மீண்டும் நாட்டில் அராஜக அரசை நிறுவ முயற்சி !

-நஜீப் பின் கபூர்-

Maha Sangha conference' begins in Colombo - DailyNews

நன்றி:22.02.2026 ஞாயிறு தினக்குரல்

சலுகைகள் வரப்பிரசாதங்களை இழந்தவர்களின் ஒப்பாரி இது!

நாமலை இரண்டாம் இடத்துக்கு கொண்டு வரும் ஒரு முயற்சி!

நீதியை நிலைநாட்டுவதை பௌத்தத்துக்கு ஆபத்து என்பதா?

LEN - www.lankaenews.com | Call to Overturn Presidential Pardon Given to Gnanasara

நமது கட்டுரை அச்சேரிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் மீண்டும்  நாட்டில் அராஜக அரசொன்றை நிறுவுவதற்கான ஒரு கடும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் இங்கு எதனைச் சொல்ல வருகின்றோம் என்றால் கங்காராமையில் ஆனந்த முறுத்தெட்டுவே தேரர் தலைமையில் மீண்டும் ராஜபக்ஸாக்களை அதிகாரக் கதிரையில் ஏற்றுவதற்காக நடந்து வரும் முயற்சி பற்றிய கதைதான் இது. இந்த நாட்டில் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பௌத்த சாசனத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது. இனியும் பொறுத்திருக்க முடியாது என்பதுதான் இதன் ஏற்பாட்டாளர் முறுத்தெட்டுவே தேரர் வாதம். அப்படி என்னதான் இவர்கள் சொல்லும் பௌத்தத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்து என்பதனை இப்போது பார்ப்போம்.

இன்று நாட்டில் இருக்கின்ற மிகப் பெரிய ஒரு ராஜபக்ஸ விசுவாசிதான் இந்த முறுத்தெட்டுவே தேரர். அதனால்தான் அவர் தனது தலைமையில் இயங்கி வருகின்ற கங்காராம விகாரையை ராஜபக்ஸாக்களின் முகாமாக மாற்றி இருக்கின்றார். இது ஒரு நன்றிக் கடனும் கூட! அவர் தனிப்பட்ட ரீதியில் ராஜபக்ஸாக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட சலுகைகள் வரப்பிரசாதங்கள் என்று நீண்ட பட்டியலும் இருக்கின்றது. இப்போது என்ன பிரச்சனை என்றால் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் இந்த ராஜபக்ஸாக்கள் கூண்டோடு பட்டு போய் விட்டார்கள். ராஜபக்ஸாக்களில் நாமல் மட்டும் அதுவும் தேசியப்பட்டியல் மூலம் இன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்றார். ராஜபக்ஸாக்களின் வீழ்ச்சியால் அவர்கள் மூலம் சலுகைகள் வரப்பிரசாதங்கள் பெற்று வந்த நிறையப்பேர் இன்று பிழைப்பின்றி சந்தியில் நிற்கின்றார்கள்.

இதனால் மீண்டும் எப்படியும் விரைவில் ராஜபக்ஸாக்களை அதிகாரத்துக்குக் கொண்டு வந்தால் மட்டுமே தமக்கு எதிர்காலம் இருக்கும் என்ற கருதும் பலர் இந்த நாட்டில் இருக்கின்றார்கள். இது இயல்பான ஒன்றுதான் அப்படிப்பட்டவர்களில் இந்த முறுதெட்டுவே தேரர் முதன்மையானவர். எனவே மக்கள் மத்தியில் மீண்டும் ராஜபக்ஸாக்கள் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்குச் சமாந்திரமாக ஜனாதிபதி அனுரகுமார மற்றும் என்பிபி. அரசாங்கத்தினதும் செல்வாக்கை சிதைக்க வேண்டும். அவர்கள் பக்கத்தில் இது நியாயமான ஒரு நிலைப்பாடுதான். இதனால்தான் கடந்த காலங்களில் ராஜபக்ஸாக்களை அதிகாரத்துக் கொண்டுவர பாவித்த அதே இனவாதத்தைக் கிளரி மீண்டும் ஒரு ஏற்பாடு நாட்டில் நடைபெற்று வருகின்றது.

