யாருக்காக ரணில்                  பிரதமராகின்றார்!

நஜீப் பின் கபூர்

கடந்த வியாழக்கிழமை மாலை ரணில் விக்கிரமசிங்ஹ பிரதமராகப் பதிவியேற்றுக் கொண்டார். ஆனால் நாம் இந்த நாட்டில் ரணில் பிரதமராக வர வாய்ப்பே கிடையாது என்று தொடர்ந்து சொல்லி வந்ததும் நமக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது.

அப்படியானால் எப்படி மனிதன் பிரதமராக வந்தார் என்ற கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டிய தர்மீகப் பொறுப்பும் நமக்கு இருக்கின்றது. நாம் அரசியலை விஞ்ஞான ரீதியில் பார்த்த கணக்குப்படிதான் ரணில் பிரதமராக வர வாய்ப்பே இல்லை என்ற வாதம். இன்றும் கூட அந்த நிலையில் எம்மைப் பொறுத்தவரை மாற்றங்கள் கிடையாது. ஆனால் ரணில் இன்று பிரதமர்.

இந்த நாட்டில் ஏன் உலகிலே ஒரு ஆசனத்தை வைத்திருக்கின்ற ஒருவர் எங்காவது பிரதமராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றாரா என்று தேடிப் பார்த்தால் அப்படியான ஒரு பதிவைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த சாதனையை ரணில் படைத்ருக்கின்றார்.

இது எப்படிச் சாத்தியம் என்று பார்ப்போம். நல்லாட்சி தோற்றுப் போனதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உள்ளிருந்து ரணில் மஹிந்த ராஜபக்ஸாக்கள் உளவாளியாக செயலாற்றியமை. இதனை நாம் அந்த நாட்களிலும் சொல்லி இருக்கின்றோம்.

ராஜபக்ஸாக்கள் எப்படி நாட்டில் குடும்ப ஆட்சியை முன்னெடுத்தார்களோ அதே போன்று ரணிலும் கட்சியில் ஒரு சார்வாதிகாரப் போக்கையே முன்னெடுத்து வந்தார். ஐதேக. செயற்குழு உறுப்பினர்களில் கனிசமானவர்களை அவர் தன்னிஷ்டத்துக்குத் தெரிவு செய்து கொள்ளும்  உரிமையை கட்சி யாப்பு அவருக்கு வழங்கி இருந்தது.

தனது நெருங்கிய உறவினரான ருவன் விஜேவர்தனாவை கட்சியின் பிரதித் தலைவராக நியமனம் செய்திருந்தார். இந்தத் தான்தோன்றித்தன அரசியலால் அவர் கடைசியாக நடந்த தேர்தலில் மக்களால் தூக்கி குப்பையில் வீசப்பட்டிருந்தார். தேசியப் பட்டிலில் முதலிடத்தில் ஜோன் அமரத்துங்கவின் பெயரே இருந்தது. அவருக்குப் போக வேண்டிய உறுப்புரிமையைத்தான் இன்று ரணில் வைத்திருக்கின்றார்.

ஆனால் இதே ரணில்தான் தேர்தலில் போட்டி போட்டுத் தோற்றுப் போனவர்கள் ஒரு போதும் தனது கட்சியில் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட மாட்டார்கள் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

ஆனால் என்ன நடந்தது. காலம் தாழ்த்தி அவர் நாடாளுமன்றத்துக்கு தேசிய பட்டியலில் வந்து இன்று பிரதமராகவும் இருக்கின்றார். இப்படி எத்தனையோ விடயங்களில் ரணில் நமது அரசியலில் ஒரு நயவஞ்சகக்காரர் மேசடிக்காரர் அரசியல் குற்றிவாளி ஊழல் பேர்வளி என்பது நமது கருத்து.

