மோதிக்கு ஜோ பைடன் அதிக முக்கியத்துவம் தருவது ஏன்? 

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணம் உலகம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் பெரிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.குறிப்பாக, அமெரிக்க ஊடகங்களில் மோதியின் பயணம் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க அரசின் விருந்தினராக மோதி அமெரிக்காவுக்கு செல்வது இதுவே முதல் முறை.

வியாழக்கிழமையன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி உரையாற்றியுள்ளார். இந்தியப் பிரதமர் என்ற வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றியுள்ளார். இவ்வாறு அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 முறை உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோதி பெற்றுள்ளார்.

மோதியின் அமெரிக்கப் பயணம்

பிரதமர் மோதியின் வருகை குறித்து அமெரிக்க ஊடகங்களின் பார்வை கலவையானதாக இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோதியின் உரையை அந்நாட்டு எம்.பி.க்கள் பலரும் புறக்கணித்த செய்திக்கு அந்நாட்டு ஊடகங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

அதுதவிர, இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை தொடர்பான கேள்விகள், ஜனநாயகம் மற்றும் ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஆகியவை குறித்தும் அமெரிக்க ஊடகங்கள் பிரதானமாகக் கேள்வி எழுப்பியிருந்தன.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோதியின் உரையை ஆளும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் புறக்கணித்தனர். மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த ரஷிதா தலிப், மிசௌரியை சேர்ந்த கோரே புஷ், மின்னசோட்டாவை சேர்ந்த இலான் ஒமர், நியூயார்க்கை சேர்ந்த ஜமால் போவ்மென் ஆகியோர் மோதி உரையைப் புறக்கணித்தனர். மோதிக்கு எதிராக அவர்கள் நால்வரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை அவர்களது கூட்டறிக்கைக்குப் பிரதான இடம் ஒதுக்கியிருந்தது.

“அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோதி உரையாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் மத சிறுபான்மையினர் மற்றும் பத்திரிகையாளர்களின் குரல்கள் பலவீனமாக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் லாபத்திற்காக நாம் ஒருபோதும் மனித உரிமைகளைத் தியாகம் செய்ய முடியாது,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சிறப்பான வரவேற்பு

மோதியின் அமெரிக்கப் பயணம்

“மோதியை வரவேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்” என்று தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை மற்றொரு செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

சர்வதேச அரசியலில் ரஷ்யா, சீனாவோடு அமெரிக்கா ஒரேநேரத்தில் மோதிக் கொண்டிருக்கையில், இந்தியா தங்களுடன் இருக்க வேண்டும் என்று பைடன் விரும்புகிறார். கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தன் மூலம் செய்தியாளர்களின் கேள்விகளை மோதி எதிர்கொள்ள ஜோ பைடன் வழிவகை செய்ததே மோதியுடைய பயணத்தின் முக்கிய அம்சமாகும்.

செய்தியாளர்களின் கேள்விகளை மோதி நேரடியாக எதிர்கொள்வது என்பது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் அரிதான ஒன்று. இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் ஜனநாயகம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட போது, “இந்தியாவின் மரபணுவிலேயே ஜனநாயகம் இருக்கிறது, மத ரீதியாக யார் மீதும் பாகுபாடு காட்டப்படவில்லை,” என்று மோதி பதிலளித்தார்.

“இந்தியாவில் மோதி ஆட்சியில் அதிருப்தியாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள், பத்திரிகை சுதந்திரம் பலவீனமாக்கப்படுகிறது என்பன போன்ற புகார்களைப் பெரிதாக்காமல் ஜோ பைடன் சற்று அடக்கியே வாசிக்கிறார்,” என்று திரை நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரத்தில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை ஒரு சர்வாதிகாரி என்று கூறிவிட்டு, அந்தக் கூற்றில் இருந்து பின்வாங்காமல் ஜோ பைடன் உறுதியாக இருந்தார். சீனா மற்றும் ரஷ்யாவின் முரட்டு அணுகுமுறைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுத் தளத்தை விரிவாக்க பைடன் விரும்புகிறார்.

“பனிப்போர் தொடங்கி இன்று வரையிலும்கூட இந்தியா அணிசேரா நாடு என்ற நிலைப்பாட்டில் தொடரவே விரும்புகிறது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை இந்தியா இன்னும் கண்டிக்கவில்லை.

