மனைவியின் கடைசி மூச்சு: இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் செலுத்திய நன்றி 

-நிதின் ஸ்ரீவஸ்தவா-

“நீண்ட காலமாக நான் ஹூமாவுக்கு நல்ல கணவனாகவும் இல்லை, எங்கள் மகன்களான தெஹ்மூர் மற்றும் அக்பருக்கு நல்ல தந்தையாகவும் இல்லை. வீட்டிற்கு வந்து விலை உயர்ந்த அன்பளிப்புகளை அளித்து, குழந்தைகளை வளர்க்கும் சுமையை மனைவியின் மீது விட்டுவிடும் ஒரு க்ளாசிக் பஞ்சாபியாக நான் இருந்தேன்.”

வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பிரபல கிரிக்கெட் வீரருமான வாசிம் அக்ரம் தனது சுயசரிதையான “சுல்தான்: எ மெமோயர்” என்ற புத்தகத்தில் முதன்முறையாக தனது சொந்த வாழ்க்கையில் சந்தித்த பல சிரமங்களை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேட்ச் பிக்சிங் பற்றிய குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும். அதைப் பற்றி பின்னர் விரிவாக பேசுவோம்.

கிரிக்கெட்டுக்குப் பிறகு வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுப்பதில் சிரமப்பட்ட வாசிம் அக்ரம் வாழ்க்கையின் அந்த கட்டத்தைப் பற்றி முதலில் பேசுவோம்.

வாசிம் அக்ரம் தனது சுயசரிதையில் எழுதுகிறார், “நான் விருந்துகளை விரும்பினேன். தெற்காசியாவில் நீங்கள் பிரபலமாகும்போது, ​​​​புகழ் உங்களைக் கெடுத்துவிடும். அது உங்களை விழுங்கிவிடும். நீங்கள் ஒரு இரவில் 10 பார்ட்டிகளுக்குக்கூட செல்லமுடியும். அது என்னை நாசமாக்கியது.”

கொகேயின் போதைக்கு அடிமையாகி மனைவியிடம் பொய் சொல்ல ஆரம்பித்ததை அவர் வெளிப்படையாக எழுதியுள்ளார்.

“என் மறைந்த மனைவி ஹுமா, கராச்சிக்கு இடம்பெயர விரும்பினார். தன் பெற்றோருக்கு அருகாமையில் இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். அதை நான் அனுமதிக்கவில்லை. ஏனென்றால் வேலை இருக்கிறது என்ற சாக்கில் அங்கு தனியாக சென்று விருந்துகளில் கலந்துகொள்வதை நான் விரும்பினேன்.”

போதைக்கு அடிமை

தன் பர்ஸில் இருந்த கொகேயின் பவுடரைப் பார்த்து, “நீங்கள் போதைப்பொருள் உட்கொள்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், உங்களுக்கு உதவி தேவை” என்று மனைவி ஹுமா தன்னிடம் கூறியதாகவும் வாசிம் அக்ரம் எழுதியுள்ளார்.

பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் மற்றும் ஜாங் நியூஸ் குழுமத்தின் மூத்த விளையாட்டு ஆசிரியரும் கிரிக்கெட் விமர்சகருமான அப்துல் மாஜித் பட்டி, வாசிம் அக்ரம் கராச்சியில் இருந்து பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதில் இருந்து அவரை நன்கு அறிந்தவர்.

வாசிம் போதை மருந்துக்கு அடிமையாக இருந்த கால கட்டத்தை நினைவு கூர்ந்த அவர்,” வாசிம் அக்ரம் நீரிழிவு நோயாளியாகி, தன் மீது சுமத்தப்பட்ட ஸ்பாட் பிக்சிங் மற்றும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த காலம் அது. மொபைல் போன் அறிமுகமாகி இருந்த நேரம். ஹூமா போனை எடுத்து பேசும் அளவுக்கு அக்ரமின் நிலை மோசமாக இருந்தது. நாங்கள் போன் செய்தால் அதை ஹூமா எடுப்பார். சில நேரங்களில் எங்களை திரும்ப அழைப்பார்.”என்றார்.

