மாயமான நீர்மூழ்கிக் கப்பல்: தொடரும் தேடுதல்!

அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் பாகங்களைக் காணச் சென்றபோது ஒரு மாலுமி உட்பட 5 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பலை காணும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கான தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் டைட்டானிக்கின் உதிரி பாகங்கள் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

இந்த ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. 21 அடி நீளத்தில் டைட்டன் என்ற சிறப்பு நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு பைலர் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்தப் பயணத்திற்கு ஒருவருக்கு (IN.RS.2) SR.RS. 8 கோடி கட்டண வசூலிக்கப்பட்டிருக்கிறது.

அந்தவகையில் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் பகுதியில் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓசன் கேட் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஹமிஷ் ஹார்டிங் (58) பிரிட்டனைச் சேர்ந்த கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் மிக்கவர், ஷாசாதா தாவூத் (48) பாகிஸ்தானின் பெரும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரது மகன் 19 வயதான சுலைமான் தாவூத், பால் ஹென்றி – பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் பைலட், ஸ்டாக்டன் ரஷ், (61), டைட்டானிக் பயணங்களை இயக்கும் நிறுவனமான ஓஷன் கேட்டின் தலைமை நிர்வாகி ஆகியோர் பயணித்துள்ளனர்.

ஆனால் இவர்களின் பயணம் எதிர்பாத்ததுபோல் அமையவில்லை. சரியாக 1 மணி நேர 45 ஆவது நிமிடத்தில் நீர்மூழ்கிக் கப்பல் தனது சிக்னலை அட்லாண்டிக் கடலில் இழக்கிறது. இதனைத் தொடர்ந்து நீர் மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா – கனடாவின் கடற்படை ஈடுபட்டது.

மாயமான நீர்மூழ்கிக் கப்பலில் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் நாளாவது நாளாக மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், ஆக்சிஜன் மெல்ல மெல்ல தீர்ந்து வருவதாக என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நீர் மூழ்கி கப்பலில் பயணித்தவர்கள்

”தேடுதல் பணி எவ்வளவு விரைவாக நடைபெற வேண்டுமோ அவ்வளவு விரைவாக நடைபெற்று வருகிறது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று கனடா – அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. தேடுதல் பணியில் கூடுதல் படகுகள், நீர் மூழ்கி இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணியின் கேப்டன் ஜேமி பிரட்ரிக் கூறும்போது , “ நீர்மூழ்கிக் கப்பலில் எவ்வளவு ஆக்சிஜன் எஞ்சியிருக்கிறது என்பதைக் கணிப்பது கடினமான ஒன்று, ஒவ்வொருவருக்கும் ஆக்சிஜனின் நுகர்வு விகிதம் எவ்வளவு என்று நமக்குத் தெரியாது.” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் மாயமான நீர் முழ்கி கப்பல் 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் திரும்பி வரும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நீர் கப்பலின் முதலீட்டாளர் கூறுகின்றனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.

சீல் – டைட்டன் நீர்மூழ்கி பாதுகாப்பானதா?

’டைட்டன் நீர்மூழ்கி’ பாதுகாப்பானதா? அது எப்படி இயங்குகிறது?
மேட் மர்ஃபி

தற்போது கடலில் மாயமாகியிருக்கும் ’டைட்டன் நீர்மூழ்கி’ அதன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னால், கப்பலின் துணைக் குழுவினரால் பயணத்திற்கான ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன.ஆழ்கடலுக்குள் நீர்மூழ்கி இறங்குவதற்கு முன்னால், துணைக்குழுவினர் அதை வெளியிலிருந்து பூட்டி, பின் போல்ட் மூலம் மூடினர்.

பின் ஆழ்கடலுக்குள் இறங்கிய நீர்மூழ்கி, டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது, அது தன்னுடைய தகவல் தொடர்பை இழந்தது. இந்த நீர்மூழ்கி ஓஷன்கேட் என்னும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது.தற்போது காணாமால் போயிருக்கும் இந்த நீர்மூழ்கியைத் தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.

