யாரிந்த வசந்த முதலிகே

-நஜீப் பின் கபூர்-

இன்று நமது நாட்டில் அனைவரும் உச்சரிக்கின்ற ஒரு நாமம்தான் வசந்த முதலிகே. ஒடுக்கப்பட்ட பொது மக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு ஹீரோ. அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு துரோகி அல்லது பயங்கரவாதி என்ற நிலை. எப்படியோ இன்று உலக நாடுகளும் அமைப்புக்களும் கூட இந்த வசந்த முதலிகேயைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றன-அவருக்காகக் குரல் கொடுக்கின்றன.

சமகால அரசியல் நெருக்கடியில் எவரும் மறக்க முடியாத ஒரு பாத்திரம்தான் இந்த வசந்த முதலிகே. இந்த நாட்டில் செல்வாக்கு மிக்க ஜனாதிபதி கோட்டா பிரதமர் மஹிந்த  மற்றும் நிதி அமைச்சர் பசில் ஆகியோரை தமது பதவிகளில் இருந்து விரட்டியடித்ததில் இவர் பங்கு அளப்பரியது-முதன்மையானது என்று சொன்னால் அதற்கு மாற்றுக் கருத்தக்கள் இருக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றித் தெரிந்து கொள்வதில் வாசகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம். அதற்கு முன்னர் இன்றைய அரசியல் களம் பற்றி சில குறிப்புக்களை முதலில் பார்ப்போம்.

மக்கள் போராட்டங்களுக்கு பயந்து நாடு நாடாகத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டா மீண்டும் நாட்டுக்கு வருவது பற்றி இப்போது பரவலாகப் பேசப்படுகின்றது. அது பசில் காட்டும் பூச்சாண்டி வேலை என்றும் ஒரு கதையும் இருக்கின்றது. அத்துடன் அவருக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயறச்சிகளும் நடக்கின்றன.

அதற்காக தனது பதவியை விட்டுக் கொடுக்க அரம்பே பொல என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தாயராகவும் இருக்கின்றார். இந்த வருகை மற்றும் பதவியேற்பு விடயத்தில் ஜனாதிபதி ரணில் விருப்புடன் இல்லை என்றும் தெரிகின்றது. அவர் உள்ளே வந்தால் தனக்குத் தலைவலியாக அமையும் என்பது அவர் கணக்கு.

ஜனாதிபதியின் சர்வ கட்சி அரசு என்ற விடயமும் வெற்றிபெறவில்லை என்று தெரிகின்றது. எனவே  சஜித் அணியில் இருந்து மேலும் சிலரை பிடுங்கி எடுத்து அதற்கு தேசிய அரசு என்று பெயர் சூட்டும் முயற்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றது.

தனது கட்சியிலோ கூட்டணியிலோ எவரும் ஆளும் தரப்புக்கு அமைச்சுப் பதவிகளுக்காக போக மாட்டார்கள் என்று சஜித் கூறிக் கொண்டிருந்தாலும் பலர் பதவிகளுக்காக பல்டிக்குத் தயார் நிலையில் இருக்கின்றார்கள் என்பதனை எம்மைப் போன்று  சஜித் தெரிந்துதான் வைத்திருக்கின்றார்.

பல்டிக்காரர்கள் குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்காவது ரணிலும் இந்த அரசும் எப்படியும் அதிகாரித்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது அவர்களது நம்பிக்கை.

புதிய அமைச்சர்கள் நியமன விடயத்தில் ஆளும் மொட்டுக் கட்சியின் பாரிய  தொந்தரவுகளுக்கு ஜனாதிபதி ரணில் ஆளாகி வருகின்றார் என்பதும் ஆளும் தரப்பு வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. இதற்கிடையில்  இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை அரசு வருகின்ற 30ம் திகதி   சமர்ப்பிக்க இருக்கின்றது. அதிலும் மக்களுக்கு நிறையவே சுமைகள் வரும்.

புதிய ஜனாதிபதி ரணில் வரவால் சொன்னது போல எந்த நாடும் அவருக்கு உதவுவதாகவும் தெரியவில்லை. அதனை ஜனாதிபதி ரணில் கூட பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார். தற்போதய அரசும் ரில்லியன் கணக்கில் பணத்தை அச்சடித்துக் குவித்து வருகின்றது. இதனால் பணவீக்கம் மேலும் உயரும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவை அதிகாரிகள் ஏமாற்றிவிட்டார்கள் என்று அவரது மூத்த சகோதரர் மஹிந்த சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாக கூறி இருக்கின்றார். இதனால்தான் நாடு இந்தளவு நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வந்திருக்கின்றது என்பது அவர் கருத்தாக இருக்கின்றது.

இதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கும் நாட்டில் எந்தத் தேர்தலும் கிடையாது என்று ஜனாதிபதி ரணிலே பகிரங்கமாக அறிவித்து விட்டார். அவர் பதிவியேற்ற போதே இப்படி ஒரு முடிவை  எடுப்பார் என்று நாம் சொல்லி இருந்தோம். ஆளும் தரப்பில் இருக்கின்ற  மொட்டுக் கட்சி உறுப்பினர்களும் தற்போதய நிலையில் தேர்தலுக்குப் போவதை விரும்ப மாட்டார்கள்.

இரண்டு வருடங்களுக்கு என்ன தனது ஆயுல் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க முடியுமாக இருந்தால் ரணில் தேர்தல் வரைபடத்தை தீயில் போட்டுக் கொழுத்தவும் தயங்க மாட்டார் என்பதும் நமது கருத்து. உள்ளாட்சித் தேர்தல் மாகாணசபைத் தேர்தல் புதிய அரசியல் யாப்பு என்று எதுவுமே ரணில் பதவிக் காலத்தில் நடப்பதற்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

அதே போன்றுதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் ஏதுவுமே நல்ல காரியங்கள் நடக்க மாட்டது என்பதும் நமது கருத்து. இந்த வியடத்தில் தமிழ் தரப்புக்கள் சோர்வடைந்து நிற்க்கின்றன. அல்லது ஏமாந்து-கையாலாகதவர்களாக இருக்கின்றார்கள். இந்தியா கூட வாய்திறக்காமல் இருப்பது ஆளும் தரப்புக்கு சாதகமான நிலை.

தமிழ் அரசியல் தலைமைகள் தெற்க்கில் நடக்கின்ற அரசியல் நாடகங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் காட்டுக்கின்ற ஆர்வத்தில் ஒரு சதவீதத்தையேனும் தமிழ் மக்களின் அரசியல் உரிமை விடயங்களில் இன்று செலுத்துவதில்லை என்பது எமது அவதானம்.

இராஜதந்திர ரீதியில் இந்தியாவை வைத்து காய் நகர்த இது நல்ல சந்தர்ப்பம், ஆனால் அவர்கள் ஏனோ இது பற்றிக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றார்கள் என்றுதான் எண்ணத் தோற்றுக்கின்றது.

மோடி ஈழத் தமிழர் விடயத்தில்  ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார். எனவே வடக்கு கிழக்கில் இருக்கின்ற சிவில் சமூகங்களாவது இது விடயத்தில் அழுத்தங்கள் கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்று நாம் நினைக்கின்றோம். அந்த விவகாரங்கள் அப்படி இருக்க,

தொடர்ந்து வருகின்ற காலங்கள் நாட்டில் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மேலும் மேலும் அதிகரித்து மக்கள் புதிய புதிய அனுபவங்களை-சோதனைகளை நுகரும் நிலை விரைவில் வரும். இதனால் வருகின்ற மக்கள் எதிர்ப்பை சமாளிக்க இப்போதே ஜனாதிபதியும் ஆளும் தரப்பினரும் அடக்கு முறைகளை நோக்கி நமது நகர்வுகளை மேற்கொள்வதும் தெளிவாகத் தெரிகின்றது.

இப்போது நமது ஹீரோவின் கதைக்கு வருவோம். அதற்கு முன்னர் ஒரு குட்டிக் காதல் கதையையும் சொல்ல வேண்டி இருக்கின்றது. தெற்கு அம்பாந்தோட்டை மாவட்ட எல்லை அருகில் மொனராகல மாவட்டத்தின் கடைக் கோடியில் அமைந்திருக்கின்ற தனமல்வில என்ற இடத்திலிருந்து புகழ்பெற்ற மஹியங்னை விகாரைக்கு (146கி.மீ) ஒரு பொசன் போயா தினத்தில் யாத்திரிகர்கள் கூட்டமொன்று வருகின்றது.

அந்த வழிப் பயணத்தில் அதிலிருந்தவர்கள் வேடுவர் கிராமத்தை பார்க்கப் போகின்றார்கள். அந்தப் பயணத்தில்தான் தனமல்வில முதலிகே என்ற இளைஞனுக்கு களுமெனிக்கே என்ற வேடுவப் பெண் கண்ணில் படுகின்றாள். அதன் பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர்கின்றது.

முதலிகே சாதரண சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தச் சந்திப்பு சட்ட ரீதியான திருமணத்தில் போய் முடிவடைய, இருவருக்கும் மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் கிடைக்கின்றன.