மனைவியுடன் வாசிம் அக்ரம்

“போதை மருந்து எடுத்துக்கொண்ட அந்த நாட்களில் என்னால் தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை. லாகூரில் உள்ள ஒரு மறுவாழ்வு மருத்துவமனைக்குச் செல்ல நான் ஒப்புக்கொண்டபோது, ​​ஹுமா சகோதரர் எஹ்சானிடம், “இவர் எங்காவது ஓடாமல் பார்த்துக்கொள். எனக்கு என் வாசிம் திரும்ப வேண்டும்’என்று கூறினார்,”என வாசிம் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இதற்குப் பிறகு வாசிம் முதலில் ஒரு மாதமும், பிறகு ஒன்றரை மாதமும் இந்த மருத்துவமனையில் கழிக்க வேண்டியிருந்தது. கடைசி ஒன்றரை மாதங்கள் தனது விருப்பத்திற்கு எதிராக அங்கு தங்கவேண்டி இருந்ததாக அவர் கூறுகிறார்.

இதற்கிடையில் 2009ஆம் ஆண்டில் வாசிம் தனது முதல் மனைவி ஹுமா அக்ரமை விவாகரத்து செய்ய நினைத்தார். வீடு திரும்பிய பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரானதால் மீண்டும் பிஸி ஆகி விட்டார்.

ஏஆர்ஒய் நியூஸின் விளையாட்டு ஆசிரியரும் மூத்த பத்திரிக்கையாளருமான ஷாஹித் ஹாஷ்மி, கராச்சியில் இருந்து பிபிசியிடம் பேசினார்.

“நீங்கள் பிரபலமாகும்போது, ​​​​ஏதோ ஒரு வழியில் அதற்கான விலையை கொடுக்கவேண்டி இருக்கும். வாசிமும் அந்த விலையைக் கொடுத்தார். ஆனால் அவர் தனது தவறுகளை நேர்மையாக உலகின் முன் வைத்துள்ளார். இது ஒரு பெரிய விஷயம்,” என்று அவர் கூறினார்.

மனைவி ஹுமா இந்தியாவில் மரணம்

மனைவியுடன் வாசிம் அக்ரம்

மனைவியுடன் வாசிம் அக்ரம்

மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த பிறகும் போதை மருந்துப்பழக்கம் முழுமையாக தன்னை விட்டுப்போகவில்லை என்றும் வாசிம் கூறியிருக்கிறார்.

கிடியன் ஹேக்குடன் சேர்ந்து எழுதிய தனது சுயசரிதையில், “ஹுமாவின் திடீர் நோய் என்னை உலுக்கியது. ஒரு நாள் மருத்துவமனையில் படுத்திருந்த அவர் ‘எனக்கு ஏதாவது நேர்ந்தால் என் குழந்தைகளுக்கு என்ன ஆகும்?’என்றார். உனக்கு ஒன்றும் ஆகாது, நான் தான் இருக்கிறேனே என்று சொல்லிவிட்டேன். அவள் முகத்தில் புன்சிரிப்பு தோன்றியது. நான் அதற்கு தகுதியானவன் அல்ல என்று அவளுக்குத்தெரியும்.”

இதற்கு சில வாரங்களுக்குப் பிறகு, ஹுமா அக்ரம் இந்த நோயால் காலமானார். மேலும் வாசிம் அவரை சிங்கப்பூருக்கு ஏர் ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் போது அவரது உடல்நிலை மோசமடைந்தது. வழியில் ஹூமாவுக்கு ப்ரெயின் ஸ்ட்ரோக் ஏற்பட்டதால் சென்னையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

“எங்களிடம் இந்திய விசாவோ அல்லது தரையிறங்க அனுமதியோ இல்லை. இருந்தபோதிலும் இந்தியா அனைத்தையும் மன்னித்தது. அதன் பிறகு நாங்கள் ஹுமாவை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவர் காலமானார்” என்று வாசிம் அக்ரம் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திகளில் கூறியுள்ளார்.

