மன அழுத்தம்: டிஸ்தைமியா என்றால் என்ன? இந்த மனச்சோர்வு அறிகுறிகள், சிகிச்சை என்ன?

டிஸ்தைமியா: குணப்படுத்த கடினமான மனச்சோர்வு பிரச்னை

மனச்சோர்வு என்றதும் நமக்கு என்ன நியாபகம் வரும்? நம் குடும்ப உறுப்பினரோ, நண்பரோ, உடன் பணியாற்றுபவரோ, கடந்த வாரம் வரை நன்றாக இருந்திருப்பார். ஆனால், திடீரென சோகமாக, சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் அவதிப்படுவார் என்பது தானே?

ஆனால், இப்படி வெளிப்படையாகத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் ஒருவருக்கு மனச்சோர்வு இருக்கும். அதற்குப் பெயர் தான் டிஸ்தைமியா.

இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும்போது, இதில் குறிப்பிட்டுள்ள டிஸ்தைமியா பிரச்னைக்கான அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ இருந்தால், அவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, ஆலோசித்து உறுதி செய்துகொள்ளுங்கள்.

ஒருவருக்கு டிஸ்தைமியா இருந்தால், அது ஒன்றிரண்டு நாட்களோ, வாரங்களோ, மாதங்களோ இல்லை, அது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். மனநல மருத்துவர்கள், சராசரியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் மெல்லிய மனச்சோர்வை டிஸ்தைமியா என்று வரையறுக்கிறார்கள்.

வழக்கமாக மனச்சோர்வு ஏற்பட்டால் அது சில நாட்களுக்கு இருக்கும் பிறகு சரியாகிவிடும். ஆனால், டிஸ்தைமியா மிகவும் நீண்ட காலத்திற்கு இருந்துகொண்டே இருக்கும்.ன்ன?

மனச்சோர்வு குறித்து நம் அனைவருக்கும் தெரியும். அப்படி நமக்குத் தெரிந்த பொதுவான மனச்சோர்வின்போது ஏற்படக்கூடிய தூக்கமின்மை, தலை வலி, சோகம், உணவு உண்ண பிடிக்காதது, தன்னை அழகுபடுத்திக் கொள்ளவோ, நண்பர்களோடு நேரம் செலவிட விரும்பாதது ஆகிய அறிகுறிகள் தென்படும். இவையே டிஸ்தைமியாவில் நீண்ட காலகட்டத்திற்கு இருக்கும். ஆனால் மெல்லிய அளவில் தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்கும்.

“டிஸ்தைமியா இருப்பவர்கள் யாரோடும் பெரிதாக ஒட்டவே மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும் அவர்களிடம் மகிழ்ச்சியான மனநிலையே இருக்காது. அவர்களிடம் எப்போதும் ஒரு சோகம் இழையோடிக் கொண்டேயிருக்கும். சரியாகத் தூங்க மாட்டார்கள்,” என்கிறார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவர் சதீஷ்.

கொண்டாட்ட நிகழ்வுகள், நண்பர்களுடனான சந்திப்பு, குடும்ப நிகழ்ச்சி என்று எதிலுமே பெரிய நாட்டமோ ஈடுபாடோ டிஸ்தைமியா உள்ளவர்களுக்கு இருக்காது. ஆனால், அதேநேரம் வழக்கமான மனச்சோர்வைப் போல் கடுமையாகவும் இந்த அறிகுறிகள் செல்லாது. ஒரு மெல்லிய அளவில், இது பல ஆண்டுகளுக்கு இருந்து கொண்டேயிருக்கும் என்கிறார் மனநல மருத்துவர் சதீஷ்.

“இதனால் பாதிக்கப்பட்டவர்கள், மகிழ்ச்சியான எதையும் அனுபவிக்க முடியாமல், யாருடனும் நட்பு வைத்துக்கொள்ள முடியாமல், தனிமையில் சோகமாகவே இருப்பார்கள்.

