறைவு வாழ்க்கையில் இருக்கின்றார்.

நாமல் ராஜபக்ஸா ஏதோ பெரிய நியாவாதி போல் மறைமுகமாக போராட்டத்தை ஊக்கிவிப்பது போல கதைகளை சொல்லி மக்கள் மனங்களை வெல்லப் பார்க்கும் ஒரு முயற்ச்சியில் தற்போது இறங்கி இருக்கின்றார். ஆனால் அவரையும் பொது நிகழ்ச்சியில் கண்டு கொள்ள முடியவில்லை.

நன்றி: 24.04.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

போராட்டத்தில் மஹிந்த தேசப்பிரிய

Next Story

ராஜபக்ஷக்கள் சொத்துக்கள் அம்பலப்படுத்தும் ஹேக்கர்கள்!