“நாம் இன்று தொடங்கி, ஒவ்வொரு வாரமும் ஒரு ஏவுகணை நகரத்தை வெளியிட்டால் கூட, இரண்டு ஆண்டுகளில் அது முடிவடையாது. அத்தனை ஏவுகணை தளங்கள் உள்ளன.”

மேற்கூறியவாறு குறிப்பிட்டு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழலில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணைகளை பதுக்கி வைத்துள்ள புதிய ரகசிய நிலத்தடி தளங்களை, இரான் சமீபத்தில் வெளிப்படுத்தியது.
கடந்த வாரம் அமெரிக்கா, ரகசிய தொழில் நுட்பம் மற்றும் சக்தி வாய்ந்த குண்டுகளைச் சுமந்து செல்லக் கூடிய திறன் கொண்ட ஆறு கூடுதல் போர் விமானங்களை, இரான் மற்றும் யேமன் நாடுகளை எளிதில் அணுகக் கூடிய ஒரு இராணுவ தளத்திற்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். பெயர் தெரிவிக்க விரும்பாத அவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இத்தகவலை வழங்கினார்கள்.
இதற்கு பதில் அளித்த இரான், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மிகப்பெரிய ராணுவ ஆற்றலை கொண்டிருப்பது, அவர்களை ‘கண்ணாடி அறையில்’ அமர்ந்துள்ளவர்களாக மாற்றுகிறது. எனவே அவர்கள் ‘மற்றவர்கள் மீது கற்களை எறியக் கூடாது’ என்று குறிப்பிட்டது.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு தெற்கே அமைந்துள்ள பிரித்தானியப் பிரதேசமான டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவத் தளத்தை தாக்கப்போவதாக இரான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த டியாகோ கார்சியா தீவின் கட்டுப்பாட்டை மொரீஷியஸிடம் திருப்பி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற தாக்குதலை மேற்கொள்ள முடியும் என இரான் இதற்கு முன் எப்போதும் கூறியதில்லை.
இந்த “ஏவுகணை நகரங்கள்” என்பவை என்ன? இரான், தற்போது இதுகுறித்த தகவலை பகிர்ந்து கொள்வதற்கான காரணம் என்ன? இது மத்திய கிழக்கில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளில் எத்தகைய பங்கு வகிக்கும்?

இரானின் ‘ஏவுகணை நகரங்கள்’ எவை?
“ஏவுகணை நகரங்கள்” என்பது இரானின் ராணுவப் படைப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையானது (IRGC) நிலத்திற்கு அடியே பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை தளங்களை குறிப்பதற்காக பயன்படுத்தும் சொல். இந்த தளங்கள் நாடு முழுவதும் பரந்த, ஆழமான மற்றும் ஒன்றோடொன்று சுரங்கங்கள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் மலைப்பிரதேசங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைந்துள்ளன.
அவை பாலிஸ்டிக் ஏவுகணைகள், க்ரூயிஸ் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற பிற முக்கிய ஆயுதங்களை சேமிக்க, தயாரிக்க மற்றும் ஏவுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) தளபதிகளின் கூற்றுப்படி, இந்த ஏவுகணை நகரங்கள் ஏவுகணை சேமிப்பு தளங்கள் மட்டுமல்ல, அவற்றில் சில தளங்கள், “ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்காக செயல்படும் தொழிற்சாலைகளாகும்.”
இந்த ஏவுகணை தளங்கள் அமைந்துள்ள துல்லியமான இடங்கள் தெரியவில்லை. அவற்றின் அமைவிடங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை.
ஐ.ஆர்.ஜி.சி வான்வழிப் படையின் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹஜிசாதே, இரான் அரசுக்குச் சொந்தமான ஐஆர்ஐபிக்கு (IRIB) அளித்த பேட்டியில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை டிரோன்கள் அந்த தளங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சியுடன் “ஏவுகணை நகரம்” தொடர்பான வீடியோவை வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோவில் காணப்படுவதை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை.
தற்போது இதனை வெளியிடுவதற்கான காரணமாக, “இரானுக்கு எதிரான எந்தவொரு விரோதச் செயலுக்கும்” பதிலடி அளிக்க தெஹ்ரான் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தும் என அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டது.
“பிராந்தியத்திலோ அல்லது இரானிய ஏவுகணைகளின் எல்லைக்குள்ளாகவோ இரான் தாக்கப்பட்டால், பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கப் படைகளை குறி வைப்பதில் எந்த விதமான வேறுபாடும் இருக்காது” என்று இரான் எச்சரித்துள்ளது.
ஏராளமான ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை சேமித்து வைத்துள்ள நிலத்தடி சுரங்கங்களின் படங்களை, ஐ.ஆர்.ஜி.சி. கடந்த பத்து ஆண்டுகளில், அவ்வப்போது வெளியிட்டு, அவற்றை “ரகசிய ஏவுகணை நகரங்கள்” என கூறி வருகிறது.

இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட தாக்குதல்களைத் தடுக்க இரான் முயல்கிறது.
சமீபத்தில் வெளியான காட்சிகளில் கெய்பர் ஷெகான், ஹஜ் காசிம், எமாத், செஜ்ஜில், காதர்-எச் மற்றும் பாவே போன்ற ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன.
2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தங்களால் தாக்க முடியும் என இரான் பெருமையுடன் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2024-ஆம் ஆண்டில் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியபோது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளில் எமாத் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இடம்பெற்றிருந்தன. இந்த தாக்குதலில் மத்திய இஸ்ரேலில் உள்ள நவதிம் விமானத் தளத்தில் சேதம் ஏற்பட்டது.
இராக், சிரியா மற்றும் ஜோர்டான் வழியாக இரானில் இருந்து இஸ்ரேலுக்கான குறைந்தபட்ச தூரம் சுமார் 1,000 கிலோ மீட்டராகும்.
2024 ஏப்ரலில் இரான் மேற்கொண்ட தாக்குதலின் போது, ஏவப்பட்ட ஏவுகணைகளில் 99 சதவிகிதம் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. அக்டோபரில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தவில்லை.
இருப்பினும், இரான் ஏவுகணைகள் எவ்வளவு தூரம் வரை தாக்கும் என்பது தொடர்பாகவும், அவற்றின் திறன் தொடர்பான சந்தேகங்களும் உள்ளன.
இதுபோன்ற சூழலில், டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை அடைய முடியும் எனச் சொல்லப்படும் சமீபத்திய கூற்று, ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
1970களின் முற்பகுதியில் இருந்து, அங்கு ஒரு பிரிட்டன்-அமெரிக்க ராணுவத் தளம் செயல்பட்டுவருகிறது. ஆனால் அந்த தளம் நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ளது. அது இரானில் இருந்து சுமார் 3,800 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த வாரம், தனது ஷாஹெட் 136பி ட்ரோன்கள் மூலம் 4,000 கிமீ தூரம் வரை தாக்க முடியும் என்று இரான் மீண்டும் தெரிவித்துள்ளது. இருப்பினும் அது நிரூபிக்கப்படவில்லை.
தற்போது 2,000 கிலோமீட்டருக்கு மேல் செல்லக்கூடிய ஏவுகணை இரானிடம் இல்லையெனத் தோன்றினாலும், கோட்பாட்டளவில் அந்தத் தீவை அடைய, கடற்படை வளங்களைப் பயன்படுத்துதல் அல்லது தற்போதுள்ள ராக்கெட் அமைப்புகளை மாற்றியமைத்தல் போன்ற பிற வழிகளும் உள்ளன.

டியாகோ கார்சியாவுக்கும் இரானுக்கும் இடைப்பட்ட தூரம்
மத்திய கிழக்கில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்காவின் ராணுவ துருப்புகள் உள்ளன. அமெரிக்கா அந்தப் பகுதியில் 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை தயார் நிலையில் வைத்திருக்கும்.
டியாகோ கார்சியா தீவில் அமெரிக்காவின் பி-2 ரகசிய குண்டுவீச்சுப் போர் விமானங்கள் இருப்பதை கீழே உள்ள செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இவை, யேமனில் ஹூதி ஆயுதக்குழுவினர் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
“இரான் அல்லது இரானால் ஆதரிக்கப்படும் குழுக்களால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பணியாளர்கள் மற்றும் நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், எங்கள் மக்களைப் பாதுகாக்க அமெரிக்கா உறுதியான நடவடிக்கை எடுக்கும்” என்று அமெரிக்க ராணுவத் தலையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டியாகோ கார்சியா தீவை எத்தனை பி-2 விமானங்கள் சென்றடைந்தன என்பதைப் பற்றி அமெரிக்கா தகவல் வழங்க மறுத்துள்ளது. அவர்களின் பயிற்சிகள் அல்லது செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் குறித்து தெரிவிக்க முடியாது என்றும் அது கூறியுள்ளது.
அமெரிக்க விமானப்படையில் சக்தி வாய்ந்த பி-2 வகை குண்டுவீச்சு விமானங்கள் மொத்தம் 20 மட்டுமே உள்ளன. எனவே, அவை மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன.
ஏவுகணை நகரங்களை இரான் தெரியப்படுத்தியதன் காரணம் என்ன ?
இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையிலான மூன்று முக்கிய பிரச்னைகளின் காரணமாக அதிகரித்துள்ள பதற்றத்தின் மத்தியில் இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இரான் ஆதரவு பெற்ற ஹூதி இயக்கத்தின் அச்சுறுத்தல், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் லெபனானில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா அமைப்பை பலவீனப்படுத்த இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் தாக்குதல்கள் தான் அந்த மூன்று பிரச்னைகள்.
இரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டுக்கு வராவிட்டால், ராணுவ தாக்குதல் மற்றும் இரண்டாம் நிலை வரி விதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமையன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது, கடந்த ஆண்டு இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிகழ்ந்த ராணுவ மோதலின் பின்னணியில் பார்க்கப்படுகின்றது. இரானால் தன்னைக் குறிவைக்கும் எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி அளிக்க முடியும் என்ற எச்சரிக்கையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, ஐ.ஆர்.ஜி.சியின் ஏவுகணை தளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரிகிறது.
இஸ்ரேல் மீது மூன்றாவது முறையாக தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக இரான் தொடர்ந்து உறுதியளித்து வந்துள்ளது.
ஆனால், அதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, இஸ்ரேலின் தாக்குதல்கள் இரானின் ஏவுகணை திறன்களை பாதித்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இரானின் திறன் குறித்தும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
மறுபுறம், அமெரிக்காவிடம் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்க்கும் திறன் தன்னிடம் உள்ளதாகவும், தாங்கள் இன்னும் வலிமையாக உள்ளதாகவும் தனது குடிமக்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறது இரான் அரசாங்கம்.
நிலத்துக்கு அடியில் ஏவுகணை நகரங்களை கட்டுவதன் நோக்கம், வான்வழி தாக்குதல்களுக்கெதிரான எதிர்ப்பு திறனையும், நீடித்து நிற்கும் திறனையும் அதிகரித்து, தாக்குதல்களைத் தடுக்கும் திறனைத் தொடர்ந்து பராமரிப்பதாகும். இத்தகைய ஏவுகணை நகரங்களை உருவாக்குவதன் மூலம், தனது தளங்கள் தாக்கப்பட்டாலும், திருப்பி தாக்கும் திறன் தனக்குள்ளதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இரான் தெரியப்படுத்த விரும்புகிறது.