டிஸ்தைமியா: குணப்படுத்த கடினமான மனச்சோர்வு பிரச்னை

எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியாமல் போவதால், இவர்கள் செய்யும் அனைத்தும் முயற்சியாகவே இருக்கும், வெற்றியடைவது மிகவும் கடினம். பிறகு இதனாலேயே வாழ்வில் எதுவும் வெற்றிகரமாக நடக்கவில்லையே என்று மனச்சோர்வு அதிகரிக்கும்,” என்கிறார் மருத்துவர் சதீஷ்.

இந்த டிஸ்தைமியா பிரச்னை ஒருவருக்கு ஆண்டுக்கணக்கில் இருக்கக்கூடும். ஆனால், அதை நண்பர்களோ உடன் பணியாற்றுபவர்களோ கவனிக்காமலே கூட இருக்கலாம். நீண்டகாலத்திற்கு டிஸ்தைமியா இருப்பவர்கள் சோகமாகவே இருப்பதால், அவர்களுடைய சுபாவமே அப்படித்தான் என்று கூட சுற்றத்தினர் கருதுவதுண்டு.

“ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவற்றை அளவீடுகளின் மூலம் நாம் கண்டறிய முடியும். ஆனால், இதை மனநல பரிசோதனையின் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். ரத்த அழுத்தம், நீரிழிவு போன்று இதற்கெனத் தனியாக எந்தவித பரிசோதனை முறையும் இல்லை. ஒருவருக்கு டிஸ்தைமியா இருப்பதைப் போல் தெரிந்தால், மனநல மருத்துவர் அவரைப் பரிசோதித்து, அவருடைய கடந்த கால உரையாடல்கள், நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினரிடம் விசாரிப்பதன் மூலம் அதை உறுதி செய்வார்.

மனச்சோர்வு கடுமையாக இருந்தால், அது வெளிப்படையாகத் தெரிந்துவிடும். ஆனால், இது மிகவும் மெல்லிய அளவில் இருப்பதால் இதுவொரு பிரச்னை என்பதை குடும்பத்தினர் கண்டறிவது மிகவும் கடினம்,” என்கிறார் மருத்துவர் சதீஷ்.

டிஸ்தைமியா: குணப்படுத்த கடினமான மனச்சோர்வு பிரச்னை

பதின்பருவத்தின் பிற்பகுதியில் இது பெரும்பாலும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்போது தொடங்கி வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். தரவுகளை பார்க்கும்போது, இதனால் ஆண்களைவிட பெண்கள் சற்று அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

மனச்சோர்வு பிரச்னைகளே சரியாக கவனிக்கப்படுவதில்லை

டிஸ்தைமியா பாதிப்பு வருவதற்கு, மூளையிலுள்ள ரசாயனங்களின் விகிதாச்சாரம் ஒரு காரணம். அந்த விகிதாச்சாரம் மாறும்போது இது ஏற்படலாம். பொருளாதார இழப்பு, உறவுகளை இழப்பது, குடும்பத்தில் ஏற்படும் மரணம் போன்றவற்றால் ஏற்படும் அதிர்ச்சி அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இதுமட்டுமின்றி, ஒருவேளை மரபணு ரீதியாக இத்தகைய காரணங்கள் எதுவுமில்லாமல் கூட அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் மருத்துவர் சதீஷ்.

இந்திய சமுதாயத்திலுள்ள குடும்பங்களைப் பொறுத்தவரை, இயல்பாகவே மகனோ மகளோ எப்போதும் சோகமாகவே இருந்தால் அதற்கு இதுபோன்ற மனோவியல் காரணங்கள் இருக்கலாம் என்ற பார்வையில் அணுகுவதில்லை. “அப்படியிருக்கும் குழந்தைகள், அவர்களே எந்த முயற்சி எடுக்காமல் இருக்கிறார்கள் என்ற பார்வையில் தான் குடும்பத்தினர் பெரும்பாலும் அணுகுகிறார்கள்.