ஐதேக.வில் தனக்கு நெருக்கடிகள் வந்த போதெல்லாம் மஹிந்தவே அவரது தலைமைத்துவத்தையும், சிரிகொத்தவையும் பாதுகாத்துக் கொடுத்தார். நல்லாட்சி காலத்தில் மட்டுமல்லாது ராஜபக்ஸா ஆட்சிக் காலத்திலும் அவருக்கு விஷேட வரப்பிரசாதங்கள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

காரணம் அவர்  இரு தோனிகளில் வெற்றிகரமாக பயணம் செய்யக் கூடியவர் என்பதால். அவரை பெரும் அரசியல் ராஜதந்திரி என்று பேசுகின்ற ஒரு சின்னக் கூட்டம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் தற்போதய பொருளாதார நெருக்கடியை அவரால் தீர்க்க முடியும் என்று எவராவது எண்ணிக் கொண்டிருந்தால் அந்தக் கனவுக்குக் காலம் விரைவில் பதிலை வழங்கும்.

அப்படியானால் இப்படிப்பட்டவருக்கு ஏன் ஜனாதிபதி பிரதமர் பதவி கொடுத்தார் என்ற கேள்வி எழமுடியும். யதார்த்தத்தின் படி இலங்கை அரசியலில் குப்பபையில் வீசப்பட்ட ஒரு மனிதனுக்கு உயர் பதவி வழங்கி ஜனாதிபதி ஜீ.ஆர். கௌரவித்திருக்கின்றார்.

ஆனால் முழு நாடும் ஜனாதிபதி ரணிலை பிரதமராக்கியதை வன்மையாக எதிர்த்திருப்பதுடன் அதற்கு எதிரான போராட்டத்தையும் பிரகடணம் செய்திருக்கின்றார்கள். அனைத்து சமயத் தலைவர்கள், கோ ஹோம் கோட்டா போராட்டக்காரர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஒண்றியம், ஒன்றிணைக்கப்பட்ட தொழிற் சங்கங்கள், அனைத்த வெகுஜன இயக்கங்கள். அரசியல் கட்சிகள்  என்பன இந் நியமனத்தை எதிர்க்கின்றன.

சிறிய ஒரு காலத்துக்காவது ரணிலைப் பிரதமராக வைத்து நாட்டிலிருந்து பாதுகாப்பாக ராஜபக்ஸா உடமைகளுடன் வெளியேறுவதற்கும். தாம் நாட்டில் செய்த தில்லுமுள்ள அரசியல் நடவடிக்கைகளுக்கான தடயங்களை அழித்துவிடுவதற்கும், தனக்குத் தேவையானவர்களை நாட்டில் இருந்து தப்பி ஓடுவதற்கான ஏற்பாடுதான் ரணில்  நியமனம்தான்.

மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஜனாதிபதியின் இந்த நியமனம் சமூகத்தால் அங்கிகரிக்கப்படும் என்று நாம் கருதவில்லை. நிச்சயம் இதிலும் ஜனாதிபதி சித்தியடைய வாய்ப்பில்லை.

தனது கட்சி உறுப்பினர்கள் குறைந்தது ஐவருக்கு தேசிய பட்டியல் உறுப்புரிமையை ரணில் ஜனாதிபதியிடத்தில் கோரி இருக்கின்றார். அந்த இடத்துக்கு

அகில விராஜ்,

ரங்கே பண்டார,

வஜிர அபேவர்தன,

ருவன் விஜேவர்தன,

தயாகமகே

போன்றவாகள் உள்வாங்கி  அவர்களை அமைச்சர்களாக்கவும் இடமிருக்கின்றது. பதவி துறப்பவர்களுக்கும் டீல் ஒழுங்குகள் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

சஜித் அணியில் இருபது பேர் வர இருப்பதாகவும் கதை விடப்படுகின்றது? நம்மைப் பொறுதத் வரை இந்த நியமனம், நெருக்கடிக்கான தீர்வு காலத்தை மேலும் பின் போடும்  ஒரு வீன் செயல்.

ரணிலின் நாடாளுமன்ற உறுப்புரிமையே சட்டத்துககு முரனானது என்று நாகாநந்த என்பவரது ஒரு வழக்கும் இருக்கின்றது. (2021.07.13) ஆனால் அது இன்றுவரை விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை

நன்றி: 15.05.202 ஞாயிறு தினக்குரல்

Previous Story

விலைபோன ரணில்: க்கு ஆதரவு வழங்க முடியாது வீ. இராதாகிருஷ்ணன்

Next Story

காலைவாரிய மைத்திரி: கடுப்பில் ரணில்!