இலங்கையில் ஒற்றை கண் பார்வை இழந்த பெண் சிறுத்தை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், நரேந்திர மோதிக்கு நினைவு பரிசொன்றையும் அவர் வழங்கியிருந்தார்.
முன்னோக்கி செல்லும் பெண் சிறுத்தையொன்று பின்னோக்கி திரும்பி பார்க்கும் வகையிலான புகைப்படமொன்றையே சஜித் பிரேமதாஸ, நரேந்திர மோதிக்கு வழங்கியிருந்தார்.
இவ்வாறு இந்த புகைப்படத்திலுள்ள சிறுத்தையின் வலது கண் நீல நிறத்தில் அமைந்திருந்ததுடன், அந்த கண்ணில் பார்வையில்லை என அறிய முடிகின்றது.
ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த விலங்கு, ”இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையாக சின்னம்” என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
ஒருவேளை கிளௌகோமா (பார்வை நரம்பில் சேதம்) , கண்புரை காரணமாக சிறுத்தைக்கு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சவால்களுக்கு மத்தியில் உயிர் வாழ்வதற்கான அடையாளமாக இது இருப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார்.
சிறுத்தை எங்கே?
வில்பத்து தேசிய சரணாலயத்தில் வாழ்ந்து வரும் இந்த சிறுத்தை தொடர்பில் பிபிசி தமிழ், வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரியான புபுது சுரங்க ரத்நாயக்கவிடம் வினவியது.
இந்த பெண் சிறுத்தை தொடர்பில் இதுவரை எவரும் முழுமையாக ஆராய்ச்சி செய்யவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
”சிறுத்தை ஒன்றுக்கு இரண்டு கண்களும் சரியாக தெரிய வேண்டும். உணவுகளை பெற்றுக்கொள்வதற்கு கண்கள் சரியாக தெரிய வேண்டும். ஆனாலும், ஒரு கண் பார்வையின்றி இந்த சிறுத்தை இருந்துள்ளது. ஒரு வருட காலமாக அந்த சிறுத்தை தொடர்பில் எமக்கு பதிவாகவில்லை.” என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த சிறுத்தையின் கண்கள் இயற்கையாகவே அவ்வாறு காணப்பட்டதொன்றா என பிபிசி தமிழ், குறித்த அதிகாரியிடம் வினவியது.
”அது விபத்தினால் ஏற்பட்ட ஒன்று கிடையாது. எந்தவொரு விலங்கிற்கும் அவ்வாறு ஏற்பட வாய்ப்புள்ளது. மனிதர்களை போன்று மிருகங்களுக்கும் அவ்வாறு ஏற்படலாம். இந்த சிறுத்தை பல வருட காலமாக வாழ்ந்துள்ளது. இந்த கண் பார்வை விபத்தினால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.” என அவர் குறிப்பிட்டார்.
வில்பத்து தேசிய சரணாலயத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக சுமார் 350 சிறுத்தைகள் வாழ்வதாக நம்பப்படுகின்றது.
இலங்கை சிறுத்தை அல்லது பென்தெரா பர்டஸ் கோடியா என இந்த சிறுத்தை வகை இலங்கையில் அழைக்கப்படுகின்றது.
குறிப்பாக இந்த வகையான சிறுத்தை தற்போது இலங்கையில் அருகிய இனமாக அடையாளப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது முதல் முறையாக 1956 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
”ஒன் ஐ சிறுத்தையை தேடுகிறோம்”
புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் வரை வில்பத்து வனப் பகுதி பரவியுள்ளது, மேலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லையாகவும் இந்த வனப் பகுதி அமையப் பெற்றுள்ளது.
கணக்கெடுப்பு பணி மற்றும் உடல் நலன் பற்றி அறிந்துக்கொள்வதற்காக ”ஒன் ஐ” என அழைக்கப்படும் இந்த சிறுத்தையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரியான புபுது சுரங்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
”நாளொன்றிற்கு சரணாலயத்திற்குள் 70 முதல் 80 வரையான சஃபாரி வாகனங்கள் செல்கின்றன. இந்த சிறுத்தை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறியும் பட்சத்தில் எமக்கு அறிவிக்குமாறு அவர்களை நாங்கள் தெளிவூட்டியுள்ளோம். அதேபோன்று, எமது வாகனங்களும் சரணாலயத்திற்குள் நாளாந்தம் செல்கின்றன. இதனூடாக அந்த மிருகத்தை கண்டுக்கொள்ள முடியுமா என ஆராய்கின்றோம்.” என அவர் கூறினார்.
”இந்த சிறுத்தையானது பெண் என்பதனால் நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லக்கூடிய திறனை அது கொண்டுள்ளது. ஆண் மிருகத்தை விட, பெண் மிருகம் அதிக தூரம் நடந்து செல்லும் ஆற்றலை கொண்டுள்ளது.” என வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரியான புபுது சுரங்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.