நஜீப் பின் கபூர்
நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல்
இந்த நாட்களில் அரசியல் தலைப்புக்களுக்குப் பஞ்சமில்லை. திரும்பிய பக்கமெல்லாம் பூ பூவாப் பூத்திருக்கின்றது. எந்தப்பூவைக் கொய்வது என்பது போலத்தான் தலைப்புக்கள் கொத்துக் கொத்தாக இருந்தாலும், இந்தவாரம் மாகாணசபைத் தேர்தல் பற்றி பேச நாம் எதிர்பார்க்கின்றோம்.
முன்கூட்டியே சிறுபான்மை சமூகங்களைத் தேர்தலுக்குத் தயார் செய்தல்-தெளிவூட்டுவது என்ற நோக்கத்திலே இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கின்றோம். அதற்கான உரிமையும் எமக்கு இருக்கின்றது.! அது எப்படி? அதற்கு முன்னர் இந்த மாகாணசபைத்தேர்தல் எதனால் தள்ளிப் போனது என்பது பற்றி பார்ப்போம். இனப்பிரச்சினைக்கு ஒரு தற்காலிக தீர்வாகத்தான் இது நமக்கு வந்தது.
வடக்கு கிழக்கை மையப்படுத்தி வந்த இந்த மாகாணசபை அழையா விருந்தளியாகத்தான் ஏனைய மாகாணங்களுக்கு வந்தது. இதனை வெள்ளை யானை என்று அன்று சொன்னவர்கள் தாமும் விரும்பியோ விரும்பாமலோ இந்த மாகாணசபை தேர்தலுக்கும் அங்கிகாரம் கொடுக்க வேண்டி வந்திருக்கின்றது.
போர் வெற்றியைத் தொடர்ந்து அதிகாரத்துக்கு வந்தவர்கள் இந்த மாகாணசபைத் தேர்தல் அவசியம் இல்லை என்ற மனநிலையில் இருந்தார்கள். அதனை அவர்கள் பகிரங்கமாகவும் பேசி வந்தார்கள். ஆனாலும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அதனை இரத்துச் செய்ய அவர்களால் முடியாது. அதனால் திருத்தம் எல்லை நிர்ணயம் என்றெல்லாம் நொண்டிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டு தேர்தலுக்கு பல வருடங்களாக ஆப்பும் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இனவாதிகளின் கடும் அழுத்தங்கள் காரணமாக தெற்கில் உள்ள மாகாணசபைகளுக்கு சிறுபான்மை உறுப்பினர்கள் அதிகளவில் வருவதை தடுக்கின்ற ஒரு சதியும் இந்த புதிய எல்லை நிர்ணயத்தில் இருந்தது என்பதனை நாம் அதில் சம்பந்தப்பட்டவர்கள் என்றவகையில் பார்த்தோம். சரத் விஜேசேக்கர தினேஸ் குணவர்தன போன்ற நிறையப்போர் இதன் பின்புலத்தில் இருந்தனர். அதனையும் நாம் அறிவோம்.
விகிதாசாரத் தேர்தல் முறையால் மத்தி, மேல், மாகாணசபைகளில் கனிசமான சிறுபான்மை உறுப்பினர்கள் தெரிவாகி வந்தனர். புதிய வட்டார முறை தேர்தல் அமுலுக்கு வரும் போது ஒரிரு சிறுபான்மை உறுப்பினர்களைக் கூட அந்த சமூகங்களுக்கு பெறமுடியாத ஒரு வரைபடத்தைதான் அவர்கள் தயாரித்திருந்தார்கள்.
இந்த எல்லை நிர்ணயம் தொடர்பான சந்திப்புக்கள் நடந்த போது சிறுபான்மை சமூகங்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் அவர்களின் அரசியல் கட்சிகள்- செயல்பாட்டாளர்கள் சார்பில் புதிய எல்லை நிர்ணயக்குழு முன் நாம் பல இடங்களில்-சந்தர்ப்பங்களில் அறிக்கைகளை சமர்ப்பித்து அங்கு கருத்துக்களைப் பதிவு செய்த அனுபவம் இருப்பதால் இதுபற்றி நல்ல புரிதலும் தெளிவும் நமக்கு இருகின்றது.
