யார் இந்த அபூ ஹிந்!

-நஜீப் பின் கபூர்-

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கட்டளைத் தளபதியாக அல்லது நெறியாளராக இருந்தவர் அபூ ஹிந் என சர்வதேச உள்ளூர் மட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அடுத்து இத் தாக்குதல் தொடர்ப்பில் பரவலாக உச்சரிக்கப்படும் மற்றுமோர் நாமம் சோனிக் சோனிக் இந்த இருவர் முகவரிகளையும், அவர்கள் யார் என்பதனை அறிந்து கொள்வதில் முழு உலகமுமே ஆவலுடன் இருக்கின்றது. அவர்களின் முகத்திரையைக் கிழித்தெரிய முற்படுகின்ற போது அதனால் வரும் ஆபத்துக்களையும் புரிந்து கொண்டுதான் நாம் இந்தக் கட்டுரையைத் தொடர வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் இன்றைய உலக அமைப்பு-செயல்பாடுகள் தொடர்பாகவும் சில தெளிவூட்டல்களை முதலில் மக்களுக்கு சொல்லி வைக்க வேண்டும்.

சமகால உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் படித்தவனாக இருந்தாலும் அரச்சுவடியே புரியாத பாமரனாக இருந்தாலும் அவன் தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்ற விடயத்தில் விரும்பியோ விரும்பாமலோ சற்று அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்வதை விட கண்டிப்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது என்று முதலில் சொல்ல வேண்டி இருக்கின்றது. அந்தவகையில் அனைத்துத் துறைகளிலும் வஞ்சகமும் ஏமாற்றும் நிறைந்த ஓர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மனிதனிடத்தில் காணப்படும் சிறியதோர் பலயீனத்தைப் பாவித்து அதில் பெரும் இலாபத்தை சம்பாதிக்க சுற்றி இருக்கும் ஒரு கூட்டம் எப்போதும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதனை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.

மதங்கள் மக்கள் மத்தியில் இன்றும் வலுவாக இருப்பதால் அதன் பேரால் குழுக்களை இயக்கங்களை உருவாக்கி பலர் பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே போன்று இனம் மொழியின் பேராலும்; இது நடந்து கொண்டிருக்கின்றது. அதற்கு அப்பால்  தேசத்தின் சமூகத்தின் பேரைச் சொல்லியும் இது நடக்கின்றது. அரசியல்வாதிகள் குடிகளைச் சுராண்டிக் கொண்டிருக்கின்றார்கள். அதிகாரிகளும் அவரவர் மட்டத்துக் ஏற்ப மக்களுக்கு துரோகம் செய்து பிழைக்கின்றார்கள். இதனால் நாடுகள் சீரழிகின்றன. நிருவாகமும் சீர்குழைகின்றது.

இவற்றை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய ஊடகங்கள் கூட இன்று பொருளாதார இலாபத்துக்காக-நலன்களுக்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்லி மக்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கின்றன. இதனை மத, இன அரசியலிலும் பிராந்திய உள்ளூர் செயல்பாடுகளிலும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இப்படியான நடவடிக்கைகளை நாம் தெளிவாகப் பார்க்கக் கூடிய ஒரு தேசமாக நமது நாடு இருக்கின்றது. போலியான தகவல்களை மக்கள் மயப்படுத்தி அது மக்கள் மத்தியில் எவ்வளவு காலத்துக்கு உயிர் வாழ்கின்றதோ அந்த கால எல்லைக்குள் அவர்கள் அதிகாரத்தில் இருந்து பிழைத்துக் கொள்கின்றார்கள்.

Who tells the truth: Moulana or Sallay? - Opinion | Daily Mirror

இந்த போலியான தகவல்களை மக்கள் புரிந்து கொண்ட பின்னர் புதிதாக இன்னும் பல கட்டுக் கதைகளைப் பரப்பி அதனை மக்கள் நம்புகின்ற இடை வெளிக்கிடையில் அவர்களது பிழைப்பு-வசூல் நடக்கின்றது. எனவே படித்தவனும் பாமரனும் தம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்ற வஞ்சனைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம். இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் எந்தளவுக்கு வஞ்சகம், உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தைப் பற்றித்தான் நாம் இந்த வாரமும் மேலும் சில செய்திகளைப் பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

