ரணிலின் வெற்றி! மக்கள் புரட்சிக்கு மொட்டு பதிலடி!

-நஜீப் பின் கபூர்-

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தி ஒரு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இதற்கான பின்னணி எப்படி தோன்றியது என்பதை நாம் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. என்றாலும் இருந்த ஜனாதிபதி கோட்டா மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாது நாட்டிலிருந்து தப்பிய ஓடினார் என்பது மட்டும் உண்மை.

ஓடிப்போகின்ற போது பிரதமர் ரணிலை பதில் ஜனாதிபதியாகவும் கதிரையில் அமர்த்திவிட்டுத்தான் அவர் ஓடினார். இலங்கை அரசியலில் ரணிலுக்கும் ராஜாபக்ஸாக்களுக்குமிடையே மிக நெருக்கமான அரசியல் உறவுகள்-இரகசியங்கள் இருந்து வந்ததும் பகிரங்கமான கதையே. இதனால்தான் நல்லாட்சிக் காலத்தில் கூட ராஜபக்ஸாக்களுக்கு விசுவாசமாக ரணில் செயல்பட்டார் என்பதும் பழைய கதைகள்.

இப்படிப் பதில் ஜனாதிபதிக் கடமைக்கு அமர்ந்தவர், கோட்டா நிரந்தரமாகவே பதவி விலகல் கடிதத்தைக் கையளித்ததால் ஜனாதிபதி என்ற நிலை. அதற்கு நாடாளுமன்ற அங்கிகாரம் தேவை என்றுவர  மூன்று பேர் கோதாவுக்குள் போட்டிக்கு வந்தனர். இதில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் ஒதுங்கி அந்த இடத்துக்கு மொட்டு அணியில் இருந்த டலஸ் என்பவருக்குத் தனது ஆதரவைக் கொடுத்தார்.

இது மைத்திரி மஹிந்தவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலுக்கு வந்தது போன்ற ஒரு நிகழ்வாகும். குறிப்பிட்ட படி கடந்த 20ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அடுத்த நாள் அதாவது 21ம் திகதி இந்தியா ஜனாதிபதிக்கான தேர்வும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கும் ஆளும் தரப்பு வேட்பாளருக்குத்தான் பெரு வெற்றி.

இப்போது வெறும் ஒரே ஒரு ஆசனத்தை மட்டும் வைத்திருக்கின்ற ரணில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் நின்று மிகத் தெளிவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார் என்பதனை வஞ்சகத்தனமில்லாது  சொல்லித்தான் ஆக வேண்டும். மொத்த வாக்கு 225. அவர்களில் 2 பேர் வாக்களிப்பை தவிர்த்தனர். 4 பேர் முறையாக வாக்குப் பதிவு செய்யவில்லை. மொத்தமாக வழங்கப்பட்ட வாக்கில் ரணில் 134. டலஸ் 82. அணுர 3. என அமைய, 52 என்ற பெரிய வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கை மட்டுமே வைத்திருந்த ரணிலுக்கு வெற்றி. இப்போது ரணிலின் இந்த வெற்றிக்கான பின்னணிகளைப் பார்ப்போம்.

1.ராஜபக்ஸாக்கள்: நமது நடாளுமன்றத்தில் என்னதான் அரசுக்கும் இருந்த ஜனாதிபதி கோட்டாவுக்கும் மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் இருந்தாலும் அங்கு ராஜபக்ஸாக்களின் செல்வாக்கு இன்னமும் வலுவாக இருக்கின்றது என்பது தேர்தல் முடிவுகளில் தெளிவாகத் தெரிகின்றது.

2.பணம்: கடந்த வாரமும் அதற்கு முன்னரும் நாம் எழுதிய கட்டுரையிலும் குறிப்புக்களிலும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை பணம்தான் தீர்மானிக்கப் போகின்றது என்று அடித்துச் சொல்லி இருந்தோம். அதுதான் இங்கு நடந்திருக்கின்றது. இதனை அணுரகுமார தேர்தல் முடிவை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக சுட்டிக்காட்டி இருந்தார்.

