இஸ்ரேல் தோல்வி விசாரணையில் அறிவிப்பு
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை தடுக்க இஸ்ரேல் ராணுவம் தவறிவிட்டதாகவும், ராணுவம் தனக்கான பணியில் தோல்வியடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்.7 சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் முழு விசாரணையில் இறங்கியது. இந்த விசாரணையில் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில்தான், இஸ்ரேல் ராணுவம் தோல்வியடைந்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
அதாவது, “அக்.7 தாக்குதலை தடுக்க இஸ்ரேல் ராணுவம் தவறிவிட்டது. அது தனது தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தும் என்று கூட ராணுவத்திற்கு தெரியவில்லை” என இஸ்ரேலிய இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக அல்ஜசீரா செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
திடீரென தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் தயாராக இல்லாததே இந்த தோல்விக்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது. மட்டுமல்லாது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, போன்ற பிற அமைப்புகளின் மீது இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட் கண் வைத்திருந்தது.
ஆனால் பக்கத்தில் உள்ள ஹமாஸை அது கவனிக்க தவறிவிட்டது. உளவுத்துறை, தடைகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டும் அதிகமாக நம்பியிருந்ததால், ஹமாஸ் தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 200 பேர் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தாக்குதல் மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்பட்டிருக்கிறது. முதல் கட்டத்தில் ஹமாஸின் உயரடுக்குப் படையான நுக்பா போராளிகள் 1000 பேர் உள்ளே நுழைந்திருக்கின்றனர்.
அதேபோல, 2வது கட்டமாக 2000 பேரும், 3ம் கட்டமாக சில நூறு பேரும் நுழைந்திருக்கிறார்கள். தாக்குதல் மிக கச்சிதமாக திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து விசாரணை தொடங்கப்பட்டபோது, கவனக்குறைவுக்கு பொறுப்பேற்று இராணுவத்தின் தெற்குப் படைத் தளபதி யாரோன் ஃபிங்கெல்மன் ராஜினாமா செய்தார். மட்டுமல்லாது இஸ்ரேலின் உளவுத் தலைவர் அஹரோன் ஹலிவா, இஸ்ரேலின் உயர்மட்ட ஜெனரல் ஹெர்சி ஹலேவி ஆகியோரும் பதவி விலகினர்.
பிரதமர் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் நெதன்யாகு பதவி விலகல் குறித்து எதையும் அறிவிக்கவில்லை.
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மிகப்பெரிய போரை நடத்தியிருந்தது. போரில் 48,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இதில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளும்தான்.
போர் நிறுத்தம் குறித்து எத்தனையோ முறை வலியுறுத்தியும் கூட நெதன்யாகு, போரை நிறுத்தவில்லை. சரி இத்தனை உயிர்களை எடுத்தாகிவிட்டது, ஹமாஸை ஒழித்தார்களா? என்று கேட்டால் இல்லை என்றே பதில் வருகிறது.
ஏனெினல் ஹமாஸ் பாலஸ்தீன விடுதலை அமைப்பாக அரசியல் ரீதியாக கொள்கைகளுடன் செயல்படுகிறது. எனவே இதனை ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல என்று இஸ்ரேல் ஆதரவாளர்களே கூறுகின்றனர்.
தற்போது இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனை நிரந்தரமாக்கி, அமைதியை மத்திய கிழக்கில் கொண்டுவர வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாக இருக்கிறது.
இதற்கிடையில் ராணுவ விசாரணை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கின்றன.