மே-9 அந்தரங்க ரிப்போர்ட்

–நஜீப் பின் கபூர்–

நாட்டு நடப்புக்கள் தொடர்பான அனேகமான தகவல்களை மக்கள் சமகாலத்தில் சமூக ஊடகங்களில் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அப்படி வருகின்ற எல்லாச் செய்திகளும் நம்பகத் தன்மையானவையா என்ற விடயத்தில் நிறையக் குழப்பங்களும் இருந்து வருகின்றன.

சில சமூக ஊடகங்கள் ஜனரஞ்சகத்துக்கான தமது கண்டு பிடிப்புக்களை மக்கள் மயப்படுத்தி வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுவதும், அது பற்றிய நமது எச்சரிக்கைகளும் தெரிந்ததே. அனேமாக நம்பகத்தனமான செய்திகளைத் தேடி ஆராய்ந்து எழுதுவதில்- சொல்வதில் நாம் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோம்.

நாட்டில் தற்போது துவங்கிய வன்முறை எப்படி ஆரம்பித்தது. மஹிந்த ராஜபக்ஸ யானை தனது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போல் அழிவை எப்படி தேடிக் கொண்டார்.?

அதன் அந்தரக்கப் பக்கங்கங்கள் என்ன? என்பதனைப் பார்ப்போம். ராஜபக்ஸ அரசியல் என்பது அவர்களுடைய தந்தை ரி.ஏ.ராஜபக்ஸவில் இருந்து துவங்கினாலும் அவர் பண்டாரநாயக்க அரசியலில் முக்கிய ஒரு தலைவராக செயல்பட்டவர் அல்ல.

தற்போதய ராஜபக்ஸாக்கள் அதிகாரத்துக்கு வந்த நாள் முதல் தமது தந்தையை எஸ்.டப்லியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கு அடுத்த தலைவரைப் போல் மக்கள் மத்தியில் சந்தைப்படுத்த முனைந்தார்கள். அதில் அவர்கள் ஓராளவு  வெற்றியும் பெற்றிருந்தார்கள்.

ஆனால் அந்த வரலாறு ஊதிப் பெருப்பிக்கப்பட்டது என்பது நமது கணக்கு. எனவேதான் தெற்கில் தமது பெற்போருக்கு ஹெரகொல்லையில் பண்டாவுக்கு இருப்பது போல் அல்லது அதனை விட பல மடங்கு மக்கள் பணத்தை செலவு செய்து ஒரு வரலாற்று நினைவிடத்தையும் தூபிகளையும் அமைத்தார்கள். இன்று அவை அவர்களது ஊரவர்களினாலேயே குப்புறவாக சரிக்கப் பட்டிருக்கின்றது.

அந்தக் கதைகள் அப்படி இருக்க அதிகாரத்தில் இருந்த தற்போதய ராஜபக்ஸாக்கள் எந்தளவு அட்டகாசமானவர்களாக-கொடூரமானவர்களாக குடிகளால் பார்க்கப் படுகின்றார்கள் என்பதை நாம் தற்போதய சம்பவங்களில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக  ராஜபக்ஸாக்களின் பொற்காலம் மஹிந்த ராஜபக்ஸ என்ற தனிமனித பிம்பத்தில் இருந்துதான் கட்டியெழுப்பப்பட்டது. ஒருவர் இரு முறைக்கு மேல் ஜனாதிபதியாக வர முடியாது என்ற விதிக்கு அமைய மஹிந்த தம்பி ஜீ.ஆருக்கு தனது அணி சார்பில் வேட்பு மனுவைக் கொடுத்தார்.