3.எதிரணி: இன்று நமது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற சஜித் தலைமையிலான எதிரணி மிகவும் பலயீனமான நிலையில் இருக்கின்றது. இலங்கை அரசியலில் ராஜபக்ஸாக்களுடன் மல்லுக்கட்ட  சஜித்தால் எந்த வகையியிலும் முடியாது என்பதனையும் நாம் பல இடங்களில் சொல்லி இருக்கின்றோம். தனது கட்சியில் உள்ள கூட்டணிக் கட்சிகளை மட்டுமல்ல தனது அணியில் இருக்கின்ற உறுப்பினர்கள் கூட அவர் கட்டுப்பாட்டில் இல்லை. எனவேதான் அந்தக் கட்சியில் முதுகில் குத்தும் வேலை தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் பீல்ட் மர்ஷல் கூட தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள விருப்பத்தையும் இதற்காக தனக்குத் தலைவர் அங்கிகாரம் தேவை இல்லை என்றும் சொல்லி இருந்தார். இந்தத் தேர்தலில் டலஸூக்குப் பதில் சஜித் நின்றிருந்தால் டலஸ் பெற்ற வாக்குகளைக் கூட அவர் பெற்றிருக்க மாட்டார். அது 70 வரையில்தான் அமைந்திருக்கும் என்பது கட்டுரையாளன் கணக்கு.

4.சுயநலம்: ஜனாதிபதி தேர்தலில் ரணில் மிகப் பெரிய வெற்றியைப் பெற நாடாளுமன்றத்தில் இருக்கின்ற உறுப்பினர்களின் தன்னலம் முக்கிய காரணம். பதவியில் இருக்கின்ற இந்த அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதில்தான் தமது தனிப்பட்ட நலன்களையும் வருமானத்தையும்  பாதுகாத்தக் கொள்ள முடியும். அத்துடன் நெருக்கடியான நேரங்களில் வாய்க்கு அரிசி கிடைப்பதால் அவர்கள் அதற்காக ஆளும் தரப்புக்கு வாக்களிக்கின்றார்கள். இது ஒரு சம்பிதாயம் போல் தொடர்கின்றது. அரசியல் ரீதியில் பணத்தை அள்ளி வீசி காரியம் பார்க்க ராஜபக்ஸாக்கள் கரங்கள் மிகவும் வலுவாக இருக்கின்றது. இதனால் உறுப்பினர்களுக்குத் தீர்க்கமான சமயங்களில் வாய்க்கு அரிசி தாரளமாகக் கிடைக்கின்றது. இதனை டலஸூக்கு ஆதரவாக வாக்களிக்கின்றோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்களின் எண்ணிக்கையையும் அவருக்குக் கிடைத்த வாக்குகளையும் வைத்துப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

5.பிர நாடுகள்: அண்மைக்காலமாக இருந்து இலங்கை அரசியலில் அன்னிய நாடுகள் தலையீடு கட்டுக்கடங்காது போயுள்ளது. இதற்குக் காரணம் இலங்கையின் பலயீனமான வெளி நாட்டுக் கொள்கை, பொருளாதார நெருக்கடிக்குல் சிக்கி நிற்க்கின்ற எலியின் நிலையில் நாடு இருப்பதும் முக்கிய காரணங்களாகும். தேர்தல்கள் என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று சொல்லப்பட்டாலும் நிச்சயமாக மேற்சொன்ன காரணங்களினால் அது அப்படியாக இல்லை என்று நாம் அடித்துச் சொல்கின்றோம். இந்த ஜனாதிபத் தேர்தலில் ரணில் ராஜபக்ஸாக்களின் கையாள் என்று தெரிந்தாலும் அமெரிக்கா அவருக்கு ஆதரவான நிலைப்பட்டில் இருந்தது. இதே ராஜபக்ஸாக்களை அமெரிக்கா ஜனாநாயக விரோதிகளாகவும் பார்ப்பதும் தெரிந்ததே. அடுத்து இந்தியா  கூட இந்தத் தேர்தலில் எதிரணி வேட்பாளரை ஆதரிக்கவில்லை. அதற்குக்கு முக்கிய காரணம். அந்த அணி சார்பான வேட்பாளர் தாம் ஒரு சமவுடமை அரசாங்கத்தை இங்கு முதல் முறையாக அமைக்க இருகின்றோன் என்று தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாக சொல்லி இருந்தார். அத்துடன் அவர் சீனா அணிசார்பான வேட்பாளர் என்றுதான் அடையாலப்படுத்தப்பட்டும் வந்தார். இந்தப் பின்னணியில் அவரை இந்தியா ஆதரிக்க வாய்ப்பே கிடையாது. இந்தத் தேர்தலில் நாம் நடுநிலையாக செயல்பட்டோம் என்று இந்தியா அறிக்கை கூட விட்டது. ஆனால் அந்த அறிக்கை  உண்மையல்ல.

