மரத்துக்கு ஹாலிவுட் நடிகரின் பெயர் ஏன்?

கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாநாட்டில் பங்கேற்ற லியோனார்டோ டிகாப்ரியோ

தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் புதிய மரத்துக்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மழைக்காடுகள் வெட்டப்படுவதை தடுக்க உதவியதற்காக அவரைக் கவுரவிக்கும் வகையில் மரத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டிருப்பதாக பிரிட்டனின் கியூ ராயல் தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய மரத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வமான தாவரவியல் பெயர் உவரியோப்சிஸ் டிகாப்ரியோ என்பதாகும். வியக்க வைக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் பெற்ற கேமரூன் காட்டில் மட்டுமே இந்த மரம் வளர்கிறது.

“எபோ காடுகள் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார் என்று நாங்கள் கருதுகிறோம்” என கியூ பூங்காவின் டாக்டர் மார்ட்டின் சீக் கூறினார்.

எபோ காடுகளின் பரந்த நிலப்பரப்புகளில் மரம் வெட்டுவதற்கு அனுமதிக்கும் திட்டங்களைக் கேள்விப்பட்டபோது விஞ்ஞானிகளும் சூழல் பாதுகாவலர்களும் அச்சமடைந்தனர். எபோ காடுகள் மத்திய ஆப்பிரிக்காவில் ஒப்பீட்டளவில் யாரும் தொடாத மிகப்பெரிய மழைக்காடுகளில் ஒன்றாகும். பானென் மக்களின் வசிப்பிடம் இது. அழிவின் விளிம்பில் உள்ள கொரில்லாக்கள், சிம்பான்சிகள், யானைகள், தனித்துவமான தாவரங்கள், விலங்கினங்கள் போன்றவை இங்கு உண்டு.

அழியும் அபாயத்தில் உள்ள மதிப்புமிக்க விலங்கு மற்றும் தாவர இனங்களை ஆவணப்படுத்தி சர்வதேச வல்லுநர்கள் அரசுக்கு கடிதம் எழுதினர். பின்னர் இந்த விவகாரத்தை டிகாப்ரியோ கையில் எடுத்தார். சமூக ஊடகங்களில் அவரது பதிவுகள் லட்சக்கணக்கான பின்தொடர்வோர் மூலமாக வேகமாகப் பரவின.

இந்தக் காடு இன்னும் தேசியப் பூங்காவாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், டிகாப்ரியோவின் பரப்புரையைத் தொடர்ந்து மரம் வெட்ட அனுமதிக்கும் திட்டங்களை அரசு ரத்து செய்தது.

“இது மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதைப் போன்றது” என்கிறார் சீக்

பீர் ஜே என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டதன் மூலம் 2022-ஆம் ஆண்டில் கியூ விஞ்ஞானிகளால் அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட புதிய முதல் தாவரம் “டிகாப்ரியோ” மரமாகும்.

டிகாப்ரியோ மரம் கேமரூன் காடுகளில் மட்டுமே வளர்கிறது.

இந்தச் சிறிய பசுமையான வெப்பமண்டல மரம் தண்டிலிருந்து வளரும் பளபளப்பான மஞ்சள் பூக்களைக் கொண்டுள்ளது. “யிலாங் யிலாங்” என்ற குடும்பத்தைச் சேர்ந்த இது, காட்டின் சிறு பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. அழிவின் விளிம்பில் உள்ளது.

கடந்த ஆண்டு, 200 க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் பூஞ்சைகள் அதிகாரப்பூர்வமாக கியூ விஞ்ஞானிகளால் பெயரிடப்பட்டன. அதே காட்டில் இருந்து ஒரு இளஞ்சிவப்பு லில்லி, ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஒரு “பூச்சி பிடிக்கும்” காட்டு புகையிலைச் செடி, மடகாஸ்கர் தீவில் இருளிலும் வளரக்கூடிய நட்சத்திரம் போன்ற பூக்களைக் கொண்ட தாவரம் ஆகியவை அந்தப் பட்டியலில் அடங்கும்.

இந்த புதிய இனங்களில் பல ஏற்கெனவே அழிந்துவிட்டன. மற்றவை காடழிப்பு, வறட்சி, வெள்ளம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீ ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இந்தச் செடி பூச்சிகளைப் பிடிக்கும் திறன் கொண்டது

மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப்பட்ட 16 புதிய மலர்த் தாவர வகைகளில் மூன்று இனங்கள் அவற்றின் வாழ்விடத்தை அழிப்பதால் காடுகளில் இருந்து அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.ஐரோப்பாவில் நறுமணத் தொழிலில் பயன்படுத்தப்படும் ஜெரனியம் எண்ணெய்க்கான தாவரங்களை வளர்ப்பதற்காக காடுகள் வெட்டப்பட்டதால் ஒரு தாவர வகை காணாமல் போனது. காங்கோவில் உள்ள ஒரு புதிய பூத் தாவரம் தாமிரச் சுரங்கத்தால் அழியும் ஆபத்தில் உள்ளது.

ஒரு தாவர இனத்திற்கு அறிவியல் பெயர் இல்லாதவரை, அதன் அழிவு அபாயத்தை மதிப்பிடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அதனால் அதை அழிவிலிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமாகிறது.

2021-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தாவரங்களின் பட்டியல், அறியப்படாத உயிரினங்களைக் கண்டறியவும், அவற்றைப் பெயரிடவும், அவை அழிந்துபோகும் முன் அவற்றைப் பாதுகாக்கவும் இதுவே நமக்குக் கடைசி வாய்ப்பு என்பதை நினைவூட்டுவதாக சீக் கூறுகிறார்.

“இன்னும் நமக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான தாவர இனங்கள், லட்சக்கணக்கான பூஞ்சை இனங்கள் இருக்கலாம்” என்று அவர் கூறினார்.

“அவை வளரும் காடுகள் போன்ற இயற்கை வாழ்விடங்கள் என்ன இருக்கிறது என்றே தெரியாமல் மனிதர்களாகிய நம்மால் அதிக அளவிலும் வேகமாகவும் அழிக்கப்படுகின்றன.”

 

Previous Story

நரகத்தின் நுழைவாயில்: 40 ஆண்டு தீயை அணைக்க முடிவு!

Next Story

 கப்பல் மீது இடிந்து விழுந்த மலை.! 17 பேர் பலி