பிள்ளைகள் சிறு வயதாக இருக்கும் போதே  தந்தை இறந்து போக, பிள்ளைகளை வளர்த்தெடுக்கின்ற பொறுப்பு களு மொனிக்காவின் தலையில் விழுகின்றது.

இதற்காக வேடுவர் கிராமத்தைப் பார்க்க  வருகின்ற உல்லாசப் பிரயாணிகளிடத்தில் தன் கைப்பட தயாரித்த மாலைகள் மற்றும் கலைப் பொருட்களை விற்றுத்தான் அவள் நான்கு பிள்ளைகளையும் வளர்த் தெடுத்திருக்கின்றாள். சில சமயங்களில் முறுங்கை மற்றும் மரவள்ளி இலைகளை மட்டும் சமைத்துப் பிள்ளைகளின் பசி போக்கி இருக்கின்றாள்.

துவக்க காலத்தில் தம்பானையில் அமைந்திருக்கின்ற வித்தியாலயத்திலும் பின்னர் கரந்தகொல்ல வித்தியாலயத்திலும் (தற்போது தேசிய பாடசாலை) அதன் பின்னர் மஹியங்கனை தேசிய பாடசாலையிலும் பிள்ளைகள் உயர் கல்வியைத் தொடர களுமெனிக்கே பட்ட துயரங்கள் ஏராளம்.

அதன் விளைவாக மூத்தவன் கொழும்பு ஜெயவர்தன பல்கலைக்கழகத்திலும் இளையவன் அதாவது நமது ஹீரோ, வசந்த முதலிகே மிகிந்தலையிலுள்ள இராசரட்டை பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகின்றார்கள்.

அங்கு சமூக விஞ்ஞானத்துறைக்குத் தெரிவான வசந்த செல்வாக்கு மிக்க ‘அந்தரே’ பல்கலைக்கழக மாணவ பேரவையின் அழைப்பாளி என்ற உயர் பதவிக்கு தெரிவாகின்றார். வசந்த முதலிகேயை பல்கலைக்கழக மாணவர்கள் (‘டெடி’) தந்தை என்றுதான் அழைக்கின்றார்கள்.

1978ல் ஜே.ஆரின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக அமைக்கபட்ட இந்த ஒன்றிணைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவ அமைப்பான (70 வரையிலான பல்கலைக்கழக மாணவ அமைப்புக்களின் ஒண்றியம்) ‘அந்தரே’யின் செல்வாக்கு மிக்க மாணவ தலைவர்களில் ஒருவராக பலங்கொடை நஸ்மி செயல்பட்டு வந்திருக்கின்றார்.

அப்போது ஆசியாவிலேயே செல்வாக்கு மிக்க மாணவ தலைவர் என்று அவர் அறியப்பட்டிருந்தார். 1988-1989 களில் நடந்த ஜேவிபி. கிளர்ச்சியின் போது அவர் அரசு படைகளினால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவரும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இன்று வரை அவரது உடல் கூட கண்டறியப்படவில்லை.

அந்த நஸ்மிக்குப் பின்னர் தற்போது ஜனரஞ்சகமான ‘அந்தரே’ தலைவராக வேடுவ சமூகத்தில் இருந்து பிறந்த வசந்த முதலிகே விளங்குகின்றார். அவரை சிலர் வேடுவர் என்று அழைக்கின்றார்கள். என்றாலும் இலங்கையின் பூர்விக்கக் குடிகள் அவர்களே என்று அதே வரலாறு கூறுகின்றது.

ஏனைய அனைவரும் வந்தேரிகள் என்பதும் நினைவு கூரப்பட வேண்டி இருக்கின்றது. இன்று ஒடுக்கப்பட்ட முழு மக்களுக்காவும் வெற்றிகரமான போராட்டங்ளை நடாத்தி ஜனாதிபதி, பிரதமர், அரசு என்ற எல்லாவற்றையும் தனது கலடியில் மண்டியிட வைத்து அவர் ஹீரோவாகி இருக்கின்றார்.

விஜயன் இலங்கை வந்த போது இங்கு குவெனி என்ற வேடுவப் பெண் அரசியாக இருந்தாள் என்று வரலாறு சொல்கின்றது. அந்த வரலாற்றுக்குப் பின்னர் இந்த நாட்டில் ஒரு வேடுவ சமூகத்தவன்-பூமி புத்திரன் மக்கள் தளபதியாகி இருப்பது ஒரு வரலாற்றுப் பதிவு, என்றுதான் சொல்ல வேண்டும்.