6.பட்சோந்திகள்: இந்த நாட்டில் இருக்கின்ற கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் கூட கொள்ளை கோட்பாடு கட்டுப்பாடுகள் என்பது மருந்துக்குக் கூடக் கிடையாது. எனவே தலைவர்களும் உறுப்பினர்களும் பகிரங்கமாகவே நம்பிக்கைத் துரோகம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கு நல்ல உதாரணம்தான் 20க்கு வாக்களிப்பதற்காக கட்சித் தலைவர்கள் குறிப்பாக ஹக்கீம், ரிஷாட் ஆளும் தரப்புக்கு தனது கட்சி ஆட்களை அனுப்பி வைத்தார்கள். இதனை அங்கு போனவர்கள் பகிரங்கமாகக் கூறியதுடன் மு.கா. தலலைவரை இது தொடர்ப்பில்  விவதத்துக்கு வருமாரு தற்போத அமைச்சர் ஹாபீஸ் நாசீர் பகிரங்கமாக ஹக்கீமுக்கு சவால் விட்டடிருந்ததும் தெரிந்ததே. அவர்களுக்கு ஒழுக்காற்று என்று தலைவர் தொண்டர்கள் முன் பரப்புரை செய்தாலும் இன்று வரை அது நடக்கவில்லை இந்த செய்திகளை நாம் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டுதான வருகின்றோம். அது எருமை மாட்டின் மேல் கொட்டும் மழையாகத்தான் இருக்கின்றது. நாமும் விடாமல் துரத்திக் கொண்டு வருகின்றோம். இதுதான் இலங்கை டீல் அரசியல். இந்தத் தேர்தலில் நிச்சயமாக அந்தக் கட்சிகளின் பல உறுப்பினர்கள் கட்சித் தீர்மானத்துக்கு எதிராகத்தான் வாக்குப் போட்டார்கள். தலைவர்கள் கூட என்ன செய்தார்கள் என்ற சந்தேகம் நமக்கு இருக்கின்றது. பணம் என்றால் பிணமும் வாய்திருக்கும் என்பதனை விட பிழைப்பதற்காகவே கட்சி வைத்திருப்பவர்கள் எப்படித்தான் கொள்கை கேட்பாடு என்ற நிற்க முடியும்.? அடுத்து சஜித்துக்கு பக்த்தில் நின்று அரசியல் வியூகம் வகுத்துக் கொண்டிருந்த மனோ காணேசன் தேர்தலுக்கு முந்திய நாள் இந்தத் தேர்தல்லில் ரணில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சொல்லி இருந்தார். இதன் பின்னணிகள் கூட நாம் முன்சொன்ன நிகழ்வுகளில் இருந்துதான் பார்க்க வேண்டி இருக்கின்றது. கூட்டணி கூட இந்த தேர்தலில் தீர்மானப்படி வாக்குப்போடவில்லை என்பது இப்போது உறுதியாகி இருக்கின்றது. எனவே டலஸூக்கு தமது சகாக்களே ஆப்பு வைத்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதிக்க முடியுமா?

எப்படியோ இன்று ரணில் ஜனாதிபதி. தனக்கு அதிகாரத்தை தந்தால் வித்தை காட்டுவேன் என்று கூறியவர் எதையுமே இதுவரை செய்யவில்லை. உலகத் தலைவர்கள் எல்லேரையும் தெரியும் என்று சொன்னவர் அவர் பதவியேற்றதும் என்னப்பா சுகமாக இருக்கின்றாயா என்று கூட ஒருவர் இது வரை கோட்கவில்லை. இப்போது சட்டப்படி ஜனாதிபதியாவும் வந்திருக்கின்றார். சில வேலைகளில் இப்போது வெளி நாட்டு வாழ்த்துக்கள் வந்தாலும் வரலாம். ஆனால் நமக்குத் தேவை வாழ்த்துக்கள் அல்ல டொலர்கள்தான். அதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது என்று நாம் நம்பவில்லை.

எரி பொருள், சமயல் எரிவாயு விவசாயிகளுக்கு பசளை, உணவு-பால்மா பள்ளிப் படிப்பு என்ற அடிப்படை பிரச்சினைகளுக்காவது உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும். குறைந்த பட்சம் இந்த விவகாரங்களுக்காவது ஏதாவது தீர்வை ஜனாதிபதியால் கொடுக்க முடியுமா? பிரதமராக இதுவரை இருந்தவரை ராஜபக்ஸ விசுவாசிகளும் டில்காரர்களும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி அதிகாரத்தில் வைத்திருக்கின்றார். இப்போது அவருக்கு மாமனார் ஜே.ஆரையும் விஞ்சிய அதிகாரத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றார்கள். அவருக்கு சில வேலை ஆண்களைப் பெண்களாக்கவும் பெண்களை ஆண்களாக்கவும் கூட இயலுமே என்னவோ தெரியாது. அடிக்கலாம் உதைக்கலாம் நொருக்கலாம் என்றுதான் இந்த அதிகாரங்களை அவர் பாவிக்கப் போகின்றார். அல்லது இருக்கின்ற இருண்டரை வருடங்களையும் நன்றிக் கடனுக்காக ராஜபக்ஸாக்களுக்கு விசுவாசமாக பதவியைப் பாவிக்கப் போகின்றாரா என்பதனைத்தான் பொருத்துப்  பார்க்க வேண்டும்.