டைட்டன் நீர்மூழ்கி – ஒரு பார்வை

கடல் மட்டத்திற்குக் கீழே 4000 மீட்டர் ஆழத்தை அடையும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் ‘டைட்டன் நீர்மூழ்கியும்’ ஒன்று. இத்தகைய திறன்கொண்ட நீர்மூழ்கியை, ஓஷன்கேட் என்ற தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது.

‘டைட்டன் நீர்மூழ்கியை’ போலவே ‘சைக்ளாப்ஸ்’ என்ற நீர்மூழ்கியையும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஓஷன்கேட் நிறுவனம் இயக்கி வருகிறது. ஆனால் ’டைட்டானிக் சேதத்தை’ பயணிகள் பார்வையிடுவதற்காகவே அந்த நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ‘டைட்டன் நீர்மூழ்கி’.

’டைட்டன் நீர்மூழ்கி சுமார் 10,432 கிலோ எடையளவைக் கொண்டது. மேலும் இரண்டு குவிமாடம் கொண்ட கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானிய மூடிகளோடு,13 செ.மீ அளவிற்கு ஏரோஸ்பேஸையும் இது கொண்டுள்ளது.

இதனால் கடலுக்கு அடியில் சுமார் 4000 மீட்டர் (13,123 அடி) ஆழத்திற்கு டைட்டன் நீர்மூழ்கியால் செல்ல முடியும்.

‘டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள்’ கடலின் மேற்பரப்பில் இருந்து 3,800 மீட்டர் ஆழத்தில் கிடக்கின்றன. டைட்டன் நீர்மூழ்கியால் அதைச் சென்றடைய முடியும்.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

டைட்டன் நீர்மூழ்கி எப்படி இயங்குகிறது?

’மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போல் அல்லாமல், டைட்டன் நீர்மூழ்கி குறைந்த அளவு சக்தியைக் கொண்டே இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதேநேரம், அது தன்னுடைய இயக்கத்தைத் தொடங்குவதற்கும், நிறுத்துவதற்கும் மற்றொரு தனி கப்பலின் துணையும், ஆதரவும் அதற்குத் தேவைப்படும்’ என அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, டைட்டன் நீர்மூழ்கி முதன்முதலாக அதன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது. அதன் பின் 2021ஆம் ஆண்டு முதல் அதன் அதிகாரப்பூர்வ பயணம் தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு மட்டும் டைட்டன் நீர்மூழ்கி 10 ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் பயணங்கள் அனைத்துமே டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குச் சென்றவை அல்ல.

கப்பல் ஏவுதளத்திலிருந்து புறப்படுவது முதல் மீண்டும் மேற்பரப்புக்குத் திரும்புவது வரை மணிக்கு சுமார் 4 கிமீ வேகத்தில் ‘டைட்டன் நீர்மூழ்கி’ பயணிக்கிறது.

கப்பலுக்குள் வடிவமைப்பு எப்படியிருக்கும்?

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

இந்த நீர்மூழ்கியின் உட்பரப்பு மிகவும் குறுகலாகக் காணப்படுகிறது. வெறும் 670 செ.மீ x 280 செ.மீ x 250 செ.மீ (22 அடி x 9.2 அடி x 8.3 அடி) என்ற கணக்கில் மட்டுமே இதன் கொள்ளளவு இருக்கிறது.

ஒரே நேரத்தில்  மொத்தம் 5 பேர் மட்டுமே இதில் பயணிக்க முடியும். ஆனால் இந்த அளவு மற்ற நீர்மூழ்கி கப்பல்களைவிட பெரியது எனக் கூறப்படுகிறது.

