ரணில் இரட்டை வேடம்

ஜனாதிபதியை பாதுகாக்க முயலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது தற்போது நாட்டிற்கு நன்கு தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்காக நிலையியற் கட்டளையை இடைநிறுத்துவதா என்பது குறித்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த பிரதமர் ரணிலை  சுமந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தேச விவாதம் நம்பிக்கையில்லா பிரேரணையின் ஒரு பகுதியே என தெரிவித்துள்ள சுமந்திரன் இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் காரணமாக ஜனாதிபதி தனது பதவியை இழக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெயர் பலகையில் உங்கள் பெயர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியை பாதுகாப்பது யார் பாதுகாக்க விரும்பாதது யார் என்பது நாட்டிற்கு தற்போது தெரியும் என தெரிவித்துள்ள சுமந்திரன் இது பிரதமமந்திரி மற்றும் அரசாங்க தரப்பில் அமர்ந்திருப்பவர்களின் வெட்கக்கேடான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உருவாக்கப்பட்டவேளை எதிர்க்கட்சியில் காணப்பட்ட பிரதமர் அதனை ஏற்றுக்கொண்டார், அவர் அதன் நகல்வடிவை பார்வையிட விரும்பினார்.  நான் அதனை ஏப்ரல் 26ஆம் திகதி அனுப்பினேன், அவர் அதனை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அனுப்பி அவர்களின் இணக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மீது அதிருப்தியை வெளியிட்டு கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக தான்வாக்களிப்பேன் என பிரதமர் இரண்டு முறை அறிக்கை வெளியிட்டார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஏன் தனது மனதை மாற்றினார்,  ஏன் முன்னர் தெரிவித்தது போல தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் என்ன விளையாட்டு விளையாடுகின்றார்? அன்றைய நாளிற்கும் இன்றைய நாளிற்கும் இடையில் ஒரேயொரு மாற்றமே நிகழ்ந்துள்ளது.  அவருக்கு பிரதமர் என்ற வேலை கிடைத்துள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்காக விக்ரமசிங்க தனது கொள்கைகளை விட்டுக்கொடுத்துள்ளார், நாட்டிற்கு பகிரங்கமாக அறிவித்த கொள்கைகளை விட்டுக்கொடுத்துள்ளார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் கொண்டிருக்கின்ற பிரதமர் அப்படிப்பட்டவர் தான் நடக்கின்றாரா நிற்கின்றாரா என்பது தெரியாத ஒருவர் பிரதமராகயிருப்பது குறித்து நாங்கள் வெட்கப்படுகின்றோம், அவருக்கு கொள்கைகள் என்றால் என்னவென்பது தெரியாது அவர் ஒன்றை சொல்லுவார் ஆனால் இன்னொன்றை செய்வார் என சுமந்திரன் சாடியுள்ளார்.

Previous Story

சனத் நிஷாந்த திடீர் கைது

Next Story

அரசியல்வாதிகளின் கையாட்கள், பிரதேச பொஸ்களில் அதிகரிகள்! அப்ப …!