வேட்பு மனுவை பெற்றுக் கொள்வதற்கு முன்னரே இனவாத கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி குறிப்பாக முஸ்லிகள் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியும் மறுபுறத்தில் தமிழர்கள் அரசியல் எதிர்பார்ப்புக்களுக்கு ஆப்புத்தான் என்ற கருத்தையும் பேரினத்தாருக்குச் சொன்னார்கள். அதற்கென்று ஊடகங்களையும் பாவித்து, இலக்கை  சுலபமாக அடைந்தார்கள். அதன் பின்னர் ஆனவத்துடனும் அடாவடித்தனத்துடனும் இரு வருடங்களை ராஜபக்ஸாக்கள் நகர்த்தினார்கள்.

பொய்யும் புறட்டும் சூதும் வாதும் நிலைக்காது என்ற நியதியில் சோதனைகள் ராஜபக்ஸாக்களைப் பின் தொடர்ந்தன.

கொரோனாவும் இவர்களுக்கு  தொந்தரவுகளைச் செய்தது. நாட்டு நெருக்கடிக்கு அதுவே காரணம் என்பது ராஜபக்ஸாக்கள் வாதமாக இருந்தது. யதார்த்தம் அதுவல்ல என்பது உலகறிந்த கதை. ராஜபக்ஸாக்களும் அவர்களுடன் நெருக்கமாக இருந்து அரசியல் செய்தவர்களும் முடியுமான மட்டும் மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்தக் கொண்டார்கள்.

அதுபற்றி அவ்வப்போது கேள்விகள் வந்தபோது சட்டமும் நீதியும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அதற்கேற்ற ஒரு நிருவாக அமைப்பை அவர்கள் நாட்டில் கட்டி எழுப்பி இருந்தார்கள்.

இது எவ்வளவு தூரம் மோசமாக இருந்தது என்றால் கிராமப்புற அரசியல்வாதிகள், அரசுக்கு விசுவாசமான கல்லூரி அதிபர்கள் அவர்கள் கட்டுப்பட்டில் இருக்கின்ற  அரச நிருவனங்கள் கூட சட்டத்தையும் சுற்று நிருபங்களையும் குப்பையில் போட்டு விட்டுக் காட்டுப் பஞ்சயாத்தை வைத்து  மேசடிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. கேள்விகள் வரும் போது பிரதேச அரசியல்வாதிகளிடம் ஓடி அவற்றை மூடி மறைக்கும்  வசதிகளும் ராஜபக்ஸ ஆட்சியில் இருந்தது.

இப்போது ஆட்சி மாற்றம் என்று ஒன்று கைகெட்டி இருக்கின்ற நேரத்தில் அதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் உதவிய அதிகாரிகள் கம்பி என்ன வேண்டிய அபயமும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற. கோட்டா கோ போராட்டத்துடன் பக்கச் சார்பாக நடந்த அதிகாரிகள் பல இடங்களில் ஊழலுக்கு எதிரான சாட்சியாளர்களாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

முறை மாற்றம் (சிஸ்டம் ஜேஞ்)  என்ற இந்த ஊழலுக்கு எதிரான அமைப்பும்  உள்ளுர் மட்டங்களிலும் அதற்கான செயலணிகளை நாடு பூராவும் நிறுவ ஏற்பாடுகளைச் செய்து வருகின்து. அதில் இணைந்து கொள்ளுமாறும் மக்களிடத்தில் பகிரங்க வேண்டுகோள் விடுத்து வருகின்றது. இது மக்கள் நலனுக்கான ஆரோக்கிய முயற்ச்சியாகப் பார்க்க முடியும்.

இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதியும் பிரதமரும் வீட்டுக்குப் போ என்ற போராட்டம் உச்சம் தொட்டது. பிரதமர் ஜனாதிபதியையும் ஜனாதிபதி பிதமரையும் விலகும் படி ஓருவர் காலை ஒருவர் இழுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ஜீ.ஆர். பிரதமர் விலக்கித்தான் நெருக்கடிக்குத் தீர்வுகான முடியும் என்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்.

