முஸ்லிம்களுக்கு கோமா ஹீரோவான சாணக்கியர்

கொரோனா துவக்க காலத்தில் சமூகத்துக்கு இருந்த பயம் அச்சம் தற்போது களைந்து, கொரோனாவுடன் கூட்டு வாழ்க்கை என்பதற்கு நாடு பழகிவிட்டது என்றுதான் எமக்கு கடந்த வாரம் மக்கள் நடமாட்டத்தில் இருந்து பார்க்கக் கூடியதாக இருந்தது. நாம் ஏன் இப்படிச் சொல்கின்றோம் என்றால். கொரோனா நாட்டுக்குள் பிரவேசித்த போது அங்கொன்றும் இங்கொன்றுமாக நோய்த் தெற்றுக்களும் அவ்வபப்போது இறப்புக்கள் நடந்த போதும் நாடே அதிர்ந்து போய் லெக்டவுன் நிலைக்கு வந்தது. இன்று நோய்த் தொற்றும் இறப்புக்களும் வேகமாக அதிகரித்து வருகின்ற போதும் அது பற்றி எவரும் பெரிய அளவில் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. முடக்கிப் போன நகரங்கள், சாலைகளில் இப்போது மக்கள் நடமாட்டங்கள் அதிகரித்து வருகின்றது. எனவே மக்கள் கொரோனாவுடன் கூடி வாழக் கற்றுக் கொண்டு விட்டார்கள்போலும்.!

இந்தக் கொரோனாவுடன் தொடர்புடைய பெரிய இசுதான் இறந்தவர்களின் மரணங்களை அடக்குவதா தகனம் செய்வதா என்ற முரன்பாடுகள். பௌத்த இந்து மரணங்களை எறிப்பதில் பெரிய நெருக்கடிகள் இல்லை என்பது எமது அவதானம். இதற்குக் காரணம் எறிப்பது அந்த சமூகங்கள் காலம் காலமாக நடந்து வருகின்ற சமயக் கிரியைகளுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மற்றும் கிருஸ்துவ சமூகத்துக்கும் அவர்களது சமய நம்பிக்கைப்படி இது ஜீரணித்துக் கொள்ள முடியாத விவகாரம்.

நாட்டில் தெற்க்கில் வாழ்கின்ற கிருஸ்துவ சமூகம் பௌத்த கலாச்சாரப் பாரம்பரியங்களுடன் மிக நெருக்கமாக இருப்பதால் அவர்கள் இறந்த தமது உறவுகளைத் தகனம் செய்வதில் பெரிய அளவில் தமது எதிர்ப்பை இதுவரை காட்டவில்லை. ஆனால் முஸ்லிம்கள் தமது உறவுகளை தகனம் செய்வதில் மிகுந்த மன வேதனையில் இருக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். ஒரு சமூகத்தின் சமய நம்பிக்கைகளுக்கு எதிராக சடலங்களை எறிப்பதற்கு சர்வதேச அமைப்புக்கள் கண்டனங்களையும் எதிர்ப்பையும் காட்டி வருவதையும் நாம் பார்த்து வருகின்றோம்.

ஆனால் அரசாங்கமே நாட்டின் உள்விவகாரங்களில் எவரும் தலையிடக் கூடாது நாம் எமது வைத்தியத் துறை சொல்லுகின்ற படிதான் தீர்மானம் எடுப்போம் என்று அடித்துக் கூறி எழுத்து மூலமாகவே சர்வதேசத்துக்கு தமது நிலைப்பாட்டைத் தெரிவித்தும் விட்டனர். எனவே கொரோனாவால் இறக்கின்ற அல்லது சந்தேகிக்கப்படுகின்ற முஸ்லிம் மரணங்கள் தகனம் செய்வது என்ற நிலைப்பாட்டில் இலங்கை உறுதியாக இருக்கின்றது.