Court orders Gnansara thero to vacate forcibly seized luxury house - Newswire

நாம் முன்பு சொன்ன பௌத்தத்துக்கு பேராபத்து என்ற பெயரில் விஜயராமையில் 8000 பௌத்த தேரர்களை அழைத்து அதற்கெதிரான நடவடிக்கைகளுக்கு இவர்கள் திட்டமிடுகின்றார்கள். அப்படியான ஒரு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இருபதாம் (20) திகதி கொழும்பில் முறுத்தெட்டுவே தேரர் தலைமையில் ஏற்பாடாக இருந்தது. இப்போது அதன் பெறுபேரு ஊடகங்களுக்குக் கிடைத்திருக்கும். இதனை இவர்கள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றார்கள் என்றால் சில வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை அரச காணியில் சட்டவிரோதமாக புத்தரை குடியமர்த்தியது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அதில் சிலர் பௌத்த தேரர்கள். அவர்களைக் கைது செய்தது தவறு. தடுப்புக் காவலில் வைத்தது தவறு என்பதுதான் இவர்களது வாதம்.

இதிலிருந்துதான் இந்த பௌத்தத்துக்கு பேராபத்து என்ற கச்சேரியை  இவர்கள் துவங்கி இருக்கின்றார்கள். பௌத்த தேரர்களைக் கைது செய்தது தவறு என்பது இப்போது இவர்கள் முன்னெடுக்கின்ற வாதமாக இருக்கின்றது. அப்படியானால் இந்த பௌத்த தேரர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் அவர்கள் சட்டத்துக்கு அப்பால் பட்டவர்கள் என்பதுதான் இதன் பொருள். இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.? இந்நாட்டில் பௌத்த தேரர்கள் படுகொலைகளைச் செய்திருக்கின்றார்கள். போதை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

பாலியல் குற்றவாளிகளாகி இருக்கின்றார்கள். பண மோசடியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த முறுத்தொட்டுவே தேரருக்கும் போதை வியாபாரிகளுக்கும் தொடர்புகள் இருந்ததற்கான  ஆதாரங்களும் இருக்கின்றது. ருவன் குணவர்தன என்ற போதை வியாபாரியின் கோடிக்கணக்கான  டப்லியுபிகேடப்லியு (WPKW) 1469  லேன்கூர் வாகனம் விஜயராமையில் தேரர் பொறுப்பில் இருந்து பிடிக்கப்பட்டு பதிவுகள் பொலிசில் இருக்கின்றது. அது எப்படி?

உலகின் என்னென்ன பாதக செயல்கள் நடக்கின்றனவோ அவற்றை எல்லாம் தேரர்களும் செய்து வந்திருக்கின்றார்கள். அவர்களும் சராசரி மனிதர்கள் என்பதால் இப்படி நடப்பதும் இயல்பானதே. அப்படி இருக்கும் போது தேரர்களுக்கு சட்டத்தில் விதிவிலக்கு என்பது என்னவாதம்.!

இதற்கு சமாந்திரமாக ஐமச. தலைவர் சஜித் கூட இது போன்ற பிரச்சினைகளை நீதிமன்றம் கையாளக் கூடாது. அதற்குப் புறம்பானதொரு அமைப்பு நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் பகிரங்கமாக பேசி இருந்தார். அவருக்கு பக்க துணையாக இருந்த-இருக்கும் சிறுபான்மை அரசியல் செயல்பட்டாளர்கள் எவரும் இதுவரை இது என்ன கருத்து என்று அவரிடம் கேள்வி எழுப்பவில்லை. அதற்கு அவர்களுக்கு முதுகெழும்பு இல்லை.

