யாரிந்தப் புதின்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். யுக்ரேன் மீதான படையெடுப்பால் பலரையும் இவர் திகைக்க வைத்திருக்கலாம். 2014 இல் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்தற்குப்பிறகு இந்தப்பிராந்தியத்தில் அவர் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய நடவடிக்கையாகும் இது. ஆனால் ரஷ்ய செல்வாக்கை மீண்டும் ஏற்படுத்துவதற்கான தனது உறுதிப்பட்டை அவர் ஒருபோதும் ரகசியமாக வைத்திருக்கவில்லை.

புதின் 2000வது ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வருகிறார். ரஷ்யாவின் அதிபராக உள்ள அவர், பிரதமர் பதவியையும் வகித்திருக்கிறார். 1953ல் காலமான சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு மிக நீண்ட காலம் பதவியில் நீடிக்கும் ரஷ்யத் தலைவர் இவர்தான்.

2020 ஆம் ஆண்டில் நடந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த சர்ச்சைக்குரிய தேசிய வாக்கெடுப்பானது, 2024 இல் முடிவடையும் அவரது தற்போதைய நான்காவது பதவிக் காலத்திற்கு அப்பாலும் அவர் தலைவராக நீடிக்க வாய்ப்பளித்துள்ளது. எனவே அவர் 2036 வரை ஆட்சியில் இருக்க முடியும்.

ஆனால் அவர் எப்படி இந்த இடத்துக்கு வந்தார்? தற்போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் அடிபடும் இவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சிறிதே திரும்பிப் பார்ப்போம்.

முன்னாள் உளவாளி

புதினின் உலகப் பார்வையை வடிவமைத்த சோவியத் காலத்தில் இருந்த பண்புகளை விமர்சகர்கள் அவரிடம் பார்க்கிறார்கள்.சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் குழப்பத்திற்கு இடையே அதிவேகமாக தலைவராக அவர் உயர்வதற்கு முன்னால் சோவியத் உளவு அமைப்பான கேஜிபியில் பணியாற்றினார்.அவரது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் நண்பர்கள் பலருக்கு இந்த உளவு அமைப்புடன் தொடர்புகள் உள்ளன.

விளாதிமிர் புதினின் அரசியல் வாழ்க்கை 1990 களின் முற்பகுதியில் தொடங்கியது. அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் அனடோலி சோப்சாக்கின் உயர் உதவியாளராக பணியாற்றினார். சோப்சாக் முன்பு அவருக்கு பல்கலைக்கழகத்தில் சட்டம் கற்பித்தார்.

1997 ஆம் ஆண்டில், அவர் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் FSB யின்( KGB இன் முக்கிய வாரிசு) தலைவராக ரஷ்ய அதிபர் மாளிக்கை வட்டத்திற்குள் நுழைந்தார். விரைவில் அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

1999 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்திற்கு முந்தினம், ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ட்சின் ராஜினாமா செய்து புதினை தற்காலிக அதிபராக நியமித்தார்.

அப்போது முதல் ஆட்சியில் இருந்துவரும் அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிட ரஷ்ய அரசியலமைப்பு தடை செய்த காரணத்தால், 2008 – 2012 காலகட்டத்தில் பிரதமராக பணியாற்ற வேண்டியிருந்தது.வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் புதின், 2012 தேர்தலில் 66% வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு திரும்பினார்.

அவர் சோவியத் பாணி ராணுவ அணிவகுப்புகளை மீட்டெடுத்தார். ஒருகாலத்தில் தடைசெய்யப்பட்ட ஸ்டாலின் உருவப்படங்கள் மீண்டும் தோன்றின.1957 இல் உலகின் முதல் செயற்கைக்கோளாக மாறிய சோவியத் ஸ்புட்னிக் பெயரால், ரஷ்யாவின் கோவிட் தடுப்பூசி ஸ்புட்னிக் V என்று அழைக்கப்படுகிறது.