நாம் சில வாரங்களுக்கு முன்னர் சனல் 4 வெளியிட்ட தகவல்கள் நியாயமானது என்று ஒரு தரப்பும் அது முற்றிலும் தவறானது என்று ஒரு குழுவும் எதிரும் புதிருமாக விவாதித்துக்கும் என்று சொல்லி இருந்தோம் இப்போது அது நடந்து கொண்டிருக்கின்து. இந்த சனல் 4 கதை வெளி வந்ததும், ஆளும் தரப்பிலுள்ள ராஜபக்ஸா விசிரிகள் இந்த சனல் 4 குழுமம் ராஜபக்ஸாக்களின் பரம்பரை எதிரிகள். அதனால்தான் அப்படி தகவல்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்று கருத்துச் சொல்லி இருந்தனர். பரம்பரை என்றால் அதற்கான வரை விளக்கணம் என்ன? எதனால் சனல் 4 குழுமத்துக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் இடையே இந்த பரம்பரை பகை தோன்றியது என்று அவர்கள் மக்களுக்கு விளக்க முன்வரவில்லை. ஏதும் மெதமூலன சொத்துப் பிரச்சினையோ…? இந்த பரம்பரை விரோத கதையை உச்சரிப்பதில் ராஜபக்ஸாக்களில் அரசியல் வாரிசு நாமல் முன்னணியில் இருக்கின்றார்.

அதே நேரம் இதற்கு முன்னர் இதே ராஜபக்ஸாக்களின் ஊழல் மோசடிகள் தொடர்பாக  ஆதாரங்களுடன் உலகில் மிகவும் செல்வாக்கான ஊடகங்களான நியூயோர்க் டைம்ஸ் மற்றும் இன்னும் பல பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலியா ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வந்தன. அவற்றைக்கூட ராஜபக்ஸாக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவை அனைத்தும் அபாண்டங்கள் என்றும் அந்த நிறுவனங்களுக்கு எதிராக நஸ்டஈடுகோரி வழக்குத் தாக்கல் செய்வதாக மஹிந்த ராஜபக்ஸாவே பகிரங்கமாக கூறி இருந்தார். இன்றுவரை அப்படி ஏதும் நடக்கவில்லை. இதிலிருந்து மக்கள் எதனை உணர்ந்து கொள்ள முடிகின்றது.?

Sri Lankan Lawmakers Target Reporters in Times Investigation - The New York Times

அதே போன்று சனல் 4 தகவல்கள் போலியாக இருந்தால் அதற்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பு பல பில்லியன்கள் நஸ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய உரிமை இருக்கின்றது. ஆனால் இந்த முறை அப்படி சட்ட நடவடிக்கை பற்றி ராஜபக்ஸா தரப்பில் இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற  நேரம் வரை எவரும் வாய்திறக்கவில்லை.  அது ஏன்.? இதிலிருந்து எதனை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.? அப்படிச் சொன்னாலும் அவர்கள் அதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். மேலும் ஆளும் மொட்டுத் தரப்பில் இருக்கின்ற ராஜபக்ஸ விசுவாசிகள், சனல் 4 கூறும் தகவல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகளைக் கடுமையாக நிராகரிக்கின்றார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டா மற்றும் நாமல் போன்றவர்கள் தாமும் சர்வதேச விசாரணைக்குத் தயார் என்று கூறி இருந்தார்கள். ஆனால் இது வெறும் கண்துடைப்பு.

இதனை மக்களும் சர்வதேசமும் உணர்ந்தும் புரிந்தும் வைத்திருக்கின்றது. இந்த ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கின்ற வரை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணையோ நடுநிலையான உள்நாட்டு விசாரணைக்கோ வாய்ப்புக் கிடையாது. நடக்க இருக்கின்ற தேர்தல்கள் கூட இந்த விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக முடியுமான மட்டும் காலதாமதமாகலாம் என்று நாம் நம்புகின்றோம். எனவே சனல் 4 இந்த நாட்டில் நடக்க இருக்கின்ற தேர்தலைக் கூட தள்ளிப் போட உதவி இருக்கலாம் என்று நாம் கணிக்க வேண்டி இருக்கின்றது. இது கனிந்த மாம்பழத்துக்குக் கல்லெறிந்த கதையாக அமைகின்றது. இதனால் தனக்கு நடாளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பான்மை வாக்குகளைத் தொடர்ந்தும் தக்காத்துக் கொள்ள வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு குறிப்பாக ரணில் மற்றும் ராஜபக்ஸாக்களுக்கு இருந்து வருகின்றது.