எப்படியும் தனக்கு இருக்கின்ற இந்த ராஜபக்ஸாக்களின் விசுவாசத்தை அவர் அதிகாரத்தில் இருக்கும் வரை காட்டித்தான் ஆகவேண்டும். ஆனால் கள நிலவரம் மக்கள் உணர்வுகள் அதற்கு நேர் எதிராகத்தான் இருக்கின்றது. எனவே ரணிலுக்கு பதவி இலகுவாக இருக்கப் போவதில்லை. என்றாலும் அவர் எதையுமே கண்டு கொள்ளாத ஒரு மனிதனாக இருப்பதால் நெருக்கடிகள் மக்கள்;  துயரங்கள் போராட்டங்கள் எல்லாம்  அவருக்கு ஒரு பொருட்டாக இருக்கவும் மாட்டாது. பசி பட்ணி என்று வரும் போது நாட்டில் எந்த அனர்த்தங்களும் நடக்கவும் இடமிருக்கின்றது என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.

அன்னியச் செலாவானிகள் வருவதற்கான எந்த  ஏற்பாடுகளோ திட்டங்களோ அவரிடத்திலோ அவருக்குப் பின் புலத்திலுள்ளவர்களிடத்திலோ  இல்லை. பசில் போட்ட வரவு செலவுத் திட்டமும் சீரோவாகி நிற்கின்றது. புதிய வரிகள் நிச்சயம் வர இருக்கின்றது. சீனா தனது கடன்களை திரும்பப் பெற அழுத்தங்கள் கொடுக்கலாம். இந்தியா இதுவரை 3.8 பில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கி இருக்கின்றது. இதற்கு மேலும் உத்தரவாதம் இல்லாது கடன்களை இலங்கைக்கு வழங்கக் கூடாது என்று இந்தியாவிலுள்ள சில கட்சிகள் அரசுக்கு ஆலோசனைகளை முன்வைத்திருக்கின்றன. தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு ஓசிச் சாப்பாடு போடாது. சீனா மீதுள்ள அச்சத்தால் தான் இந்தியாவின் இந்தச் சலுகை என்பதுதான் யதாhத்தம்.

இடைக்கால அரசு அல்லது சர்வ கட்சி அரசு என்ற கோஷங்கள் ரணில் மொட்டுக் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதியானதால் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனாலும் எதிரணியில் இருக்கின்ற சிலர் புதிய அமைச்சரவையில் பதவியேற்காத் தயாராக இருக்கின்றார்கள் என்று இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற போது நமக்குத் தெரிய வருகின்றது. புதிய ஜனாதிபதியாக ரணிலை அதிகார கதிரையில் அமர்த்த்தியது மக்கள் புரட்சிக்கு ராஜபக்ஸாக்கள் கொடுத்த பதிலடியாகத்தான் நாம் பார்க்கின்றோம். ஏப்ரல் 9ம் நாள் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்வர்களுக்கு இழப்பீடுகள் என்ற விடயத்திக்கு ரணில் முன்னுரிமை வழங்குவது தெரிகின்றது.

இதனால் ரணிலின் வாக்குகள் 75ல் இருந்துதான் ஆரம்பமாகின என்று ஒரு மொட்டுக் கட்சி உறுப்பினர் பகிரங்கமாகச் சொல்லி இருந்தார். இது எரிக்கபட்ட வீடுகள் தொடர்பான எண்ணிக்கை. ரணில் தலமையிலான அரசாங்கம் ராஜபக்ஸாக்களின் பதவிக் காலத்தில் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும். அதனுடன் கூடவே அடக்கு முறைக்கும் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதனால் வீதிப் போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் ஹர்தத்hல்கள் என்று காட்சிகளைத் தான் நாம் பார்க்க வேண்டி இருக்குமோ என்னவே தெரியாது. முன்பு போராட்டகாரர்களுக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய ரணில் இப்போது அரச சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்களுக்குத் தண்டணை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். எப்படியோ மக்கள் புரட்சிக்கு ரணில் மூலம் ராஜபக்ஸாக்கள் பதிலடி கொடுத்திருக்கின்றார்கள் என்றும் ரணில் வெற்றியை நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

நன்றி:24.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

18 புதிய  அமைச்சர்கள் விபரம் 

Next Story

ரணில் தொடர்பில் விக்கிலீக்ஸ் சர்ச்சை