சோவியத் யூனியனின் சரிவை “[20 ஆம்] நூற்றாண்டின் மிகப்பெரிய புவிசார் அரசியல் பேரழிவு” என்று புதின் விவரித்தார். மேலும் 1997 முதற்கொண்டு ரஷ்யாவின் எல்லைகள் வரை நேட்டோ செய்யும் விரிவாக்கத்தையும் அவர் அடிக்கடி விமர்சித்தார்.

மேற்கத்தியத்துடன் நட்பின்மை

ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான முந்தைய பதற்றங்கள் , அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு ஆதரவாக சிரியாவின் உள்நாட்டுப் போரில் ரஷ்யாவின் தலையீடு ஆகியன புதின் மீதான மேற்கத்திய நாடுகளின் சந்தேகத்தை மீண்டும் தட்டியெழுப்பியது. பனிப்போர் கால கட்டத்தில் இருந்ததைப்போல உறவுகளில் சுமூகமின்மை நிலவியது. இதற்கு ஒரு விதிவிலக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் பதவியில் இருந்தபோது, புதினுக்கு வெளிப்படையாக பாராட்டு தெரிவித்ததுதான்.மறுபுறம், அடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புதினை ஒரு “கொலையாளி” என்று வர்ணித்தார்.

வலிமையான தோற்றம்

2000 ஆவது ஆண்டு போர் விமானத்தில் செச்சினியாவிற்கு பறந்தது மற்றும் 2011 இல் கருங்கடலில் ரஷ்ய பைக்கர்ஸ் திருவிழாவில் தோன்றியது போன்ற தேர்தல் ஸ்டண்ட்களை புதின் மிகவும் ரசித்தார்.ஆனால் புதின் ரஷ்ய அரசு ஊடகங்களில் தனது மென்மையான பக்கத்தையும் காட்டினார். தனது நாய்களை அரவணைப்பதையும், அழிந்து வரும் அமுர் புலிகளைப் பராமரிக்க உதவுவதையும் அவர் வெளியிட்டார்.

48% ரஷ்யர்கள், 2024 க்கு அப்பாலும் புதின் அதிபராக இருப்பதை விரும்புகிறார்கள் என்று 2021 பிப்ரவரியில் ரஷ்ய லெவாடா மையம் நடத்திய ஆய்வு சுட்டிக்காட்டியது.அந்த எண்ணிக்கை பல மேற்கத்திய அரசியல்வாதிகள் பொறாமைப்படும் அளவுக்கு இருந்தாலும்கூட, மற்றவர்களை ஒப்பிடும்போது புதின் பிரச்சனையற்றவர் என்று பலராலும் பார்க்கப்படுகிறார்.

1990களின் கம்யூனிச வீழ்ச்சிக் குழப்பத்திற்குப் பிறகு ரஷ்யாவை ஒப்பீட்டளவில் நிலையானதாக வைத்திருப்பதற்காக அவர் அரசியல் மதிப்பெண்கள் பெற்றார்.பரவலான தேசிய பெருமையை மீட்டெடுத்ததைத் தவிர புதின், நடுத்தர வர்க்கத்தை தோன்றவும் செழிக்கவும் அனுமதித்துள்ளார். இருப்பினும் மாஸ்கோதான் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிக அளவில் கிராமப்புற வறுமை உள்ளது.

உள்நாட்டில் அமைதியின்மை

வயதான ரஷ்யர்களிடையே அவருக்கு ஆதரவு இளைஞர்களை ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வகையில் வலுவாக உள்ளது . இந்த இளைஞர்கள் புதினின் கீழ் வளர்ந்தவர்கள் . அவர்களில் பலருக்கு மாற்றத்திற்கான தாகம் இருப்பது போலத்தோன்றுகிறது. பெர்லினில் இருந்து திரும்பிய உடன் கைது செய்யப்பட்ட புதினின் முக்கிய விமர்சகரான அலெக்சே நவால்னிக்கு ஆதரவாக 2021 ஜனவரியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய இளைஞர்கள் நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதினின் யுனைடட் ரஷ்யா கட்சியை,”வஞ்சகர்கள் மற்றும் திருடர்களின் கட்சி” என்று முத்திரை குத்தி, பரவலான ஊழலை அம்பலப்படுத்தியதன் மூலம் நவால்னி தனக்கென ஒரு பெயரைப் பெற்றார். இந்த எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் சமீபகாலத்தில் ரஷ்யா கண்டிராத அளவிற்கு இருந்தன. இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

