மே தினம் சொல்லும் செய்திகள்

-நஜீப் பின் கபூர்-

சோசலிஸ்டுக்கள் மற்றும் இடதுசாரிகளுக்கும் அமெரிக்கா மீது என்னதான் கோபங்கள் முரண்பாடுகள் இருந்தாலும் அமெரிக்காவின் குழந்தையான மே தினத்தை மட்டும் அவர்கள் அரவணைத்துக் கொண்டு அனைவரும் ஒன்றுபட்டு இன்று வரை அந்த மே முதலாம் நாளை வெற்றிகரமாக கொண்டாடி வருகின்றார்கள். ‘அமெரிக்கா தொழிலாளர்கள் கூட்டமைப்பு’ மே முதலாம் திகிதி  1886 ல் சிக்காகோ நகரில் 70000 வரையிலான தொழிலாளர்கள் நடாத்திய எட்டு மணி நேர வேலைக்கான கோரிக்கையும் அதற்கு எதிராக அதிகார வர்க்கத்தினர் நடந்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டு 26 பேர் படுகாயமடைந்து பலருக்கு தூக்குத் தண்டனை என்ற வரலாறு நிகழ்வு இதற்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

ஆனால் இந்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றதால் தொழிலாளர் வர்க்கம் தனது போராட்த்தில் அன்று வெற்றிவாகை சூடியது. இதற்கு முன்னர் 12, 18 மற்றும் 20 மணித்தியாலம் வேலை நேரம் வழக்கில் இருந்து வந்தது. அந்த நிகழ்வுதான் இன்று உலகம் பூராவிலும் நினைவு கூறப்படுகின்றது. உலகில் பெரும்பாலான நாடுகள் மே முதலாம் நாளை தொழிலாளர் தினமாகக் கொண்டாடினாலும் அமெரிக்க கனடா போன்ற நாடுகள் இதனை செப்தெம்பர் முதல் வாரம் வரும் திங்கட்கிழமை கொண்டாடி வருகின்றது. இன்னும் சில நாடுகள் அதனை ஒரு விடுமுறை நாளாக மட்டும் அங்கிகரத்திருக்கின்றது.

இலங்கையில் முதலாவது தொழிலாளர் தினம் நாம் கடந்த வாரம் குறிப்பிட்ட  ஏ.ஈ. குனசிங்ஹ என்பவர் தலைமையில் 1933ல் நடை பெற்றது. 1956 ஆண்டு எஸ்.டப்லியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க காலத்தில் இந்தத் தொழிலார் தினம் ஒரு விடுமுறை நாளாக உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப் பட்டது. அன்று முதல் இன்றுவரை இந்த நாள் இலங்கையில் தொழிலாளர்களினால் பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் ஜே.ஆர். காலத்தில் இந்த விழாவை கொச்சைப் படுத்துகின்ற பாணியில் பல நடவடிக்கைசகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

அவர் காலத்தில் இவ்வாறான கூட்டங்களில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதைத் தடுப்பதற்கு இலவச சினிமாக் கட்டணம் அரைக் கட்டணம் என்றெல்லாம் ஏற்பாடுகளை அரசாங்கமே அறிவித்திருந்தது. அந்த வரலாற்றுக் கதைகள் அப்படி இருக்க 2023 ல் நடைபெற்ற மே தினம் தொடர்பாக எமது பார்வையை வாசகர்களுக்கு இந்த வாரம் சமர்ப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம். பொதுவாக பதவியில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் தமது வல்லாதிக்கத்தைக் காட்சிபடுத்துவதற்காகத் தான் இந்த தொழிலாளர் தினத்தை கடந்த காலங்களில் பாவித்து வந்திருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் தொழிலாளர்களுடன் நெருக்கமாக செயலாற்றி வந்த மஹிந்த ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சியினர் ஆளும் தரப்பில் பெரும்பான்மையுடன் இருக்கின்றார்கள். அதே நேரம் ஜே.ஆர். பரம்பறையில் வந்த ரணில் இன்று அதிகாரம் மிக்க ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்திருக்கின்றார். தான் கட்சி சார்பில்லாத ஜனாதிபதியாக செயலாற்றி வருவதால் இந்த மே தின கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று ரணில் முன் கூட்டியே அறிவித்திருந்தார். ஆனால் தனது கட்சி சுகததாச உள்ளரங்கில் நடாத்திய மே தினக் கூட்டத்தில்  அவர் சூம் தொழிநுட்பத்தைப் பாவித்து உரையாற்றி இருந்தார்.

ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முறை மே தினத்தை தங்களது அரசியல் கட்சிகளின் பேராளர் மா நாடு போன்றுதான் இதனை நடாத்தி இருந்தார்கள் என்று சொல்ல வேண்டும். இந்த 2023 மே தினத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான சலுகைகள் பற்றி எந்தக் கட்சியும் கோஷங்களை எழுப்பவில்லை. அதிகாரத்தில் இருப்போர் தொடர்ந்தும் தமது இருப்பை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அதிகாரத்தில் வர எதிர்பார்க்கின்றவர்கள். நாம் எப்படி பதவிக்கு வர முடியும் என்ற கோணத்தை மையப்படுத்தியே இந்த மே தினத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தார்கள் என்பது நமது அவதானம்.

2048 வரை காத்திரு

Make Sri Lanka a developed country by 2048 - President

இப்போது கடந்த முதலாம் திகதி நடைபெற்ற மே தினக் கூட்டங்களும் அவற்றின் கோஷங்கள் தொடர்பாக நேரடியாக பார்க்கலாம் என்று தோன்றுகின்றது.  நாட்டில் அதிகாரம் மிக்க ஜனாதிபதி பதவியில் இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையிலான ஐதேக. தமது ஒரு சில ஆயிரம் ஆதரவாலர்களை கொழும்புக்கு அழைத்து ஜனாதிபதி ரணில் 2048ல் தான் நாடு சுபிட்சமான நாடாக மாறும் அதுவரை நாட்டு மக்களுக்கு மீட்சி கிடையாது என்ற செய்தியை அங்கு அறிவித்ததுடன் அதுவரையிலும் இதே ஜனாதிபதி அதிகாரத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற தோரணையில் மக்களுக்குச் செய்தி சொன்னது. அடுத்து ஐதேக. ஜனாதிபதி அமைச்சரவையில்தான் மே தினம் என்றும் கதை அளக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் தற்போது கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களான ருவன் விஜேவர்தன, செயலாளர் ரங்கே பண்டார, தவிசாளர் வஜிர அபேவர்தன, ஹரின், மனுஷ, அகில விராஜ், மற்றும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரவி கருணநாயக்க ஆகியோர் மேடையில் அமர்ர்ந்திருந்தனர். பேச்சாளர்களை கூட்டத்தை நெறிப்படுத்துகின்றவர் விளித்துப் பேசும் போது ரவியை கட்சிப் பிரதித் தலைவர் என்று அறிவித்தார். நாம் அறிந்தவரை அவருக்கு அப்படி ஒரு பதவி கிடையாது. இரகசியமாக ரணில் பதவிகளை ஏதும் கொடுத்திருக்கின்றாரோ தெரியாது. முதல் நிகழ்ச்சி நிரலில் ரவிக்கு எந்தப் பேச்சும் இருக்கவில்லை. ஜனாதிபதி தலையிட்டுத்தான் அவருக்கு ஒரு பேச்சும் நிகழ்ச்சியில் இடையில் செருகப்பட்டது என்று தெரிய வருகின்றது.

வாய்ப்புக்கு வலைவிரிப்பு!

Rajapaksa Family

இப்போது அதிகாரத்தில் இருக்கின்ற மொட்டுக் கட்சி மற்றும் ராஜபக்ஸாக்களின் மே தினம் பற்றிப் பார்ப்போம். கடந்த காலங்களில் பாரிய பின்னடைவை எதிர் நோக்கி இருந்த மொட்டுக் கட்சியினர் சம்பலில் இருந்து எழ முயன்றார்கள். அது வெற்றி பெறவில்லை அடுத்து மொனராகலையில் இருந்து நிமிர்ந்து நிற்க முயன்றார்கள் முடியவில்லை. ஆனால் இந்த முறை அவர்கள் கொழும்பில் நடாத்தி மே தினக் கூட்டத்தில் தங்களை ஓரளவுக்குச் சரி செய்திருக்கின்றார்கள். ஆனாலும் முறிவு இன்னும் சீராகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தெற்கில் இருக்கின்ற மிகப் பெரிய அரசியல் சக்திகளின் வரிசையில் மொட்டுக் கட்சியும் இருக்கின்றது என்பதும் நமது கருத்து. மூன்றாம் இடத்தில்தான்…, அதன் அளவீட்டு விகித்தில் இடைவெளிகளில் பெரும் இடை வெளியும் இருக்கின்றது. மொட்டுக் கட்சி நடாத்திய மே தினக் கூட்டத்தில் ராஜபக்ஸாக்களை முன்னிருத்தி மீண்டும் பயணிக்கும் ஒரு எதிர்பார்ப்புதான் தொடர்கின்றது-தெரிகின்றது.