கால், கைகளில் ஏதேனும் அடிபட்டிருந்தால் அது கண்ணுக்குத் தெரியும். ஆனால் டிஸ்தைமியா மட்டுமில்லை, பொதுவாகவே மனச்சோர்வு போன்றவற்றால் மகனோ மகளோ கஷ்டப்படுகிறார்கள் என்ற பார்வையில் குடும்பத்தினர் அணுகுவது குறைவுதான்,” என்கிறார் சதீஷ்.

தனிநபர் வாழ்வில் பெரிய பாதிப்பு

ஒருவேளை டிஸ்தைமியா பிரச்னை இருப்பதால் மெல்லிய அளவிலேயே அறிகுறிகள் இருக்கும் எனும்போது, அது நாளடைவில் தாமாகச் சரியாகிவிடக்கூடுமா என்ற கேள்வியும் எழுகிறது.

அதுகுறித்து கேட்டபோது, நிச்சயமாக இல்லை என்று கூறும் மருத்துவர் சதீஷ், “இந்தப் பிரச்னை தானாகக் குணமடைய வாய்ப்பில்லை. அதற்கு சிகிச்சை எடுத்தாக வேண்டும். இதற்கு, மனச்சோர்வுக்கான சிகிச்சையில் இருப்பதைப் போலவே மனச்சோர்வை நீக்கும் ஆன்டி டிப்ரசன்ட் மருந்துகள் உள்ளன. அதோடு, மனநல மருத்துவர் மூலமாக சைக்கோதெரபி வழங்குவது, அதாவது மனநல ஆலோசனை வழங்குவது ஆகியவற்றைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்,” என்கிறார்.

மேலும், டிஸ்தைமியா பாதிப்பை கவனிக்காமல் விடுவதால், அதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் படிப்பிலோ, பணியிலோ, குடும்பப் பொறுப்புகளிலோ பெரியளவில் ஈடுபாட்டோடு செயல்பட முடியாமல் போகும். அது, அவர்களுடைய உற்பத்தித் திறனை (Productivity) குறைக்கும்.

தனிநபர் வாழ்வில் பெரிய பாதிப்பு

இது கல்வியில் முன்னேற்றம் காண்பது, படிப்பை முடித்த பிறகு வேலை தேடுவது, பணியிடத்தில் வேலையை சிறப்பாகச் செய்வது, குடும்பப் பொறுப்புகளைச் சரியாக மேற்கொள்வது என்று அனைத்திலுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது அவர்களின் தனிநபர் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும்.

“இதை பல ஆண்டுகளாக நட்பில் இருப்பவர்களோ அல்லது குடும்பத்தினரோ தான் ஓரளவுக்குக் கணிக்க முடியும். தங்கள் குடும்பத்தில் யாராவது எப்போதும் சோகமாகவே, தனிமையிலேயே இருப்பது, எப்போது பார்த்தாலும் மெல்லிய மனச்சோர்வில் இருப்பதைப் போல் சரியான தூக்கமின்றி, சரியாகச் சாப்பிடாமல் இருந்தால், அவர்கள் மீது முறையான கவனம் செலுத்தி, மருத்துவ ஆலோசனையும் பெற்றுக்கொள்வது நல்லது,” என்கிறார் மனநல மருத்துவர் சதீஷ்.

உலக சுகாதார அமைப்பு, உலக மக்கள் தொகையில் சுமார் 6% பேருக்கு டிஸ்தைமியா பாதிப்பு இருப்பதாகக் கூறுகிறது. ஒருவருக்கு டிஸ்தைமியா இருப்பதால் எப்போதும் சோகமாகவே இருப்பார். ஆனால், அவர் எப்போதும் சோகமாகவே இருப்பதால் அதுதான் அவருடைய சுபாவம் என்ற அணுகுமுறை ஏற்பட்டுவிடுகிறது. டிஸ்தைமியா என்பது ஒருவருடைய சுபாவமல்ல. அது கவனிக்கப்பட வேண்டிய, சிகிச்சையளிக்கப்பட வேண்டிய மனச்சோர்வு பிரச்னை.

Previous Story

2 ம் எலிசபெத் இறுதிச் சடங்கு: அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படாதவர்கள்?

Next Story

இலங்கை தமிழர்: இந்தியா திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?