எனவே சஜித் அதிகாரத்துக்கு வருவாராக இருந்தால் பௌத்த தேரர்களுக்கு பாதுகாப்பான விஷேடமான ஒரு சட்டம் கொண்டுவரப்படும் என்பதுதானே இதன் பொருள்? அது அப்படி இருக்க ராஜபக்சாக்களுக்கு துணைக்கு வரும் இந்த முறுத்தொட்டுவே தேரர், முதலில் 8000 பௌத்த தேரர்களை கொழும்புக்கு அழைத்து பௌத்தத்தை பாதுகாக்கும் பேரணி நடாத்துவதாக ஊடகங்களுக்கு சொல்லி இருந்தார்.

பின்னர் அந்த எண்ணிக்கையை 2500 வரை கூறுகின்றார். எத்தனை பேர் தேரர் அழைப்பை ஏற்று அங்கு போய் இருந்தார்கள் என்பது இப்போது தெரிய வந்து அது பற்றி விமர்சனங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கும். ஏற்பாட்டாளர் பேரணி பெரு வெற்றி என்பார்கள் மாற்றுக் கருத்தாளர்கள் அதன் பலயீனங்களைத் தூக்கிப்பிடித்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

ராஜபக்ஸாக்களின் ஆட்சிகாலம் பௌத்த இனவாதத்தின் உச்சமாக இருந்து வந்தது. அதிலும் கோட்டாவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கும் அதற்கு பிந்திய சில வருடங்கள் நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு மிகவும் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வந்தை முழு உலகும் பார்த்தது.

சிறுபான்மையினருக்கு அரசியல் தீர்வா? அப்படி ஒரு பேச்சுக்கே இங்கு இடமில்லை என்று கோட்டா காலத்தில் சொல்லப்பட்டது.  ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தில் இருந்த காலப்பகுதி குறிப்பாக இந்த நாட்டில் அரசியல் யாப்பு சட்டம் நீதி மற்றும் பாதுகாப்புத் துறை நடவடிக்கைகள் அனைத்தும் தனிமனிதர்களினது தீர்மானங்களாகவும் விருப்பங்களாகவும்தான் இருந்தது.  என்ன சுற்றுநிருபங்களா? அதனை விட எனது வார்த்தைகள்தான் மேலானது இப்படி ராஜபக்ஸாக்கள் கட்டளைகளையும் நாம் பார்த்தோம். இதனால்தான் இந்த நாட்டில் அரசியல் படுகொலைகள் அரசியல் வன்முறைகள். அரசு சொத்துக்களை தன்னிஸ்டத்துக்கு சூரையாடுவது என்பது உச்ச தலைமை முதல் பிரதேச சபைகள் வரை சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தன.

One Country, One Law and One convicted racist monk | Tamil Guardian

அரசியல்வாதிகள்  நிருவாக அதிகாரிகள் சிற்றூழியர்கள் வரை குறுக்கு வழிகளில் பணம் ஈட்டிக் கொள்ளும் ஏற்பாடுகள் சட்டத்துக்கு முரணாக சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தன. அதுபற்றி கேள்வி கேட்க எவருக்கும் உரிமை கிடையாது என்ற நிலையில் அரச நிருவாகம் போய்க் கொண்டிருந்தது.

இந்த இடத்தில்தான் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கானவர்கள் இதில் நல்ல வருமானம் ஈட்டி வந்திருக்கின்றார்கள். அப்படிப்பட்ட பட்டியலில் நிறையவே பௌத்த தேரர்களும் இருக்கின்றார்கள். இதில் முறுத்தெட்டுவே தேரர் முதன்மையானர். இன்றும் அவருக்கு மாதாந்தம் பல இலட்சம் வருமானங்கள் பலவழிகளில் கிடைத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள். எனவே அவர்கள் மீண்டும் ராஜபக்ஸாவை அதிகாரத்துக்குக் கொண்டு வர முயற்சிப்பது ஒன்றும் ஆச்சரியம் கிடையாது.

