அமெரிக்க தூதரிடம் கேட்ட ஈரான் அமைச்சர்.. உருக்கம்
”மரண பயத்தில் நீங்கள் எப்போதாவது பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிங்களா? எப்போது வேண்டுமானாலும் குண்டுவீச்சுக்கு நடக்கலாம். மொத்தமாக பலியாகலாம். செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே உடல் வெடித்து சிதறலாம் என்ற மனநிலையில் இருந்து இருக்கிறீர்களா?.
மேலும் தொலைபேசியில் உங்கள் குடும்பத்தினரிடம் பேசும்போது இதுவே கடைசி உரையாடலாக இருந்து இருக்கலாம் என்று நினைத்து பேசிய சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று ஈரான் அனுபவிக்கும் வலியை அந்த நாட்டின் அமைச்சர், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்ஃகாப்பிடம் எடுத்து கூறிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையே பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த தாக்குதல் சம்பவங்களால் தற்போது மீண்டும் ஈரான் – அமெரிக்க நாடுகள் மாறி மாறி தாக்கி வருகின்றன. இதனால் மீண்டும் இருநாடுகள் இடையே போர் வெடிக்கும் அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் எப்போதாவது மரண பயயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கீங்களா? என்று மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கேட்டு யோசிக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் அரசு சார்ந்த ‘மெஹர்’ செய்தி நிறுவனத்துக்கு அப்பாஸ் அராக்ச்சி பேட்டியளித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் நடந்து வரும் நிலையில் இருதரப்புக்கும் நடுவே நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த சமயத்தில் அமெரிக்காவின் செயல்பாட்டால் ஈரானில் உள்ளவர்களின் திக்திக் மனநிலை பற்றி கூறியிருந்தார். இதுதொடர்பாக அப்பாஸ் அரக்சாச்சி கூறியதாவது: ”அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த ஆண்டு அணுசக்தி தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்புடன் நான் பேசினேன். அப்போது அவரிடம், ‘மரண பயத்துடன் நீங்கள் எப்போதாவது பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறீர்களா? எப்போது வேண்டுமானாலும் குண்டுவீச்சுக்கு நடக்கலாம்.
பேச்சுவார்த்தையில் இருப்பவர்கள் மொத்தமாக உயிரை பலி கொடுக்கலாம் என்ற நிலையில் அந்த கூட்டத்தில் நீங்கள் பங்கேற்று உள்ளீர்களா? செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே நீங்கள் வெடித்து சிதறலாம் என்ற மனநிலையில் இருந்து இருக்கிறீர்களா? அதோடு தொலைபேசியில் உங்கள் குடும்பத்தினரிடம் பேசும்போது இதுவே கடைசி உரையாடலாக இருந்து இருக்கலாம் என்று நினைத்து பேசிய சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?.
இப்படி எங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. ஆனாலும் நாங்கள் எங்களின் உறுதிப்பாட்டில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை. நாங்கள் எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்த தான் வேண்டும். அதேவேளையில் எங்களை மிரட்டவோ அல்லது லஞ்சம் கொடுத்து பணிய வைக்கவோ முடியாது” என தெரிவித்தேன் என்றார்.
இப்படியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, அதனால் ஈரான் மக்களின் மனநிலையை எடுத்து கூறும் வகையில் இந்த கேள்வியை அப்பாஸ் அரக்சாச்சி, அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம் இந்த கேள்விகளை எழுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.