இப்போது கோமவில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் பற்றியும் சிங்கமாக சீறிப் பாய்ந்து ஹீரோவான சாணக்கியன் பற்றிப் பார்ப்போம். தேர்தல் காலங்களில் சமூகத்துக்கு குரல் கொடுக்க எங்களுக்கு வோட்டுப் போடுங்கள் அப்போதுதான் உங்களுக்கான உரிமைகள் சலுகைகளை எங்களால் அள்ளித் தர முடியும் என்று முஸ்லிம் தனித்துவ அரசியல் தலைமைகள் வழக்கம் போல் பேசி வருவதும் தேர்தல் முடிந்ததும் உண்ட வீட்டுக்கு வஞ்சகம் செய்து விட்டு தமது பட்டம் பதவிகளுக்காக ஆளும் தரப்புடன் போய் ஒட்டிக் கொண்டு அதற்கு அரசியல் இராஜதந்திரம் சமூக நலன் என்றெல்லாம் காரணம் சொல்வதும் இப்போது நன்கு புரியப்பட்டிருக்கின்றது.

ஆனால் இந்தப் புரிதல் பற்றி இப்போது விமர்சனம் பண்ணுகின்ற அதே ஆட்கள் மீண்டும் ஒரு தேர்தல் வருகின்ற போது இவற்றை மறந்து அவர்களுடன் ஒட்டிக் கொள்வதும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முதிர்ச்சி இல்லாத தன்மையைக் காட்டுகின்றது. எனவேதான் இந்த அரசியல் சுயநலக்காரர்கள் தமது வியாபாரத்தை வழக்கம் போல் வெற்றிகராமாக செய்து கொண்டிருக்கின்றார்கள். பொதுவாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அரசியல் விளிப்புணர்வு என்பது மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கின்றது என்பதனை விட அது பாதாளத்தில்தான் விழுந்திருக்கின்றது. எனவே மீண்டும் ஒரு அஷ;ரஃப் பிறப்பெடுக்கும் வரை நிலமை மிகவும் ஆபத்தானது.

தற்போது முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் என்பது தனிமனித வழிபாடாக இருக்கின்றது. மு.கா. என்ற கட்சி தற்போது ஹக்கீம் நலன்; பேனும் அமைப்பு என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் அதிகாரம் மிக்க பதவியில் அமர்ந்தால் தமக்கு ஏதாவது சாப்பாட்டுக்கு வழிகிடைக்கும் முள்ளையாவது தருவார் என்று எதிர்பார்க்கும் ஒரு கூட்டம்தான் அவரை சுற்றி வளைத்து நிற்க்கின்றது. ரிஷhட் அரசியலும் அதே பாணியில்தான் போய் கொண்டிருக்கின்றது. இப்போது சஜித் தரப்புக்கு முஸ்லிம்கள் தேர்தலில் கனிசமான வாக்களித்தாலும் அங்குள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளினாலும் சமூகத்துக்கு காத்திரமான எந்த நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் பேரின சமூகத்துக்கு வக்காளத்து வாங்கியே தமது அரசியல் வாழ்வை நடாத்திக் கொண்டிருப்பதால் அவர்களால் முஸ்லிம் சமூம் எதுவுமே எதிர்பார்க்க முடியாது.

ஆளும் தரப்பில் சில முஸ்லிம் உறுப்பினர்கள் என்ற நிலை மாறி அங்கு இப்போது அதிகளவு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களால் அங்கு எதுவுமே செய்ய முடியாது. எழும்பு என்றால் எழும்புவது இரு என்றால் இருப்பது. அங்கு அவர்கள் தேகப்பியாசம் தன் பண்ணிக் கொண்டிருக்க முடியும். பேரினக் கடும் போக்காளார்கள் தற்போது ஆளும் தரப்பில் மிகவும் வழுவாக தமது பிடியை இருக்கி இருக்கின்றார்கள். எனவே அங்கிருபபோரும் புதிதாக அரசுடன் ஒட்டிக் கொண்டவர்கள் ஒட்டிக் கொள்ள எதிர்பார்க்கின்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்தில் சமூகத்துக்கு என்று எதையுமே பெற்றுக் கொடுக்க முடியாது. இதற்கு மரணம்-ஜனாசா எறிப்பு நல்ல உதாரணம்.