அன்றிலிருந்து தான் போதைப்பொருளின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை என்று அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கைது

மேற்கிந்திய தீவுகளில் கைது செய்யப்பட்ட பிறகு, வாசிம் அக்ரம் தன்னையும் தனது மூன்று சக வீரர்கள் பற்றியும் தெளிவுபடுத்த முதன்முறையாக முயன்றுள்ளார்.

1993 ஆம் ஆண்டில், நீண்ட சுற்றுப்பயணத்திற்குச் சென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் அக்ரம், துணை கேப்டன் வக்கார் யூனிஸ், ஆகிப் ஜாவேத் மற்றும் முஷ்டாக் அகமது ஆகியோர் கிரெனடாவின் ‘கொயபா பீச் ரிசார்ட்’ அருகே கடற்கரையில் கஞ்சா வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

அந்த சம்பவம் நடந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு, வாசிம் அக்ரம், “எங்களிடம் ஸ்டீரியோ இருந்தது. நாங்கள் ஹோட்டல் உணவகத்தில் சிக்கன் விங்ஸ் ஆர்டர் செய்தோம். எங்களுக்கு ஒரு ரம் பாட்டிலும் வழங்கப்பட்டது,” என்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

”பின்னர் இரண்டு பிரிட்டிஷ் பெண்கள், சூசன் ரோஸ் மற்றும் ஜோன்னே காஃப்லின் எங்களுடன் இணைந்தனர். அப்போது ஒரு பெண் ’ ஒரு ஜாயிண்ட்(கஞ்சா புகை) இழுக்கிறீர்களா என்று கேட்டார். அவ்வளவாக புகைபிடிப்பதில்லை என்று முதலில் சொன்னோம். ஆனால் ஒரு பஃப் எடுத்துக்கொண்டால் தீங்கு என்ன என்று நினைத்தோம்.”

பிறகு வெஸ்ட் இண்டீஸ் போலீசார் எல்லோரையும் சுற்றி வளைத்தனர்.” முஷ்டாக் அழத் தொடங்கினார். ஆகிப் மற்றும் வக்கார் அதிர்ச்சியில் இருந்தனர். தரையில் இருந்து எழுந்தபோது நான் வழுக்கி விழுந்தேன். இரும்பு கம்பியில் என் தலை இடித்ததால் ரத்தம் வந்தது,” என்று அவர் எழுதியுள்ளார். ”இது எங்களை சிக்கவைப்பதற்காக செய்யப்பட்ட சதி. எங்களிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் மீட்கப்படவில்லை.”

நள்ளிரவில் அவர்கள் அனைவருக்கும் காவல் நிலையத்தில் ஜாமீன் கிடைத்தது. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன.

“நான் 35 ஆண்டுகளாக கிரிக்கெட்டை கவர் செய்துள்ளேன். அக்ரமை விட சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரை நான் பார்த்ததில்லை. அவர் ஒரு அற்புதமான ஆல்-ரவுண்டராகவும் இருந்தார். இந்த காலகட்டத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்தன. அவற்றில் ஒன்று மேற்கிந்திய தீவுகளில் இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டது.”என்று ஏஎஃப்பி செய்தி முகமையின் முன்னாள் கிரிக்கெட் ஆசிரியர் குல்தீப் லால் கூறினார்.

மேட்ச் பிக்ஸிங் நிழல்

மேட்ச் பிக்ஸிங்

மேட்ச் பிக்சிங் குறித்து எப்போது வாசிம் அக்ரம் வெளிப்படையாக தெளிவுபடுத்துவார் என்று உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்கள் காத்திருந்தனர்.

தனது சுயசரிதையான “சுல்தான்: எ மெமோயர்” இல் அக்ரம் ஒரு முழு அத்தியாயத்தையும் ஸ்பாட் பிக்சிங் மற்றும் மேட்ச் பிக்சிங்குக்கு ஒதுக்கியுள்ளார். சலீம் மாலிக் மற்றும் அதா-உர்-ரஹ்மான் போன்ற வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை இந்த குற்றச்சாட்டுகள் முடிவுக்கு கொண்டுவந்தது. அவர்கள்மீது ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளில் வாசிம் அக்ரமின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தை நீதிபதி கய்யூம் கமிஷன் விசாரித்தது.