மேற்சொன்ன அரசியல் பின்னணியில் நாம் எமது தலைப்புப் பற்றி இப்போது பேசுவோம். இந்த தாக்குதல்களை நேரடியாக மேற்கொண்டவர்கள் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளே என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. அதனால் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள், அதிலும் எந்தத் தவறும் கிடையாது என்பது எமது வாதம். எல்லாச் சமூகங்களிலும் பல்வேறு கருத்து முரண்பாட்டாளர்கள்-செயல்பாட்டாளர்கள் கடும் போக்காளர்கள் இருப்பது போல ஐஎஸ்ஐஎஸ் சிந்தனையால் கவரப்பட்ட சில முஸ்லிம்கள் இங்கும் இருந்திருக்கின்றார்கள் என்பதும், அப்படிப்பட்டவர்கள் இன்னும் இருக்கலாம்- உருவாகலாம் என்ற ஆபத்தும் இருக்கின்றது. இது பற்றி முஸ்லிம் சமூகத் தலைமைத்துவங்கள் விளிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் நாம் பல முறை எச்சரித்திருக்கின்றோம். ஆனால் அது தொடர்பான தேடல்களை முஸ்லிம் சமூகம் எந்தளவு மேற்கொண்டது என்பதும் கேள்விக்குறியே.

தான் மட்டக்களப்புச் சிறைச்சாலையில் இருக்கின்ற போது மதத்தின் பேரால் மரணிப்பதற்கு தயாராக இருந்த பலரை சந்தித்ததாக பிள்ளையான் அண்மையில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் கூறி இருந்தார். அந்த சந்திப்பின் போது அவர் மிகத் தெளிவான சில கருத்துக்களை அங்கு முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களைப் பாவித்து குறிப்பிட்ட ஒரு தரப்பினரை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்காக பிள்ளையான் அவர்களின் உதவிகளைப் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகமும், அதற்கு ஆதாரமாக  அன்சீர் என்னும் ஆசாட் மௌலானாவின் சனல் 4 வாக்குமூலம் இப்போது அமைந்திருக்கின்றது.

அவர் சொல்கின்ற படி இந்தக் கதைகள் சாத்தியமாக இருந்தாலும், அந்த நடவடிக்கைகளில் பிள்ளையானை விட மௌலானாவின் பங்களிப்புத்தான் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்பது நமது வாதம். காரணம் அப்போது பிள்ளையான் சிறையில் இருக்க இது தொடர்பான சந்திப்புக்களை மௌலானாவே மேற்கொண்டிருந்தார் என்பது அவரது வாக்குமூலத்தில் இருந்தே தெளிவாகின்றது. இதனை நாம் இதற்கு முன்னரும் சொல்லி இருந்தோம். தனது பாதுகாப்புக்காக இப்போது அரசியல் தஞ்சம் கோரும் மௌலானா ஒட்டு மொத்தமாக இதனை இப்போது பிள்ளையான் தலையில் கட்டிவிடப் பார்க்கின்றார் என்துதான் நமது கணிப்பு.

Explosive Whistleblower Allegations Link Sri Lankan Officials to 2019 Easter Sunday Bombings: Times Newspaper

இப்போது இந்தத் தாக்குதலின் சூத்திரதாரி என்று பேசப்படுகின்ற சர்ச்சைக் குறிய அபூ ஹிந் யாரென்ற கேள்விக்கு பதில் தேடுகின்ற போது அவர் தான் மதத்தின் பேரால் மரணிக்கத் தயாராக இருப்பதாக பிள்ளையான் அடையாளப்படுத்துகின்ற இந்த சஹ்ரான் அணியைத் தமது பிடிக்குள் கொண்டு வந்திருக்கின்றார்கள். பின்னர் சஹ்ரான் தரப்பை உள்நாட்டு அரசியல் தேவைக்காக வழிநடத்த இந்த அபூ ஹிந் என்ற நாமத்தை சூத்திரதாரி பாவித்திருக்க வேண்டும். அவர்தான் மதத்தின் பேரால் மரணிக்க இருந்தவர்களை ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