‘அந்தரே’ தளபதி முதலிகே தனது மாணவ படையுடன் கொழும்பு வருகின்றார் என்ற செய்தி கேள்விப்பட்டால் ஆட்சியாளர்கள் குழை நடுங்குகின்றது. துப்பாக்கிகளையும் கனரக ஆயுதங்களையும் தாங்கிய ஆயிரக்கணக்கான படைகள் வீதிகளில் குவிக்கப்படுகின்றனர்.

அவை எல்லாவற்றையும் தகர்த்துக் கொண்டு தனது இலக்கை நோக்கி ‘அந்தரே’ தளபதி முதலிகே  வெரும் கைகளுடன் தனது படைகளை வழி நடாத்திச் சென்ற காட்சிகள் இன்றும் நம் கண்முன்னே தெரிகின்றன.

அவருடைய தாய் களுமெனிக்கே தனது மகனின் முகத்தை ஒரு வருடமாகப் பார்க்கவில்லை. அவரைத் தேடிப் போகவும் எனக்கு கொழும்புக்கு வழி தெரியாது.  மக்கள் எனது மகன்; ஜனாதிபதியை விரட்டுகின்றான். அரசாங்கத்தை கவிழ்க்கின்றான் என்றெல்லாம் பெருமையாகப் பேசிக் கொள்கின்றார்கள். இதனைக் கேட்டு நான் மகிழ்வதா அழுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

அவனிடம் நான் கேட்பது, நான் நோயாளியாக இருக்கின்றேன். என்னை ஒரு முறை வந்து பார்த்து விட்டுப் போ என்பது மெனிக்கே அவாவாக இருக்கின்றது. மகனுடன் பேசுவதற்கு என்னிடம் தொலைபேசி ஒன்று கூட இல்லை. அப்படி இருந்தாலும் என்னுடன் பேசுவதற்கு அவனுக்கு நேரமா இருக்கப் போகின்றது? என்று அவள் கேட்க்கின்றாள்.

களு மெனிக்கே தற்போது தம்பானையில் தனியாகத்தான் இருக்கின்றாள். கடைசி மகன் எங்கிருக்கின்றன் என்பது அவளுக்குத் தெரியாது. அடுத்தவன் கொழும்புப் பக்கம் திருமணமாகி வாழ்கின்றான். மகள் தந்தையின் ஊரான தனமல்விலவில் வாழ்ந்து வருகின்றாள். என்று தனது கதையைச் சொல்லி அழுகின்றாள் மெனிக்கே.

அதே நேரம் என்னுடைய எல்லா செயல்பாடுகளுக்குப் பின்னாலும்; தனது தாய் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் வசந்த முதலிகே சொல்லி இருந்தார். ரணில் வரவால் புரட்சி பிசுபிசுத்துப் போக, இப்போது போராட்டக்காரர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் மக்கள் விமோசனத்துக்காக போர்க் கொடி தூக்கிய வசந்த முதலிகே உற்பட பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்றார்கள். இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரம் கொழும்பில் கைதான முதலிகே தெற்கு-தங்கலை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். அவரை நெருங்கிய உறவினர் மட்டும் வாரம் ஒருமுறை பார்க்க முடியும் என பொலிஸ் கட்டுபாடு போட்டிருக்கின்றது.

ரணில் ஜனாதிபதியாக தெரிவான போது அவருக்கு ஒரு வாழ்த்துக் கூட சொல்ல விரும்பாதா சர்வதேச சமூகம் இன்று முதலிகே விடயத்தில் அக்கறையுடனும் அவதானத்துடனும் இருப்பதுடன், 90 நாள் முதலிகே மற்றும் அவரது சகாக்களைத் தடுத்து வைத்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இப்படி ஜனாநாயகப் போராட்டக்காரர்களை அடக்குவது ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐ.நா., ஐரோப்பிய ஒண்றியம் மற்றும் மேற்கு நாடுகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன. எப்படியோ ஒரு பூர்விக குடிமகன் இன்று உள்நாட்டில் மட்டுமல்ல உலகத்தாராலும் நேசிக்கப்ட்டிருக்கின்றான்.

அவனுக்குக் கொடுக்கப்படுகின்ற தொல்லைகள் நாட்டுக்கு அபகீர்த்தியையும் நெருக்கடிகளையும் கொடுக்கும் என்ற நிலை.

தற்போது  மொட்டுக் கட்சிகாரர்களைத் திருப்திப்படுத்த ரணிலின் இந்த செயல்பாடுகள் மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாகத்தான் போய் அமையும் என நாம் நம்புகின்றோம்.

நன்றி: 28.08.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

உலகக் கோப்பை 2022

Next Story

 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்:  மைதானம் 'பற்றி எரிந்த' தருணங்கள்