மறுபுறம், சீனாவுடனான எல்லை நெடுகிலும் இந்தியாவுக்கு பதற்றம் இருக்கிறது. ஆனால், சீனாவை முன்னிறுத்தி இந்தியா அமெரிக்காவுக்கு ஆதரவான நாடாக மாறுமா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது,” என்று அந்த நாளிதழ் கூறுகிறது.

“சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த வகுப்புவாத வன்முறைகளின் எதிரொலியாக, மோதிக்கு அவர் பிரதமராகும் முன்பாக அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. மோதியுடனான தனிப்பட்ட உரையாடலின்போது மனித உரிமை மீறல் பிரச்னைகளை அதிபர் பைடன் எழுப்புவார் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ரஷ்யா மீதான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்பதற்கான எந்தவொரு சமிக்ஞைகளையும் நரேந்திர மோதி தரவில்லை. அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதுகூட, ரஷ்யா, சீனா ஆகிய பெயர்களை மோதி உச்சரிக்கவே இல்லை,” என்று தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

மோதியின் அமெரிக்கப் பயணம்

பைடனுக்கு மோதி ஏன் முக்கியமானவர்?

அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு முன்னணி நாளிதழான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையும் மோதியின் அமெரிக்கப் பயணம் குறித்துப் பல செய்திகளை வெளியிட்டுள்ளது.

அவ்வாறான ஒரு செய்தியில், “பலவாறாக கேள்விகள் எழுந்துள்ள போதிலும் இந்தியாவின் ஜனநாயகத்தை அதிபர் பைடன் ஏற்றுக் கொண்டுள்ளார்” என்று தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

“இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக நாடுகள் என்று பைடன் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. ஆனால், சீனாவை இதனுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், அங்கே ஜனநாயகம் இல்லை என்பது மிக முக்கியமான காரணம். பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை இரு நாட்டு ஜனநாயகமும் உள்ளடக்கியுள்ளது என்று பைடன் கூறினார்,” என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.

“பைடன் ஆட்சியில், மூன்று நாடுகளின் தலைவர்கள் மட்டுமே, அதாவது பிரதமரோ, அதிபரோ அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாக அழைக்கப்பட்டுள்ளனர்” என்று தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பாக, பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மக்ரோன், தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் ஆகியோர் மட்டுமே அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளனர். அந்த வகையில், மோதி மூன்றாவது விருந்தினர் ஆவார். 2016ஆம் ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோதி உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோதியின் அமெரிக்கப் பயணம்

“அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோதி உரையாற்றுகையில் எம்.பி.க்கள் பலமுறை எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தார்கள். அதேநேரத்தில், பார்வையாளர் பகுதியில் இருந்து மோதி, மோதி என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வெள்ளை மாளிகைக்கு வெளியே மோதியை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். இரண்டு சிறந்த நாடுகள், 2 வலிமையான நண்பர்கள் மற்றும் 2 வலிமையான நாடுகள் 21 ஆம் நூற்றாண்டின் திசையைத் தீர்மானிக்கும் என்று பைடன் பேசுகையில் குறிப்பிட்டார்.

இந்தியாவில் அமெரிக்கா ஜெம் இன்ஜின்களை தயாரிப்பது உள்ளிட்ட சில முக்கியமான ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையே உள்ளன. அதுதவிர, இந்தியாவில் பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்கா தனது துணைத் தூதரகங்களை திறக்கவுள்ளது,” என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் மோதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதை, அமெரிக்காவின் முன்னணி செய்தித் தளமான ஆக்ஸியோஸ் முக்கியத்துவம் கொடுத்துப் பதிவு செய்துள்ளது.

“இந்திய பிரதமர் மோதி செய்தியாளர்களின் கேள்விகளை அரிதாகவே எதிர்கொள்பவர். அது வியாழனன்று நடந்தது. சீனாவை கட்டுப்படுத்த இந்தியாவுடனான உறவை ஆழமாக வலுப்படுத்திக் கொள்ள விரும்பியே மோதியை அரசுமுறைப் பயணமாக பைடன் அழைத்துள்ளார்.

