இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில், அந்நாட்டின் உளவு அமைப்பான, ‘மொசாட்’ தலைமை அலுவலகம் அருகே லாரியை மோதச் செய்து, பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 40 பேர் படுகாயம் அடைந்தனர். லாரியை ஓட்டி வந்த டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேற்காசிய நாடான இஸ்ரேல், மும்முனை தாக்குதலை சந்தித்து வருகிறது. காசாவை கட்டுப்பாட்டில் வைத்துஉள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, அதற்கு ஆதரவாக செயல்படும் லெபனானில் இருந்து இயங்கும் ஹெல்பொல்லா பயங்கரவாத அமைப்பு மற்றும் இந்த இரண்டையும் வளர்த்து வரும் ஈரானின் தாக்குதலை இஸ்ரேல் சந்தித்து வருகிறது.
கடந்த, அக்., 1ல் ஒரே நேரத்தில், 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் செலுத்தியது. இதற்கு பழிவாங்கும் வகையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று கூறுகையில், ”எங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று கூறியிருந்தோம்.
”அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். ஈரான் மீதான இந்த தாக்குதல் துல்லியமானது மற்றும் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும் எங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமைந்து உள்ளது,” என்றார்
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள உளவு அமைப்பின், மொசாட் தலைமையகம் அருகே நேற்று படு வேகமாக வந்த லாரி திடீரென பஸ் நிறுத்தத்தின் மீது மோதியது. இதில், அங்கு பஸ்சுக்காக காத்திருந்த, 40 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து சுதாரித்த பாதுகாப்பு படையினர், லாரியை ஓட்டி வந்த டிரைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் டிரைவர் பலியானார்.
லாரி டிரைவர், இஸ்ரேலில் வசிக்கும் அரபு நாட்டைச் சேர்ந்தவர் என, இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் நடந்த அடுத்த சில நிமிடங்களில் ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்ரேல் உளவு அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட துணிகரமான செயலை பாராட்டுகிறோம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், எகிப்து அதிபர் அப்துல் பதா எல்சிசி கூறுகையில், ”ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பேச்சு நடத்தி வருகிறோம். ஹமாஸ் வசம் உள்ள நான்கு பிணைக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், அதற்கு பதிலாக இரண்டு நாள் போர் நிறுத்தம் செய்வது குறித்தும் பேசி வருகிறோம்,” என்றார்.