கப்பலின் முன்புறத்தில் உள்ள குவிமாடத்தில் ஒரு பெரிய துவாரம் (porthole) இருக்கிறது. அதன் மூலம் நாம் கடலுக்குள் செல்லும் வழியைப் பார்க்க முடியும். இந்தத் துவாரத்தின் அளவு மற்ற எந்த நீர்மூழ்கிகளிலும் இருப்பதைவிட மிகப் பெரியது என அதன் நிறுவனமான ஓஷன்கேட் தெரிவிக்கிறது.

அதேபோல் அத்தகைய ஆழத்தில், நிலைமைகள் மிகவும் குளிராக மாறும் என்பதால், இந்த நீர்மூழ்கியின் சுவர்கள் தொடர்ந்து தன்னைச் சூடாக்கிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் மட்டுமே இந்த பயணத்தின்போது கிடைக்கும் ஒளியின் ஒரே ஆதாரமாக இருக்கின்றன.

நீர்மூழ்கியின் முன்பக்கத்தில் பயணிகளுக்காக சிறியளவில் கழிவறையும் இருக்கிறது. பயணத்தின்போது ஒருவர் கழிவறையை உபயோகிக்க வேண்டுமென்றால், உள்ளே சென்று அங்கிருக்கும் திரைச்சீலைகளை இழுத்துவிட்டுக்கொள்ள வேண்டும். அப்போது மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் இருப்பதற்காக கப்பலின் பைலட் மெல்லிய இசையை ஒலிக்க விடுவார்.

ஆனாலும் இத்தகைய அசாதாரண ஆழ்கடல் பயணத்திற்குத் தயாராகும்போது, பயணிகள் தங்களது உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என ஓஷன்கேட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதேபோல் டைட்டானிக் கப்பல் சிதலமடைந்து கிடக்கும் பகுதியை அடைந்த பிறகு, அதன் காட்சிகளை ஒளிரச் செய்யும் வகையில் நீர்மூழ்கியின் வெளிப்புறத்தில் சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

அதோடு அந்தக் காட்சிகளைப் பதிவு செய்வதற்காக 4K கேமராக்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கப்பலின் பாதையை நிர்ணயிக்க வெளிப்புற லேசர் ஸ்கேனரும், சோனாரும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தத் தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதை, நீர்மூழ்கிக்குள் இருக்கும் பெரிய டிஜிட்டல் திரையில், பயணிகளால் காண முடியும்.

டைட்டன் நீர்மூழ்கியில், 96 மணிநேரத்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் இந்தப் பயணத்தின்போது பயணிகளின் சுவாச வீதத்தில் மாறுபாடு ஏற்படலாம்.

நீர்மூழ்கியின் பெரும்பாலான உட்பகுதி “off-the-shelf technology”இல் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அதன் நிறுவனம் ஒப்புக்கொள்கிறது. இது இந்த கப்பலின் கட்டுமானத்தை சீரமைக்கவும், இதை எளிதான முறையில் இயக்கவும் பயன்படுகிறது எனவும் அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

டைட்டன் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது?

கடலின் ஆழத்திற்குச் செல்லும் இத்தகைய நீர்மூழ்கி கப்பல்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை நம்மால் பயன்படுத்த முடியாது.

அதற்குப் பதிலாக, ஒரு பிரத்யேக வகையில் செய்தி பரிமாரப்படும் அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக கடலின் மேற்பரப்பில் இருக்கும் குழுவுடன், நீர்மூழ்கிக்குள் இருப்பவர்கள் அறிவுறுத்தல்களைப் பெற முடியும்.

இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையில், நீர்மூழ்கியின் பைலட் கப்பலைச் செலுத்துகிறார். வீடியோ கேம் கண்ட்ரோலர் போல இருக்கும் ஒரு சாதனத்தின் மூலம் அவர் நீர்மூழ்கியைத் தனது கட்டுப்பாட்டில் கடலுக்குள் செலுத்துகிறார்.