ஆனால், இந்தியாவில் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற பிரச்னைகள் மோதியின் இந்தப் பயணத்தில் நிழலாகப் படிந்துவிட்டன,” என்று அந்த தளம் குறிப்பிட்டுள்ளது.

சீனாவுக்கு சவாலா?

மோதியின் அமெரிக்கப் பயணம்

வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவும் மோதியின் வருகை குறித்து சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது. “கடந்த 2005ஆம் ஆண்டு மத வன்முறைக்காக மோதிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது மோதியை வரவேற்க ஒன்றுவிடாமல் அனைத்தையும் பைடன் செய்து முடித்துள்ளார்.

மோதிக்கு பைடன் இவ்வளவு சிறப்பான வரவேற்பைக் கொடுக்க இரண்டு காரணங்கள் உள்ளன. சீனாவை கட்டுப்படுத்த இந்தியா வலுவாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அத்துடன், ரஷ்ய ஆயுதங்களை இந்தியா சார்ந்திருக்கும் நிலை முடிவுக்கு வர வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் சீனாவுடன் வெளிப்படையாக மோதிக் கொண்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே. இரு நாடுகளும் 3,400 கி.மீ. நீள எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளன. எல்லை நெடுகிலும் இரு நாடுகளும் ராணுவ நிலைகளை வலுப்படுத்தி வருகின்றன,” என்று வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கூறியுள்ளது.

“இந்திய ராணுவத்தை நவீனமாக்க அமெரிக்கா ஆதரவு தருகிறது. சீனா, பாகிஸ்தான் எல்லையைக் கண்காணிக்க அமெரிக்காவிடம் இருந்து 3 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்குகிறது.

அதுதவிர, அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் இந்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் போர் விமான இன்ஜின்களை உற்பத்தி செய்யப் போகிறது,” என்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அட்லாண்டிக் கவுன்சிலில் சீனியர் உறுப்பினரான இர்ஃபான் நூருதீன், “இந்தியா – அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பில் மோதியின் இந்தப் பயணம் ஒரு மைல்கல்லாக அமையும்,” என்று கூறியுள்ளார்.

“அமெரிக்க தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா நகர்கிறது. அதன் பொருள், அமெரிக்க ராணுவ சிஸ்டத்துடன் சீனா போட்டியிட நேரிடும் என்பதே அதன் பொருள். சீனா தற்போது பசிபிக் பிராந்தியத்தல் ஜப்பான் மற்றும் அதோடு சேர்த்து அமெரிக்கா, அதன் கூட்டாளியான தென்கொரியாக ஆகிய நாடுகளுடன் போட்டியிடுகிறது.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா – இந்தியா கூட்டணியை சீனா எதிர்கொள்ள நேரிடலாம். அத்துடன், இந்தியாவுடனான எல்லையில் அமெரிக்க தொழில்நுட்பத்தையும் சீனா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது சீனாவுக்கு சவாலான காரியமாக இருக்கும்,” என்கிறார் இர்ஃபான் நூருதீன்.

அமெரிக்காவை சேர்ந்த சி.என்.என்.செய்தித் தொலைக்காட்சி, “இந்தியாவில் மோதிக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. அதேநேரத்தில், சர்வாதிகாரத்தனமான அவரது செயல்பாடுகள் மேற்குலகிற்குக் கவலை தருகிறது.

அதிருப்தியாளர்களை அவர் புறக்கணித்தார். பத்திரிகையாளர்களை குறி வைத்தார். முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதாக மனித உரிமை அமைப்புகள் கூறும் கொள்கைகளை முன்னெடுத்தார்,” என்று கூறுகிறது.

“உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆசியாவில் பைடன் நிர்வாகம் வகுக்கும் உத்தியில் இந்தியா முக்கிய கதாபாத்திரமாக உருவெடுத்துள்ளது. அண்மையில் மக்கள் தொகை அடிப்படையில் சீனாவை இந்தியா முந்திவிட்டது.

காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்னைகளை இந்தியாவையும் உடன் சேர்த்துக் கொள்ளாமல் தீர்வு காண முடியாது என்று பைடன் நம்புகிறார்,” என்று சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

Previous Story

தெளிந்த ஆறாக இந்தியா!

Next Story

சிறுபான்மையினர் குறித்து மோதியுடன் பேசியிருப்பேன் - ஒபாமா