எனவேதான் தற்போது நாடாளுமன்றம் அங்கிகரித்திருக்கின்ற தேர்தல் முறை சிறுபான்மை சமூகங்களுக்கு மிக மிக ஆபத்தானது என்று நாம் அடித்துச் சொல்லி வந்திருக்கின்றோம். வடக்கு மற்றும் கிழக்கில் நிலமை சற்று வித்தியாசமானது. அது பற்றி பின்னர் பேசலாம். நாட்டில் இருக்கின்ற ஏனைய ஆறு மாவட்டங்களில் (மேல், தெற்கு, வடமேல், வட மத்தி, ஊவா, மத்திய சப்ரகமுவ) கனிசமான சிறுபான்மை சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் சிதறி வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.
அணுர அரசு அதிகாரத்துக்கு வராதிருந்தால் இந்த மாகாணசபைத் தேர்தல் ஒரு போதும் நடக்க வாய்ப்புக்கள் இருந்திருக்காது. அப்படி நடந்திருந்தாலும் கடந்த காலங்களுடன் ஒப்பு நோக்கின்ற சிறுபான்மை பிரதிநிதித்துவங்கள் என்பது குதிரைக் கொம்பாகத்தான் அங்கு அமைந்திருக்கும். அந்த நிலைதான் மாகாணசபைத் தேர்தல் விவகாரத்தில் காணப்பட்டது. ஆனால் இன்று நிலை அப்படி இல்லை என்று நாம் அடித்துக் கூறுகின்றோம். மாகாணசபைத் தேர்தல் அடுத்த வருடம் வருகின்றது.

அது பழைய விகிதாசாரத் தேர்தல் முறையில் நடக்கத்தான் அதிக வாய்ப்புக்கள் என்பதனையும் நாம் நம்புகின்றோம். சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களிடம் பேசுகின்ற போது சிறுபான்மை சமூகங்களின் பிரதிநித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை ஜேவிபி. செயலாளர் டில்வின் பகிரங்கமாக பேசி இருந்தார். குறிப்பாக சிதறி வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவராகவே அங்கு சுட்டிக்காட்டினார்.
என்பிபி. அரசு பழைய விகிதாசாரத் தேர்தலுக்குத் தயாராகத்தான் இருப்பதாக நமக்குத் தெரிகின்றது. அவர்கள் அடுத்த வருடம் இறுதியில் தேர்தல் என்று சொன்னாலும் அதிரடியாக முன்கூட்டி ஒரு தேர்தலுக்கு போகவே அதிக வாய்ப்பு. அப்படி தேர்தல் வந்தால் என்பிபி.யுடன் எந்தளவுக்கு இன்றைய எதிர்க்கட்சிகளினால் மோத முடியும் என்பதனைப் பார்ப்போம்.
1.தெற்கு: (பெரும்பான்மை.95 சிறுபான்மை.05 சதவீதம்) தெற்கு குறைவான சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற ஒரு மாகாணம். அங்கு அபூர்வமாகத்தான் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
2.வடமத்தி: (பெரும்பான்மை.90 சிறுபான்மை.35 சதவீதம்) வடமத்தியிலும் நிலை ஏறக்குறைய அப்படித்தான். எனவே இந்த இரு மகாணங்களிலும் சிங்கள மக்களின் விருப்பு வெறுப்புக்களே ஆட்சியை தீர்மானிக்கும்.
3.வடமேல்: (பெரும்பான்மை.86 சிறுபான்மை.14 சதவீதம்) அதே போன்று வடமேல் மாகாணத்திலும் பெரும்பான்மை சமூகத்தினர் ஆதிக்கம் அதிகம். குருனாகல புத்தளம் மாவட்டங்களில் இருந்தும் சிறுபான்மை குறிப்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் விகிதாசாரமுறையில் தெரிவாவதுண்டு.
4.சப்ரகமுவ: (பெரும்பான்மை.92 சிறுபான்மை.8 சதவீதம்) இங்கும் விகிதசார முறையில் மலையக மற்றம் முஸ்லிம் பிரதிநிதிகள் அவ்வப்போது தெரிவாகி இருக்கின்றனர். ஆட்சியை தீர்மானிப்பதில் சிறுபான்மை விருப்பு வெறுப்புக்கள் பெரியளவில் இங்கு செல்வாக்குச் செலுத்த மாட்டது.