பழைய சொத்துக்குவிப்பு வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் உள்ள நவால்னி, தற்போது உடல் நலம் குன்றியுள்ளார். மேற்கத்திய நாடுகளுடனான புதினின் உறவுகள் முறிந்து போனதற்கு மற்றொரு முக்கிய காரணம் இது.2021 ஆகஸ்டில்,’ நோவிச்சோக் நரம்பு ரசாயன தாக்குதலில்’ இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். புதினின் மத்திய பாதுகாப்பு சேவை (FSB) யின் கைவரிசை இது என்று பின்னர் மேற்கத்திய அரசுகள் குற்றம் சாட்டின.

2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ரஷ்ய முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோருக்கு விஷம் கொடுக்க ‘நோவிச்சோக் ( நரம்புகளை தாக்கும் ரஷ்ய ரசாயன நச்சு) பயன்படுத்தப்பட்டது.

முக்கிய அரசியல் எதிரிகள் மீதான தாக்குதல்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புதின் கூறினார்.

கடினமான குழந்தைப் பருவம்

விளாதிமிர் புதின், லெனின்கிராட்டில் (தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்) ஒரு குடியிருப்புப்பகுதியில் கடினமான சூழல்களில் வளர்ந்தார். பெரும்பாலும் பெரிய மற்றும் வலிமையான உள்ளூர் சிறுவர்களுடன் அவர் சண்டையிட்டார். அதுவே அவரை ஜூடோ கற்கத் தூண்டியது.

“புதின் பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பே சோவியத் உளவுத்துறையில் பணியாற்ற விரும்பினார் “என்று ரஷ்ய அதிபர் மாளிகை வலைதளம் தெரிவிக்கிறது.

முதல் குத்து

“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு லெனின்கிராட் தெரு எனக்கு ஒரு விதியைக் கற்றுக் கொடுத்தது. ஒரு சண்டை தவிர்க்க முடியாதது என்றால், முதல் குத்து உங்களுடையதாக இருக்கவேண்டும்,” என்று புதின் 2015 அக்டோபரில் கூறினார்.

செச்சினியாவில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தனது ராணுவத் தாக்குதலை நியாயப்படுத்தும்போது, “கழிவறையில் இருந்தால்கூட அவர்களை அழிப்பேன்” என்று தெரு சண்டைக்காரர்களின் மொழியை அவர் பயன்படுத்தினார்.

முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இந்தக்குடியரசு, 1999 முதல் 2000 வரை நடந்த கடுமையான சண்டைகளால் அழிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்தனர்.

விளாதிமிர் புதின்

2008 ஆம் ஆண்டில், புதினின் ரஷ்ய படை ஜார்ஜிய ராணுவத்தை முறியடித்து, பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளான அப்காசியா மற்றும் தெற்கு ஒசேஷியாவை கைப்பற்றியது . இது ஜார்ஜியாவின் அப்போதைய நேட்டோ சார்பு அதிபர் மிகைல் சாகாஷ்விலியுடன் மிகவும் தனிப்பட்ட மோதலாக இருந்தது. முன்னாள் சோவியத் நாடுகளில் உள்ள மேற்கத்திய சார்பு தலைவர்களின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கான புதினின் தயார்நிலையை இது காட்டியது.

கோடீஸ்வர நண்பர்கள்

புதினின் சுற்றம், ஒரு அற்புதமான செல்வந்த உயரடுக்காகும். அவரும் ஒரு மாபெரும் செல்வந்தர் என்று நம்பப்படுகிறது. அவர் தனது குடும்பம் மற்றும் நிதி விவகாரங்களை பொதுப்பார்வையில் இருந்து நன்கு பாதுகாத்து வருகிறார்.