மேலும் ரணிலை ஆளும் தரப்பு வேட்பாளரா அடையாளப்படுத்துவதற்கும் கடும் தடை மொட்டுக் கட்சியில் விதிக்கப்பட்டிருக்கிறது. வாய்ப்பு இருக்கின்றதோ இல்லையோ மொட்டுக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஸாக்களில் ஒருவர்தான் வருவார். என்றும் இந்த மே தினம் செய்தி தந்திருக்கின்றது. ஒரு காலத்தில் தலைமறைவாக இருந்த பசில் மீண்டும் மே தின அரங்குக்கு வந்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்புத் தொடர்பில் யோசிக்க வேண்டி இருக்கின்றது. எப்படி இருந்தாலும் தமக்கு இன்னும் களம் வாய்ப்பாக அமையவில்லை என்பதனை ராஜபக்ஸாக்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றார்கள். எனவே இந்தக் களம் தமது வாரிசுகளுக்கு எப்போது சமையும் அப்போதுதான் மக்கள் கருத்துக் கணிப்பு-தேர்தல் என்ற நிலையில்தான் ரணில் மற்றும் ராஜபக்ஸாக்கள் நகர்வுகள் அமையும்.

பச்சோந்திகளே வெளியேறு

பிரதான எதிர்க் கட்சியான சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி மே தினம் பற்றி இப்போது பார்ப்போம். தனது தந்தை இறப்பிற்கும் மே தினத்திற்கும் மிகச் சிறப்பான உறவு இருப்பது தெரிந்ததே. ஆர். பிரேமதாச கொல்லப்பட்டு இந்த மே தினத்திற்கு முப்பது வருடங்கள் பூர்த்தியடைவதும் குறிப்பிடத்தக்கது. எல்லாக் கட்சி மே தினக் கூட்டங்களை அவதானிக்கின்ற போது அவை கட்சிப் பேராளர் கூட்டமாகவே இருந்தது என்று நாம் முன்பு ஓரிடத்தில் சொல்லி இருந்தோம். ஆனால் சஜித் நடாத்திய கூட்டத்தில் அது உச்சம் தொட்டிருந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

தனது கட்சியில் இருக்கின்ற பலர் இரு தோணிகளில் பயணம் செய்வதை அவர் அந்தக் கூட்டத்தில் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருந்ததுடன். தம்முடன் இருப்பவர்கள் தமது பச்சோந்தித் தனத்திலிருந்து விடுபட வேண்டும் அல்லது கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அவர் எச்சரித்திருந்தார். இது உட்கட்சி விவகாரம் கட்சியில் பேசித் தீர்க்க வேண்டிய விடயம் அதனை தொழிலாளர் தினத்தில் பேசி மூக்குடைபட்டார் சஜீத் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிடியைத் தளர்த்தாதீர்

இப்போது நாட்டில் மிகப் பெரிய அரசியல் செயல்பாட்டாளர்களாகப் பார்க்க்கப்படுகின்ற ஜேவிபி, லால் காந்த தலைமையில் நடாத்திய மே தினம் பற்றிப் பார்ப்போம். கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்காக எழுப்பப்பட்ட குரலையோ அல்லது ஊர்வலங்கள் ஊர்திகளை அவர்கள் இந்த முறை தவிர்த்து அடுத்து பதவிக்கு வர இருக்கின்ற அணி என்ற வகையிலான ஒரு பேரணியாகத்தான் இதனை அவர்கள் முன்னெடுத்திருந்தார்கள் என நாம் அவதானிக்க முடிந்தது.