5.மத்தி: (பெரும்பான்மை.65 சிறுபான்மை.35 சதவீதம்) மாகாணசபைத் தேர்தலில் நுவரெலிய தீர்க்கமான ஒரு மாவட்டம். கடைசியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் என்பிபி. வேட்பாளர்கள் கனிசமான ஆதிக்கத்தை செலுத்தி சம்பிரதாய மலையக அரசியல் இயக்கங்களுக்கு வலுவான போட்டியைக் கொடுத்தனர். மலையக தமிழர்கள் கூட இப்போது அரசியல் ரீதியில் நல்ல விளிப்பில் இருக்கின்றனர். எனவே அந்த வாக்காளர்களைத் சம்பிரதாய அரசியல் கட்சிகள் திருப்பி தம்பக்கம் எப்படித் வளைத்துப் போடப் போகின்றதோ தெரியாது. (பெரும்பான்மை

கண்டி மாவட்டத்தை எடுத்துக் கொண்டாலும் கனிசமாக சிறுபான்மை வாக்காளர்கள் இருக்கின்றார்கள். கடந்த பொதுத் தேர்தலில் வழக்கமாக ஒரு இலட்சம் வரை வாக்குகளை பெறும் ஹக்கீம் முப்பதாயிரம் வரை வாக்குகளை எடுத்து நூலிலையில் தப்பினார். ஹலீம் மிகக்குறைவான வாக்குகளை எடுத்து தனது நீண்ட காலப் பிரதிநித்துவத்தை இழந்தார். பொதுத் தேர்தலில் கண்டியிலும் மலையக பிரதிநித்துவத்துக்கு நல்ல வாய்ப்பு இருந்தும் அதனை அவர்கள் பறிகொடுத்தார்கள். மாத்தளை மாவட்டத்தில் சிறுபான்மை வாக்குகள் பெரிய அளவில் தாக்கங்களைச் செலுத்தாது.
6.மேல்: (பெரும்பான்மை.84 சிறுபான்மை.16 சதவீதம்) இந்த மாகாணத்தில் கனிசமான சிறுபான்மை வாக்காளர் இருந்தாலும் மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள்தான் அங்கு தீர்க்கமான சக்தியாக இருப்பார்கள்.மேல் மாகாணதில் சிங்கள வாக்காளர்கள் 84 சதவீதமானவர்கள். சிறுபான்மையினர் வெறும் 16 வீதம்தான்.
7.ஊவா: (பெரும்பான்மை.82 சிறுபான்மை.18 சதவீதம்) இங்கு பதுளை மாவட்டம்தான் சிறுபான்மை-மலையக மக்கள் கனிசமாக வாழ்கின்றார்கள். ஆனால் அங்கிருக்கின்ற சம்பிரதாய தலைமைகளை என்பிபி. சார்பில் களமிறங்கிய கிருட்டணம் செல்வராச மற்றும் அம்பிக்க சாமூவேல் போன்னறவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் மண்கௌவச்செய்து விட்டார்கள். அவர்கள் இன்று அங்குள்ள மலையக மக்களின் ஹீரோக்களாக வளர்ந்து வருகின்றார்கள் என்பதனை வஞ்சகமின்றி சொல்ல வேண்டும். எனவே ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் இவர்களின் தாக்கமும் செல்வாக்கும் இருக்கும். செந்தில் மற்றும் சுரேஸ் போன்றவர்கள் அங்கு அணிகளை நிறுத்தக் கூடும். அல்லது பேரினக் கட்சிகளில் களத்துக்கு வரலாம்.