உண்மையில்  போரட்டம் ஜனாதிபதி விலக வேண்டும் என்றுதான் துவங்கியது. ஜனாதிபதியின் கடும் அழுத்தத்தின் காரணமாக பிரதமர் விலகுவது என்று முடிவெடுத்தார். அதற்காக அவர் புனித நகரான அனுராதபுரத்துக்குப் போய் பூசைகளையும் முடித்து வந்திருந்தார்.

பிரதமர் பதவி விலகுவது தமக்குப் தனிப்பட்ட ரீதியில் பெரும் பாதிப்பு என்பனை நன்கு தெரிந்திருந்த பிரதமரின் அலுவலகத்தில் பிரதான பதவி வகித்த யோசித்த ராஜபக்ஸ, (தற்போது சிங்கப்பூரில்) நாமல் ராஜபக்ஸ  குருனாகலை ஜொன்ஸ்டன், பதுளை திஸ்ஸ குட்டியாரச்சி புத்தளம் சனத் நிசந்த மேலும் தமக்கு விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் தலைவர்கள் உறுப்பினர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மே ஒன்பதாம் திகதி அலரி மாளிகையில் கூட்டம் போட்டு பிரதமர் எக்காரணம் கொண்டும்  விலகக் கூடாது என்று அலுத்தம் கொடுக்க, உணர்வுகளுக்கும் மக்கள் கூட்டம் மீது நம்பிக்கையில் திடீரென பிரதமர் முடிவை மாற்றி உங்கள் போரிக்கையை ஏற்று  நான் பதவி விலக மாட்டேன் என்று பல்டியடித்தார். இது ஜனாதிபதி ஜீ.ஆருக்குக் அவர் கொடுத்த உறுதி மொழிக்கு மாற்றமான முடிவாக இருந்தது.

இந்தத தீர்மானத்திலோ அவர்கள் கூட்டம் போட்டதிலோ எந்தத் தவறும் கிடையாது. அது அவர்களது ஜனாநாயக உரிமை. இந்த கூட்ட ஏற்பாட்டில் திறை மறைவில் பல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தமக்கு விசுவாசமான அடியாட்கள், சமுர்தி உதவி பெரும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சிறைக் கூடங்களில் இருந்த கிரிமினல்கள் என்று பலர்  பேருந்துகளில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

இப்படி வந்தவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு சுற்று வட்டாரங்கள் குருனாகலை புத்தளம் ஹம்பாந்தோட்டை  ஆகிய இடங்களில் இருந்து (4000 முதல் 3000 வரையிலானவர்கள்) காசுக்காக அங்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள் என்பது  உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

பிரதமர் எம்.ஆர். பதவி விலக மாட்டேன் என்று கொடுத்த உத்தரவாத பூரிப்பில் பிரதமருடனும் நாமலுடனும் செல்பியை எடுத்துக் கொள்வதில் பலர் ஆர்வமாக இருக்க, அங்கே பல குரல்கள் இப்போது காலி முகத்திடலுக்குப் போவோம்…. என்று அவசரப்பட்டுக் கொண்டிருக்க, இன்னும் சில குரல்கள் வேலையை முடித்து விட்ட நாங்கள் ஊர்களுக்குப் போக வேண்டும் என்றும் அவசரப் பட்டுக் கொண்டிருந்தவையும் அவதானிக்க முடிந்தது.

இதற்கான வீடியோ பதிவுகள் சட்ட நடவடிக்கைக்காக தயார் நிலையில் இருக்கின்றன. பல சமூக ஊடகங்களிலும் அவற்றைப் பார்க்க முடிகின்றது.

அப்படி வெளியே வருபவர்களுக்கு இரும்புப் பொல்லுகள் தடிகள் கைகளில் கொடுக்கப்பட அவர்கள் முதலில் ‘மைனா கோ கம’ போரட்டக் களத்தைத் துவசம் செய்யத் துவங்கினார்கள். ஆட்களைத் தாக்கினார்கள்.