அதிகாரத்தில் இருக்கும் இந்த என்பிபி அரசாங்கத்தை உடனடியாக பதவியில் இருந்து விரட்ட முடியாது. ஆனாலும் இந்த ராஜபக்ஸ ஆதரவாலர்கள் இப்போது அவர்களின் அரசியல் இயக்கமான மொட்டுக் கட்சியை இரண்டாம் இடத்துக்குக் கொண்டு வருகின்ற ஒரு முயற்சியில்தான் இறங்கி இருக்கின்றார்கள். குறிப்பாக தற்போது இரண்டு அல்லது மூன்று சதவீதமாக இருக்கின்ற தமது கட்சியின் செல்வாக்கை இனவாத கருத்துக்களை சந்தைப்படுத்தி மீண்டும் கட்டி எழுப்புகின்ற ஒரு ஏற்பாடுதான் தற்போது நாட்டில் நடந்து கொண்டு வருகின்றது.

நாம் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது போல இன்று அரசியல் அரங்கில் முதலாம் இடத்தில் இருக்கின்ற என்பிபியுடன் மோதி 2029ல் பொது ஜனாதிபதி வேட்பாளராக நாமலைக் கொண்டுவருவதாக இருந்தால் அவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சி அரசியலில் இன்று முதலாம் இடத்தில் இருப்பது சஜித். எனவே அவரை இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளி இந்த எதிரணியில் முதலாம் இடத்துக்கு நாமலைக் கொண்டுவர வேண்டும். அத்துடன் மாகாணசபைத் தேர்தல் வருமாக இருந்தால் தனது கட்சிகாரர்களை உற்சாகப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

BBS monk Gnanasara Thera visits Mahinda - Newswire

அதற்கான ஒத்துழைப்புக்களைத்தான் இப்போது இந்த முறுத்தெட்டுவே தேரர் போன்றவர்கள் ராஜபக்சாக்களுக்குச் செய்து கொண்டு வருகின்றார்கள். இது போன்று வருகின்ற நாட்களில் அவர்கள் இன்னும் பல காட்சிகளை அரங்கேற்றுவார்கள். இவர்களின் இந்த முயற்சிகளுக்கு எந்தளவுக்கு மக்கள் மத்தியில் அங்கிகாரம் இருக்கின்றன என்பதனை நாமும் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

சுருக்கமாக இந்த ஏற்பாடுகளை பற்றி சொல்வதாக இருந்தால் ராஜபக்ஸாக்களின் அதிகாரம் பறிபோனதால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட ஒரு கூட்டத்தினரின் ஏற்பாடுகள்தான் இவை என்பது மிகத் தெளிவு.

இவர்களின் கருத்து கோசங்களின்படி இந்த நாட்டில் பௌத்தர்களுக்கு ஒரு சட்டமும் பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கு குறிப்பாக பௌத்த தேரர்களுக்கு சட்டத்தில் விசேட சலுகைகள் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அத்துடன் தாம் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக பெற்று வந்த சலுகைகள் வரப்பிரசாதங்கள் திரும்பவும் தமக்கு கிடைக்கும் ஒரு அரசியல் பின்னணி நாட்டில் தோன்ற வேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. இதற்கு இந்த நாட்டு மக்கள் எந்தளவுக்கு அங்கிகாரம் கொடுக்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாமல் சட்டத்தரணி பரீட்சைக்குத் தோற்றிய ஒழுங்கு. அவர் சகோதரர் யேசித சட்டவிரோதமாக கடற்படை அதிகாரியாகிய முறை. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கக் கோரி நாமல் கொடுத்த சிபார்சுக் கடிதங்கள். பொலிஸ் மா அதிபரே பாதாள உலக குழுக்களை வழிநடாத்தி இருப்பது. மற்றும் படைத்தரப்பினரே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது. அரசியல் தலைவர்களே படுகொலைகளுக்கு பின்னணயில் இருந்தது. இதில் லசந்த எகனலிகொட தாஜூதீன் படுகொலைகள்!