8.வடக்கு: (தமிழர்.92 முஸ்லிம்கள்.4 சிங்களவர்.-3 சதவீதம்) வடக்கில் சுமந்திரன் முதல்வர் கனவில் இருக்கின்றார். ஆனால் தமிழ் உணர்வுகள் இவரை எந்தளவுக்கு ஜீரணிக்கும் என்று தெரியாது. இது தவிர இதர தரப்பினரும் வடக்கு மாகாணசபையைக் கைப்பற்றுவது பற்றி கடுமையாக சிந்தித்து வருகின்றார்கள். அதே நேரம் வடக்கு மக்களுக்கும் மாகாணத்துக்கும் ஒரு மாற்றத்தை கொண்டுவர தங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஆளும் என்பிபி. கோரிக்கை விடுக்கும். ஆனால் வடக்கில் உள்ள மண்வாசைன இந்த இசுவை எந்தளவுக்கு அங்கிகரிக்கும் என்பதில் நமக்கும் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன. வடக்கில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் கடும் சவாலை எதிர் நோக்கினாலும் பலமான ஒரு எதிரணியை ஆளும் தரப்பு அங்கு வைத்திருக்கும் என்பது உறுதி.
9.கிழக்கு: (தமிழர்.39 முஸ்லிம்கள்.37 சிங்களவர்.23 சதவீதம்) அடுத்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஹக்கீம்-சுமந்திரன் ஒரு கூட்டணி பற்றிய கருத்து நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு கிழக்கில் இருக்க்கும் பெரும்பான்மை தமிழர்கள் எந்தளவுக்கு அங்கிகாரம் கொடுப்பார்கள் என்று தெரியாது. அதாவுல்ல முதல்வர் என்ற ஒரு கதையும் இதனால்தான் வருகின்றது.! அதே நேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-ரிசாட் என்ன வியூகத்தை இந்தத் தேர்தலில் வகுக்கப்போகின்றார் என்று தெரியாது. ரிசாட் மீதும் ஒரு நல்லெண்ணம் கிழக்கில் இருக்கத்தான் செய்கின்றது. அதே நேரம் வடக்கிலும் அவருக்கு ஒரு செல்வாக்கு இருக்கத்தான் செய்கின்றது.
பொதுத் தேர்தலில் சிறுபான்மை சமூகங்கள் தமது பொரும்பான்மை வாக்குகளை இங்கு என்பிபி.க்கே வழங்கி இருந்தனர். அந்த வாக்குகள் இந்த முறை எப்படி சமையும் என்பதில் நமக்கும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. கடந்த பொதுத்தேர்தலில் தெற்கில் முஸ்லிம்கள் கண்களை மூடிக்கொண்டுதான் என்பிபி.க்கு வாக்களித்திருந்தனர். மாகாணசபைத் தேர்தலில் என்பிபி. சார்பில் களமிறக்கப்படுகின்ற சிறுபான்மை வேட்பாளர்களுக்கு அப்படி வாக்குகள் வருமா என்று தெரியாது.
குறிப்பாக மேல், மத்திய, ஊவா மாகாணங்களில் எதிரணியினர் சிறுபான்மை வாக்காளர்களை நம்பித்தான்; அங்கு கொடியை நாட்டலாம் என்று நம்புகின்றார்கள். அப்படி ஒரு வாய்ப்பு வந்தாலும் அது சஜித் அணிக்குத்தான். அது எந்தளவு சாத்தியம் என்று தெரியாது.? கல்லில் நார் உரிக்கின்ற வேலையாகத்தான் அது இருக்கும். இவர்களைத் தவிர வேறு எந்த எதிர்க்கட்சிக்கும் அப்படி ஒரு கனவுவைக் கூட காணும் உரிமைகூடக்கிடையாது என்பது எமது இருக்கமான வார்த்தை.
சஜித் தரப்பிலுள்ள நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை தேர்தலில் முதன்மை வேட்பாளர்களாக களமிறங்க தமது உறுப்புரிமையை இராஜினாமாச்செய்ய இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. இது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் விளம்பர உத்தி மட்டுமே.
இவர்கள் சொல்கின்றபடி மாகாணசபைத் தேர்தலுக்கு வந்தாலும் தேர்தல் முடிவுகள் வரும்வரை அந்த இடைவெளியை நிரப்பாது வைத்திருக்க வேண்டும் என்பது அவர்களது கண்டிப்பான வேண்டுகோளாக அமையும். பல கோடி ரூபாய்களுக்கு உறுப்புரிமையை விற்றதுபோல ஏதாவது ஒரு தில்லுமுல்லுத்தான் இதில் இருக்கும். இது சிறுபிள்ளைகளுக்குக் கூட நன்கு தெரியும்.
