மஹிந்த ராஜபக்ஸ துவக்கி வைத்த வன்முறை

இலங்கை பிரதமர்

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலக ஊடகப்பிரிவு செயலாளர் ரோபன் வெலிவிட செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளும் ஆரசாங்கம் நிரந்தரத் தீர்வை வழங்கத் தவறியதாகவும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்து வரும் ராஜபக்ஷ குடும்பத்தினர் அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரி கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினார்கள்.

ஆனால், தமது பதவியில் இருந்து விலக முடியாது என்று கோட்டாபய ராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவும் ஆரம்பத்தில் கூறி வந்தனர். பிரதமர் பதவி விலகுவார் என்று சில முறை ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தபோதும், அதை வெளிப்படையாகவே கோட்டாபயவும், மஹிந்தவும் மறுத்தனர்.

இந்த நிலையில், ராஜபக்ஷ இன்று (மே-9) தமது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், மே 6ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நடந்த இணக்கப்பாடுக்கு அமைய இடைக்கால அரசை அமைக்கவும் அரசியலமைப்பு விதிகளின்படி மேற்கொள்ளப்படும் ஏற்பாட்டுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் மஹிந்த கூறியுள்ளார்.

போராட்டத் திடலில்  தாக்குதல்

முன்னதாக, இன்று நண்பகலில் கொழும்பு காலி முகத்திடலில் ஆளும் அரசுக்கு எதிரான போராட்டக்குழுவினருக்கு போட்டியாக மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டனர்.

அவர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் மற்றும் பிற அமைப்புகளை சேதப்படுத்தினர். எதிரெதிர் குழுவினர் ஒரே போராட்டக்களத்தில் திரண்டதால் அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் தடுக்கும் கையில் தடுப்புகளை போட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இலங்கை போராட்டம்

கொழும்பில் ஆளும் அரசு ஆதரவாளர்களுக்கும் எதிரானவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் காயம் அடைந்த சக உறுப்பினரை அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமந்து சென்றனர்.

இருப்பினும், அதையும் மீறி மஹிந்த ஆதரவுக்குழுவினர் அரசு எதிர்ப்பாளர்கள் இருந்த பகுதிக்குச் சென்று அங்கிருந்தவர்களை கட்டைகளைக் கொண்டும் கைகளாலும் கடுமையாகத் தாக்கினர். இது தொடர்பாக களத்தில் இருந்து வெளி வந்த காணொளியில் போராட்டப் பகுதியில் இருந்த பெண்களை அவர்களின் தலை முடியைப் பிடித்து இழுத்தும் தள்ளியும் தாக்கும் காட்சிகள் இருந்தன.

இலங்கை பிரதமர்

இந்த நிலையில், போராட்டக்குழுவினரை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை போலீஸார் வீசினர். சம்பவ பகுதியில் ராணுவத்தினரும் உள்ளூர் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

98 பேர் காயம்

இதுவரை நடந்த மோதலில் சுமார்98 பேர் காயமடைந்துள்ளதாக ஏஎஃப்பி  தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இதுவரை 26 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. மற்றவர்கள் வேறு சில மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போராட்டம்

திடீர் வன்முறை ஏன்?

நாடு எதிர்நோக்கும் மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இடைக்கால நிர்வாகத்தை அமைக்குமாறு மஹிந்தவின் தம்பியும் ஜனாதிபதியுமான கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய முன்வரலாம் என திங்கள்கிழமை காலையில் இருந்தே செய்திகள் வெளிவந்தன.

இலங்கை போராட்டம்

இதற்கிடையே வன்முறை தீவிரமானதால், மஹிந்த ராஜபக்ஷ தமது ட்விட்டர் பக்கத்தில், “வன்முறை செயல்பாடுகள் அந்த வன்முறையை மேலும் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தேவை ஒரு பொருளாதார தீர்வு மட்டுமே. அதற்கு இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது ட்விட்டர் பக்கத்தில், “வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறை தற்போதைய பிரச்னைகளைத் தீர்க்காது. அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் தனித்தனியாக தங்களின் ட்விட்டர் பக்கங்களில் இடுகைகளை பகிர்ந்த அடுத்த சில நிமிடங்களில், பிரதமர் மஹிந்த தமது பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியதாக தகவல் வெளிவந்தது.

எதிர்கட்சித் தலைவர் மீது தாக்குதல்

முன்னதாக, இன்று காலையில், அரசு எதிர்ப்பாளர்கள் மீது மஹிந்த ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்ட சிலர் கடுமையாக தாக்குதல் நடத்தியதால் போராட்டக்களத்தின் பிரதான இடமான காலி முகத்திடலில் பதற்றம் நிலவியது.

Demonstrators and government supporters clash outside the official residence of Sri Lanka's Prime Minister Mahinda Rajapaksa

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வீட்டுக்கு வெளியே மோதிக்கொள்ளும் அரசு ஆதரவுக் குழுவினர் மற்றும் எதிர்ப்பாளர்கள்

இந்த நிலையில், சமகி ஜன பலவேகயவின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச போராட்ட பகுதிக்கு வந்தார். அவரை ராணுவ அதிரடிப்படை வீரர்களும் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

இலங்கை பிரதமர்

அவர்கள் காலி முகத்திடல் பகுதிக்குள் நுழைந்த வேளையில், அவரை நோக்கி மஹிந்த ஆதரவாளர்கள் கட்டைகளையும் தண்ணீர் பாட்டில்களையும் வீசினார்கள். சஜித் இருந்த இடத்தில் சில கட்டைகள் விழுந்தன. இதையடுத்து அவரை சூழ்ந்து கொண்டு போலீசார் வாகனத்தில் ஏற்றினர். அந்த வாகனத்தை நோக்கியும் கட்டைகள் வீசப்பட்டன.

இலங்கை பிரதமர்

கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே அரசாங்க ஆதரவாளர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த ஒருவரை சுமந்து செல்லும் போலீஸார்.

வன்முறை சம்பவங்கள் தீவிரமானதால் கொழும்பில் ஊரடங்கு சட்டம் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

ஜனாதிபதி என்ன செய்வார்?

காலி முகத்திடல் பகுதிக்கு இன்று காலையில் நூற்றுக்கணக்கான பிரதமரின் ஆதரவாளர்கள் பேருந்துக் மூலம் அழைத்து வரப்பட்டதாக களத்தில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதில் சிலர் அலரி மாளிகைக்கு பேரணியாக சென்று பிரதமருக்கு ஆதரவளித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து காலி முகத்திடல் பகுதியில் திரண்ட மஹிந்த ஆதரவாளர்கள், அவர் பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் பதவி விலக வேண்டாம் என்றும் குரல் கொடுத்தனர்.

இதற்கு மத்தியில் பிரதமர் மஹிந்த அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்ட பிறகே அடுத்த பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழும்.

ஜனாதிபதி ஒருவேளை ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டால் நாட்டில் நீடித்து வரும் அமைதியின்மையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மஹிந்த இடத்தில் வேறு யாரை ஜனாதிபதி நியமிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஏற்கெனவே வார இறுதியில் அமைச்சரவையுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதன்படி புதிய இடைக்கால அமைச்சரவையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் பங்ளிப்பு இருக்குமா அல்லது எத்தகைய ஏற்பாடுகளை கோட்டாபய மேற்கொள்வார் என்பதும் தெளிவற்று இருப்பதாக பிபிசி தமிழ் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

Previous Story

அமைதியான போராட்டக்காரர்கள் அரச குண்டர்களால் தாக்கப்பட்டனர்! குமார் சங்கக்கார

Next Story

மஹிந்த வீடு எரிகின்றது தினமலர்!