 

ஆளும் தரப்புக்கு 20 தொடர்ப்பில் பெரும்பான்மை தேவைப்பட்ட போது அதற்கு ஹக்கீம் தரப்பிலும் ரிசாட் தரப்பிலும் ஆதரவு கொடுத்த உறுப்பினர்கள் கட்சித் தலைமைகளின் இனக்கப்பாட்டுடன்தான் அதற்குக் கை உயர்த்தினார்கள் என்பதற்காக வழுவான ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றது. சந்தர்ப்பம் வருகின்றபோது அதனை நாம் வாசர்களுக்கு சொல்ல இருக்கின்றோம். தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யும் முன்பே பலர் ராஜபக்ஸாக்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடாத்தி முடிந்து இருந்தார்கள் என்பதனையும் நாம் கடந்த காலங்களில் சொல்லி வந்திருக்கின்றோம்.

இதற்காக முஸ்லிம்கள் ராஜபக்ஸாக்களுடன் அரசியல் செய்யக் கூடாது என்று நாம் சொல்ல வரவில்லை. இவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றார்கள் என்பதனைத்தான் சொல்ல வருகின்றோம். தேர்தல் காலங்களில் ராஜபக்ஸாக்களை சமூகத்துக்குப் பயங்கரவாதிகளாக காட்டினார்கள். சஜித்தான் முஸ்லிம்களுக்கு நல்ல தலைவர் என்றார்கள் அவருக்குத்தான் வெற்றி என்றார்கள். இப்போது அதே சஜித்துக்கு துரோகம் பண்ணி விட்டு அந்தக் கட்சி வாக்காளர்களை ஏமாற்றி பெற்றுக் விட்டு வழக்;கம் போல் இந்த முறையும் பல்டியடித்தார்கள் அடிக்கவும் இருக்கின்றார்கள்.

எனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் முற்றும் முழுதாக சந்தர்ப்பவாத அசியலைத்தான் செய்கின்றார்கள். இது அவர்களது தனிப்பட்ட அரசியல் இருப்பையும் நலன்களையும் அடிப்படையாகக் கொண்ட விவகாரம் என்பதை முஸ்லிம் சமூகம் நன்கு அறிந்து வைத்திருந்தாலும் அவர்களின் அரசியல் அறிவீனம் காரணமாக மாற்றீடுகளுக்கான மார்க்கங்களை அவர்கள் இனம் காண முடியாத ஒரு நிலையும், அதற்கான வழிகாட்டல்கள் இல்லாத தன்மையும் முஸ்லிம்கள் தரப்பில் தற்போது காணப்படுகின்றது.

இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள சமூகத்துக்கும் தமிழர்களுக்கும் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் முறன்பாடுகள் காணப்படுகின்றன. அதே போன்று சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் முரன்பாடுகள் இருக்கின்றன. அதே நேரம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரன்பபாடுகள் இருக்கின்றன. அதே போன்று இந்த சமூகங்கள் மத்தியில் இனக்கப்பாடுகளும் இல்லாமல் இல்லை. தற்போது நாடு போய் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்கள் தமக்குள் புரிந்துணர்வுடன்; தீர்மானங்களுக்கு வராத வரையில் பேரின சமூகத்தினரிடமிருந்து எந்த உரிமைகளையோ சலுகைகளையோ இந்த இரு சமூகங்களும் பெற்றுக் கொள்ள மாட்டாது.