ஈஸ்டார் தாக்குதலின் பின்னணியில் அரசியல் தலைவர்கள் இருப்பதான பரபரப்பான குற்றச்சாட்டுக்கள். அவர்களுக்காக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றமை. நீதிபதிகள் பொலிஸ் மற்றும் படைத்தரப்பினர் வைத்தியர்கள் மற்றும் அரச அதிகாரிகள் நிருவாகிகள் அரசியல் தலைவர்களின் தேவைகளுக்காக பணத்து பணியாற்றி இருப்பது என்பன எல்லாம் இன்று கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இது எவ்வளவு பயங்கரமான செயல்பாடுகள் என்று ஒரு முறை யோசித்துப்பாருங்கள்.

மத்திய வங்கியில் நடைபெற்ற கொள்ளை. குற்றவாளிகள் தப்பியோட ஆட்சியாளர் கொடுத்த வாய்ப்பு. அரச பணத்தை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொள்ளை அடித்தமை எல்லாம் இன்று சர்ச்சையாகி நீதிமன்றத்தின் முன்  வருவதால் ராஜபக்ஸாக்கள் மற்றும் ரணில் விசுவாசிகள் மிகுந்த அச்சத்துக்கு இலக்காகி இருக்கின்றார்கள். எனவே இது தொடர்பான அனுர மேற்கொண்டு வருகின்ற சட்ட நடவடிக்கைகளுக்கு இவர்கள் ஆப்பு வைக்க கடும் பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

இதற்கு பொதுமக்கள் குறிப்பாக சிங்கள மக்கள் தங்களுக்கு எந்தளவுக்கு ஒத்துழைப்பார்கள் என்பதனை மதிப்பீடு செய்யும் ஒரு ஏற்பாடாகத்தான்  இந்த பேரணிகளையும் மா நாடுகளையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். எனவே கடந்த இருபதாம் திகதி முறுத்தெட்டுவ தேரர் மேற்கொண்டிருக்கின்ற நடவடிக்கைகளின் சாதக பாதக நிலமைகள் ராஜபக்ஸாக்களுக்கு அடுத்த கட்ட நகர்வுகளை வடிவமைக்க உதவும் என்பது எமது கணக்கு.

பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் கதிரைக்கான இந்தப் போராட்டங்கள் அப்படி போய்க் கொண்டிருக்க சிறுபான்மை அரசியல் செயல்பாட்டாளர்கள் இந்த அரசியல் நகர்வுகளை எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதில்தான் அந்த சமூகங்களின் அரசியல் எதிர்காலம் இருக்கின்றது. இன்று மீண்டும் திம்புப் பேச்சுகளில் இருந்து ஆரம்பிப்போம் என்போரும் அதற்கு எதிரான கருத்துக்களும் வடக்குக் கிழக்கில் பேசப்பட்டு வருவதை நாம் பார்க்க முடிகின்றது. இந்தக் கருத்துக்கள் அவர்களின் அரசியல் இருப்புக்கும் அங்கிகாரத்துக்குமான ஒரு பரப்புரையாகத்தான் இருக்கும்.

அதற்கு மேல் இதில் ஒன்றும் இல்லை என்பதுதான் நமது கருத்து. ஏனைய சிறுபான்மை தனித்துவக் கட்சிகள் காகம் கறுப்பு என்போருடனும் இல்லை வெள்ளை என்போருடன் பயணிக்கத் தயாராகத்தான் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் சார்ந்த சமூகங்கள்தான் இப்படிப்பட்ட தலைமைகளை நம்பி எப்படிப் பயணிக்க முடியும் என்பதனைத் தீர்மானிக்க வேண்டும்.

ரஜாபக்ஸாக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தற்போது விசாரணைகள் நடந்து வருவதுதான் இந்த முறுத்தெட்டுவ போன்றவர்கள் பௌத்தத்துக்கு ஆபத்து என்ற கோசம் போடுவதன் பின்னணி என்ன என்பதை குடிமக்கள் அறிந்துதான் வைத்திருக்கின்றார்கள்.

Previous Story

குரல்தரும் குறுஞ் செய்திகள்

Next Story

නාමල්ගේ ඔක්ස්ෆර්ඩ් ගමනේ ඇත්ත කතාව