இந்த அபூ ஹிந்தின் தொலைபேசி அழைப்புக்கள் வருகின்ற போது தனது மனைவி பக்கத்தில் இருந்தால் கூட சஹ்ரான் தள்ளிப் போய்த்தான்; அதற்குப் பதில் கொடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தார் என்று சஹ்ரான் மனைவி ஹாதியா தனது வாக்குமூலத்தில் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார். இந்த இடத்தில்தான் தற்போது உளவுப் பிரிவின் பொறுப்பாளராக இருக்கின்ற சுரேஸ் சாலேக்கும் இந்த அபூ ஹிந்துக்கும் ஒரு முடிச்சு விழுகின்றது. சுரேஸ் சாலே மலே இனத்தவராக இருப்பதால் அவருக்கு தமிழ் மொழியில் பாரிச்சியமும் முஸ்லிம்களின் செயல்பாடுகள் தொடர்பாக நல்ல புரிதலும் இருக்கின்றது.

Sri Lanka bombers linked to Isis as row over security failings grows | Financial Times

இதற்கிடையில் இந்த சாலேக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கும் மிகவும் நெருக்கமான உறவுகள் இருக்கின்றது என்பது உலகறிந்த உண்மை. தற்போத ஜனாதிபதி ரணில் இவ்வளவு குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து சுரேஸ் சாலேயை அந்தப் பதவியில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கும் ரணில் ராஜபக்ஸாக்களின் பிடியில் இருந்துதான் அவர் தீர்மானங்களை எடுக்கின்றார் என்பதற்கு இது மிகச் சிறந்த சான்று என்று குறிப்பிட முடியும்.

இந்த அபூ ஹிந்தான் சஹ்ரான் அணியை நெறிப்படுத்தி அரசியல் தேவைகளை இங்கு நிறைவேற்றி இருக்கின்றார். மேலும் இந்த ஆபூ ஹிந் கட்டளைப்படிதான் சஹ்ரான் அணி காரியம் பார்த்திருக்கின்றது. அபூ ஹிந்தான் கட்டளைத் தளபதியாகவும் நடித்திருக்கின்றார் என்று எடுத்துக் கொள்ள முடிகின்றது. இந்த இடத்தில் செல்வாக்கு மிக்க சர்வதேச உளவுத்துறையும் புகுந்து விளையாடி இருக்கின்றது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளின் படி கட்டளையை நிறைவு செய்வது மட்டும்தான் ஐஎஸ்ஐஎஸ் நேசர்கள் பணியாக இருக்கும். அவர்கள் இது ஏன் என்று கேள்வி கேட்கமாட்டார்கள். சஹ்ரானுக்கு தான் சார்ந்த சமயத்துறையில் அறிவு இருந்தாலும் பூகோள மற்றும் பிராந்திய அரசியல் மற்றும் உளவுத்துறை செயல்பாடுகள் தொடர்ப்பில் அவனுக்கும் அவனது அணியினருக்கும் தெளிவு இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

The missed warnings: How Sri Lankan security forces were first told of the threat on April 4 | Daily Mail Online

எனவேதான் அவர்கள் நூலில் ஆடுக்கின்ற பொம்மைகளைப் போல் சமயத்தின் பேரால் இந்த அக்கிரமங்களைப் பண்ணி இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் பெரும் தலை குனிவை இன்று ஏற்படுத்தி இருக்கின்றார்கள். குண்டுத் தாக்குதலுக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இந்தியாவில் இருந்தும் மலேசியாவில் இருந்தும் சஹ்ரான் தரப்பு தொடர்புகளைப் பேனி வந்திருக்கின்றார். நாம் மேற்குறிப்பிட்ட இந்த சுரோஸ் சாலே மலேசியாவிலும் இந்தியாவிலும் சில காலம் இருந்திருக்கின்றார் என்று விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.