இந்த இரு சமூகங்களும் இணைந்து வடிவமைக்கின்ற ஒரு வேலைத் திட்டதால் மட்டுமே ஏதாவது கல்லில் நார் உரிப்பது போல் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கான அழுத்தங்ளை லாவகமாக வடிவமைப்தில்தான் அதன் பலா பலன்கள் தங்கி இருக்கின்றன. முதலில் இந்த இரு சமூகத்தினர் மத்தியிலும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்பு மன நிலையும் வர வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் சாணக்கியன் முஸ்லிம் கொரோனா மரணங்கள் பற்றி ஆற்றிய உரை இதற்கு ஆரோக்கியமான ஒரு துவக்கமாகக் கூட எடுத்துக் கொள்ள முடியும்.

வடக்கு கிழக்கில் அரசியல் செய்கின்ற தமிழ் முஸ்லிம் தலைமைகள் முதலில் தமது சந்தர்ப்பவாத அரசியலை கைவிட்டு இரு சமூகத்தனதும் பொது வேலைத் திட்டம் என்ன அதனை அடைவதற்கான அரசியல் வியூகங்கள் எவை என்பதனை இதய சுத்தியுடன் கலந்து பேச வேண்டும். தேர்தல் காலங்களில் தமிழர்களும் முஸ்லிகளை ஒருவரை ஒருவர் ஆக்கிரமிப்பாளர்கள் என்று அவர்கள் மத்தியில் பகைமையை வளர்த்து தமது பிரதிநிதித்துவம் பற்றிப் பேசுவதுதான் மிகவும் ஆபத்தான செயல்பாடுடாக இருந்து வருகின்றது. அஷ;ரஃப் சொன்ன பிட்டுக் கதையில் மாவும் தேங்காயும் தான் வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அரசியல் இருப்பும் வெற்றிகளும் தங்கி இருக்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ கூடித்தான் இந்த இரு சமூகங்களும் வாழ்ந்து ஆக வேண்டும்.

நாடாளுமன்றத்தில் சாணக்கியன் முஸ்லிம்களின் கொரோனா மரண தகனம் பற்றி பேசிய சில வார்த்தைகள் இன்று அவருக்கு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒரு ஹீரோ நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. தேர்தல் காலங்களில் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க நாங்கள் நாடாளுமன்றம் போக வேண்டும் என்ற முஸ்லிம்கள் ஏன் அங்கே கோமா நிலையில் இருந்தார்கள் என்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன. இந்த அரசாங்கத்தில் அவர்கள் இன்னும் பட்டம் பதவிகளையும் அரசியல் நலன்களையும் எதிர்பார்க்கின்றார்கள்.

அரசை விமர்சித்தால் அதற்குப் பாதிப்புக்கள் வரும் என்று அவர்கள் கருதுகின்றார்கள். தெற்கில் அரசியல் செய்கின்றவர்கள் தங்களுக்கு சிங்கள வாக்காளர்கள் இல்லாமல் போவார்கள் என்று அஞ்சினாலும் முற்றும் முழுதாக முஸ்லிம் வாக்குகளில் வெற்றி பெற்று வந்தவர்கள் அதுவும் ராஜபக்ஸாக்களை பயங்கரவாதிகளாக மேடைகளில் பேசி வாக்குக் கொள்யடித்தவர்கள் இப்போது மட்டும் மௌனமக இருக்கின்றார்கள் என்றால் அதற்கு என்ன காரணம். அச்சம் பயம் என்றிருந்தால் சணக்கியனுக்கு மட்டும் அது எப்படி இல்லாமல் போனது.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதங்கள், குழு நிலை விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது ஒட்டு மொத்தமாக முஸ்லிம் தனித்தவ அரசியில்வாதிகள் காணாமல் போய் இருந்தார்கள் அல்லது கோமா நிலையில் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் மு.கா தலைவர் ஹக்கீம் மகர சிறைச்சாலை விவகாரத்தில் மட்டும் இதனால் பெரும் பின் விளைவுகள் ஏற்படும் என்று பேசி இருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆனால் முஸ்லிம்களின் மரணம் தகனம் செய்யப்படும் விவகாரத்தில் குறைந்தது சாணக்கியனுக்கு துணைக்காவது சில வார்த்தைகளைப் பேசி இருக்கலாம். ஆனால் பின்னர் சணக்கியனுக்கு வெளியே வந்து சுப்பர் ஸ்பீச் என்று தோளில் தட்டியும் கொடுத்தார்கள் பல முஸ்லிம் உறுப்பினர்கள். அதே நேரம் தங்களைப் பற்றி சாணக்கியன் செய்த விமர்சனங்களில் அவர்களுக்கு நோவினையும் இருக்கின்றது.