1990 களில் ஒரு போட்டியை ‘ஃபிக்ஸ்’ செய்ய அதா-உர்-ரஹ்மானிடம் 3-4 லட்சம் ரூபாய் வழங்கியதாக அக்ரம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

1996 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், கேப்டன் அக்ரம் ‘போட்டியில் விளையாடாமல் இருக்க’ காயம் ஏற்பட்டதாக சாக்கு சொன்னார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

ஏஎஃப்பி செய்தி முகமையின் முன்னாள் கிரிக்கெட் ஆசிரியர் குல்தீப் லால் அந்த போட்டியை கவர் செய்தார்.

பெங்களூரு காலிறுதிக்கு ஒரு நாள் முன்பு பாகிஸ்தான் முகாமில் இருந்து வாசிம் அக்ரம் காயம் அடைந்ததாக செய்தி வந்தது. அவர் விளையாட மாட்டார் என்பது போட்டியின் அதிகாலையில் தெரிந்தது என்று அவர் தெரிவித்தார்.

அவருக்கு காயமேற்பட்டது உண்மைதான் என்று பின்னர் நாங்கள் தெரிந்துகொண்டோம். வாசீமே இதைப் பலமுறை எங்களிடம் பேசும்போது சொல்லியிருக்கிறார்.

வாசிம் அக்ரம்

“உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு என்னை தெரியும். ஆனால் பாகிஸ்தானில் நான் ஒரு மேட்ச் பிக்சர் என்ற வதந்திகள் பரவும்போது அது மிகவும் வேதனை அளிக்கிறது” என்று அக்ரம் தனது புத்தகத்தில் கூறியுள்ளார். “என் மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை என்று எனது இரண்டு மகன்கள் மற்றும் எனது மகள் உட்பட என் ரசிகர்கள் அனைவருக்கும் நான் கூற விரும்புகிறேன் என்று வாசிம் எங்களிடம் கூறுவது வழக்கம்,” என்று ஏஆர்வொய் நியூஸின் விளையாட்டு ஆசிரியரும் மூத்த பத்திரிக்கையாளருமான ஷாஹித் ஹாஷ்மி தெரிவித்தார்.

விசாரணைக்குப் பிறகு, அக்ரம் உட்பட பல வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

“என் பால்ய நண்பர் ஜாஃபர் இக்பாலை நம்பியது தான் நான் செய்த ஒரே தவறு. ஹுமா பலமுறை என்னிடம் எடுத்துச்சொன்னபோதும், அவர் சூதாட்டத்திலும் பந்தயத்திலும் ஈடுபட்டார் என்பதையும், என் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று வாசிம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“சமீபத்தில் ஆசிய கோப்பை போட்டியின்போது வாசிமை சந்தித்தேன். என் புத்தகம் வெளிவரப்போவதாக அவர் கூறினார். என் மீது குற்றம் சாட்டியவர்களுக்கு இறுதியாக நான் பதில் அளித்துவிட்டென். ஸ்கோரை செட்டில் செய்துவிட்டேன் என்று அவர் சொன்னார்.

ஆனால் உண்மை என்னவென்றால், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் பெயர்கள் பிக்ஸிங் போன்றவற்றில் தொடர்ந்து வெளிவருகின்றன. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சரிதான்.ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்லுவார்கள். இப்போது வாசிம் தன் பக்க நியாயத்தை உலகின் முன் வைக்க விரும்புகிறார், அதுவும் சரிதான்,” என்று கிரிக்கெட் விமர்சகர் அப்துல் மாஜித் பட்டி குறிப்பிட்டார்.

Previous Story

மீண்டும் விடுதலைப் புலிகள் வரவு!

Next Story

சம்பந்தர் உடும்புப் பிடி!