தற்போது தொலைந்து போயிருக்கும் டைட்டன் நீர்மூழ்கியின் விமானி ரஷ், கடந்த ஆண்டு சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, நீர்மூழ்கியை இயக்குவது அவ்வளவு சிரமமான காரியமல்ல என்று தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

கடலின் ஆழத்தில் செல்லும்போது, அங்கு நிலவும் கடுமையான அழுத்தங்களை நீர்மூழ்கி கையாள வேண்டும்.

இதற்காக ’கப்பலின் ஒவ்வொரு நகர்வையும், உடனுக்குடன் கணிக்கும் கண்காணிக்கும் அமைப்பை’ ஏற்பாடு செய்துள்ளதாக ஓஷன்கேட் நிறுவனம் அதன் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதேபோல் கடலுக்குள் நிலவும் மாறுபட்ட அழுத்த நிலைகளைக் கண்காணிப்பு செய்ய அதில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நீர்மூழ்கி கடலுக்குள் இறங்குவதற்கு முன்னால், கப்பலின் துணைக்குழு அதை வெளிப்புறத்திலிருந்து பூட்டுகிறது. மேலும் 17 போல்ட்களை கொண்டு வெளிப்புறத்தில் சீல் செய்கிறது.

இத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், இந்தப் பயணத்தில் பல சவால்களும், ஆபத்துகளும் இருப்பதாக ஓஷன்கேட் நிறுவனம், அதன் விளம்பர வீடியோக்களிலேயே குறிப்பிட்டிருந்தது.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

ஓஷன்கேட் நிறுவனத்தால் ‘டைட்டன்’ வடிவமைக்கப்பட்டபோது, நீர்மூழ்கி கப்பல்களைச் சோதனை செய்யும் வல்லுநர்கள் தங்களது ஒருமித்த கவலைகளைத் தெரிவித்திருந்தனர். அதன் வடிவமைப்பில் இருக்கும் ‘பேரழிவுக்கான சிக்கல்கள்’ குறித்து அவர்கள் அப்போதே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதேபோல் ‘டைட்டன் நீர்மூழ்கியின்’ வடிவமைப்பு குறித்து பல தவறான கூற்றுகளை ஓஷன்கேட் நிறுவனம் கூறி வருவதாக ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயணத்திற்கு முன் பயிற்சிகள் அளிக்கப்பட்டதா?

இந்தப் பயணங்களில் கலந்துகொள்ள ஆர்வமுடையவர்களுக்கு, ஆழ்கடல் பயணம் மேற்கொள்வதில் கடந்த கால அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஓஷன்கேட் நிறுவனம் அதன் இணையதளத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் வேறு ஏதேனும் பயிற்சிகள் தேவைப்பட்டால், அது ஆன்லைனில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் பயணிகள் நிச்சயம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் எனவும், தங்களுக்கு வரையறுக்கப்பட்ட இடத்தில் நீண்டநேரம் அமர்ந்துகொள்ளவும், ஏணியில் ஏறுவதற்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டுமெனவும் ஓஷன்கேட் நிறுவனம் கூறுகிறது.

மேலும் பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயணிகளுக்குத் தெரியப்படுத்தப்படும் எனவும் ஓஷன்கேட் கூறுகிறது.

அதேநேரம் “பயணத்தின்போது பயணிகள் எவ்வாறு ஈடுபட விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தேர்வு செய்யலாம்” எனவும் ஓஷன்கேட் கூறுகிறது. தகவல்தொடர்பு குழுக்களுடன் பணிபுரியவோ அல்லது கப்பலின் பைலட்டுக்கு வழிசெலுத்துவதில் உதவும் வாய்ப்பையோ பயணிகள் பெறலாம் எனவும் ஓஷன்கேட் குறிப்பிடுகிறது.

Previous Story

பிரதமர் மோடிக்கு எதிராக முடிவு.. யார் இந்த அமெரிக்க பெண் எம்பிக்கள்!

Next Story

தெளிந்த ஆறாக இந்தியா!