தேர்தல் வந்தால் என்ன தமக்குகாக குரல் கொடுத்த சாணக்கியனுக்கு எந்தவொரு முஸ்லிமும் வாக்குப்போடப் போவதுமில்லை. கடந்த காலங்களில் ஜேவிபி காரர்கள் முஸ்லிம்களுக்கு சார்பாக பல இடங்களில் பேசினார்கள் என்பதற்க்காக எவராவது அவர்களுக்கு ஆதரவு கொடுத்து நன்றிக்கடன் செலுத்தினார்களா? எனவே நாடாளுமன்றத்துக்கு முஸ்லிம்க் போக வேண்டும் அவர்கள் தமக்காக குரல் கொடுப்பார்கள் என்பதெல்லாம் வெறும் மாயை என்பதனை இந்த தகனம் விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் 20 நாள் முஸ்லிம் பச்சிலம் குழந்தையொன்று கொரோனாவால் மரணித்தது ஆனால் அவர்களுடைய தாய் தந்தை எவருக்குமே கொரோனா தொற்று இருக்கவில்லை என்று பரிசோதனையில் தெரிய வந்திருக்கின்றது. ஆனால் அப்படியானால் எப்படி அந்தப் பச்சைக் குழந்தைக்கு கொரோனா வந்தது. கடந்த புதன் கிழமை அந்தப் பச்சைக் குழந்தையும் நெருப்பில் எறிந்து சாம்பலாகியது. அதற்கு கோமாவில் இருந்தவர்களும் 20க்கு கைகளை உயர்த்தியவர்களும் அதற்றுப் பச்சைக் கொடி காட்டிய தலைவர்களும் நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இருபதற்கு ஆதரவாக கையைத் தூக்குங்கள் என்ற தலைவர்களுக்கு எதிராக கட்சியில் தற்போது பிரச்சினை துவங்கி இருக்கின்றது அவர்களுக்கு ஒழுகாற்று நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு முன்னாள் மு.கா. உறுப்பினர் அலி சாஹீர் மௌலான தலையைக்குக் கடிதம் எழுதி இருப்பதுடன் தான் கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் அதில் சொல்லி இருக்கின்றார். தலைவர் அவரது குற்றச்சாட்டு நியாயமானது என்றும் தான் அவர் இராஜினாமாவை ஏற்கவோ மறுக்கவே இல்லை என்று தற்போது சொல்லி வருகின்றார். மௌலான வேறு கட்சியுடன் போய் சேர்ந்த பின்னரும் இராஜனாமா ஏற்கப்பட வில்லை என்பதுதான் வேடிக்கை. இந்த முஸ்லிம் அரசியலை யாரிடம் சொல்லி அழுவது. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் அரசியலில் இதற்கு மேல் என்னதான் எதிர்பார்க்க முடியும்.