2016 இல் கசிந்த பனாமா ஆவணங்கள், புதினின் நீண்டகால நண்பரான செர்ஜி ரோல்டுகின்னுக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களின் இருண்ட நெட்வொர்க்கை அம்பலப்படுத்தியது.புதினும் அவரது மனைவி லியுட்மிலாவும் கிட்டத்தட்ட 30 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2013 இல் விவாகரத்து பெற்றனர். புதினை “வேலையே கதி என்று இருப்பவர்” என்று லியுட்மிலா வர்ணித்தார்.

புதினின் மகள்களில் ஒருவரான கேடரினா, மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் உயர் நிர்வாகப் பணியில் உள்ளார் என்றும் அக்ரோபாட்டிக் ராக் ‘என்’ ரோல் போட்டிகளில் பங்கேற்பார் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.புதினின் மூத்த மகள் மரியா ஒரு கல்வியலாளர். நாளமில்லா சுரப்பியியல் வல்லுநர் அவர்.

தாராளவாதிகள் வெளியே

புதினின் தேசபக்தி ரஷ்ய ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. அவருக்கு ஆதரவாக செய்திகள் எழுதப்படுகின்றன. எனவே எதிர்ப்பின் முழு அளவை அளவிடுவது கடினம்.அதிபராக தனது முதல் இரண்டு பதவிக்காலத்தில் ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதிகளான எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் பெறப்பட்ட நல்ல வருமானத்தால் புதின் உற்சாகமடைந்தார்.

பெரும்பாலான ரஷ்யர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது. ஆனால் ஜனநாயகம் செல்லரித்துப் போவதுதான்இதற்கான விலை என்று பலர் கருதுகின்றனர்.

2008 உலகப் பொருளாதார நெருக்கடி தொடங்கி, நிதிப்பற்றாக்குறை பொருளாதாரத்துடன் போராடி வரும் புதின், மந்தநிலை மற்றும் சமீபத்தில் எண்ணெய் விலையில் சரிவு ஆகியவற்றையும் எதிர்கொண்டுள்ளார்.ரஷ்யா பல வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் , மூலதனம் திரும்ப பெறப்பட்டதால் பில்லியன் கணக்கான டாலர்களையும் இழந்தது. புதினின் ஆட்சி பழமைவாத ரஷ்ய தேசியவாதத்தால் ஆனது.

இது ஆர்த்தடாக்ஸ் திருச்சபையால் ஊக்குவிக்கப்பட்ட ஜார் ஆதிக்கவாதத்தின் வலுவான எதிரொலிகளைக் கொண்டுள்ளது.அதிபரான உடனேயே புதின், தாராளவாத நபர்களை ஓரங்கட்டுவதைப் பற்றித் பேசத்தொடங்கினார்.எடுத்துக்காட்டாக, செல்வந்தர்கள் போரிஸ் பெரெசோவ்ஸ்கி மற்றும் விளாதிமிர் குசின்ஸ்கி போன்ற போரிஸ் யெல்ட்சினுக்கு விருப்பமானவர்கள்,

வெளிநாடுகளில் நாடு கடந்து வாழ்கின்றனர்.ஒரு காலத்தில் உலகின் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான மைக்கேல் கோடர்கோவ்ஸ்கி மற்றும் Pussy Riot என்ற பங்க் குழுவைச் சேர்ந்த புதின் எதிர்ப்பு ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவில் மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச கவலை வளர்ந்துள்ளது.

இப்போது யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் யாரேனும் ரஷ்யாவை தாக்க முயற்சித்தால் ரஷ்யா “உடனடியாக” பதிலடி கொடுக்கும் என்ற புதினின் எச்சரிக்கையை தொடர்ந்து, அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதைப் பார்க்க அனைவருடைய கண்களும் ரஷ்ய அதிபர் மீது உள்ளன.

 

Previous Story

புதின் உலகை ஆளுவதை யாராலும் தடுக்க முடியாது;பாபா வாங்கா கணிப்பு!

Next Story

இணைய வழி குற்றங்கள்  பொலிஸ் கடும் எச்சரிக்கை