தெற்கில் முஸ்லிம் மலையக வாக்குகள்தான் மாகாணசபைத் தேர்தலில் என்பிபி-எதிரணி இடைவெளி எந்தளவு கூடிக்குறைந்து அமையும் என்பதனைத் தீர்மானிக்கும். ஆனாலும் இதில் என்பிபி. சிறுபான்மை மக்கள் சார்பில் களமிறக்குகின்ற வேட்பாளர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த இடமிருக்கின்றது. இது ஒரு வேளை எதிரணிக்கு அல்லது சில்லறைக் கட்சிகளுக்கு ஓரிரு ஆசனங்களை மேலதிகமாக பெற்றுக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துவிடலாம். இது பற்றி நாம் பல என்பிபி தலைவர்களிடம் கருத்துப் பறிமாறி வருகின்றோம்.
அதே போன்று நம்முடன் தொடப்பில் இருக்கின்ற எதிரணி அரசியல்வாதிகள் பலரும் தேர்தலில் அவர்களுக்கு உள்ள வாய்ப்புக்கள் பற்றி நாம்முடன் பேசிவருகின்றார்கள். அந்த நேரங்களில் நமது சில கேள்விகளுக்கு அவர்களால் தெளிவான பதில்களைச் சொல்ல முடியாதிருக்கின்றது.
மாகாணசபைத் தேர்தலில் பலப்பரீட்சை நமது பார்வையில் அப்படி இருக்க தெற்கு எதிரணி அரசியல் கட்சிகள் எப்படி பலமான என்பிபியுடன் தாக்குப்பிடிக்கும் என்று பார்த்தால் சஜித்-ரணில் இணைவு இந்த தேர்தலில் ஒரு தீர்க்கமான சக்தியே கிடையாது என்பது எமது கருத்து. இது பற்றி நாம் கடந்த வாரமும் பேசி இருந்தோம். எனவே வேட்பாளர்களை சஜித் அணி பங்கு வைப்பத்தில் எந்த அர்த்தமும் கிடையாது. எதிரணிக்கு பெரும்பான்மை ஆசனங்கள் என்றால் மாகாணசபைகளில் கூட்டரசு பற்றி பேசலாம். தேர்தலில் தனித்துத்தான் என்று சஜித் நிலைப்பாடாக இருக்கலாம். அதுதான் ஆரோக்கியமும் கூட. சில தனித்துவக் கட்சிகள் தேர்லில் ஒரு முரண்பாடான வியூகத்தில் தமது வேட்பாளர்களைக் களமிறக்கும்.

மாகாணசபைத் தேர்தலில் தெற்கில் அரசியல் கட்சிகளை வரிசைப்படுத்தினால் 1.திசைகாட்டி-அணுர 2.தொலைபேசி-சஜித் 3.மொட்டு-நாமல் 4.கை அல்லது அவர்களின் ஏதாவது ஒரு சின்னம் -மைத்திரி 5.யானை-ரணில் 6.சில்லறைகள் என்றுதான் அதன் சரிசை அமையும்.
வடக்கில் தமிழ் தரப்புக்கள்-1 என்பிபி.-2ம் நிலை. கிழக்கில் தமிழ்-முஸ்லிம் அணிகள்-1 என்பிபி-2ம் நிலை. ரிசாட்-3 என்றுதான் பலப்பரீட்சை அமையும்.
இந்தவாரம் நமது கட்டுரையின் அடிப்படை நோக்கம், நிச்சயம் தேர்தல் வருகின்றது. அதற்கு குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் தமது கனதியான வேட்பாளர்களைக் களமிறக்குவது தொடர்பில் ஆளும் எதிரணித் தலைவர்கள் அவதானத்தை செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான். கடந்த தேர்தல்களைப் போல மக்கள் தொடர்ந்தும் மக்கள் கண்களை மூடிக் கொண்டு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை நாம் சொல்லி வைக்கின்றோம்.-எச்சரிக்கின்றோம்.