இந்த இடத்தில் சாணக்கியன் உரை பற்றி சில வார்த்தைகள் இங்கு கட்டாயம் சுட்டிக்காட் வேண்டும். அவரது உரையில் முஸ்லிக்கள் அவரைப் போற்றிப் புகழ்வதற்கு என்னதான் இருக்கின்றது? அதுவும் அவர் கொரோனா மரணங்கள் அடக்கம் செய்வதன் அவசியத்தை ஓரிரு வார்த்தைகளைத்தானே அங்கு பேசி இருந்தார். ஆனாலும் அந்த வார்த்தைகள் முஸ்லிகளுக்கு மிகப் பெரிய ஒரு திருப்த்தயைக் கொடுத்திருக்கின்றது. அதனால்தான் அவருக்கு இந்தளவு பாராட்டுக்கள். தமக்காக குரல் கொடுக்க வந்தவர் குப்புறப்படுத்து கோமவில் நிற்க்கின்ற போது. சாணக்கியன் உரை சில நிமிடங்கள் ஆக இருந்தாலும் அது நமது பாராளுமன்ற வரலாற்றில் சிறுபான்மை சமூகத்துக்கு மட்டுமல்ல பெரும்பான்மை சமூகத்துக்கும் அதில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றது.

இதற்கு அப்பால் சணக்கியனது மொழியாற்றல் ஆளும் தரப்பில் பலர் கூக்குரலிடும் போது எந்த விதமான கலக்கமோ வார்த்தைப் பிசகலோ தடுமாற்றங்களும் இல்லாமல் சிங்கம் போல் காட்டிய துணிவு நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல தமது இளைய தலைமுறையினருக்கும் நல்ல முன்மாதிரியாகும் என்பது கட்டுரையாளன் கருத்து. மறுபுறத்தில் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருப்பது போல் ஆபத்துக்களுக்கும் நிறையவே இடமிருக்கின்றது. அவரது கருத்துடன் உடன் படாத நமக்குத் தெரிந்த பல சிங்கள சகோராதரர்கள் கூட அவரை பாராட்டினார்கள். சிங்கள சமூகத்தை அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் பிழையாக வழிநடாத்தி வருகின்றார்கள் என்பதிலும் சாணக்கியன் கருத்துடன் பெரும்பான்மையினர் பலர் ஒத்த கருத்தில் இருப்தையும் நாம் பார்க்ககூடியதாக இருந்தது.

சிறுபன்மையினரில் பேச்சு சுதந்திரத்தைக் கூட தற்போது உங்களால் ஜீரனித்தக் கொள்ள முடியாதிருதிருக்கின்றது. நாளுக்கு நாள் நாடு சீனாவின் கொலனியாக மாறிவருகின்றது. அவர்கள் நலன்களுக்காகத்தான் இங்கு அபிவிருத்திப் பணிகள் நடக்கின்றன்றன. இது நமது நலன்களுக்கானதல்ல. கடந்த 72 வருடங்களாக சிங்கள சமூகத்தை நீங்கள் ஏமாற்றி வருகின்றீர்கள் அவர்கள் அப்பாவில். அரசியல் வாதிகள் தங்களது இருப்புக்கத்தான் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்கள் இனங்கள் மத்தியில் பிளவுகளை உண்டு பண்ணுகின்றார்கள். எனவும் சாணக்கியன் அங்கு துணிவுடன் கர்ச்சித்ததை பார்க்கும் போது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றுத் தெரிகின்றதோ என்று எண்ணத் தோன்றுக்கின்றது.

சாணக்கியன் பேச்சுக்குப் பின்னர் முஸ்லிம் தலைவர்களுக்கு இப்போது புதுத் தெம்பு பிறந்து அவர்களும் வாய்திறக்கத் துவங்கி இருக்கின்றார்கள். இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் இருவிதமான சட்டங்கள் இருக்கின்றன. சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் என்று அது போய்க் கொண்டிருக்கின்றது. என விக்னேஷ;வரன் குறிப்பிட்டிருந்தார் என்பதும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

அதிபராகிறார் பைடன் ட்ரம்ப் சகபடிகள் பலர் அந்தர் பல்டி!

Next Story

எதிர் நீச்சல்காரி ஜூவைரியாவுக்கு! சர்வதேச விருது