வரலாற்றில் மிகப் பெரிய மே தினப் பேரணியாக அது அமைந்திருந்தது என்பதனையும் நாம் வஞ்சகமின்றி சொல்லியாக வேண்டும். நாட்டில் நடைபெற்ற அனைத்து மே தினக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தாலும் ஜேவிபி மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அவர்களினால் தொடமுடியாத அளவுக்கு அதில் மக்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றி இருந்தார்கள். அங்கு பேசிய கட்சித் தலைவர் மிகவும் புத்தி கூர்மையாகவும் வாய்பை நழுவவிடாமலும் பிடியை இருக்கமாக வைத்திருக்குமாறு அழைப்பு விடுத்ததுடன், பெருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சுயமாக இந்த மே தினத்தில் வருகை தந்தமைக்காக அவர் ஆதரவாலர்களுக்கு அங்கு நன்றி தெரிவித்தார்.

ரணிலுக்கு பாராட்டு

கண்டியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினர் நடாத்திய மே தினத்தைப் பற்றிப் பேசுவதாக இருந்தால். கொழும்புக்கு வெளியே நடை பெற்ற மிகப் பெரிய மே தினக் கூட்டமாக இதனை நாம் எடுத்துக் கொள்ள முடியும். கூட்டத்துக் அழைத்து வரப்பட்டவர்கள் கட்சிகாரர்களோ இல்லையோ முழு நாட்டுக்குமான மே தினமாக கண்டி சந்தைக்கு முன்னாள் நடந்த இந்த சு.கட்சி கூட்டம் அமைந்திருந்தது.

அங்கு பேசிய மைத்திரி இதன் பின்னர் நமக்கு யாருடனும் கூட்டணி கிடையாது என்று பேசினார். கட்சி அவ்வளவு தூரம் மக்களிடத்தில் செல்வாக்குடன் இருக்கின்றது என்று அவர் நினைக்கின்றாரோ என்னவோ தெரியாது. அத்துடன் நாட்டினதும் கட்சியினதும் நல்ல காலம்தான் உள்ளூராட்சித் தேர்தல் தள்ளிப் போன விவகாரம் என்றும் அவர் அங்கு பேசி இது விடயத்தில் ரணிலுக்கு தனது விசுவாசத்தை தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

துயரம் எப்போது நீங்கும்!

நாடு பூராவிலும் ஆங்காங்கே மே தினக் கூட்டங்கள் நடை பெற்றாலும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் அரசியல் செய்கின்றவர்கள் இந்த முறை மே தினக் கூட்டங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கின்றார்கள். அல்லது எடுபடாத கூட்டங்களை போட்டுக் காணாமல் போய் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக ஆரணிகளின் மே தினக் கூட்டமொன்றும் பகிரங்கமாக இந்த முறை கொழும்பில் நடந்திருப்பது சிறப்பம்சமாக இருந்தது.

இப்போது இந்த 2023 மே தினம் அல்லது தொழிலளர் தினம் சொல்லும் செய்தி என்ன என்று பார்ப்போம்.  தமக்கு வாய்ப்புக் கிடைக்கும் வரை இந்த நாட்டில் தேர்தல் ஒன்றை நடாத்த தயாரில்லாத ஆட்சியாளர்கள். தனது கட்சிக்குள் இருக்கின்ற பூசல்களைத் தீர்த்துக் கொள்ளாது அதனை தெருச் சண்டையாக கொண்டு வந்திருக்கும் பிரதான எதிராணி. மௌனம் காக்கும் கடும் போக்காளர். ஜோக்கர்களாகும் தலைவர்கள். காணாமல் போயுள்ள சிறுபான்மை அரசியல் வியாபாரிகள். எனவே குடிகள் மிகுந்த எச்சரிகையாக தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ளும் பாதைகளைத்தான் தேட வேண்டி இருக்கின்றது. இந்த நிலை இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நீடிக்கப் போகின்றதோ தெரியாது?

 நன்றி: 07.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு திப்பு சுல்தான் அச்சுறுத்தலாக இருந்தது ஏன்?

Next Story

கர்நாடகா: தொங்கு சட்டசபை?