இவ்வாறு உலகில்  அறிவியல் மற்றும் தொழிநுட்ப ரீதியில் முதன்மை இடத்தில் இருக்கும் ஒரு தலைசிறந்த உளவு அமைப்பின் ஒத்துழைப்பும் தாக்குதலுக்குக் கிடைத்திருக்க வேண்டும். இதுபற்றிய மேலதிக விளக்கங்களை வாசகர்கள் பிரிதொரு இடத்தில் பார்க்க முடியும். எனவே இந்த அபூ ஹிந் என்பது ஒரு மாயை கற்பனை என்பது இப்போது வாசகர்களுக்கப் புரிந்திருக்க வேண்டும். அபூ ஹிந்தின் பேரில் செயல்பட்டிருப்பவர் யார் என்பது இப்போது சிறுபிள்ளை கூட புரிந்து கொள்ளக் கூடியதே.

இலங்கை பொலிசை அரசியல் பிடியிலிருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பில் தலைவர் அஜித் தர்மபல, சுரேஸ் சாலே இந்தியாவில் இருக்கும் போது பாவித்த பெயர்தான்  இந்த அபூ ஹிந் என்று அடித்துக் கூறுகின்றார். இவர் இந்தத் தகவல்களை ஜெனிவாவில் தற்போது நடக்கும் மனித உரிமைகள் அமர்வில் போய் வாக்குமூலம் கொடுக்கின்ற போது தன்னிடம் இருக்கின்ற ஆவணங்கள் மூலம் இந்த அபூ ஹிந் பற்றிய தகவல்களை அங்கும் சொல்லி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

சோனிக் சோனிக் குழப்பம்!

They took revenge after I stopped Mahinda Rajapaksa's wife Shiranthi Rajapaksa's mother's vehicle line so I fled to England with my Family - Former OIC Ajith Dharmapala - Lankan.org

ஈஸ்டர் தாக்தல் தொடர்பாக பேசப்படுகின்ற மற்றுமொரு பெயர் சோனிக் சோனிக். இவர்தான் தாக்குதலுக்குப் பின்னர் மாத்தளை-இரத்தோட்டை சின்ன சஹ்ரானைத் தொடர்பு கொண்டு மலேசிய செயல்படும் ஐஎஸ்ஐஎஸ்க்கு தாக்குதலுக்கான உரிமையை ஏற்குமாறு கேட்ட எஸ்.ஐ. பண்டார. உளவுத்துறையில் பணியாற்றும் அவருக்கு ஏன் இந்த வேலை? இந்த இடத்தில்தான் தாக்குதலில் இலங்கை உளவுத்துறை பங்களிப்பு உறுதியாகின்றது.

ஆனால் அமெரிக்க எஸ்பிஐ உளவுப் தகவல்படி இந்த சோனிக் சோனிக் என்பவர் எஸ்.ஐ. பண்டார என்பவர் அல்ல, எஸ்பிஐ.யில் பணியாற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் பனவலகே மேனக்க மதுசங்க. இவர் தற்போதும் பணியில் இருக்கின்றார். இந்த புதிய தகவல்களைத் தருபவர் சிரிலால் பிரியந்த. இதனைக் கடுமையாக எதிர்க்கும் அஜித் தர்மப்பால  கவனத்தை திசை திருப்புவதற்காக சிலர் காசுக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருகின்றார்கள் என்று குற்றம் சட்டுகின்றார்.

சோனிக் சோனிக் என்பவர் எஸ்.ஐ.பண்டார அவரது புகைப்படத்தையும் தான் உரிய இடங்களில் சமர்ப்பித்திருப்பதாக அஜித் தர்மபால உறுதியாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் எஸ்.ஐ.பண்டாரவைக் கைது செய்து விசாரிக்க முட்டபட்ட போது அவர் மீதான விசாரணையை நிலந்த ஜயவர்தன என்ற உயர்மட்ட பொலிஸ் அதிகாரி தலையிட்டு உடனடியாக நிறுத்துமாறு கோட்டதுடன், இந்த விசாரணை நாட்டுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்றும் எச்சரித்திருப்பதாகவும் அஜித் தர்மபால தனது முறைப்பட்டில் குறிப்பிட்டிருக்கின்றார். இது எதனைக் காட்டுகின்றதது?

நன்றி: 01.10.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

வாராந்த அரசியல்: நன்றி 24.09.2023 ஞாயிறு தினக்குரல்

Next Story

மொசாட்: கண்டம் தாண்டி ஹிட்லரின் ரகசிய  படை தலைவரை பிடித்தது எப்படி?