கூடாரங்களை எரித்தார்கள் உடமைகளை நாசம் செய்தார்கள். ‘மைனா கம’ தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட மஹிந்த விசுவாசிகள். தமது பிரதான இலக்கை நோக்கி அதவது உக்ரைன் தலைநகர் கியூவை நோக்கி ரஷ்யப் படைகள் நகர்வது போல பொலிஸ் பாதுகாப்புடன் ‘கோட்டா கோ கம’ வுக்குப் போய் அட்டகாசம் பண்ணினார்கள்.

போராட்டகாரர்களைத் தாக்கினார்கள். காயப்படுத்தினார்கள். அந்த நிகழ்வில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசந்தவுடன் இணைந்து நெறிப்படுத்தி இருக்கின்றார் என்பதனை களத்தில் நின்றவர்கள் சட்சி சொல்கின்றார்கள் இதனையும் வீடியோப் பதிவுகள் உறுதி செய்கின்றன.

இது பற்றி ஜனாதிபதி வேட்பாளர் நாகாநந்த கொடித்துவக்குலும், சிறந்த பொலிஸ் எஸ்எஸ்பி விருது பெற்றவரும் அரசியலில் இருந்து பொலிஸ் தினைக்களத்தை மீட்டெடுப்பதற்கான அமைப்பின் சர்வதேசத் தலைவருமான அஜித் தர்மபால என்போர் உறுதி செய்கின்றார்கள்.

தெரிவு செய்யப்பட்ட பல பொலிஸ் அதிகாரிகள் அத் தாக்குதலுக்கு உதவி இருப்பதாக பகிரங்கமாக அவர்கள் பெயர் குறிப்பிட்டுக் கூறுகின்றார்கள். அதனால்தான் தேசபந்து தென்னகோனுக்கு நெத்தியடி போலும்.

‘கோட்டா கம’ த் தாக்குதல் எதிர் பார்த்த வெற்றி இலக்கை எட்டும் முன்னர் கள நிலவரம் முற்றாக மாறியது. இப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்த்த ஜேவிபி. முன்னணித் தலைவர்கள் குறிப்பாக லால் காந்த மற்றும் பலரும் தமது சகக்களுக்கும் தமது தொழிற்சங்க உறுப்பினர்களுக் தாக்குதல் பற்றிய செய்தி அனுப்ப மின்னல் வேகத்தில் அவர்கள் களத்துக்கு வர, பதிலடி துவங்கியது. இது இலங்கை வரலாற்றி நாம் முதல் முறையாகப் பார்த்த காட்சிகள். 1956 ஹர்த்தலை விட இது அட்டகாசமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

வைத்திய, ரயில்வே, தபால் மற்றும் அரச காரியாலங்கள் துறை முகம், தனியர் துறையில் கடமையாற்றிக் கொண்டிருந்தவர்கள் அங்கு திறன்டு விட்டனர். அதன் போது நடந்த  காட்சிகளை நாம் எழுத வேண்டியதில்லை. நீங்கள் இன்றும் அவற்றைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

ஆளும் தரப்பினர் மீது தாக்குதல்களையும் நாம் இங்கு பட்டியல் போடவில்லை. அவையும்  நீங்கள் அறிந்தவை.

அடுத்து மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகி தலைமறைவான செய்திகளும் திருமலைக்கு ஹெலியில் இரகசியமாகத் தப்பியோடியதும் தெரிந்ததே. அவர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடப்போகின்றார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் நீதி மன்றம் அவர்களுக்குத் தற்போது தடை உத்தரவு போட்டிருக்கின்றது.

நன்றி: 15.05.202 ஞாயிறு தினக்குரல்

Previous Story

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் உரை:   நிலமை மேலும் மோசமாகும்! மின்வெட்டு 15 மணித்தியாலம்!

Next Story

ரணிலுக்கு சம்பிக்க அதிரடிக் கடிதம்